உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 9
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 9 · 9 / 13

மேலவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராஜாராம் நாயுடு அவர்கள் பேசும்போது நம்முடைய உரிமைகளுக்காக நாங்கள் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் உதவத் தயார் என்று சொன்னார்கள்.

நான் பேசும்போது குறிப்பிட்டேன். அவர் கவனம் இல்லாமல் சொல்லவில்லை. நாங்கள் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் உதவத் தயார் என்று திரு.ராஜாராம் அவர்கள் சொன்னார் என்றால் நாங்கள் எடுக்கிற நடவடிக்கைகள் எல்லாம் அறவழி முறையில் இருக்கும். இந்தியாவைப் பலப்படுத்தி மாநிலங்களும் வளப்படுகிற முறையில்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையின் காரணமாகத்தான் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் ஒத்துழைக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.

இது பிரிவினைக் கோரிக்கை அல்ல

அதையேதான் மீண்டும் சொல்கிறேன். நாம் கோருகிற அதிகாரங்கள் மாநிலத்தைத் தனியாகப் பிரிப்பதற்கு அல்ல. இந்தியா எப்போதும் ஒன்றாக வலுப்பெற்று இருப்பதற்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும் என்று கோருகிறோம். மாநில அதிகாரங்களில் மத்தியத் தலையீடு அடிக்கடிஇல்லாதபடி, தவிர்க்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் அதிகாரச் சுமை குறைந்தால் அதுவும் செம்மையாகத் திறம்படத் தன் பணியை ஆற்றமுடியும். மாநிலங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்படுவதன் மூலம் மாநிலங்கள் வளமடையும் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

கவர்னரின் உரையிலும், எனது அறிக்கையிலும், இந்தக் கருத்துத்தான் எதிரொலிக்கிறது. இதுதான் இந்த மன்றத்தின் ஏகோபித்த வாசகமாக உருக்கொள்ள வேண்டும்.

கவர்னர் பெருமான் உரையில் புரட்சிகரம் இல்லை, சோஷலிசம் இல்லை என்று விவாதத்தில் எடுத்துச் சொன்னார்கள்; திரு. மணலி கந்தசாமி அவர்களும், திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும் நிலச் சீர்திருத்தம் பற்றிச் சொன்னார்கள். பல அன்பர்கள் புரட்சிகரமான மாறுதல் உண்டாக்கப்பட வேண்டும் என்றார்கள்.

நிலமில்லாதோர் இல்லை என்ற நிலை

நிலம் இல்லாதவர்கள் இருக்கக் கூடாது, ஒவ்வொருவருக்கும் 50 சென்ட் நிலமாவது இருக்க வேண்டும். 15 குழி மனைக்கட்டாவது இருந்தாகவேண்டும் என்கிற புதிய சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தக்க ஏற்பாட்டைச் செய்ய என்னுடைய தலைமையில் உருவாகியிருக்கிற அந்தக் குழு விரைவில் அந்தப் பணியை ஆராயத்தொடங்கும்.

பஸ் உச்சவரம்பைப் பற்றிக்கூடச் சொன்னார்கள். அந்த அடிப்படைக் கருத்தைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று திருமதி அனந்த நாயகி அவர்கள் பேசும்போது கூடக் குறுக்கிட்டுச் சொன்னேன். பஸ்ஸுக்கு உச்சவரம்பு விரைவில் வரும். 'ரெட்ராஸ்பெக்டிவ் எஃபக்டோடு' வரும் என்று இந்த நேரத்திலும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

வேடுவர்கள் சூழ்ந்த மான்

மேலவையில் எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் மது விலக்கைத் தயவு செய்து எடுத்து விடாதீர்கள் என்று குறிப்பிட்டார்கள். மது விலக்குக் கொள்கையைப் பொறுத்த வரை தி.மு.க. வுக்கு அதில் நம்பிக்கை இல்லை என யாரும் கருதமாட்டீர்கள். எங்களை ஆளாக்கிவிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலும் மேலவையிலும் உரை நிகழ்த்தும் போது இந்த அரசு மது விலக்குக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் என்று அறிவித்தார்கள்.

தமிழ்நாட்டிலும், குஜராத்திலும் மட்டும் இப்போது மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுமைக்கும் ஏன் இதனை அமுல் ஆக்கக்கூடாது என்பது தான் நமது கேள்வி. நான் கூட நிருபர்களைச் சந்தித்தபோது குறிப்பிட்டேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனக் கேட்கும் நாங்கள் இந்த ஒரு அதிகாரத்தினை மத்திய அரசுக்குத் தரத் தயாராக இருக்கிறோம். அதனைக் கொண்டு இந்தியா முழுவதற்கும் மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்றேன்.

தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆனால் இங்கிருந்து 50 மைல் சென்றால் பாண்டிச்சேரி—அங்கு மதுவிலக்கு கிடையாது. இந்தப் பக்கம் 50 மைல் சென்றால் ஆந்திர எல்லை வருகிறது; மறுபக்கம் 50 மைல் சென்றால் பெங்களூர் வருகிறது. மற்றொரு பக்கம் கேரளம். இப்படி நான்கு பக்கமும் வேடுவர்கள் சூழ்ந்த மானாக நமது மாநிலம் விழித்துக்கொண்டிருக்கிறது. நமது மாநிலத்துக்குக் கிடைக்கும் வருமானத்தையும் இழந்து நிற்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நமது மாநிலத்தில் மதுவிலக்குத் தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறினார்கள். நான் அதனை ஒப்புக்கொள்கிறேன். முந்தைய அரசினரைப் போல் ஆகா! மகாப் பெரிய வெற்றி! எனக் கூறி என்னையே நான் ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் உறுதியாக ஒப்புக்கொள்கிறேன். இக்கொள்கை தோல்வி அடைந்து பலரது நாணயத்தையும் கெடுக்கிறது. அதிகார வர்க்கத்தாரையும் கெடுக்கிறது. இதனை ஏன் கவனிக்கக்கூடாது என்று கேட்கலாம்.

ஒன்றா இரண்டா கவனிப்பதற்கு? கொள்கையைப் பொறுத்தவரை இது புனிதமான திட்டம். ஏற்கிறேன். இந்தப் புனிதமான கொள்கை இந்தியா முழுதும் இருக்க வேண்டாமா?

குதிரைப் பந்தயம் ஏன்?

குதிரைப் பந்தய ஒழிப்பும் ஒரு நல்ல திட்டம். எப்போது ஒழிக்கப் போகிறீர்கள் என்று இங்குள்ளவர்களைவிட அண்டை மாநிலத்தவர் அதிக அக்கறை காட்டுகின்றனர். நாம் எடுத்துவிட்டால் உடனே நமது மாநில எல்லையை ஒட்டி அவர்கள் எல்லையில் குதிரைப் பந்தயத்தை ஆரம்பித்து வருமானம் பெறலாம் என முனைந்து நிற்கிறார்கள்!

தீண்டாமை ஒழிப்பு

தீண்டாமை ஒழிப்பு நல்ல திட்டம் தான். அது தமிழ் நாட்டில் மட்டுமிருந்தால் என்ன நிலை? தமிழ் நாட்டில் தீண்டாமை ஒழிந்து—இங்குள்ள ஒரு ஆதி திராவிட நண்பர் அடுத்த ஆந்திர மாநிலத்திற்குச் சென்று அங்குத் தீண்டாமை ஒழிக்கப்படாமலிருந்தால் என்ன நிலை ஏற்படும்—இங்கு நடப்பது போல அங்கு நடந்தால் அவர் அடி உதைக்கு உள்ளாகமாட்டாரா? இப்போது தீண்டாமை ஒழிப்பு அகில இந்திய ரீதியில் பரப்பப்பட்டிருப்பதால் அகில இந்தியாவிலும் வெற்றி பெறும் நிலை உள்ளது.

தீண்டாமை ஒழிப்பைப் போலவே காந்தியக் கொள்கையான மதுவிலக்கை, காந்தி வளர்த்த காங்கிரஸ் அரசுகள் கைவிட்டுவிட்டன. நமது அரசு கைவிடாததற்குப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.

மதுவிலக்கைப் பற்றி திரு டி. கே. சண்முகம் அவர்கள் ஒரு பாட்டையே பாடினார்கள். மதுவிலக்கை ரத்து செய்தால் ஆங்காரமாக தொகையறாவே பாடிவிடுவார்கள். அந்த அருமையான பாட்டைக் கேட்கவாவது ரத்து செய்தால் என்ன என்று கூட ஒரு ஆவல் தோன்றுகிறது. நான் இப்படியெல்லாம் கூறுவதால் மதுவிலக்கு ரத்தாகும் எனப் பத்திரிகைக்காரர்கள் தலைப்புப் போட்டுவிடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய சூழ்நிலைகளைக் கொண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்று அனைத்துக் கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

திரு. கிருஷ்ணசாமி நாயுடு (நி. காங்) : முதலமைச்சர் அவர்கள் மதுவிலக்கு எடுக்கப்படலாம் என்ற தோரணையில் உரை நிகழ்த்தினார்கள். இங்குள்ள 2 கோடி பெண்கள் சார்பில் தயவு செய்து மதுவிலக்கை ரத்து செய்து விடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர்: ரத்து செய்யப் போவதாகக் கூறவில்லை. உறுப்பினர்களைச் சிந்தித்துப் பார்க்கத் தான் கூறினேன். மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களிலும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Editorial unit 2 — நிதிநிலை அறிக்கை விவாதத்துக்கு முதல்வர் பதில்

நிதிநிலை அறிக்கை விவாதத்துக்கு முதல்வர் பதில்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மேலவை ஆகியவைகளில் இடைக்கால நிதி நிலை அறிக்கை விவாதத்துக்குப் பதிலளித்துத் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு கீழே தரப்படுகிறது. முதல்வர் அவர்களின் உரை வருமாறு:-

இடைக்கால நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்றுள்ள விவாதத்திற்குப் பதில் அளிக்கிற இந்த நேரத்தில் ஏற்கனவே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பிறகு அயல் நாடாக ஆகிவிட்ட பாகிஸ்தானின் ஒரு பகுதியான கிழக்கு வங்காளத்தில் நடைபெறுகிற கோரக் கொலைகளை, உலக அரசியல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடு நாம் கூர்ந்து கவனித்து, அந்த மக்களினுடைய உரிமைகளுக்காகப் போராடுகிற வீர மறவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இது வெளிநாட்டு விவகாரம், அதிலே நாம் தலையிடக்கூடாது என்றாலும் கூட, நான் முதலில் குறிப்பிட்டதைப்போல் உலக அரசியல் சட்டங்களினுடைய நிலைமைக்கும் அப்பாற்பட்ட நிலையில் மனிதாபிமானத்தோடு நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.