உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 4
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 4 · 4 / 29

எவ்வளவோ கிளர்ச்சிகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் பற்றிச் சொன்னார்கள். தொழிலாளர்

தங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பிறகு கிளர்ச்சிகள் நடைபெற்றன அப்போது. இதில் வேடிக்கை என்னவென்றால், குறிப்பிட்ட சில கிளர்ச்சிகளும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் இந்த அரசால் கவனிக்கப்பட்டு அவர்களுடைய முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் தொடங்கியிருக்கின்றன. இதை மிக நன்றாக உணருவீர்கள் என்று கருதுகிறேன்.

மின்சார வாரிய ஊழியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். மின்சார வாரிய ஊழியர்கள் உத்தியோக உயர்வு வேண்டுமென்று கேட்ட நேரத்தில் நான், அவர்களோடு நான்கைந்து நாட்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தி, மின்சார வாரியத் துறை அமைச்சர் - நான் வாரியத் தலைவர் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் - ஆக எல்லோரும் கூடி பேச்சுவார்த்தை நடத்தி பத்து பதினைந்து ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஊதியத்தினை அவர்களுக்கெல்லாம் போதும் போதும் என்கிற அளவுக்கு உயர்த்திக் கொடுத்து அதன் காரணமாக 4 கோடி ரூபாய் அதிகச் செலவை மின்சார வாரியம் ஏற்றுக்கொள்கிற அளவிற்கு அறிவித்த போது என்னுடைய கையைக் குலுக்கிவிட்டு நன்றி தெரிவித்து விட்டுச் சென்ற பொறியாளர்கள் இரண்டு நாட்களில் எல்லாம் - என்ன காரணமோ நான் அறியேன் அவர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் செய்யப் போகிறோம் என்றார்கள்.

எல்லோரும் அல்ல. பொறியாளர்கள் மாத்திரம்.

சதிசெயலுக்கு இரும்புக்கரம்

இரவு 12 மணிக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்கள். ஆனால் மாலை 5 மணிக்கே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மின் விளக்குகள் எல்லாம் எரிய நகரங்களிலும் அணைந்து போகிற அளவிற்கு ஒரு கொடிய செயலில் ஈடுபட்டு யாரும் வந்து இயந்திரத்தை மறுபடியும் இயக்க முடியாத அளவிற்கு அவைகளைப் பாழ்படுத்தி விட்டு அவர்கள் வெளியேறினார்கள். அப்படி ஒரு சதித் திட்டம் நடைபெற்றால் இந்த அரசு பார்த்துக்கொண்டிருக்குமா என்று நிருபர்கள் கேட்ட நேரத்தில் சதித் திட்டங்களை இந்த அரசு அனுமதிக்காது.

சதித் திட்டங்களை இரும்புக் கரங்களைக் கொண்டு அடக்குவோம் என்று சொன்னேன். அப்படிச் சொன்னதில் சதித் திட்டங்களை எடுத்து விட்டார்கள், இரும்புக்

கரத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டார்கள்.

சதித் திட்டங்கள் நடைபெற்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொன்னேன். முன்னாலே சொல்லப்பட்ட வார்த்தைகளை விட்டு விட்டு, இரும்புக்கரம் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு, விவசாயிகள் போராட்டமா, இரும்புக்கரம், நிலப்பறி இயக்கமா இரும்புக்கரம், இப்படி எந்தப் போராட்டம் நடைபெற்றாலும் இரும்புக்கரம், இரும்புக்கரம் என்ற இந்த இரும்புக்கரம் கொஞ்ச நாள் மிக அதிகமாக அரசியல் வட்டாரத்தின் புழக்கத்தில் இருந்தது.

ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 9 பேர் கைது செய்யப்பட்டார்கள். உடனடியாக அவர்கள் வேலைக்குத் திரும்புவதற்கு, எழுத்துக் கொடுத்த பிறகு அத்தனை பேரும் மன்னிக்கப்பட்டு, அத்தனை பேரும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பழி வாங்கப்படவில்லை, பழி வாங்குகிற செயலில் அந்த வாரியம் ஈடுபடவில்லை.

ஆகவே, இதிலே மிகுந்த இரக்கச் சுபாவத்தோடு பார்க்க வேண்டும். இது பொது மக்களின் பிரச்சினை. இது மிக மிக முக்கியமான விஷயம். நம் உடலோடு தீர்க்கத்தேவையான ஒன்று ஆகவே, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது அபாயம் என்று கருதியதால் அவர்கள் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ரூ. 4 கோடி அளவுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்ட பிறகு அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகுதான் அரசியல் நோக்கங்களுக்காக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதை அனைவரும் மிகப் பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.