உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
அறப்போர்/பகுதி 1
சொற்பொழிவுகள்

அறப்போர்

பகுதி 1 · 1 / 3

அறப்போர்

போராட்டம் தொடங்கிவிட்டோம், தோழர்களே போராட்டம் தொடங்கிவிட்டோம். புரட்சியின்வேகம் உணராது—புகையும் எரிமலையை புன்னகை அருவியென எண்ணிடும் பொட்டைக் கருத்தினரை எதிர்த்து—போடுங்கள் மஞ்சள் பெட்டியில் வோட்டுகளே, பூரிப்பு பொங்கிடும் உங்கள் வாழ்வினிலே என்று பேசி. இன்று பொத்தல் ஆட்சி நடத்தும் அன்பர்களை எதிர்த்து—மொழியும் கல்வியும் வாழும் முழு சந்திரம் தவழும் என்று வாய்ப்பறைசாற்றி தமிழையே தரைமட்டமாக்கப் புறப்பட்ட வந்தேமாதர வீரர்கள் எதிர்த்து—ஆட்சிபீடத்தில் ஏறியதும் அதிகார போதையில் அடக்குமுறைகள் அள்ளி அள்ளி வீசிடும் ஆணவ ஆட்சியாளரை எதிர்த்து—போராட்டம் தொடங்கிவிட்டோம் தோழர்களே!

போராட்டம் தொடங்கிவிட்டோம்.

“வாழ்வு சாவு” இரண்டிலொன்றை வரவேற்பது என்ற வைர நெஞ்சத்துடன் களத்தில் குதித்திருக்கிற நாம் அவசரப்பட்டோ, ஆத்திர உணர்ச்சிக்கு அடிமைப் பட்டோ, அவசியமில்லாமலோ போர்ப்பரணிபாடவில்லை. மாநாடுகூட்டி, மன்றாடிக்கேட்டு, மறைமலையடிகளாரை, மாத் தமிழர் திரு. வி. கவை, மறத் தமிழர் சிவஞானத்தை மாற்றுக் கட்சியினர் தமிழறிவை—மந்திரிகளுக்குக்காட்டி எதற்கும் இணங்காத இறுமாப்பான நிலை ஆளவந்தார்க்கு என்று அறிந்த பின்னரே போர்!

போர்!! போர்!!! என்றோம்; போர் மூண்டுவிட்டது. சமருக்குமுன் சந்திப்பு நடத்தினோம். பெரியார்—பிரதமர் பேட்டி நடந்தது. யுத்த தர்மத்தில் ஒரு சிறிதும் நழுவவிடவில்லை. களத்திலே காளையரை—கன்னியரை—கல்லறையாகவுந் துணிந்த வீரர்களை—களப்பலியாக எங்கள் அருமை அண்ணாவை நிறுத்தியிருக்கிற நாங்கள்—

போர் நிலையுணர்த்தும் நோக்குடன், போரின் அவசரத்தை புரிந்துகொள்ளாத பொது மக்களுக்கு விளக்கம் தரும் விருப்புடன், போர் நடத்துபவர் பொல்லாதவர் என பொய்யுரை திரிக்கும் போக்குக்குப் பதில் கூறும் ஆசையில் இங்கு நிற்கிறோம். பொது மக்களே! போர் மூள்வதற்குக் கால்கோள் விழா நடத்தியவர் காங்கிரஸ் அமைச்சர்கள் என்பதை யார் மறுக்கமுடியும்? சட்டமும்—அதிகாரமும் தங்கள் கையில் என்ற தைரியத்தில் அவர்கள் எம் மீது எவிய கணைகள் கொஞ்சமா?

அந்தக் கணைகளை பெரியார் ஆணைப்படி இதுவரை கேடயம் கொண்டு தடுத்துப்பார்த்தோம். கேடயமும் உடைந்தது, கணைகள் எம் விலா எலும்புகளையும் நொறுக்குகிற அளவுக்கு—எங்கள் நிலமை நெருக்கடியாகிவிட்டது. ஆகவேதான் போராட்டம் தொடங்கிவிட்டோம் என முரசொலித்தோம். எதிர்க்கத் தொடங்கியிருக்கிற நாங்கள் வேல், வில், ஈட்டிகொண்டு எதிர்க்கவில்லை. ஒடிந்த விலா எலும்பை வீசியெறிந்து எதிர்க்கிறோம். ஆம்—அறப்போர் நடத்துகிறோம்.

ஆட்சி அவர்கள் கையில் ஏறியவுடன் எய்த முதல் கணை தோழர் C. P. சின்னராசு தீட்டிய போர்வாள் நாடகத் தடையுத்திரவு. அந்த நாடகத்திலே என்ன குற்றம் கண்டார்கள். போர்வாள் நாடகத்தில் குஷ்ட ரோகிப் புருஷனைக் கோமளாங்கியின் வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி கதை இருக்கிறதா? வாழை மட்டையைவைத்து அடுப்பெரித்தாள் என்ற பொய் மூட்டை நல்ல தங்காள் புராணம் இருக்கிறதா? குளத்திலே நீராடிய பெண்களின் சேலையைத்திருடி மரத்திலே அமர்ந்து குழலூதிக் கும்மாளம்போட்ட கோபால கிருஷ்ணனின் கோணல் நடத்தை இருக்கிறதா?

மகா விஷ்ணுவை மாயாமோகினியாக்கி அந்த ஆணைப் புணர்ந்து அய்யனாரைப் பெற்ற மகேஸ்வரனின் மானங்கெட்ட வரலாறு இருக்கிறதா?

சிந்திக்கச் சொன்னது சின்னராசின் போர்வாள் என்பதற்காக அதற்குத் தடையா? அடுக்குமா இது ஆட்சியாளரே என்று கேட்டோம். ஆட்சியாளர் மௌனம்

சாதித்தனர். போர்வாளுக்குத்தடை, அறிவுக்குத் தடை. பெரியாரே என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டோம். பொறுமனமே பொறு என்றார் பெரியார்; பொறுத்தோம்.

அடுத்து—இல்லாத கறுப்புச் சட்டைப்படையை இருப்பதாக நினைத்து கறுப்புச் சட்டைப்படை தடை யுத்தரவு தாண்டவமாடிற்று. அமைச்சர் ஓமந்தூரார், ஆற்காடு ராமசாமி, அறிஞர் சண்முகம் அன்பர் காமராஜ்; அடிக்கடி கட்சி மாறும் சுப்பராயன் அத்தனைபேரும் ஆரிய அகாராவில் குதித்தார்கள். இந்த அவல நிலையை அழிக்கத்தானே நாங்கள் கறுப்புப்படை அணிந்தோம். அதற்குமா மறுப்பு மந்திரியாரே? என மனமுருகிக் கேட்டோம்.

கறுப்புச் சட்டைப்படையென ஒரு ராணுவ அமைப்பு இல்லையாமே—அது எந்த பலாத்கார நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லையாமே—இப்படியெல்லாம் திராவிட கழகத் தலைவர் ஈ. வே. ராமசாமி அவர்கள் அறிக்கை விடுத்திருக்கிறாரே—பிறகு ஏன் தடை விதித்தீர்?

இம்மாதிரி சரமாரியான கேள்விகள் சட்ட சபையில் கேட்கப்பட்டன. மந்திரியாரில் ஒருவர் முத்தான வாய்திறந்தார். பதில் சொல்வார் என எதிர்பார்த்தோம்.

தடை யுத்தரவுக்குக் காரணம் “தெரியாது” என திருவாய்மலர்ந்தருளினார். அவர் இப்போது மாஜி மந்திரி. அந்த கேலிச் சித்திரத்தைக்கண்டு மகிழவா எமக்கு நேரம்? மனம் புண்ணுயிற்று. பெரியாரே! இதற்கு வழி என்ன என்று ஈரோடு நோக்கி உரத்த குரல் எழுப்பினோம். பொறுமனமே பொறு என்றார். அப்போதும் பொறுத்தோம். போர் துவங்கவில்லை. பின்னர்,

‘விடுதலை’க்கு 2000-ரூபாய் ஜாமீன் கோரியது ஆட்சிபீடம். காரணம் கேட்டோம் கனல்களுடன். காரணமா கிடைக்கும் இந்த கேடுபாரற்ற ராஜ்யத்தில்! ‘விடுதலை’ செய்த தவறென்ன? உலக உத்தமர் காந்தியைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்ற உண்மையை உரைத்து

குற்றமா? பெரியார் ராமசாமியின் பொன் மொழிகள் திராவிடத்திற்கு தந்தது குற்றமா? அரசியலில் குட்டை குழப்புவோரை சமுதாயத்தில் குறும்புத்தனம் செய்வோரைத் தன் குத்தூசியால் குத்தித் திருத்தியது குற்றமா? காமத்தை வாரியிறைக்கும் ஏடுகள். வாலிபரை வசிகரித்து வாழ்வை விழலாக்கும் இதழ்கள், இவைகளெல்லாம் அமைச்சரின் கண்களில் படாததேனு? இந்தக் கேள்வியை கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக—ஆவேசமாகக் கேட்டுவிட்டு பெரியார்பக்கம் திரும்பினோம்.

அவர் என்ன சொல்கிறார் எனக்கேட்க. பொறுமனமே பொறு என்ற அமைதி ஒலியே அங்கும் எழுந்தது. அடங்கினோம், அமைதி பெற்றோம், அப்போதும் போர்நாள் குறிக்கவில்லை.

பிறகு, குன்றெடுக்கும் பெருந்தோளான்-கொடை கொடுக்கும் கையான்-குள்ளநரிச்செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்-என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்! வஞ்சக விபீஷணனின் அண்ணனென்று தன்னை வையத்தார் சொல்லுமொரு மா பழிக்கே அஞ்சும் நெஞ்சகன், நல்யாழின் நரம்புதனைத் தடவி நிறைய இசைச்செவியமுதுதரும் புலவன், வெஞ்சமரில் சாதல்வர நேரிடினும் குற்றச்சி விரும்பாத பெருந்தகை, தென்னிலங்கை வேந்தன் இராவணன். அவன் சிறப்பைப்பற்றி திரு புலவர், V.

S. குழந்தை ஒருகாவியம் புனைந்தார். இராவணகாவியம். ஆம் புதுமைச்சோலை, அந்தச் சோலைக்குத் தீயிட்டனர் செங்கோலேந்திகள். இராவண காவியத்திற்குத் தடைபோட்டது. “விற்காதே—வாங்காதே” எனச் சட்டமிட்டது சர்க்காரின் சட்டம். இராவணகாவியம் ஏன் பறிமுதலாக வேண்டும் என்று நாங்கள் நினைக்காமலிருக்க முடியுமா? நினைக்கிற நேரத்தில் எங்கள் நெஞ்சு நெருப்பாக மாறாமல்தானிருக்க முடியுமா? மைந்தாரை அழைத்துக்கொண்டு கம்பராமாயணச் சோலையிலே வந்தோம், அங்கே பூத்துக்குலுங்கியிருந்த மலர்களில் பூநாகங்கள் நெளிவதை அவருக்குக் காட்டினோம்.

நாமம் போட்டிருப்பது ராமனல்ல......நம்மினத்தைக் கடிக்கவந்த நல்ல பாம்பு என எச்சரித்தோம். அதோ சலசலென ஒலுவது

நீரோடையல்ல......நம் கல்வனத்தை நாசமாக்கும் விஷ வாய்க்கால் என விளக்கினோம். அத்தோடுவிட்டோமா? மிதிலாபுரியைக் காட்டினோம். மிதிலையின் மாளிகையில் ஜனகன் மகள் ஜானகியைக் காட்டினோம். வில்லொடித்து சீதையை விவாகம் செய்ய விசுவாமித்திரனுடன் வரும் ஸ்ரீ. ராமனைக் காட்டினோம். சீதையின் கண்களும், ராமன் கண்களும் பின்னிக்கொண்ட காட்சியைக் காட்டினோம். ராமனின் தரிசனத்தால் புளகாங்கிதமுற்று—பூரிப்பு தாங்க முடியாமல்—பொங்கி நின்ற பூமாதா சீதாதேவியைப்பற்றி கம்பர் பாடிய பாடலைக் காட்டினோம்.

அந்தப் பாடலிலே மகிழ்ச்சி தாங்கமுடியாமல் சீதையின் மறைவிடம் திடீரென விம்மியதையும்—அதனால் மேகலாபரணம் அறுந்து விழுந்ததையும் கம்பர் வர்ணித்திருக்கிற பாங்கைப் படித்துக் காட்டினோம். மகாலட்சுமி அவதாரத்திற்கு “வாமமேகலையிற் வளர்ந்து அல்குலே” என்று மட்டரக வர்ணனை தந்த கம்பனின் கேவல புத்தியைக் காட்டினோம்.

இந்த ஆபாச ராமாயணத்துக்குத் தடைபோட தைரியமற்ற சர்க்காரே! நீ எங்கள் இராவணகாவியத்துக்குத் தடை போட்டது நியாயமா? நேர்மையா? நாணயமா? என்று கேட்டோம். கண்களிலே ரத்தம் தெறிக்க—அந்த ரத்தத்திலே ரோஷம் கொப்பளிக்க கர்ச்சனை புரிந்த நாங்கள் ஈரோடு நோக்கினோம். பொறுமனமே......பொறு என்றார் பெரியார் ராமசாமி. போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதற்குப்பின் திராவிடர் நெஞ்சத்தைப் பிளக்கும் திடுக்கிடும் செய்தி கேட்டோம். எங்கள் தாயின் கழுத்தை நெறிக்கும் காட்சி கண்டோம். இந்தி நுழைந்தது இந்தி! இதையும் பொறுக்கமுடியுமா? பெரியாரே இனிப் பொறுக்கமுடியாது. வீரர்கள் நாங்கள் வெறுளிகள் அல்ல. எங்கே போர்க்கட்டளை எனத் துணிச்சலாக கேள்விகிளப்பினோம், அப்போதும் பொறுமனமே பொறு என்றார் அந்தப் பொல்லாத கிழவர். எங்கள் துடிப்பு எங்களாலேயே அடக்கமுடியாத சக்தி பெற்றது, மாநாடு நடத்தினர்.

மாத்தமிழர் உள்ளத்தைப் படம்பிடித்து மந்திரிமார்களுக்குத் தெரிவித்தார். மனம் இரங்கிற்று

மந்திரிகட்கு. எங்கே உத்திரவு இருங்களய்யா என அடுத்தடிப்பேசினோம். எம் தலைவரே! பெரியாரே! எங்கள் அழுத்தமான எண்ணத்திலே—முறுக்கேறிய நரம்புகளிலே—சூடேறிச் சுழன்றோடும் ரத்தத்திலே—தினவெடுக்கும் தோள்களிலே—கனல்பொழியும் கண்களிலே தங்கட்கு நம்பிக்கையில்லையா? நாங்கள் சாவதற்கு அஞ்சும் சமூகத்தினரா? சண்டைக்கு ஒளியும் மரபினரா? பாண்டியன் பரம்பரை ஆயிற்றே! சேரன் சந்ததியாயிற்றே! சோழனின் சொந்தக்காரராயிற்றே? சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள் போர் என்று சொல்லுங்கள்.

பொக்கை வாயைத்திறந்து அந்தப் பொன்மொழியைச் சொல்லுங்கள். ஒத்திக்கும் அந்த திருக்குரலை எம்மிடம் நீட்டுங்கள்.....எங்கே?...எங்கே?...என, எரிமலைகளாய் நின்ற நாங்கள் கெஞ்சினோம். அய்யா வாயசைத்தார். அவர் வெண் தாடி அசைந்தால் போதுமே எங்களுக்கு. ஆகஸ்ட் பத்தில் போர் என்றார். அண்ணா சர்வாதிகாரி என்றார். போராட்டம் தொடங்கிவிட்டோம் தோழர்களே போராட்டம் தொடங்கிவிட்டோம்.

போரின் முதற்குறி—முதல் தாக்குதல்—இந்திக் கோட்டையைத் தவிடுபொடியாக்குவது. பிறகு மார்வாடிகள் என்ற மாசினுட் அரண்கள் மண்மேடாக்குவது. திராவிடத் தனியாட்சி மலரும்வரை நம் தோள்களுக்கு ஓய்வில்லை. அதுவரை போர்! போரேதான். அதற்காக... நாங்கள் வீட்டில் விடைபெற்று களத்தில் நிற்கும் வேளையில்......விஷக்கோப்பைகளுடன் வேதரத்தினங்கள் உங்கள் முன் விஜயம் செய்கின்றனர். அவர்கள் நாக்கிலும் விஷம்......கையிலும் விஷம்......அது உங்கள் நரம்பில் ஏற்றப்படுவதற்காக!

இந்த வேதனை தரும் நிலையைப் போக்க—விஷம், வேதரத்தினங்களின் ரூபமாக வருவதை எச்சரிக்க—நாங்கள் களத்திலிருந்தபடியே உங்களைக் காணவேண்டியிருக்கிறது. இந்தி தென்னாட்டுக்கு இறக்குமதியாகிறது என்றும் கல்விமந்திரியார் கூறினர் கர்நாடகம் முதலிய பகுதிகளில் கட்டாயபாடம்; தமிழ் நாட்டில் இஷ்டபாடம் என்று! 1938, அவிநாசியாரோடு பேசியிருக்கிறது என நினைத்தோம். தாளமுத்து நடராஜன்

கல்லறைகளைக் காட்டியிருக்கிறது என எண்ணினோம். அன்றி அணிவகுத்த ஆயிரமாயிரம் வீரர்களின் படைவரிசையை வர்ணித்திருக்கிறது என மகிழ்ந்தோம். திடீரென இந்துவும் மித்திரனும் உருவிய புண்ணில்கண்டு வெலவெலத்து விடுவோர் அவிநாசி என நாம் எதிர்பார்க்கத்தானில்லை. அந்த வஞ்சகப் பஞ்சணையிலே—வரதாச்சாரி வாக்கம் விரித்தவலையிலே தலைகுப்புற வீழ்ந்தார். தமிழ் அழிக்கத்துணிந்தார். தமிழ் அழிக்கத்துணிந்தார். தகாத செயல் இதுவென நாம் எடுத்துரைத்தும், எச்சரித்தும் ஆச்சாரியாரின் செவியையே அமைச்சர் பெற்றிருந்தார்.

கட்டாயமாக இந்தியைத் திணித்திருப்பவர் நாம் களம்புகுவதை நடத்தியதும் இந்தி கட்டாயமல்ல; இஷ்டபாடந்தான் என சுற்றிச்சுற்றி குறுவளிப்பிரச்சாரம் செய்கிறார். பதவி நிலைக்கப் பணிபுரியும் சர்தார் வேதரத்தினமும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். இந்தி இஷ்டபாடந்தானும் அவர்கள் கிளப்பும் புதராக விஷப்புகை. கட்டாயபாடம் என்று முழக்கியவாயால்—இந்தியைக் கட்டாயமாகத் திணித்து விட்டு—இது இஷ்டபாடந்தான் என்று விளக்கம் கூறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதுவே நமக்கு போரில் முதல் வெற்றி.

“ஆங்கிலத்தை மூன்றாவது மொழியாக்கிவிட்டோம் தமிழை முதல் மொழியாக்கிவிட்டோம். இந்தி கட்டாயமல்ல, இரண்டாம் மொழிக்கும்தான் கட்டாயம். இரண்டாம் மொழிக்குழுவில் கன்னட முண்டு, களிதெலுங்குண்டு, கவின்மலையாளமுண்டு. பார்சியுண்டு, சமஸ்கிரதமுண்டு, இந்தியுமுண்டு. இதில் ஏதாவதொன்றைத்தான் கட்டாயமாகப் படிக்கவேண்டும். ஆகவே இந்தி கட்டாயமல்ல”

இது அந்த விஷமிகளின் விபரீத வாதம். நாங்கள் சொல்லுகிறோம். சட்டப்படி இந்தி இஷ்டபாடந்தான். ஆனால் நடைமுறைப்படி இந்தி கட்டாயபாடமாக்கப்பட்டிருக்கிறது.

அழகான ஒரு வாலிபன். அரும்புமீசையுடையோன், அவனுக்கு மணந்துகொள்ள ஒரு பெண் தேவை. அதற்காக

ஒரு தரகன் அழைக்கிறான். ஆவல் வெளியிடுகிறான். தரகன் பெண் தேடிப்புறப்படுகிறான். நாலைந்து பெண்கள் கொண்டுவரப்படுகிறார்கள். வாலிபன் அவர்களில் ஒருத்தியைப் பொறுக்கவேண்டும். வரிசையாக அந்த வனிதையர் நிறுத்தப்படுகின்றனர். அதில் நாலு பேர் நல்ல அழகிகள். ‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்ற பாரதிதாசனின் பாட்டுக்கு ஏற்ப குடும்பம் நடத்தும் குணத்தினர். விவரிப்பானேன், அவர்கள் குளிர்தென்றல்கள். ஆனால், அந்த அழகிகள் அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளனர்.