உதயக் கதிர்
தலைப்பு 13 · 13 / 29
பிறகு அதிகாரிகள் நீண்ட நாளாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றார்கள். .....
சரித்திரம் கிடையாதா?
**கருத்திருமன்:** நீண்ட நாளாக சில இடங்களில் இருக்கிறார்கள். இன்னும் சில இடங்களில் அடிக்கடி மாற்றுகிறார்கள். இதன் காரணமாக நிர்வாகம் சரியாக இல்லை, ஒழுங்காக இல்லை என்பது குற்றச்சாட்டு. நீண்ட நாட்களாக என்று சொல்லிப் போட்டு, 4, 5 பேர்களைப் பிடித்து காட்டி விட்டுப் போவது சரியில்லை. சில பேர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். மற்ற இடங்களில் லீவில் போய் வந்தாலும், அந்த இடத்திற்கே போகிறார்கள்.
அதைச் சொன்னேன்.
**முதல்வர்:** நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரைப் பற்றிச் சொன்னார்கள். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் 4 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டிருக்கிறார். ஒரு காரணம், அங்கே நக்சல்பாரி நடவடிக்கை இருப்பதாகக் கண்டு, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது, அந்தப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்ரமிப்பு நடந்திருந்ததால், அதுபற்றி அவர் தகவல் சேகரித்திருப்பதால், இன்னொரு மாவட்ட ஆட்சித் தலைவரைப் போட்டால் இவருடைய அனுபவங்களைப் பெற முடியாது என்றும் இவரை மாற்றவில்லை.
இதுவரையிலும் பதவியில் அங்கேயே வைக்கப்பட்டிருக்கிறார். உங்கள் ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்த சரித்திரமே கிடையாதா ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருந்திருக்கிறார்கள்.
வேதநாராயணன், தஞ்சை மாவட்டத்தில் 62 முதல், 66 வரையில் 4 ஆண்டு காலம் இருந்திருக்கிறார்; சொக்கலிங்கம், ஐ.ஏ.எஸ்., திருச்சியில் 62 முதல், 67 வரையில் கலெக்டராக இருந்திருக்கிறார்.
அம்பாசங்கர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
குலாம் முகம்மது பாட்சா திருச்சியில் 4 ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.
