உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பாரதியார் விழா

பகுதி 3 · 3 / 3

அவ்வளவு வீரமாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் இயக்கம், அதனுடைய தலைவர்கள் எல்லாம் கூட வெள்ளைக்கார அரசர்களை வரவேற்கத் தவறியதில்லை.

சாவி அவர்கள் குறிப்பிட்டார்களே, “சக்கரவர்த்தினி” என்ற பத்திரிகை, அது ஒரு மாதப் பத்திரிகை. அதனுடைய ஆசிரியர் பாரதியார். அதிலே அவர் குறிப்பிடுகிறார்:

“வேல்ஸ் இளவரசர் அவர்களுடைய வருகையால் இந்திய நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது இந்திய மக்களுக்கு நன்மை தரும்”

என்றெல்லாம் தன்னுடைய கட்டுரையிலே குறிப்பிட்டு விட்டு வேல்ஸ் இளவரசரோடு வந்த இளவரசியைப் பற்றிக் குறிப்பிடும் போது - பாரதியின் அதே வாசகத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

“சொற்பத் திரவியமுள்ள குடும்பத்திலே பிறந்த பெண்கள் கூட இத்தேசத்தில் நகைப் பைத்தியம் கொண்டு அலைகிறார்கள். (அப்போதே எழுதி யிருக்கிறார்) வயிற்றிலே சோற்றை விட்டாலும் நமது ஸ்திரீகளுக்கு காதிலே ‘வயிரக் கம்மல்’ மிக

அவசியமாகத் தோன்றுகிறது. அப்படியிருக்க சக்கரேசவரனுடைய மகளாகிய (சக்கரவர்த்தியின் மகளாகிய) இளவரசி விசேஷ ஆபரணங்கள் எதுமின்றி வெகு சாதாரணமாகத் திகழ்ந்தமை வெகு ஆச்சரியமாக இருந்தது”

என்று 1906 ஆம் ஆண்டு சக்கரவர்த்தினி என்ற மாத பத்திரிகையில் பாரதியார் எழுதிக் காட்டுகிறார்.

எழுதுவதற்குக் காரணம் இந்தப் பண்புகள் - வெள்ளைக்கார ஆட்சியை எதிர்த்தாலுங்கூட - அந்தப் பண்புகள் நம்முடைய நாட்டிற்குத் தேவை. அந்த எளிமை தேவை. ஆடம்பரமற்ற தன்மை தேவை என்பதிலே அவருக்கு இருந்த அக்கறையின் காரணமாக அதைச் சொல்கிறார்.

அந்த நேரத்திலேதான் காங்கிரஸ் மாநாடு காசியிலே கோகலே தலைமையிலே நடைபெறுகிறது. அந்தத் தலைமை உரையிலே கோகலே குறிப்பிடுகிறார். “வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் நமது தேசத்துக்கு வந்திருக்கிறபடியால் அவர்களுக்குப் பக்தியுடனும் வணக்கத்துடனும் நல்வரவு கூறுதல் நமது முதல் கடமையாக இருக்கிறது” என்று கோகலே 1905 டிசம்பர் மாதம் நடைபெற்ற காசி காங்கிரஸ் மாநாட்டிலே பேசியிருக்கிறார்.

எனவே, அவர்கள் பேசியதற்கும் நாங்கள் பேசியதற்கும் சில வருடங்கள் வித்தியாசம் இருக்கலாம். அதற்காக நாங்கள் வெள்ளைக்கார தாசர்கள்; விடுதலை வீரர்களைப் பாராட்டலாமா என்ற முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். கல்கி ராஜேந்திரன் உட்பட நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் கல்கி ராஜேந்திரன் ஒரு தீவிர தேச விடுதலை இயக்கத்தினுடைய பாரம்பரியத்திற்கு உரியவர். அதைப் போலவே சாவி அவர்கள், அலிப்பூர்

சிறைச்சாலையிலே தேச விடுதலைக்காக அடைபட்டுக் கிடந்தவர்.

கல்கி அவர்களும் நாட்டு விடுதலைக்காகச் சிறைப் பட்டவர். அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நாங்களும் இதைப் போல வெள்ளைக்காரர்களை வரவேற்றது உண்டு; நீங்களும் வரவேற்றது உண்டு; ஆனால் கொஞ்சம் கால வித்தியாசம் என்றால் கால இடைவெளி என்று வைத்துக் கொள்ளலாம்; எங்கள் கால வித்தியாசம் என்றம் வைத்துக் கொள்ளலாம். (கைத்தட்டல்) நாங்கள் வெள்ளைக்கார தாசர்கள் எனப்படுகிறோம். அவ்வளவுதான்; வேறல்ல; இருந்தாலும் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள் - பாடுபடாதவர்கள் எல்லோருக்கும் சேர்ந்துதான் சுதந்திரம் வந்திருக்கிறது.

அதனால்தான் சுதந்திரம் 47 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் வந்தபோது - அதை துக்க நாள் என்று தந்தை பெரியார் அறிவித்த நேரத்தில் - அறிஞர் அண்ணா அவர்கள் “வெள்ளைக்காரன் ஒழிந்தான் என்பதை கொண்டாட எனக்கு இருக்கின்ற ஒரேநாள் இந்த நாள் தான்; எனவே இதை நான் துக்கநாள் என்று சொல்ல மாட்டேன்; இதை இன்ப நாள் என்று அறிவிக்கிறேன்; இதற்காகத் தந்தை பெரியார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னார்.

எனவேதான், நாங்கள் அரசியலிலே அறிஞர் அண்ணாவின் பரம்பரையாகவும், சமுதாயத் துறையிலே நாங்கள் பெரியாரின் பரம்பரையாகவும் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இங்கே நான் தெரிவித்துக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனக்கொரு ஆச்சரியம்; அதே நேரத்தில் வருத்தம், ஆதங்கம், வேதனை.

பாரதியார்-

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் - பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வ முண்டா மெனல் கேளீரோ? மாடனை காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்! எத னூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி அறியீரோ?”

என்று ஆயிரம் தெய்வங்கள் தேவையில்லை என்றார் பாரதி. இன்றைக்குப் பார்த்தால் அவரையே ஆழ்வாராக்கி (கைத்தட்டல்) ஆலயத்திலே வைத்து விட்டார்கள் என்பதைக் கேள்விப்படும்போது நான் மெத்தவும் வேதனைப்படுகிறேன். ஆயிரம் தெய்வங்கள் வேண்டாம் என்றவரை ஒரு தெய்வமாக, ஒரு ஆழ்வாராக ஆக்கி - ஆழ்வார்கள் 12 பேர் மாத்திரமல்ல; 13வது ஆழ்வார் இவர் என்று சொல்லி ஆழ்வார் மையத்திற்கு ஒரு புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்களே இது சரிதானா என்பதைத் தயவுசெய்து அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

சமுதாயத் துறையிலே அவருக்கிருந்த ஆர்வம் எத்தகையது என்பதற்கு அவருடைய வாசகம் ஒன்றைச் சொன்னாலே போதுமென்று கருதுகிறேன். அவர் அரசியலிலே மிகுந்த ஈடுபாட்டோடு தீவிரமான விடுதலைப் பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தபோது சமூகத் துறையிலும் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பூணூல் போடுவதில்லை. குடுமியைக் கத்தரித்துவிட்டு கிராப்பு வைத்துக் கொண்டார். மீசை வைத்துக் கொண்டார்.

பிராமணர் குலத்திற்கு எதிராக மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டார். பூணூலை அறுத்தெறிந்து விட்டார். அது மாத்திரமல்ல; புதுச்சேரியிலே கனகலிங்கம் என்ற ஒரு ஆதிதிராவிட பையனை அழைத்து வந்து, அவனுக்கு பூணூல் மாட்டி உபநயனமும் செய்து வைத்தார். இதையெல்லாம் கண்ட உயர் சாதிக்காரர்கள் - அவருடைய சாதிக்காரர்கள் - அந்தணப் பெருமக்கள் வெகுண்டெழுந்தார்கள். அப்பொழுது பாரதியார் சொன்னார். “ஒரு கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு, இன்னொரு கண்ணை மூடிக் கொண்டு உறங்கு என்கிறார்களே, இது எவ்வாறு சாத்தியம்” என்று கேட்டார்.

“சமுகத் தொண்டு, நாட்டு விடுதலைத் தொண்டு என்பது இரண்டு கண்கள். இதில் சமுகத் தொண்டை நிறுத்திவிட்டு, விடுதலைத் தொண்டை மட்டும் ஆற்று என்கிறார்களே, இது எப்படி சாத்தியம்? ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஒரு கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்க முடியுமா? எனவேதான் நான் இந்த இரண்டு தொண்டையும் ஆற்றுகிறேன்” என்று பாரதியார் அன்றைக்குக் குறிப்பிட்டார்.

இங்கே சாதி மத பேதங்களைப் பற்றியெல்லாம் எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். பாரதியாருடைய பாட்டு - எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பாடிய பாட்டிலேயே - வெள்ளைக்காரன் ஒரு இந்தியனைப் பார்த்து - நம் நாட்டவனைப் பார்த்து கேட்டதைப் போல - இவன் சுதந்திரத்திற்காக முரசு கொட்டுகிறான்; அவனைப் பார்த்து வெள்ளைக்காரன் கேட்டதைப் போல நையாண்டியாக ஆனால் வேதனையோடு, ஆதங்கத்தோடு பாரதிப் புலவன் பாடிக்காட்டுகிறான்.

“தொண்டு செய்யும் அடிமை, உனக்கு சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ? அதற்கு பாத்திரம் ஆவாயோ?” (சுதந்திரத்திற்கு நீ பாத்திரம் ஆவாயோ? என்று கேட்டுவிட்டு அடுத்த வரியிலே பாரதி கேட்கிறார்) “சாதிச் சண்டை போச்சோ? உங்கள் சமயச் சண்டை போச்சோ?”

இந்த இரண்டு சண்டையும் போகாமல் சுதந்திரம் உனக்கு எதற்காக? என்று அன்றைக்கு பாரதி கேட்டார்.

இன்றைக்கு பாரதி இருந்திருந்தால், இன்றைக்கும் அதையேதான் கேட்டிருப்பார். அந்த நிலையிலே இன்று நாடு இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கும் சாதியால், மதத்தால் பேதப்பட்டுக் கிடக்கிறோம். நாம் நம்மை மனிதர்கள், ஒரே குலம் என்று எண்ணுவதில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அந்தக் கருத்துக்கு நம்மை நாம் இன்னமும் ஆட்படுத்திக் கொள்ளவில்லை.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று என்றைக்கோ சங்கக்காலப் புலவன் கணியன் பூங்குன்றன் பாட - அதை அன்னை இந்திரா காந்தி ரஷ்யாவிற்குச் சென்ற போது அங்கே எடுத்துச் சொல்லி - அவ்வளவு பெருமை பெற்ற வரிகளுக்குரிய தமிழ் இனம் - இந்த இனம் யாதும் ஊரே, யாவரும் கேளிர் (யாவரும் கேளிர் என்றால் எல்லோரும் நம்முடைய உறவினர்கள் என்று பொருள்) சில பேர் அந்த ‘கேளிர்’ என்பதை கொஞ்சம் நீட்டிச் சொல்லி கேளீர் - எல்லோரும் கேளுங்கள் என்று கூடச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அது அல்ல.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் - எல்லோரும் உறவினர்கள்; எல்லாம் நம்முடைய ஊரே; என்ற அந்தக் கருத்துக்குச் சொந்தக்கார இனம் நம்முடைய இனம்.

ஆனால் இன்றைக்கு வெட்டிக் கொண்டு சாகிறோம்; சுட்டுக் கொண்டு சாகிறோம். வீடுகள் எரிக்கப்படுகின்றன; மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். மதவெறியால், சாதி வெறியால் என்றெல்லாம் பார்க்கும் போது சுதந்திரப் பொன்விழா - இன்னமும் பொன் விழாவாக ஆகாமல், புண் விழாவாக இருக்கிறதே என்பதை எண்ணிப் பார்த்து - பாரதியின் பணி இன்னமும் தேவை; பாரதியின் பாட்டு இன்னமும் தேவை; பாரதியின் சேவை இன்னமும் தேவை; பாரதியைப் போன்ற உள்ளம் நமக்கெல்லாம் தேவை என்பதை இந்த பாரதி விழாவிலே எடுத்துரைத்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

- முரசொலி 12.9.97

முதற் பதிப்பு : மே 2000