உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 1
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 1 · 1 / 29

பேரவைத் தலைவர் அவர்களே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் - பூவராகன் மன்னிக்கவும் - சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்றும், ஏனைய கட்சிகளின் சார்பில், குறிப்பாக இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் கண்டனத் தீர்மானம் ஒன்றும் இந்த மாமன்றத்திலே வைக்கப்பட்டு, அந்தத் தீர்மானங்களின்மீது 36 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

நல்ல வாய்ப்பு

நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதற்கு முன்பு ஒரு முறை நம்முடைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்களால் இங்கே கொண்டு வரப்பட்டது. அப்போது, அவர்கள் 50 பேர்களாக இருந்தார்கள். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பிறகு, அவர்கள் மீது நம்பிக்கையில்லை என்று எட்டு பேர் அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டார்கள். இப்போது மிச்சமிருக்கும் 42 உறுப்பினர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டு வந்திருக்கின்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று எடுத்துக் காட்டுவதற்கு அவர்களுக்கு எந்த அளவு பயன்படுகிறதோ, அதே அளவுக்கு எங்கள் மீது இந்த நாடும், இந்த மன்றத்திலே உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களும் நம்பிக்கை கொள்கிறார்கள்.

மேலும் நம்பிக்கை கொள்வார்கள். நம்பிக்கை கொள்வதற்கான காரணங்கள் இவை இவை என்று எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு அளிக்கிறது.

ஏனென்றால், குறைகள் வெளியிடங்களில், பொதுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுகிற நேரத்தில், அந்த

இடத்திலே வந்து மறுத்துரைப்பதற்கு, நேரடியாக விளக்கங்கள் அளிப்பதற்கு எங்களால் இயலாத நிலையில் என்னென்ன குற்றங்களோ சாட்டப்பட்டு விடலாம். ஆனால் அவைகள் எல்லாம் நேருக்கு நேர் விவாதிக்கப்படுகின்ற நேரத்தில் நாங்கள் நேரடியாக விளக்கங்களே அளிப்பதாலே தமிழ்நாட்டில் உள்ள நான்கு கோடி மக்களும் உண்மைகளை உணருவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்ற காரணத்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒருவகையிலே எங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுகிறது என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கின்ற கட்சியினர், எங்களை, இந்த அரசை அல்லது இந்த அரசினுடைய அதிகாரத்தின் கீழ் இயங்குகின்ற காவல் துறையின் போக்கைக் கண்டித்து பலத்த விவாதங்கள் இங்கே நடத்தியிருக்கிறார்கள். அவர்கள், இந்த அரசு காவல் துறையைப் பொறுத்த வரையில் மேலும் நல்ல திருத்தங்களைச் செய்து, இப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டுவிடுகின்ற சில அசம்பாவிதங்களைக் கூடத் தடுத்து, நல்ல முறையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இடதுசாரி கண்ணுடைய ஆட்சி வலுப்பெற வேண்டுமென்ற நல்ல எண்ணத்தின் காரணமாகத்தான் இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சி, வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சி, பி.எஸ்.பி., எஸ்.எஸ்.பி.

ஆகிய கட்சிகளின் சார்பில் இன்று கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக நான் அறிவேன். ஆகவே, நான் அதனையும் மறுத்து, அல்லது வன்மையாகக் கண்டித்துப் பேச முற்பட எண்ணிடவில்லை.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பூவராகன் அவர்கள் குறிப்பிட்டது போல், கொள்கைகளைச் சொல்லித் தாக்கினார்களா, நடைமுறைத் திட்டங்கள், நாங்கள் வகுத்திருக்கிற வேலைத் திட்டங்கள் இவைகளிலிருக்கும் தவறுகளைச் சொல்லித் தாக்கினார்களா என்றெல்லாம் பார்த்தால் இல்லை. குறிப்பாக அமைச்சர்கள் அல்லது அளிக்கப்பட்ட அலுவல்கள் அல்லது கார் பரிசளிப்பு விழாக்கள் என்ற இந்த வகையிலேதான் எதிர்க்கட்சியில் இருந்து பெரும்பாலான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படையிலே இடம் பெற்றன என்பதை இந்த மன்றத்திலுள்ள நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.