உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 9
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 9 · 9 / 29

சென்னையில் மாணவர்கள் பஸ் தொழிலாளர்கள் மோதல் ஏற்பட்ட பொழுது, ஜஸ்டிஸ் சோமசுந்தரம் அவர்களால் நீதி விசாரணை செய்யப்பட்டு, அவர்கள் செய்துள்ள பரிந்துரைகளின்படி ஆயிரக்கணக்கான ரூபாய் மாணவர்களுக்கு நஷ்ட ஈடாகத் தரப்பட்டிருக்கிறது. அந்தப் பரிந்துரையை இந்த அரசு மறந்து விடவில்லை. ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அத்தனை பேர்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடாக அரசு கொடுத்திருக்கிறது.

உடையார்பாளையம் துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக ஜஸ்டிஸ் ராமபிரசாத் ராவ் அவர்களைக் கொண்டு நீதிவிசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

பெருமாநல்லூரைப் பொறுத்த வரையில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ராமகிருஷ்ணன், ஜி.சி.எஸ். அவர்கள் நீதிவிசாரணைக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், நான் கேட்கிறேன். ஒரு பெரிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, இந்த மன்றமே அதிர்கின்ற அளவுக்கு அன்றைய தினம் பேசப்பட்டது. ஒரு நிகழ்ச்சி, 1957-ம் ஆண்டு நடைபெற்ற முதுகுளத்தூர் சம்பவம். முதுகுளத்தூர் சம்பவத்தில் வயல்வெளிகளில் மிதந்த பிணங்கள் எத்தனை? அங்கே வைக்கோல் போரில் சுருண்டு விழுந்த குழந்தைகள் எத்தனை? தாலி அறுத்தவர்கள் எத்தனை பேர்? நான் தேவர்கள், அரிசனங்கள் என்று பிரித்துப் பேச விரும்பவில்லை.

இந்த சமுதாயத்து மக்கள், தமிழ் நாட்டு பெருங்குடி மக்கள். முதுகுளத்தூர் சீமையிலே மக்களின் ரத்த ஆறு ஓடிற்று. பயிர்கள் மீது இருப்பது நீரா அல்லது ரத்தமா என்று வித்தியாசம் தெரியாத அளவுக்கு முதுகுளத்தூரில் 40 நாட்களுக்கு கொடுமையான சம்பவம் நடந்தது. 5 மறவர்கள் ஒரு கோவிலின் வாயிலில் கை கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, போலீஸ் எதிரில் நிறுத்தப்பட்டு, சுடு என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, 1, 2, 3, 4, 5, என்று எண்ணப்பட்டு ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒருவராக சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இப்படி ஐந்து மறவர் குல மாணிக்கங்கள் முதுகுளத்தூரில் உயிர் நீத்தனர். ஆதித் திராவிட மக்கள் வைக்கோல் போரில் தூக்கியெறியப்பட்டு கொளுத்தப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். என்ன கேட்டோம்? கம்யூனிஸ்டு தலைவர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அப்பொழுதிருந்த அவர்கள் ஆட்சியில் நீதி விசாரணை கேட்ட நேரத்தில், காமராஜ் சர்க்கார் அதற்கு இணங்கியதா? காமராஜர் அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தாரா?

இங்கே தான் அமர்ந்திருந்தார் காமராஜர் அவர்கள் அப்போது. அவர் பக்கத்தில் இருந்த திரு. சுப்பிரமணியம் அவர்கள் என்ன சொன்னார்? எடுத்ததற்கெல்லாம் நீதி விசாரணை என்றால், போலீஸ் தங்கள் கையிலே துப்பாக்கியையே தூக்க மாட்டார்கள், தங்கள் கடமையைச் செய்ய மாட்டார்கள் என்று சொன்னார்.

முதுகுளத்தூர் நிகழ்ச்சிக்கு நீதி விசாரணை இருந்ததா?

இப்பொழுது நீதி விசாரணை வைத்திருக்கிறோம். 40 நாள் நடைபெற்ற அமளி, ரத்தப் புரட்சி, இப்படிப்

பட்ட முதுகுளத்தூர் சம்பவத்திற்கு ஒரு விசாரணை வைக்கப்பட்டதா? காமராஜ் தலைமையில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபை இதை மறந்து விட்டது என்பதையும் நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்.