உதயக் கதிர்
தலைப்பு 6 · 6 / 29
நிலப்பறி இயக்கம்
நிலப்பறி இயக்கம், அதிலே போலீசார் அடக்குமுறை என்று சொன்னார்கள். நிலப்பறி இயக்கம் என்று சொன்ன உடனே கம்யூனிஸ்டுகள் கோபித்துக்
கொள்ளப் போகிறார்கள். நிலமீட்சி இயக்கம் என்று அவர்கள் பெயர் கொடுத்து இருக்கிறார்கள். அந்த நிலப்பறி இயக்கத்தை இந்தியா முழுவதிலும் நடத்துவது என்று திட்டமிட்டார்கள். தமிழ் நாட்டிலும் நடத்தப் போகிறோம் என்று சொன்னார்கள். நடத்துவதற்கு முன்பு எத்தகைய வேகமான அறிக்கைகள் வந்தன. கருணாநிதியின் இரும்புக்கரம் என்ன செய்கிறது பார்ப்போம் என்று அறைகூவல் விடப்பட்டது.
இவ்வளவுக்கும் பிறகு அந்த நிலப்பறி இயக்கத்தை, 15-ம் தேதி நடத்தப் போகிறோம் என்று சொன்னார்கள். எந்த 15-ம் தேதி, ஆகஸ்ட் 15-ம் தேதி. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில். பிரிட்டிஷ்காரனிடத்தில் இருந்து இந்தியாவை மீட்ட நாளில், நிலப்பிரபுக்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்கு திட்டம் வகுத்தார்கள். அதற்காக யாத்திரை ஏற்பாடு செய்தார்கள். அந்த யாத்திரை என்பது வெறும் பிரச்சாரத்திற்கல்ல அங்காங்கு நிலப்பறி இயக்கத்தில் ஈடுபடுவதற்கு ஆட்களைத் திரட்டுவதற்காக என்று அறிந்த காவல் துறை வெகு உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தார்கள்.
அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எந்தவித மதிப்புக் குறைவாகவும் நடத்தப்படவில்லை. எந்த அசௌகரியமும் ஏற்படாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொன்னேன்.
கம்யூனிஸ்ட் தலைவருக்கு விசேட வசதி
திரு. கல்யாணசுந்தரமும், திரு. மணலிகந்தசாமி அவர்களும் ஏற்கனவே உடல் நிலை சரியில்லாதவர்கள். திரு. கல்யாண சுந்தரம் அவர்களுக்கு சுவாச நோய் உண்டு. சட்ட மன்றத்திலே தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுந்து நின்று பேசுவார். மற்றப் பொதுக் கூட்டங்களில் பேசுகிற போது உட்கார்ந்து கொண்டு தான் பேசுவார். மணலி கந்தசாமி அவர்களும் உடல் நலம் சரியில்லாதவர்கள். மிகுந்த கவனிப்பு கொடுக்க வேண்டுமென்று சொன்னேன். அவரை திருச்சியிலிருந்து சென்னைக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்கள்.
என்னைப் பாளையங்கோட்டைக்கு போலீஸ் லாரியில் ஏற்றிச் சென்றதைப் போல் அவரை அழைத்து வராதீர்கள் காரில் அழைத்து வாருங்கள் என்று சொன்னேன். அவர் பெரிய காரில் டி.ஐ.ஜி. காரில் அழைத்து வரப்பட்டார். இங்கே சென்னை
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். தகுந்த முறையில் அவர் கவனிக்கப்பட்டார்.
