உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 18
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 18 · 18 / 29

இதற்குப் பதில் குறைவான டெண்டர் கொடுத்தவர்களோடுதான் அவர்களின் டெண்டரைப்பற்றி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது விதிமுறைகளில் தலையானது. குறைவான டெண்டரை நிராகரிக்கும் வரையில் மற்ற டெண்டர் கொடுத்தவர்களோடு எந்தவிதமான பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்வது ஆட்சேபகரமானது. ஒழுங்கு முறைக்குப் புறம்பானது. நாம் கடைக்கொண்ட முறையில் பரிசீலனை செய்த விஷயத்தில் யாதொருவிதமான தவறும் இல்லை.

அடுத்த குற்றச்சாட்டு "குறைவான டெண்டர் கொடுத்தவர்களோடு அரசு பேரம் நடத்திய போது நூற்று எண்பது லட்சம் ரூபாய்க்கான அந்நியச் செலாவணியை நூற்று இருபது லட்சமாகக் குறைத்துக் கொள்ள அந்த டெண்டர் கொடுத்தவர்கள் சம்மதித்தார்களாம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை போட்டார்களாம். பதினைந்து கோடியே 60 லட்சத்துக்கான தங்களுடைய டெண்டர் தொகையில் மேலும் தொண்ணூறு லட்சத்தை உயர்த்திக் கொடுக்க அரசு ஒப்புக் கொண்டால், அந்நியச் செலாவணித் தேவையினை நூற்று இருபது லட்சமாகக் குறைத்துக் கொள்ளச் சம்மதித்தார்களாம்" என்பதாகும்.

அந்நிய செலாவணி

இது உண்மைதான். குறைவான டெண்டர் கொடுத்த சத்தியநாராயண பிரதர்ஸ் ரூபாய் 181 லட்சம் அந்நியச் செலாவணி கேட்டிருந்தார்கள். குழாய்களும், ரப்பர் வளையங்களும், வார்ப்படங்களும் தயார்செய்வதற்கு வேண்டிய தளவாடங்களும் யந்திரங்களும்

இவைகளைத் தயார் செய்யக் கூடிய பொறியியல் நிபுணர்களையும் அந்நிய நாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு வேண்டி இந்தத் தொகை கேட்டிருந்தார்கள். மத்திய அரசு நமது வீராணம் குடிநீர் திட்டத்திற்கு அனுமதி அளிக்கின்ற சமயத்தில், நமது திட்டம் நிறைவேறுவதற்கு வேண்டிய அந்நியச் செலாவணி எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும் என்றும், அப்படிக் குறைக்கின்ற சமயத்தில் டெண்டர் தொகை 25 சதவிகிதம் வரைக்கும் கூடுதலானாலும் ஒத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு நிபந்தனை குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆகையினால் தான் குறைந்த டெண்டர் கொடுத்த சத்தியநாராயண பிரதர்ஸ் அவர்களே தாங்கள் கோரி இருக்கிற அந்நியச் செலாவணித் தொகையை குறைக்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் பரிசீலனை செய்து அந்நியச் செலாவணியை 120 லட்சமாகக் குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்தத் தொகைக்குப் பதிலாக ரூபாய் 90 லட்சம் கூடுதலாகக் கொடுக்கவேண்டும் என்று கோரினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த காரணங்கள் - தாங்கள் அமைக்கப் போகும் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இரும்பு சாமான்களும், தளவாடங்களும், இயந்திரங்களும், லாரி, டிராக்டர் போன்ற ஊர்திகளும் மேல் நாட்டிலிருந்து கொண்டு வருவதற்காக ரூபாய் 181 லட்சம் கோரி இருந்ததாகவும், அதற்குப் பதிலாக நமது நாட்டிலேயே முடிந்த வரைக்கும் மேலே சொல்லப்பட்ட இனங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகவும், அதனால், கூடுதலாக நிதி செலவாகும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இது உண்மையா என்று பரிசீலனை செய்து பார்க்கப்பட்டது. இரும்பு எஃகு சாமான்கள் வெளி நாட்டிலிருந்து கொண்டு வருவதிலும், நமது நாட்டிலேயே வாங்குவதிலும் விலையில் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

உதாரணமாக எஃகு கம்பிகள் நமது நாட்டிலேயே வாங்கினால் டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000- ஆகும். இந்த விலைக்கும் நமக்கு வேண்டிய அளவுக்கு எஃகு கம்பிகள் கிடைப்பதில்லை. வெளி நாடுகளிலிருந்து வாங்கப் பெற்றால் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 1800 ஆகும். இதைப் போலவே எஃகுத் தகடுகளும் இதர சாமான்களும் உள்நாட்டிலிருந்தே வாங்க வேண்டும் என்றால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. ஆகவேதான் அவர்கள் டெண்டர் தொகை

90 லட்சம் கூடுதலாகக் கேட்டதை ஒப்புக் கொண்டோம். அதே நேரத்தில் அவர்கள் அந்நியச் செலாவணியில் ரூபாய் 60 லட்சம் கூடுதலாக குறைத்துக் கொண்டது மிகவும் விரும்பத் தக்கதாகும்.