உதயக் கதிர்
தலைப்பு 2 · 2 / 29
அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் எல்லாம் அந்தந்தப் பொறுப்புக்குரிய அமைச்சர்கள் எழுந்து தக்க விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். அந்த விளக்கங்கள் அத்தனையும் பத்திரிகா தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டுமென்ற போக்குக் கொண்ட எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. 'பத்திரிகா தர்மத்தைப் பற்றிக் கவலை இல்லை. எப்படியாவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இழுக்கை உண்டாக்க வேண்டும்.
இவர்களா, ஆளுவதா? இவர்கள் யார்? சாதாரணமானவர்கள், சாமானியமானவர்கள். ஆளுவதற்குத் தகுதிபடைத்த அந்தஸ்துள்ள குடும்பங்களில் பிறக்காதவர்கள்; பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளவர்கள்; ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்; இன்று ஆளும் கட்டிலே அலங்கரிப்பதா?'
என்று ஆத்திரம் கொண்ட சில ஏடுகள் வேண்டுமானால் நாங்கள் அவ்வப்போது அளித்த விளக்கங்களை எல்லாம் வெளியிடாமல் மறைத்திருக்கலாம். அவர்களையும் நான் தாக்கிட விரும்பவில்லை. எங்களை ஆளாக்கிய அண்ணன் கற்றுத் தந்த மொழியின்படி 'வாழ்க அவர்கள்' என்று வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நானே அல்லது அமைச்சர்களோ கூட பதில் சொல்லத் தேவையில்லை என்ற அளவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரிய பல உண்மைகளை வெளியிட்டு, அழுத்தந்திருத்தமான பதில்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் மிகத் திறமையோடு வாதாடிய ஆளும் கட்சி உறுப்பினர்களையெல்லாம் நான் சட்டசபையில் உள்ள ஆளும் கட்சியின் தலைவன் என்ற முறையில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே நேரத்தில் மிகுந்த கண்ணியத்தோடும், இந்த அவையின் மரபு கெடாத வகையிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரிக்காத நிலையில் கண்டனத் தீர்மானத்தின்மீது பேசிய மற்றக் கட்சியினர் பேசிய வேறு கட்சியினர் அத்தனை பேரும் இந்த அவையின் மரபு காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைத்து விவாதங்களிலே கலந்து கொண்டதற்காக அவர்கள் அனைவருக்
கும் இதயபூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலையான ஆட்சி
நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து விடுகின்ற காரணத்தால், வெளியில் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லி விடுவார்கள் என்று எதிர்க் கட்சித் தலைவர் அவர்களோ அல்லது எதிர்க் கட்சியில் இருக்கிற உறுப்பினர்களோ எண்ணுவது சரியாகாது. நம்முடைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் கூட சட்டமன்றத்தில் 7-3-70 அன்று பேசுகின்ற நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார்கள்: "பிற மாநிலங்களில் கூட்டணி ஆட்சிகள் நடைபெறுகின்றன.
திடீரென்று கவிழ்கின்றன; இடையிலே யார் மந்திரிசபை அமைப்பது என்ற நிலை எல்லாம் இருக்கும் போது இங்கே ஒரே ஆட்சி, நிலையான ஆட்சி இருக்கிறது. இதை நான் பாராட்டாமல் இருக்க முடியாது" என்று குறிப்பிட்டார்கள். நிலையான ஆட்சி தொடர்ந்து இருக்கும் என்ற நல்ல நம்பிக்கையுடன் அவர்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஆகவே, அந்தப் பாராட்டை அவர்கள் நிச்சயமாகத் திரும்பப் பெற மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் எனக்கு உண்டு.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு தமிழ் நாட்டு பெருமக்கள், வாக்காளர் பெருமக்கள் இந்தக் கட்சியின் மீது அல்லது இந்தக் கட்சியோடு தோழமை கொண்டிருக்கிற கட்சிகள் மீது அளவு கடந்த அன்பினைச் செலுத்துகிறார்களா, இல்லையா, நம்பிக்கை வைத்தார்களா, இல்லையா என்பதை நாம் எண்ணிப் பார்த்திட எவ்வளவோ அளவுகோல்கள் இருக்கின்றன. நாங்கள் அரசுப் பொறுப்பேற்ற ஆறு ஏழு மாதங்களில் தென்சென்னை நாடாளுமன்ற இடைத் தேர்தல் வந்தது.
அறிஞர் அண்ணா அவர்கள் அந்தத் தொகுதியிலிருந்து பதவி விலகியதால் ஏற்பட்ட அந்த இடைத் தேர்தலில், இவர்களுக்கு எப்படியோ மக்கள் தப்பித் தவறி ஓட்டுப் போட்டு விட்டார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் இவர்களைத் தோற்கடித்து விடுவார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தென்சென்னை பாராளுமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நின்ற வேட்பாளர் அபரிமித
மான வாக்குகளைப் பெற்று பெரிய வெற்றியை அடைந்தார். அது ஆறுவது மாதத்தில் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.
