உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
அறப்போர்/பகுதி 2
சொற்பொழிவுகள்

அறப்போர்

பகுதி 2 · 2 / 3

நீண்டவளர்ந்த அவர்கள் கூந்தல் குறுக்கும் நெடுக்குமாய் வெட்டப்பட்டு கோரமாக்கப்பட்டுள்ளது. தங்க நிறமேனியிலே தார் பூசப்பட்டிருக்கிறது, ரோஜாக் கன்னங்களில் கருங்கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. கந்தலாடைக்காரிகளாய் நிற்கின்றனர், அந்தக் கன்னிகள்.

ஐந்தாவதாய் ஒருத்தி. அவள் விபசாரி. தன்னை அந்த வாலிபனுக்கு கட்டிவைத்தால் தரகனுக்கு நிறைய பணம் தருவதாக வாக்களித்திருக்கிறவள். விபசாரத்தால் ஏற்பட்ட முக விகாரத்தை மறைக்க அவளுக்கு “குட்டிகுரா” பவுடர். தொழிலின் காரணமாய் குழி விழுந்த அவள் கண்கள் மறைக்க “கூலிங் கிளாஸ்” கண்ணாடி. சொறிபிடித்த மேனியை மறைக்க சொக்குப் பச்சை சில்க் புடவை. மூடைநாற்றம் மெதக்கும் அவள் கூந்தலில் முல்லைமலர்கொத்து. ஆடம்பரத்தால் ஆடவரை வசீகரிக்க அவள் கையிலே சுமன்று கொண்டிருக்கும் கைக்குட்டை.

இந்த நிலையில் கல்யாணத்திற்கு தவிக்கும் அந்தக் காளை யாரைத்தேர்ந்தெடுப்பான்?

விபசாரியைத்தானே—அவன் விவாகத்திற்கு ஏற்பாடு செய்வான். ஏன் நீங்களும் நானும்கூட ஏமாந்து போய்விடமாட்டோமா? இதே முறையில்தான் இந்த விபசாரி இத் தமிழகத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறாள்.

இந்தி படிக்க வசதியுண்டு—விபசாரிக்கு விதவித அலங்காரம் இருப்பதுபோல்! இந்திக்கு பள்ளியில் ஆசிரியர் பலர் உண்டு—விபசாரிக்கு சில்க் சேலை கட்டியிருப்பது போல்! இந்திக்கு பண உதவி தாராளமாய் உண்டு—விபசாரிக்கு முல்லைமலர் சூட்டியிருப்பதுபோல்!

ஆனால்.........தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது—அதாவது அழகான பெண்களுக்கு அலங்காரங்கள் இல்லாததுபோல்! மற்ற மொழிகளுக்கு பண வசதி கிடையாது—பலர்முக வனிதைகளுக்கு நல்ல சேலையில்லாததுபோல்! விபசாரி ஸ்தானத்தில் இந்தியும். அழகிகள் ஸ்தானத்தில் தெலுங்கு மலையாள, கன்னட மொழிகளும், வாலிபன் ஸ்தானத்தில் மாணவர்களும், நிற்கும்போது தரகன் ஸ்தானத்தில் நம் அன்புக்குரிய அவிநாசியார் அறிந்தோ—அறியாமலோ?

நின்றுகொண்டிருக்கிறார் என்பதை அவரே ஆட்சேபிக்கமுடியாது. இப்போது புரிகிறதா இந்தி இஷ்டமா? கட்டாயமா? என்று!

இஷ்டமாகத்தானிருக்கட்டுமே......இந்தி இந்த நாட்டுக்கு ஏற்றதுதானு? இந்தியிலே இலக்கியவளமுண்டா? மணிமேகலையுண்டா? குண்டலகேசியுண்டா? சிலப்பதிகாரமுண்டா? சிவகசிந்தாமணியைக் காட்டமுடியுமா? சிங்கத் தமிழரின் திறன் விளக்கும் புறநானூறைப் பார்க்க முடியுமா? காதல் கீதம் பாடும் “அக”த்தை இந்தி அறியுமா? கண்ணகி இல்லையே அங்கு! கனகவிசயன் தல்நெறித்த சேரன் செங்குட்டுவனில்லையே! நட்புக்கு இலக்கணம் சேர்ந்த பிசிராந்தையும்—நாட்டுக்கு இலக்கியம் தந்த இளங்கோவும் இல்லையே!

ஓடி வந்த இந்திப் பெண்ணே! உன்னிடத்தில் கடையேழு வள்ளல்கள் இல்லையேடி கள்ளி! குறள் இல்லையடி குடிகேடி! அகோபாரடி கயல், வில், புலிகொடி மூன்றிலே கடல் கடந்தவளடி எங்கள் தாய்! என நாம் பெருமிதங்கொள்கிறோம். பீடு நடை போட்டு பேசுகிறோம். போர் நடுவே அதை நினைத்து மகிழ்கிறோம். சிறப்பெல்லாம் பெற்ற செந்தமிழ்த் தாயைக்காக்க போர் முனையில் நிற்கிறோம் எனப் பெருமையடைகிறோம், வள்ளுவனிடத்தில் விளையாடிய தமிழ்—ஒளவையிடத்தில்

ஆத்திசூடியாய் சிரித்த தமிழ்—பாரதி நெஞ்சில் நர்த்தனமாடி—பாரதிதாசனின் இதயக்குழல்வாய் கிளம்பிய தமிழ்—ஒரு தமிழ் அமைச்சரால் அதுவும் தமிழர்கள் சாகாமல் இருக்கும்போது சீர்குலைக்கப்படுவதென்றால் அதைப்பார்த்துக்கொண்டிருக்க நாம் என்ன சோதாக்கலா? அல்லது சோற்றுவலித்த பிண்டங்களா?

இந்திய உபகண்டத்தை ஒரு தேசமென ஒப்புக்கொண்டு, இதற்கு ஒரு பொது மொழி தேவையென்றால் அந்த மொழி இந்தியாக இருக்கவும் அதற்கு அருகதையில்லை.

மதவாடை வீசாத மலராம் திருக்குறள் தன்னகத்தே கொண்ட தமிழ்மொழிதான் பொது மொழியாக இருக்க தகுதியுடையது. ஆரியக்கலாச்சாரப் படையெடுப்புக்கு அணிபோட அதுதான் வழி. ஆளவந்தார்க்கு அதைச் செய்யும் துணிவு இல்லையே! ஏன்? அமுதமிருக்க நஞ்சு தேடுகிறார்களே ஏன்?

இந்தி ஆதரிப்புக்கூட்டம் நடத்தும் தேசியத்திராவிடரே! வந்தேமாதர கோஷத்தால் உங்கள் காதுகள் செவிடுபடாமலிருந்தால்......ஜெய்ஹிந்த் கூச்சலால் உங்கள் குரல்வளையைக் கிழிபடாமலிருந்தால்.............நான் சொல்வதைக் கேட்காவிட்டாலும்...........உங்கள் தலைவர்கள் கூறியதைக்கேளுங்கள். மகாத்மாகாந்தி இந்தியப் பொது மொழியாக இந்துஸ்தானிதான் வேண்டும் என்றார். இந்தியல்ல!

ஒரு பாஷையை வலியுறுத்திப் புகுத்தக்கூடாது என்றார் பண்டித ஜவகர்.

மத்திய சர்க்காரிலேயே இத்தேசத்துப் பொதுமொழி இந்தியா? இந்துஸ்தானியா? என்று தீர்மானிக்கப்படவில்லை.

தமிழ் வாழ்க.........என்று வாயளவில் முழக்கி......அழுத்தங்கொடுத்தமாக “ஜெய்ஹிந்த்” உச்சரிக்கும் போலித் தமிழ்பக்தர்களே!.........இப்போது சொல்லுங்கள்

மகாத்மர் எண்ணப்படி—ஜவகர் கருத்துப்படி......... இந்நாட்டுக்கு தேவையானது இந்துஸ்தானியா? அல்லது இந்தியா?.........

இத்தனை விளக்கங்கள்கூறி—விரிவுரைகள் பல ஆற்றி—நாங்கள் போர் ஆரம்பித்துங்கூட “காங்கிரஸ் எதைச்செய்தாலும் அதை எதிர்ப்பவர்கள் இவர்கள்” என்று தமிழ்வாதம் பேசிவிட்டால் தெளிவு பிறந்து விடுமோ?

காங்கிரஸ் திட்டங்களையெல்லாம் நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோமா? நல்லவைகளை நாங்கள் பாராட்டிய தில்லையா?.........பாஷாணங்களுக்கும் பாம்புகள் நெளியும் சோலையிலே.........பச்சைக்கிளிகளும் பறக்குமென்பது எங்களுக்குத்தெரியும். பச்சைக்கிளிகளிடம் இசையும்—நச்சரவுகளிடம் நாசநினைப்பும் கொண்டவர்கள் தான் நாங்கள். பாம்புப்புற்றுகள் அழிக்கும்போது......சோலையின் சொந்தக்காரன், அழிப்பவனை சோலைக்கே எதிரி—என்று கூறினால் அறிவுடமையாகுமா?

ஆலயப்பிரவேச திட்டம் வந்தது......வரவேற்றோம். ஆதியில் நாம் கூறியது, நம் கண்ணெதிரே நம் மாற்றுக் கட்சியினரால் நடைபெறுவது கண்டுகளித்தோம். அதிலுள்ள குறைபாடுகளையும் எடுத்துரைத்தோம். திருத்தங்கள் தந்தோம். எதிர்ப்புப் பிரசாரம் செய்தோமா? சனாதனிகளுடன் சேர்ந்து மாநாடு கூட்டினோமா?

மதுவிலக்கு வந்தது மகிழ்ச்சியடைந்தோம். ஒரு சில கதர் சட்டைகளிலேதான் சில இடங்களில்—கள் நாற்றம் அடித்ததே தவிர......எங்கள் கழகக் கட்டிடங்களை நாங்கள் சாராயங் காய்ச்சும் தொழிற் சாலைகளாக ஆக்கிக்கொள்ளவில்லை. மதுவிலக்கு வெற்றிபெற வாழ்த்துக் கூறினோம். குடியர்களோடுகூடி “கள் வாழ்க” என்று கத்தவில்லை.

ஜமீன்தார் ஒழிப்பு சட்டமாக்கப்படுவதை அவசரப்படுத்தினோமே தவிர.........ஆகா! ஜமீன்கள் சாய்ந்து விடுவதா? ஜரிகைத்தொப்பிகள் கழன்று விடுவதா? என்று ஒப்பாரி வைக்கவில்லையே? ஜமீன்தாரல்லாதார்

மாநாடு நடத்தி அன்றைக்கே ஜமீன் ஒழிப்புத் தீர்மானங் கொண்டுவந்த எங்கள் வெகுநாளைய எண்ணம் வெற்றிப் பாதையில் கால்வைப்பது கண்டு களித்தோமே தவிர......கண்ணீர்விடவில்லையே!

ஜமீனோடு......இனும்! இனும்களோடு தங்கக் கவச லிங்கம்! பொன்னோடு பொன்னம்பலத்தான்! மாணிக்க மூக்குத்திக்காரி மதுரை மீனாட்சி! வைரக்கிரீட வெங்கடத்தான்! சொர்ணத் தியாகராசப்பெருமான்! இவர்களையும் சேர்த்து ஒழியுங்கள் என்று திருத்தம் தந்தோமே தவிர திட்டத்தை எதிர்த்தோமா?

இப்போதுதான் என்ன.........ஐதராபாத் பிரச்சினை வந்ததும் அறப்போரின் வேகத்தை நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லையா?