அறப்போர்
பகுதி 3 · 3 / 3
ஓங்கிய வாட்கள் உறையிலிட்டு ஓய்வு பெற்றது மட்டுமல்ல—சர்க்காருக்கு உபத்திரவம் கொடுக்காமலும் நாங்கள் ஒதுங்கியிருக்கவில்லையா? இதுதான் சமயமென்று நாங்கள் தண்டவாளங்களை தகர்க்க ஆரம்பித்திருந்தால்—தபாலாபீசுகளைத் தகரம் செய்யத் துவங்கியிருந்தால்—தீவட்டியுங் கையுமாக சர்க்கார் நிலையங்களை வட்டமிட்டிருந்தால்—ஏன்? ஐதராபாத் நிஜாமுடன் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்திருந்தால் மீண்டும் போர்நாள் குறிக்க ஈரோடு மாநாடு நடந்திருக்காதே.
திராவிடஸ்தான் சுதந்திர விழாகொண்டாட அல்லவா ஈரோட்டில் நாள் குறித்திருப்போம்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், வீரமும், விவேகமும் பொருந்திய ஒரு தலைவரைப் பெற்றிருக்கிற நாங்கள் வீணர்களல்லவே! வேண்டுமென்று ஒருபோரை விலைக்கு வாங்க வேலையற்றவர்களல்லவே!
படகிலே இடங்கேட்ட பார்ப்பன பிரமச்சாரி காலும் கையும் கட்டப்பட்டிருந்த காரணத்தால்—துடுப்புக்குச்சியை பல்லால் இழுத்து குரங்கின் பின்புறத்தில் குத்த குரங்கு அங்கிருந்த பாம்பாட்டியின் பெட்டியில்பாய்—பெட்டி திறந்து, அங்கே நாகங்கள் சீற—நாகங்கண்டு நடுங்கிய பிரயாணிகள் அங்குமிங்கும் ஓட—நட்டாற்றில்
படகு கவிழ்ந்த கதையைப்போல நமது கல்வி மந்திரி அவிநாசியார்—அதிகாரம் என்ற குச்சியால் இந்திக் குரங்கில் குத்தி, அது தான் பிழைக்க அடக்குமுறையென்னும் பாம்புப்பெட்டியில் தாவி, அடக்குமுறை அரவங்கண்ட தமிழர் அச்சங்கொண்டு ஓடி......ஆட்சிப் படகு நட்டாற்றில் அமிழ்ந்துவிடும் நிலையை சிருஷ்டித்துவிட்டார். கதையில் வருபவனும் பிரமச்சாரி. கல்விமந்திரியும பிரமச்சாரி. கேட்கவேண்டுமா வினை?
எங்கள் எண்ணம் புரிபவர்—எங்கள் கொள்கைகளின் அங்கங்களை ஒத்திட்டுப்பாராதவர்—விளக்கம் தெரிந்து கொள்ள விரும்பாதவர்—வேதரத்தினமே இந்த தேசம் என எண்ணுபவர், போராட்டத்தில் பெருக்கெடுக்கும் எங்கள் ரத்த ஓடைகளைக் கண்டபிறகாவது அவர்கள் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கட்டும். ஆகஸ்ட் பத்துக்குப் பிறகு நாங்கள் பட்ட அல்லல்களை எண்ணிப்பார்த்து எங்கள்மேல் இரக்கப்படட்டும்.
தமிழ்காக்கவந்த தோழியர் தனலட்சுமியை முப்பது மைலுக்கப்பால் தன்னந்தனியாய்க் கொண்டுபோய் விட்டார்கள்; வெள்ளையனின் கொடுங்கோல் வெறுத்தவர்கள் இந்த வேதனையை விளையாட்டாகக் கருதினர்கள்.
எட்டுமாத கர்ப்பவதி, வயிற்றிலே சிசு துடிக்கத் துடிக்க, தள்ளாடி நடக்கும் தன் நாலுவயதுக் குழந்தை “அய்யோ அம்மா பசி” என அலற, மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தாள் கருகிய மொட்டென ஒரு மழலை—சூரியனின் கனல் தாங்காத அதன் தாய்—இந்தப் பரிதாபப்படலத்தை அங்குள்ள மரங்கள் கண்டிருந்தால்—அந்த மரங்களுக்கு பேச வாயிருந்தால்—“ஓ! இதுதானு சுயராஜ்யம்!”
எனக் கூறி சிரித்திருக்கும். அந்தச் சிரிப்பின் ஒலியிலேயே......அக்கிரமங்களின் அஸ்திவாரம் அசைக்கப்பட்டிருக்கும். அகிம்சா வீரர்களின் ஆட்சியிலே இந்த அக்கிரமம் நடைபெறலாமா என நாடு கேட்கிறது. நாட்டுமக்கள் கேட்கிறார்கள். கேட்பது மட்டுமல்ல சிரிக்கிறார்கள். இப்படி சிரிப்பாய் சிரிக்கத்தானு—காந்தியார் கஷ்டப்பட்டார் என்று திரு. வி. க. அழுவதும், அதைக்காதில் போட்டுக்கொள்ளாமல் காமராஜர் சுப்பராயன்
கோஷ்டி ‘காரைக்கால்’—மாக்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவர வேண்டும் மென் கார்ச்சிப்பதும் நம் காதில் ஒலிக்கிறது.
இரும்பு நெஞ்சன் இட்லரும்—மூர்க்கன் முசோலினியும் பாசிசத்தை இந்த பாரதபுத்திரர்களிடம்தான் கற்றுக்கொண்டார்களோ என்று சந்தேகிக்கிற அளவுக்கு சம்பவங்கள். நாங்கள் கஷ்ட நஷ்டங்களை கருதிப்பார்த்துத்தான் போரில் இறங்கினோம் எங்கள் ஈட்டிகளின் கூர்மையிலே—கேடயத்தின் வலுவிலே—நெஞ்சு உறுதியிலே சந்தேகமில்லையென்று தெளிந்த பிறகே தலைவர் ஆணை கிடைத்தது எங்களுக்கு. போரை விரும்பமாட்டோம்: போர் முனையில் வந்துவிட்டால் புறமுதுகிடும் வழக்கம் தமிழுணர்ச்சிபெற்ற எங்களுக்கு கிடையாது.
இதைவிடக் கடுமையான கொடுமைகள் எங்களை அணுக இருக்கின்றன. அடக்குமுறையின் அகோர வாய் எங்களைப்பார்த்து பிளந்தபடியிருக்கிறது. அதிகாரம் தன் இரத்தநாக்குகளை நீட்டியபடி எங்கள் மேற்ப்பும் பிடிக்கிறது. சட்டத்தின் விஷப்பற்களுக்கிடையே நாங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறோம். இன்று உங்களிடையே உலவுகிற நாங்கள் நாளை தூக்குமேடையில் ஊசலாடலாம். பலிபீடத்தில் தலையிழந்த முண்டமாக்கிடக்கலாம். சமாதிகளாய் அமைந்துவிடலாம்.
சிறைச்சாலையில் சித்திரவதைக்கு ஆளாகலாம்.
ஏன்......எங்கள் தலைவர் பெரியார் ராமசாமி நாளை சென்னை கடற்கரையிலே பேருரையாற்ற வரலாம் பெரியார் பேச்சுக்கு 144 தடைபோடப்படலாம். பெரியார் தடையை மீறி பேசுவதற்காக மேடையில் ஏறும் சமயம் போலீசாரால் கைது செய்யப்படலாம். தமிழகத்தின் தலைவன் தன்மானக்காவலன்—தள்ளாத வயதிலே தமிழ்காக்கும் பெரியோன்—பொன்னிற மேனியும் வெண்ணிற தாடியுங்கொண்ட புரட்சிச் சிம்மம்—திராவிடத்தின் தந்தை—ஆ! எங்கள் முடிகூடா மன்னனுக்கா சிறைச்சாலை எனச் சீறியெழலாம் சென்னைப் பொதுமக்கள்.
பொதுமக்கள் பொங்குங் கடலானது கண்டு, போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகித்தும் பயன் காணாமல் கடைசியாக
துப்பாக்கியைத் தூக்கலாம். பட படவென குண்டுகள் வெடிக்கையிலே திசை கெட்டுத் திண்டாடி மக்கள் ஓட......அவசரத்தில் அந்த அமளியில்......ஒரு குண்டு பெரியார் ராமசாமியின் மார்பிலே பாயலாம். பெரியார் பிணமாக விழலாம். அலங்கோலமாய் ஓடுகின்ற மக்கள் கீழே சாய்ந்து கிடப்பது பெரியாரின் சவம் என்பது தெரியாமல் அவர் மார்பிலே கால் வைத்து ஓடநேரலாம். அய்யகோ! இந்தக் கணராவியான காட்சியை நம் கண்களாலேயே காணலாம். இதையும், நாங்கள் படமாக்கிப் பார்த்து, மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டுதான் போர் முரசு கொட்டி யிருக்கிறோம்.
எங்களுக்கு எவ்வளவு தொல்லை இந்த நாட்டில். லட்சக்கணக்கான வீரர்கள் கூடுகிற மாநாட்டு செய்திகளை பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. காரசாரமான இந்தி எதிர்ப்பு செய்திகளிலே கத்திரிக்கோல் வேலை நடத்துகிறார்கள் தேசிய ஆசிரியர்கள். சென்னையிலே எங்கள் சங்கநாதம்—திருச்சியிலே எங்கள் திராவிடப் பட்டாளம்—இந்த எழுச்சிமிகு நிகழ்ச்சிகள் வானொலியில் வருவதேயில்லை. பண்டிதநேருஜி படுத்துப் புரண்டதும்—பட்டேல்துரை பல்லிளக்கியதும் பத்திரிகையிலே கொட்டை எழுத்துச் செய்திகள்.
பாரதிதாசனுக்கு பரிசளிப்பு விழா. பதினாயிரக் கணக்கில் மக்கள் கூடினர் என்பது பத்திரிகையிலே எங்கோ ஓர் மூலையில்! ஆவணி அவிட்டம் பூணூல் போட்டுக் கொண்டதற்கு ஒரு நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில்! அண்ணா தலைமையில் ஈரோடு மாநாடு, அதன் ஒலிபரப்பு மாத்திரம் ஊமையாகிறது ரேடியோ. இந்த குட்டை மனப்பான்மைக்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டாமா.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள் வடவர் ஏகாதிபத்தியத்துக்கு வாழ்த்து கூறுவதை நாம் அனுமதிக்க முடியுமா?
மதுவிலக்குக்குப் பணமில்லை—ஜமீன் ஒழிப்புக்கு உதவியில்லை—ராஷ்டிரபதி தேர்தலில் பட்டாபிக்கு ஆதரவு தரமாட்டோம் என்ற அளவுக்குப் பேதங்காட்டிய வடநாட்டுத் தலைமை பீடத்தை இன்னும் தலையில்
தூக்கி வைத்திருப்பதை நாங்கள் எதிர்ப்பது தவறு? திராவிடத்தை வியாபார மார்க்கெட் ஆக்கிக்கொண்ட மார்வாடி பனியாக்கொள்ளையை நாங்கள் மறுப்பது தவறு? சமுதாயத்தை சருக்கு நிலமாக்கிய ஜாதி வெறியை நாங்கள் சாய்க்க நினைப்பது தவறு? கட்டாய இந்தியை நுழைத்து மாணவரைக் கெடுக்காதீர் எனக் கூறுவது தவறு? இதற்காக நடைபெறும் எங்கள் பிரச்சாரங்களை சர்க்கார் தடுத்தால் அந்த சர்க்காரை எதிர்ப்பதுதான் தவறு? பிரஜா உரிமைக்காக போராடியவரே!
எழுத்துரிமை கேட்ட எந்தன்பரே! இதிலே எது தவறு?
இந்தப்போர் மொழிப்போர் மட்டுமல்ல. இது இன உரிமைப்போர். ஏகாதிபத்திய எதிர்ப்புப்போர். பார்ப்பனிய பனியா ஒழிப்புப்போர். இதில் வெற்றி தோல்வி எந்தப்பக்கம் தாவினாலும் கவலையில்லை.
மானத்தை காப்பாற்ற ஒரு போர் நடந்தது என்பது மட்டும் சரித்திரத்தில் இடம் பெற்றால் போதும். வருங்கால சந்ததிக்கு அந்த வரிகள் வேல்களாகும். படை முழக்கமாகும்.
திராவிடப் பெருங்குடி மக்களே! நடராசன் தாலமுத்து கல்லறைகளைக் காட்டி—நாயர், தியாகர் பணிகள் நினைவுபடுத்தி—வேலாயுத்தத்தின் பிணத்தை எதிர் நிறுத்தி உங்களை வேண்டுகிறோம் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். ஆதரவு தர முடியாவிட்டாலும் ஆசி கூறி அனுப்புங்கள் அறப்போருக்கு! உங்களிடம் நாங்கள் கோருவதெல்லாம்......நாங்கள் அத்தனைபேரும் செத்து மடிந்துவிட்டால் தயவு செய்து எங்கள் எல்லோருக்குமாக சேர்த்து ஒரு சமாதி கட்டி வையுங்கள்.
அந்தச் சமாதி, எதிர்காலத்திலே ஓமந்தூரார் பேரனின் கண்ணீரால் நனையட்டும் என்பதற்காக! வேதரத்தினத்தின் வம்சம் அங்கு நின்று விழிகளில் நீர் பெருக்கும் என்பதற்காக அந்தக் கண்ணீர் எங்களையும்—நாங்கள் எதற்காக செத்துப்போனோமோ அந்தக் குறிக்கோளையும் நினைவுபடுத்தும் என்பதற்காக இந்தக்கடைசி கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம் நாங்கள் மாளுவதற்குத் தீர்மானித்து களம்புகு நேரத்தில்
திராவிட மக்களுக்கு எழுதிவைக்கும் உயில்; சுயமரியாதைச் சொத்தைக் காப்பதும் திராவிட நாட்டாட்சியை வசப்படுத்துவது என்பதும்தான்.
திராவிட வாலிபரே! வனிதையரே! மானம் காக்கும் எண்ணம், மார்க்குடியில் பிறந்த பண்பு, இவைகள் நம்மிடை இருப்பது உண்மையானால் வீட்டுக் கொருவர் கிளம்புங்கள். ஓராயிரம் ஈராயிரம் ஆண்டுகளாய் வளர்ந்துவரும் ஆதிக்கத்தை ஒரு கை பார்த்து விடுவோம்.
ஆட்சியாளரே! நீங்கள் அடக்குமுறையை அள்ளி எறியுங்கள் எம்மேல்! ஆனால், அடக்குமுறை வெற்றியைத் தருமா என்பதை இரத்தம் சிந்திய திருப்பூர் குமரனைக் கேளுங்கள். சிறையில் வாடிய வ. உ. சிதம்பரத்தைக் கேளுங்கள். தூக்கில் தொங்கிய பகத்சிங்கைக் கேளுங்கள். அவர்களுடைய பதிலைக் கண்ட பிறகும் அடக்குமுறையில் உங்கட்கு நம்பிக்கை இருக்குமானால் அந்த ஆயுதத்தைச் சுழற்றுங்கள். போலீசார் போதவில்லை என்றால்......திராவிட இனத்து விபீஷணர் குண்டர்களை ஏவுங்கள்; அதிலும் முடியாவிட்டால் பண்ணைக்காரரின் ஆட்கள் நிறையக் கிடைப்பார்கள்; எம்மீது பாயவிடுங்கள்.
பட்டாளத்தையே வரவழையுங்கள். எதற்கும் பின்னடையவர்களல்ல நாங்கள். இயேசுக்கு சிலுவையும், முகமது நபிக்கு கல்லடியும்; சாக்ரடீசுக்கு நஞ்சும், காந்தியாருக்கு துப்பாக்கி குண்டுகளும் பரிசாகத் தரப்பட்ட பயங்கர வரலாறுகளைப் படித்துப் பார்த்துத்தான் நாங்கள் அறப்போர் தொடங்கியிருக்கிறோம்.
உம்......நடக்கட்டும் உங்கள் அடக்குமுறை. எங்கே உங்கள் அதிகார அஸ்திரங்கள்? இதோ எங்கள் நிமிர்ந்த நெஞ்சு. வீசுங்கள். கண்டபடி வீசுங்கள், கை, கால், கண், காது, மூக்கு, முகம் எல்லாம் மூளியாகட்டும். மூளையே சிதறித் தெரித்தாலும் முதுகைக் காட்டிவிடும் சோதாக்கலாகி விடமாட்டோம். இதை மறந்துவிடாதீர்கள்.
இது “தேவாசுர” யுத்தம். ஆம்......இராமாயணப் போர். இந்தப் போரில் நிச்சயமாக வெற்றி இராவணனுக்குத்தான்! இராமனுக்கு அல்ல! ராஜ்யம் விபீஷணனுக்குமல்ல!
**இதுவே எமது அறப்போரின் இறுதிப் பிரகடனம்.**
