உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 5
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 5 · 5 / 29

இதைப் போலவே நெய்வேலியில் நடைபெறும்போது கூட நெய்வேலி தொழிலாளர்கள் அங்கே போராட்டம் நடத்துவதற்கு முன்பு என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் கண் வலியால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தேன். மூன்று நான்கு நாட்கள் உட்கார்ந்து பேசி 92 லட்ச ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு ஊதியம் உயர்த்துவதற்கான நிலை உருவாக்கப்பட்டது. மே 1ந் தேதி அவர்கள் விழாவைக் கொண்டாடி விட்டு, அன்றைய தினம் ஏற்பட்ட சில சந்தேகங்களின் காரணமாக மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

பிறகு அவர்களே ஒப்புக் கொண்டார்கள். "அந்த வேலை

நிறுத்தம் சட்ட விரோதம் தான். நாங்கள் சட்டப்படி அறிவிப்புச் செய்யவில்லை" என்று சொன்னார்கள்.

அந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட சில அசம்பாவிதத்தால் போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். தேவஅன்பு என்றவர் இறந்து விட்டார். உள்ளபடியே இந்த அரசிலே இருக்கிற அத்தனை பேரும் ஆழ்ந்த அனுதாபத்தோடு அதற்கு வருத்தம் தெரிவித்தோமே தவிர, போராடினீர்களா, தேவ அன்பு சுடப்பட்டாரா, சரிதான் என்று போலீசை தட்டிக் கொடுக்கவில்லை. யாரும் கேட்காமலேயே விசாரணை வைத்தோம். அப்படி வைக்கப்பட்ட விசாரண அறிக்கையிலே கூட குறிப்பிடப்பட்ட அதிகாரி குப்பத்திலே போய் நுழைந்தது தவறு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த விசாரண அறிக்கையை ஏற்றுக்கொள்வோம் என்பதை இந்த மன்றத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவைக் கிளர்ச்சி

கோவை விவசாயிகள் கிளர்ச்சியைப் பொறுத்த வரையில் அவர்களுடைய கோரிக்கைகளை அரசு அறியும். அதில் என்ன சங்கடங்கள் இருக்கின்றன என்பதும் தெரியும். இது பற்றி திரு. பூவராகன் என்னிடத்தில் வந்து பேசினார். அவர் அமைச்சராக பதவியில் இருந்த காரணத்தால் அவர்களிடத்தில் இருக்கிற சங்கடங்களை விளக்கினேன். திரு. மன்றாடியார் தலைமையில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். ஒரு முடிவை வெளியிட்டோம். அதற்குப் பிறகு இதே அவையில் எதிர்க்கட்சித் தலைவர், பாதி கிணறு தாண்டி இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை.

முழுக்கிணறு தாண்டுங்கள் என்று சொல்கிற அளவுக்கு நான் அந்த விவசாயியின் பிரச்சினையை கவனிக்க முடியாது என்று மறுத்து விடவில்லை. அவர்களுக்கு மான்யமாக கொடுப்பது பல கோடி ரூபாயாக ஆகிறது. 75 அடிக்கு மேலே உள்ள கிணற்றிற்கு 9 பைசாவும், அதற்குப் பிறகு உள்ள கிணறுகளுக்கு 10 பைசாவும் வசூலிக்கலாம் என்று சொன்னோம். விவசாயச் சங்கத்தின் செயலாளர் எனக்கு எழுதிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டு இருந்தார்! அந்தக் கடிதத்தில், நீங்கள் அந்தச் சலுகை அளித்து இருப்பதற்கு நன்றி, ஆனால் 75 அடி ஆழத்திற்குள்ள கிணறுகள் கோவை மாவட்டத்தில் 15 சதவிகிதம் இருக்கிறது.

9 பைசா வீதம் 85 சதவிகிதம் பயன் அடைந்து இருக்கின்றனர். ஆகவே இந்த மீதமுள்ள 15 சதவிகித

கிணறுகளுக்கும் 9 பைசாவாக ஆக்க வேண்டுமென்று கேட்டார்கள்.

"உங்கள் மாவட்டத்திற்கு மட்டும் 9 பைசா என்று நிர்ணயிக்க முடியாது. தமிழகத்திலே இருக்கிற வேறு பல மாவட்டங்களிலும் இதுபோன்று குறைக்க வேண்டி வரும், அதன் காரணமாக மேலும் சில கோடி ரூபாயை இழக்க நேரிடும். இப்போது தேவையில்லை. கொஞ்சம் பொறுத்து இருங்கள்" என்று சொன்னேன்.

அவர் பார்த்து விட்டுச் சென்ற ஓரிரண்டு நாட்களுக்குள் அறிக்கை விட்டார்கள். வன்முறைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோம் என்று சொன்னார்கள். அதற்குப் பின்னாலே அவர்களே, அது தவறு என்று குறிப்பிட்டு கடிதம் எழுதிவிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அந்தக் கிளர்ச்சியின் காரணமாக 3 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று செய்தி வந்தது. மூன்றுபேர் 30 பேர் செத்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு இந்த அரசு இல்லாமல், இதை அரசு கௌரவப் பிரச்சினையாகப் பார்க்காமல், ஆணவத்தோடு பதில் சொல்லாமல், மூன்று பேர் உயிர் துப்பாக்கிக் குண்டால் பிரிக்கப்பட்டது என்று தெரிந்த பிறகு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கவில்லை.

உடனடியாக நீதிவிசாரணை வைக்க வேண்டுமென்று கேட்பதற்கு முன்னாலே, வைக்கப்பட்டது. நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டது. வாங்க மறுத்தார்கள். அல்லது மறுக்கும்படி செய்யப்பட்டார்கள்.

நஷ்ட ஈடு கேட்காமலேயே நஷ்ட ஈடு வழங்குவதற்கு இந்த அரசு முன் வந்தது. அவர்களுக்கு அனுதாபம் காட்டிடுமே. தவிர்க்க முடியாத அளவுக்கு இந்த துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுவிட்டது என்று உணர்கிறோம். அந்த உணர்வு ஏற்கனவே ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி என்று சொன்னால் திரு. கருத்திருமன் அவர்கள் பக்தவத்சலம் என்று நினைக்கலாம். ஆனால் மதிப்பிற்குரிய திரு. காமராசர் காலத்திலிருந்து நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி அப்படிப்பட்ட உணர்வோடு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து இருக்கிற வரலாறு உண்டா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.