உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 24
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 24 · 24 / 29

மேலும் கூட்டுறவு நீர்ப்பாசன கழகங்களின் மூலம் சிறு சிறு நிலச்சுவான்தார்கள், கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வைத்திருக்கக் கூடியவர்கள் எல்லாம் கோவாபரேடிவ் முறையில், கூட்டுறவு முறையில் அவர்களுக்கு பாசன வசதி செய்து கொடுப்பதற்கும் அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

வறட்சி நேரத்திலும் சுமார் 18 கோடி ரூபாய் செலவு செய்ததன் மூலம் 13,400 சிறிய, பெரிய நீர்ப்பாசன ஏரிகளும், அவற்றைச் சேர்ந்த கால்வாய்களும் தூர் எடுக்கப்பட்டன.

5,500 சாலை வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

683 மண் வளப் பாதுகாப்பு வேலைகள், 821 குடி மராமத்து வேலைகள், மாநிலம் முழுவதிலும் 34,625 கிணறுகள் ஆழப்படுத்தப்பட்டதோடு, புதிய கிணறுகளும் தோண்டப்பட்டன.

அதே சமயத்தில் ஒரே நேரத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் புற மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

மாணவர்களுக்கு ஆற்றிய நன்மை

விநாயகம் அவர்கள் மாணவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னார்கள். மாணவர்கள்-தொழிலாளர்கள் கிளர்ச்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு நஷ்ட ஈடு தரப்பட்டது. முதல் ஆண்டு பி.எல். தேர்வு பெறவிட்டாலும் இரண்டாவது ஆண்டு தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கோரிக்கையை ஏற்றுக் கொள்வதில் இந்த அரசு எந்த வித தடையும் செய்யவில்லை. எந்த விதமான தயக்கமும் காட்டவில்லை.

அதே போல் என்ஜினியரிங் கல்லூரியைப் பொறுத்த வரையில் செமஸ்டர் முறை பற்றிய கோரிக்கையும் கவனிக்கப்பட்டிருக்கிறது.