உதயக் கதிர்
தலைப்பு 3 · 3 / 29
அதைத் தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற இடைத் தேர்தல். அது காங்கிரஸ் கட்சியின் இடமாக இருந்தாலும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தோற்றிருந்தாலும் பிறகு நடைபெற்ற தென்காசி இடைத் தேர்தலில் ஏறத்தாழ 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கு வாகைசூடியது என்பதற்கு, மக்கள் கழகத்தின் மீது கழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணமாகும்.
பின்னர் சாத்தூரில் நடைபெற்ற இடைத் தேர்தல். அங்கு எங்கள் தோழமைக் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்தது. அங்கேயும் தோழமைக் கட்சியான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். மாநகராட்சி மன்றத்திலும் இந்த ஆட்சிப் பொறுப்பை நாங்கள் ஏற்ற பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்கிற அளவிற்கு பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதையும் யாரும் மறந்திருக்க முடியாது.
நகராட்சி மன்றங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஏழெட்டு இடங்கள் தான் முன்பு இருந்தன. இப்போது ஐம்பதுக்கு மேற்பட்ட நகராட்சி மன்றங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் வீற்றிருக்கிறார்கள். இது மக்களுக்கு இந்த அரசின் மீதுள்ள நம்பிக்கைக்கு அடையாளம்தான்.
புதுவை மாநிலத்தில் ஒரு காலத்தில் நாங்கள் போட்டியிட்டுக் கட்டிய பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாத நிலை இருந்ததும் உண்மை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு இங்கே அமைந்த பிறகு புதுவை மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகமும் வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சியும் இணைந்த கூட்டணி ஆட்சி உருவாகி, முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர் அங்கு முதல் அமைச்சராக வீற்றிருக்கிறார் என்பதும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நல்ல முறையில் நடைபெறுகிறது என்கிற அந்த இனிய காற்றின் வாடை அங்கே வீசிய காரணத்தால் தான் புதுவையில் முன்னேற்றக் கழகத்திற்கு அப்படிப்பட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.
ஊராட்சி ஒன்றியத் தேர்தல்கள்பற்றி எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். ஏதேதோ பட்டியல்களை எல்லாம் போட்டுக் காட்டுகிறார்கள். தவறான கணக்குகளை எல்லாம் காட்டுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். இது கட்சி சார்பில் நடைபெறுவதல்ல என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் கட்சிக் கணக்கைக் காட்டுவதாகச் சொன்னார்கள். எனது பணிவன்பான வேண்டுகோளே அவர்கள் ஏற்றுக்கொண்டு இரண்டு கட்சிப் பத்திரிகைகளையும் எடுத்து தேதிவாரியாக அவர்கள் பார்க்கட்டும்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் காங்கிரசுக்கு வெற்றி, காங்கிரசுக்கு வெற்றி என்று முதலில் அப்படிச் செய்திகளை வெளியிட்டவை காங்கிரஸ் கட்சிப் பத்திரிகைகளா அல்லது கழக ஏடுகளா என்பதை அவர்களே எடுத்து ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
அப்படி செய்திகள் வெளிவந்த பிறகுதான் கழக ஏடுகளிலும் அப்படிச் செய்திகளை வெளியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 178 இடங்களைப் பெற்றிருக்கிறது. அவர்களில் எட்டு அல்லது பத்து பேர்கள் கழக ஆதரவோடு வெற்றி பெற்ற சுயேச்சைகளாக இருக்கலாம். இப்படி 178 பேர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்வது உண்மை அல்ல. உண்மைக்கு மாறாகச் சொல்கிறார்கள் என்றெல்லாம் காங்கிரசார் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லியும் மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதினால் இப்போது ராம் சுபாக் சிங்கைக் கொண்டு சொல்லச் சொல்லி அவர்கள் ஒரு அறிக்கை விட்டார்கள்.
பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் மாநில சுயாட்சி மாநாட்டில் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார்கள். அதன் பிறகாவது நம்புவார்களா, இல்லையா, ஆள் மாறாட்டம் செய்து விட்டார்கள், இவர்கள் அந்த ஆட்கள் இல்லை என்று சொல்வார்களோ என்னவோ எனக்குத் தெரியாது.
ஆகவே ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்தலில் இருந்து இந்த அரசின் பால் மக்களுக்கு நல்ல வகையில் நம்பிக்கை இருக்கிறது என்பதை மக்கள் நல்ல முறையில் மெய்ப்பித்திருக்கிறார்கள். இந்த கண்டனத் தீர்மானத்தின் மூலம் பேசும் நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் பற்றி எல்லாம் பேசப்பட்டது. கண்டனத் தீர்மானத்
திற்கு ஆதரவாக எழுந்து நின்று அதற்குப் பிறகு அதை யொட்டிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், என் அருமை நண்பர் கருத்திருமன் அவர்கள் பேசும்போது போலீஸ் அடக்குமுறை அத்து மீறிவிட்டது, அத்துமீறிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். இருபதாண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் எவ்வளவு என்றால் கிடைத்திருக்கிற தகவலை வைத்துச் சொல்கிறேன். இன்னும் சேகரித்தால் அதிகமாகக் கிடைக்குமே தவிர குறையாது - 108 துப்பாக்கிப் பிரயோகங்கள்.
அந்த அரசு கொடுத்த கணக்கின்படியே அதில் ஏற்பட்ட பலி 155 பேர்கள் ஆக 108 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்து 155 பேர்களைக் கொன்று குவித்த அந்தக் கட்சி இன்றைய தினம் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து கொண்டு கழக ஆட்சியில் துப்பாக்கிப் பிரயோகம் அத்துமீறிவிட்டது என்று பேசுவது நியாயமாகாது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் காங்கிரஸ்காரர் தான் செய்தார்கள் என்றால் அதை நீங்களும் செய்யலாமா என்று கேட்டலாம்.
கம்யூனிஸ்டுகள் ஆண்ட கேரளத்தில் - தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் ஆட்சி செலுத்திய நேரத்தில் 58 ஜூலை முதல் 59 ஜூலை முடிய ஒரு ஆண்டு காலத்தில் நான்கு துப்பாக்கிப் பிரயோகங்கள். 19 பேர்கள் சாவு. அதே கேரளத்தில் 67 முதல் 70 வரையில் இந்த மூன்றாண்டுக்காலத்தில் 15 துப்பாக்கிப் பிரயோகங்கள் 19 சாவுகள் ஏற்பட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறவில்லை என்று நான் மறுக்கவில்லை.
நடைபெற்றிருக்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றிருக்கின்றன என்பதையும், அப்படி நடைபெற்ற நேரத்தில் எல்லாம் அரசுக் கட்டிலில் வீற்றிருக்கும் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம் என்பதையும், ஆனால் முன்பெல்லாம் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற நேரங்களில் அதைப் பற்றி அவர்கள் அதிர்ச்சியடையாமல் சுடுகிற இடத்திற்குப் போனால் சுடாமல் என்ன செய்யவேண்டும் என்கிற அளவிற்கு பதில்கள் தரப்பட்ட ஆட்சி அந்தக் காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
கோரிக்கைகள் நிறைவேறிய பின்னும்!
