உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பாரதியார் விழா

பகுதி 1 · 1 / 3

பாரதியார் விழா

தம்பி டி.கே.எஸ். கலைவாணன் குறிப்பிட்டதைப் போல சற்றொப்ப 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி விழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்கிற ஒரு வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன் என்றாலும் கூட, அந்த வாய்ப்பு பாரதி சங்கத்தின் சார்பாக கிடைத்த வாய்ப்பு என்பதுதான் உண்மையே அல்லாமல் - இதற்கிடையே பல கவியரங்குகளில், பாரதி பற்றியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றியும் எடுத்துச் சொல்கிற அரிய வாய்ப்புகளை நான் பெற்றிருக்கிறேன் என்பதை இங்கே சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

கல்கி ராஜேந்திரன் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். அரங்கம் நிரம்பவில்லை என்பது குறித்து அதற்கொரு காரணமும் கூறினார்கள். அலுவலகத்திலிருந்து வருகிறவர்கள் எல்லாம் சாய்வு நாற்காலியிலே அமர்ந்து கொண்டு தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; அதனால்தான் அரங்கம் நிரம்பவில்லை என்றார்கள்.

நேற்று முன்தினம் கலைவாணர் அரங்கிலே ஆர்.எம்.வீ. அவர்களுடைய பிறந்தநாள் விழா, ஆழ்வார் மையத்தின் விழா, சாவி போன்றவர்களுக்கு விருது வழங்குவிழா நடைபெற்றது. அன்று கலைவாணர் அரங்கம் நிரம்பித்தான் இருந்தது. அன்று யாரும் தொலைக்

காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு படம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பாரதி சங்கம் கொஞ்சம் சிக்கனத்தை கைவிட்டு, கை சுடுமே என்று பார்க்காமல், தாராளமாக விழாவினை நடத்தினால் இந்த மன்றமும் போதாது, கலைவாணர் அரங்கமும் போதாது; பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபமே தேவைப்படும் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற விழாக்கள் ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தால், அந்த விழா நடப்பதை விளம்பரம் மூலமாக அறியாதவர்கள்கூட சாலை வழியாகச் செல்பவர்கள் ஏதோ ஒலிபெருக்கி ஓசை கேட்கிறதே, என்னவென்று பார்ப்போம் என்று மண்டபத்திற்குள் நுழைவார்கள். இந்த மண்டபம் இருக்கிற அமைப்போ உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே போகிறவர்களுக்கு தெரியாத நிலையிலே உள்ள அமைப்பு. (கைத்தட்டல்).

இதை நான் நண்பர் சாவி அவர்களிடம் சொன்னேன். இதிலே ஏன் இவ்வளவு சிக்கனம், கொஞ்சம் விளம்பரம் செய்திருக்கக் கூடாதா? பாரதியார் தான் சிக்கனமாக வாழ வேண்டிய நிலையிலே இருந்தார்; பாரதி விழா நடத்துபவர்களும் அந்த நிலையிலா இருக்கிறார்கள்? என்று நான் அவர்களிடத்தில் கேட்டேன். இருந்தாலும் இங்கே வந்துள்ள ஒவ்வொரு வரையும் ஆயிரம் பேருக்கு சமமாகக் கருதிக் கொள்ள வேண்டும் என்று நண்பர் கல்கி ராஜேந்திரன் சொன்னார்.

(சிரிப்பு) இதிலே என்ன? ஆசைப்படுவதுதான் ஆசைப்படுகிறோம்; ஆயிரம் பேர் என்ன? (பலத்த சிரிப்பு) ஒவ்வொருவரையும் பத்தாயிரம் பேருக்கு, லட்சம் பேருக்கு சமமாக எண்ணிக்கொண்டு நான் பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

இந்த விழா நிகழ்ச்சியிலே திரு. மகாலிங்கம் அவர்களாலும், கவிதை படித்த திருமதி ஆண்டாள் பிரியதரிசினி அவர்களாலும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அமைச்சர் வருகிற விழாக்களில் கோரிக்கைகள் இடம் பெறுவது இயல்பு. அதிலும் முதலமைச்சரே வந்தால் ஒருவேளை கோரிக்கை வைக்காவிட்டால் கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சத்தின் காரணமாக கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

நண்பர் மகாலிங்கம் வைத்த கோரிக்கை - இந்தியாவிலே பல்வேறு பகுதிகளில் பயனற்றுப் போகின்ற தண்ணீரையெல்லாம் பயனுள்ள பாசனத்திற்கு - பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கு திருப்பி விடுகின்ற முயற்சியில் இந்நாட்டிலே ஆட்சி நடத்துவோர் ஈடுபட வேண்டுமென்றார்.

சுதந்திரம் பெற்று இந்த ஐம்பதாண்டு காலத்தில் உலகத்திலே இருக்கின்ற பல்வேறு நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா ஒரு தனிப்பெரும் வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கின்ற நாடாகும். எனவே, சுதந்திரம் பெற்றவுடனேயே இது வேளாண்மை கொழிக்கின்ற நாடு என்பதைச் சிந்தித்து, அதற்கேற்ற வகையிலே திட்டங்கள் தீட்டப்பட்டிருக்குமேயானால், இந்நேரம் கங்கையும் காவிரியும் ஒன்றாக ஆகி இந்தியா முழுவதிலும் வேளாண்மைச் செல்வம் கொழிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

என்ன காரணத்தாலோ அந்த வகையிலே சிந்திக்காமல், வேறு வகையிலே சிந்தித்து பல தொழிற்சாலைகள், கனரகத் தொழிற்சாலைகள், கனிவளத் தொழிற்சாலைகள் என்ற அளவிலே ஈடுபட்ட காரணத்தாலும், இந்த நதிகளை ஒன்றாக்கும் திட்டத்தைப் பற்றி சிந்திக்காமலேயே இருந்து விட்ட காரணத்தாலும், இதை இரண்டாவது நிலையிலே வைத்துவிட்ட காரணத்

தாலும் - நாம் இன்றைக்கு அந்தப் பயனைப் பெற முடியவில்லை.

ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். காவிரிப் பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் நானும், கர்நாடக அரசின் சார்பில் நண்பர் வீரேந்திர பட்டீல் அவர்களும், கேரள அரசின் சார்பில் நண்பர் அச்சுதமேனன் அவர்களும் டெல்லியிலே பலமுறை மத்திய அமைச்சர்கள் முன்னால் பேச்சு வார்த்தை நடத்தியபோது - மத்தியிலே நீர்ப்பாசனத் துறை அமைச்சராக கே.எல்.ராவ் அவர்கள் இருந்த காலக் கட்டத்தில் - இந்தப் பிரச்சினையை நான் எழுப்பினேன்.

“ஏன் காவிரியையும் கங்கையும் ஒன்றாக்குகின்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளக் கூடாது? அப்படி நிறைவேற்றப்பட்டால், இந்தப் பிரச்சினைகள் எல்லாம், மாநிலத்திற்கு மாநிலம் ஏற்படுகின்ற மனக் கசப்புகள் எல்லாம் கூட ஏற்படாத ஒரு தன்மை உருவாகுமே” என்று கேட்ட போது - “இதைப் பலர் என்னிடம் கேட்கிறார்கள்; அதற்காகவே இன்றிரவு என் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.

நீயும், அச்சுத மேனனும், வீரேந்திர பட்டீலும், இன்னும் சில முதலமைச்சர்களும் அங்கே அழைக்கப்படுகிறீர்கள்; வாருங்கள்” என்றார்.

அன்று இரவு விருந்து முடிந்ததும், ஒரு பெரிய இந்திய தேசப்படத்தை அவர்கள் எங்கள் முன் தொங்க விட்டு, அரை மணி நேரம் கங்கை, காவிரி இரண்டையும் ஒன்றாக ஆக்குகின்ற அந்தப் பிரச்சினையைப் பற்றி கே.எல்.ராவ் எங்களுக்கு விளக்கமளித்தார். எத்தனை உயரமாக இடங்களை, எத்தனை பள்ளமான இடங்களை எல்லாம் தாண்டி கங்கையை காவிரியோடு இணைக்க வேண்டியிருக்கிறது என்று அந்த வண்ணங்களை எல்லாம்

தந்துவிட்டுச் சொன்னார். “ஒரு இடத்திலே உள்ள மேட்டைக் கடக்க - தண்ணீர் மேட்டிலே ஏறி, மறுபடியும் கீழே வந்து சமவெளிக்கு வருவதென்றால், அந்த முதல் பம்பிங் ஸ்டேஷனுக்குத் தேவைப்படுகின்ற மின்சாரம் - இன்றைக்கு இந்தியா முழுவதும் பயன்படுத்துகின்ற மின்சாரம் அதற்கு மட்டும் தேவை” என்றார்.

அதிலிருந்து அது எவ்வளவு சாத்தியமற்ற திட்டம் என்பதை அவர்கள் விளக்கினார்கள்.

ஆனால், இதை சுதந்திரம் பெற்ற அந்தக் காலகட்டத்திலே சிந்தித்து செயல்படுத்த முனைந்திருந்தால், அந்த மின்சாரத்தையும் உருவாக்கியிருக்க முடியும். நான் அப்போது சொன்னேன். “கங்கையிலிருந்து காவிரியை இணைக்க முடியாவிட்டாலுங்கூட, தற்காலிகமாக கோதாவரியிலிருந்து காவிரிக்கு ஒரு இணைப்பு தந்தால் எதிர்காலத்தில் வேண்டுமானால் கங்கையிலிருந்து கோதாவரிக்கு இணைப்பு ஏற்படுத்தி, பிறகு காவிரி எண்ணத்தை முழுமைப்படுத்தலாம், அந்த ஏற்பாட்டை யாவது செய்யுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அவர் “நல்ல யோசனைதான், அதைப்பற்றி யோசிக்கலாம்” என்றார்.

அதற்குப் பிறகு அந்தத் திட்டமோ, ஏற்பாடுகளோ எதுவும் நடைபெறாமல் அது கிடப்பிலே போடப்பட்டு விட்டது. இப்பொழுதும் அந்த முயற்சியிலே நாம் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் அதற்கான நிலைமைகள் முற்றாக இன்னும் நிறைவேற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இப்போதைக்கு காவிரி இங்கே வந்தாலே போதுமென்ற நிலைமை இருப்பதால், இதைத் தீர்த்துக் கொண்டு தான் மற்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேச முடியும்.

இப்போது நாம் அதைப் பற்றி பேசினால், திரு. மகாலிங்கம் சொன்னதைப் போல, கங்கையையும்

காவிரியையும் இணையுங்கள்; கோதாவரியையும் காவிரியையும் இணையுங்கள் என்று சொன்னால், உடனடியாக கர்நாடக முதலமைச்சர் நண்பர் படேல் அவர்கள், “அதை முடித்துக் கொண்டு வாருங்கள்; பிறகு காவிரி பற்றி பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிடுவார்.

எனவே முதலில் நாம் காவிரிப் பிரச்சினையை முடித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அடுத்து, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்; பயிற்று மொழியாக வேண்டும் என்ற கருத்தை மகாலிங்கம் சொன்னார். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது அன்றைக்கு அவையிலே உறுப்பினராக இருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் உரையாற்றிய நேரத்தில், இந்தக் கருத்தை அழுத்தந்திருத்தமாக அண்ணா அவர்கள் எழுந்து “இன்னும் ஐந்தாண்டு காலத்திற்குள்ளாக தமிழைப் பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக ஆக்கியே தீருவேன்” என்று உறுதியளித்தார்.

உறுதியளித்த அண்ணா அவர்கள் 2 ஆண்டுக் காலத்தில் மறைந்தார்கள். அந்தப் பொறுப்பை நான் சுமந்தேன். அப்போது 70 அல்லது 71ஆம் ஆண்டு தமிழ் பயிற்று மொழி என்று அறிவித்தேன். அண்ணா அவர்களுடைய சட்டப்பேரவை வாக்குறுதியை அடிப்படையாக வைத்து “தமிழைப் பயிற்று மொழியாக்குகிறோம்” என்று அறிவித்தேன்.

அதற்கான நடைமுறைகள் எல்லாம் தொடங்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகள், பள்ளிகளின் மாணவர்களும் பெரும் போராட்டத்திலே ஈடுபட்டு, தமிழகமே நிலைகுலைந்து போகக்கூடிய சூழ்நிலை உருவாயிற்று. அதற்குப் பின்னால் சில அரசியல் கட்சிகளும் இருந்தன. பல தலைவர்களும் இருந்தார்கள்.

அவர்கள் எல்லாம் யார் யார் என்பது மகாலிங்கம் அவர்களுக்குத் தெரியும். எனவே, நான் இந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்க விரும்பாமல், அதனை வெளியிடாமல் விட்டு விடுகிறேன்.

அப்போது சிலம்புச் செல்வர் என்னைச் சந்தித்து “தமிழைக் காப்பாற்றுவது பிறகு இருக்கட்டும். முதலில் ஆட்சியைக் காப்பாற்றுவோம்; ஆட்சியைக் காப்பாற்றினால்தான் எப்போதாவது தமிழைக் காப்பாற்ற முடியும்” என்றார். “என்ன செய்யலாம்” என்று கேட்டேன்.

அப்போது அவர், ஒரு குழுவை நியமித்து, இந்தத் தமிழ் பயிற்று மொழியைப் பற்றி ஒரு அறிக்கையை அந்தக் குழுவிடம் பெறுங்கள் என்று சொல்லி - அதன் பிறகு தான் ஏ.எல். முதலியாரைக் கொண்ட குழுவை அமைத்து - அந்தக் குழுதான் தமிழ் பயிற்று மொழி என்பது கட்டாயமில்லை. யார் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் தமிழைப் பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு தனிச் சலுகைகள், அவர்களுக்குச் சிறப்பு ஆதாயங்கள் கிடைக்கும் என்ற அளவிலே அந்த மொழிப் பிரச்சினை அன்றைய தினம் ஓரளவிற்கு நிதானப்படுத்தப்பட்டது.

ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை அன்றைக்குள்ள சூழ்நிலை அல்ல. இன்றைக்கு அவர்கள் இந்த மேடையிலே தமிழைப் பயிற்றுமொழியாக ஆக்க வேண்டும். ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று சொன்ன நேரத்தில் நீங்கள் எல்லாம் கையொலி எழுப்பினீர்கள். இது ஒரு பெரிய மாற்றம். முன்பெல்லாம் நாங்கள் அந்தக் கையொலியைப் பெற்றிருக்க முடியாது. இன்றைக்கு அந்தக் கையொலி எழும்பிய காரணத்தால் எங்களுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை. (கைத்தட்டல்) படிப்படியாக ஆனால் உறுதியாக தமிழகத்திலே தமிழ்

தான் கோலோச்சும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கும் (பலத்த கைத்தட்டல்) என்பதை பாரதி விழாவில் நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதிலே என்ன சிக்கல் என்றால் - இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி - போனால் போகிறதென்று ஆங்கிலம் இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் - ஆங்கிலத்தை அறவே அகற்றி விட்டால் இந்தியின் ஆதிக்கம்தான் வந்து சேரும்.

ஒன்றைச் சொல்கிறேன். அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவர். நான் அவருக்குப் பக்கத்திலே அமர்ந்திருக்கிறேன். முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் எதிரே அமர்ந்திருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான தலைவரான எம். கல்யாணசுந்தரம் தமிழைப் பயிற்று மொழியாக ஆக்க வேண்டுமென்று காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது பெருந்தலைவர் காமராஜர் அண்ணாவையும் என்னையும் மேஜைக்கிடையே கையை அசைத்து எங்களை அழைத்துச் சொன்னார். “என்ன கம்யூனிஸ்டுகள்தான் சொல்கிறார்கள் பயிற்று மொழி, பயிற்றுமொழி என்று; நீங்கள் அதைக் கேட்டுக் கொண்டு, அதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே; ஆங்கிலத்தை அகற்றிவிட்டா அந்த இடத்திலே இந்தி வந்து குந்திக்குமே” என்று அவருக்கேயுரிய மொழியில் சொன்னார்.

அவை முடிந்து அண்ணாவும் நானும் காரில் வரும்போது அண்ணா என்னிடம் “எவ்வளவு பெரிய சித்தாந்தத்தை காமராஜா எவ்வளவு எளிய மொழியிலே சொன்னார் பார்த்தாயா?” (கைத்தட்டல்) என்று சொன்னார்.

முதற் பதிப்பு : மே 2000