உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
உதயக் கதிர்/தலைப்பு 11
சட்டமன்ற உரைகள்

உதயக் கதிர்

தலைப்பு 11 · 11 / 29

ஆகவே, இந்த அரசு போலீஸ் லாக் அப்பில் இறந்தார்கள் என்றால், இயற்கையாகச் செத்து விட்டார் என்று போலிக் காரணங்களைச் சொல்ல, தற்கொலை செய்து கொண்டார், அல்லது இயற்கையாகச் செத்துவிட்டார் என்று சொல்லவில்லை. உண்மையிலேயே அவர்கள் இயற்கையாகக் கூட இறந்திருக்கலாம். ஆனால் உண்மையில் கொடுமை இழைக்கப்பட்டிருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இயற்கையாகக் கூட செத்து விடலாம். சில நேரங்களில் தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் எப்படியிருந்தாலும், எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களில் அலட்சியம் காட்டாமல், உண்மைகளை ஆராய, விசாரணை நடத்துகிறது இந்த அரசு. இரண்டு உதாரணங்களை அண்மையில் நடந்தவற்றைச் சொல்வேன். மாயவரத்தில் ராகவன் வழக்கு, தஞ்சாவூரில் ஐலா அம்மையார் வழக்கு, ஆக இரண்டும்.

அடுத்து, ஆமத்தூர் கொடுமையைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி இரவு 9 மணியளவில், காட்டுக் கருப்பனென்ற அரிஜன், கிராமச் சாவடியில் தூங்கிக் கொண்டிருந்த போது அவர் அரிவாளால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருப்பண்ணன், அவரது மகன் அய்யாவு, அவரது மனைவி கருப்பாயி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் குற்றவாளிகள் அல்ல என இராமநாதபுரம் செஷன்ஸ் நீதிபதியால் விடுவிக்கப்பட்டனர்.

இறந்தவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இறந்தவர் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட குற்றவாளி. இதற்கு முன் 16 முறை தண்டிக்கப்பட்டவர். சாதி இந்துக்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கியதன் காரணமாக ஆமத்தூரில் எந்த அரிஜனும் கொலை செய்யப்படவில்லை என இராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் உண்மையான தகவல்கள், இருக்குமானால் எதிர்க்கட்சித் தலைவர் தேடிக் கொடுத்தால், அதுபற்றி விசாரித்து, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன்.

அடுத்து இன்னொன்று. இப்படி சிறிய குற்றச்சாட்டுகளைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். பெரிய

குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் வருகிறேன். சில்லறைக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி விடுகிறேன்.

கார்களைப் பற்றிச் சொன்னார்கள், எம்.எல்.ஏக்கள் பரிசு அளிப்பு விழாக்கள் நடத்துகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்தக் கார்களைப் பொறுத்த வரையில், சர்க்காருடைய அலாட்மெண்ட் 1967-லிருந்து, 1970 வரையில் 159 கார்கள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றில் முன்னேற்றக் கழகத்தினருக்கு 100 கார்களும், காங்கிரஸ்காரர்களுக்கு 28 கார்களும், சுதந்திரக் கட்சிக்காரர்களுக்கு 7 கார்களும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு 5 கார்களும், இடது கம்யூனிஸ்டுகளுக்கு 3 கார்களும், தமிழரசுக் கழகத்திற்கு 2 கார்களும், குடியரசுக் கட்சி, கே.பி.எஸ்.

மணிக்கு ஒரு காரும், வலது கம்யூனிஸ்ட் கட்சி, எ.கே. சுப்பையாவிற்கு ஒரு காரும், சுயேச்சைகளுக்கு 5 கார்களும் அலாட் செய்யப்பட்டிருக்கிறது.

**வி. கே. கோதண்டராமன்:** எங்கள் கட்சியில் யாரும் கார் வாங்கவில்லை.