உதயக் கதிர்
தலைப்பு 22 · 22 / 29
இது தொழிலாளர்களுடைய அரசு என்பதற்கு அடையாளமாக மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுமுறை நாளாகச் செய்து இருப்பது இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
தொழிலாளர் கிளர்ச்சிகளை அரசு அடக்குவதாக சங்கரய்யா பேசும் போது குறிப்பிட்டார் இந்த அரசு முதலாளிகளின் பக்கம் போகிற அரசு என்றும் குறிப்பிட்டார்கள்.
பல முதலாளிகள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தவுடனே இந்த அரசு அவர்கள் பக்கம் போய் "நீங்கள் சொல்கிறபடியே ஆகட்டும், உங்கள் கோரிக்கைக்கு இணங்குகிறோம்" என்று சொல்லவில்லை. அவசரச் சட்டம் போட்டு அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடியாது செய்ததில் இருந்தே இந்த அரசு முதலாளிகளின் பக்கம் கூட்டுப் போகவில்லை என்பதை சங்கரய்யா அவர்களே தம் மனச்சாட்சிப்படி உணர்வார்கள் என்பதை அவையில் நான் கொண்டிருக்கிற நட்பு உரிமை காரணமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
பீர்லாவை அழைத்ததேன்?
தொழில் துறையைப் பொறுத்த வரையில் இந்த அரசு வைதிகமனப்பான்மையைக் காட்டவில்லை. தொழில் வளரப் பெருக வேண்டும். தனியார் முதலீடு செய்கிறார்கள், அரசு முதலீடு செய்கிறது, இரண்டும் இணைந்த ஜாயிண்ட் செக்டார் வேண்டுமென்று விரும்புகிறோம். இதைச் சொன்னால் நாங்கள் எங்கோ உள்ள தொழில் அதிபர்களை அழைப்பதாக - மாதவன் வடநாடு சென்று தொழில் அதிபர்களோடு குலாவுகிறார் என்பதாகக் கூறுகிறார்கள். சங்கரய்யா அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அவர்களது கட்சியைச் சேர்ந்த இ.எம்.எஸ். அவர்கள் அவர்களது மாநிலத்திலே வந்து தொழில் ஆரம்பிக்க பீர்லாவை அழைத்திருக்கிறார். பீர்லாவை இ.எம்.எஸ். அழைத்தார் என்றால் தன் மாநிலத்தில் தொழில் வளர்த்துப் பெருக்க வேண்டும் என்பதற்காக. ஒரே கொள்கையில் பிடிவாதமாக இல்லாமல் மாநிலத்தில் தொழில் பெருக வேண்டும், மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று செய்கிற முயற்சிகளை நாம் கேலி செய்வதோ, கிண்டல் செய்வதோ அவசியம் இல்லை.
அது போன்ற முயற்சிகள் பாராட்டப்படத்தான் வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
அது மாத்திரமல்ல. கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவிலிருந்து பியட் கார் தொழிற்சாலையை ஆரம்பிக்க அழைப்பு. பொதுவுடமை பற்றி பேசுகிற ரஷ்ய நாட்டிலே கூட இன்றைக்கு ஒரு தனிப்பட்ட பியட் கார்
கம்பெனியைத்தான் அழைத்திருக்கிறார்கள். ஆக அங்கே ஒரு தனியார் துறையின் மூலம்தான் பியட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
