நமது நிலை
பகுதி 8 · 8 / 13
அதே நேரத்தில் என்ன செய்தார்கள் ? 9 மாநிலங்களுக்கு ரூ.800 கோடி சிறப்பு நிதியாகத் தந்தார்கள். முன்பு நான் கூறியபடி தகுதி வரையறுத்த முறைகளால் மத்திய உதவியைக் கணிசமான அளவு இழந்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மைசூர், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இச் சிறப்பு நிதியில் பங்கு அளித்தார்கள். ஆனால் அந்த நிதியில் தமிழ் நாட்டுக்குப் பங்கு இல்லை.
அதிகமாகச் சண்டைபோட்டு, நிபந்தனை போட்டு, தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் கேட்டபோது 7 கோடி ரூபாய் தரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தர மறுக்கிறார்கள் . அதைத்தான் இந்த நிதி நிலை அறிக்கையிலும் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம்.
தனிப் பிரச்சினையாக கணக்கிட்டு மேற்கு வங்காளத்தில் கல்கத்தா நகரத்திற்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சென்னை மாநகரத்திற்குத் தனிப் பிரச்சினையாகப் பணம் கொடுக்கவில்லை. சென்னை மாநகரின் மவுண்ட்ரோடு மற்றும் பல ரோடுகளையும் பார்த்துவிட்டு, சென்னை மாநகரம் எல்லாவகையிலும் முன்னேறியிருக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.
கடற்கரையோரத்தில் இருக்கிற குப்பங்களில் எவ்வளவோ பேர் நடுத்தெருவில் படுப்பதற்குப் பாய் கூட அற்ற நிலையில் இருக்கிறார்கள். குடிசைகள் எல்லாம் இருள் சூழ்ந்திருக்கின்றன. சுகாதார வசதி கிடைத்தபாடில்லை. இவ்வகைக் குறைகளை நீக்கி, மேம்பாட்டுக்காக நாம் 40 கோடி ரூபாய் அளவிலே குடிசை மாற்று வாரியத்தை அமைத்திருக்கிறோம்.
இதைத் தனிப்பிரச்சினையாக மத்திய அரசு கவனித்து அதிலே பத்துச் சதவீதம் ஒதுக்கியிருந்தால் நமக்கு ஒரு பத்துக் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். மாநிலத் தகுதி என்ற அடிப்படையில் செயல்படுகிற விதம்; நமக்கு மறுக்கப்படுகிற விதம் சரியில்லை.
ஐந்து மாநிலங்களுக்கு மத்திய திட்ட உதவியில் இழப்பு ஏற்பட்டதில், தமிழ்நாட்டைத் தவிர நான்கு மாநிலங்களுக்கு சிறப்பு நிதி கிடைக்கிறது. வேறு ஐந்து மாநிலங்களுடன் சேர்த்து 800 கோடி ரூபாய் சிறப்பு நிதியாகத் தரப்படுகிறது. அதில் நமக்குப் பங்கு இல்லை என்று, சொல்லுவது நியாயம் அல்ல என்பதைத்தான் கவர்னர் அவர்களுடைய உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
போராடிப் பெற்றவை
நாம் போராடி எதுவுமே பெறவில்லையா என்று கேட்டால். போராடிப் பெற்றிருக்கிறோம் என்று சொல்ல விழைகிறேன். கையாலாகாதவர்கள். புள்ளி விவரங்களைக் கேட்டறியாதவர்கள் என்றெல்லாம் டாக்டர் ஹாண்டே அவர்கள் சொல்லாவிட்டாலும், சுற்றிச் சுற்றி அந்தப் பொருள் தொனிக்கும் படியாகப் பேசினார்கள்.
சென்ற ஆண்டு மட்டும் வாதிட்டு வறட்சிப் பணிக்காக 14 கோடி ரூபாய் பெற்றிருக்கிறோம்.
அடுத்து, ராயலசீமா கடன், ராஜாஜி ஆட்சியில் ரிசர்வ் பாங்கின் ஓவர் டிராஃப்ட் ஆக 23 கோடி ரூபாய் இருந்தது; அதில் நமக்கு 13 கோடி ரூபாய் பங்கு உண்டு.
இப்போது பேரவைத் தலைவராக இருப்பவர் நிதியமைச்சராக இருந்த நேரத்தில் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். போராடியதன் விளைவாகத் தவணையாக அந்தக் கடன் (13 கோடி ரூபாய்) 4 வருடமாக தள்ளிக் கொடுத்து வருகிற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்படியாக நாம் சென்ற ஆண்டு 31 கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறோம். புயல்நிவாரணப் பணிகளுக்காக 14 கோடி ரூபாய், பின்னர் 10 கோடி ரூபாய், பின்னர் 7 கோடி ரூபாய் ஆக—சென்ற ஆண்டு வாதிட்டுக் கேட்டுப் பெற்றது 31 கோடி ரூபாய் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்
அதேபோல் இந்த ஆண்டும் பெற வேண்டுமென்றுதான் போராடி வருகிறோம். சட்டசபையில் இப்படி அறிக்கை வைத்திருக்கிறோம், பேசுகிறோம், இவையெல்லாம் எங்களுடைய எதிர்ப்புத்தான்; தமிழ்நாட்டு மக்களுடைய சார்பாக மத்திய அரசுக்குக் காட்டும் எதிர்ப்புத்தான் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
மக்களிலே சிலபேர் இது எங்கே பிரிவினையில் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அப்படி அஞ்சத் தேவையில்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்றுதான் கோருகிறோம். இந்திய நாட்டு ஒருமைப்பாட்டில் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம்.
இந்திய நாடாளுமன்றத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கிழக்கு வங்காளப் பிரச்சினையை அந்தத் தீர்மானம் பரிந்துரைத்திருக்கிறது. ஒரு நாடு பிரிந்துபோகிறபோது நாடாளுமன்றத்திலே ஆதரவு தரப்படுகிறது. அதைப்பற்றிய சர்ச்சையில் நான் இறங்க விரும்பவில்லை.
முஜிபுர் ரகுமான் கோரியது என்ன?
கிழக்குப் பாகிஸ்தானின் தலைவராக இருக்கிற முஜிபுர் ரகுமான் என்ன கோரிக்கைகளை ஆரம்பத்தில் வைத்தார்? இலங்கையில் இருந்து வெளிவரும் 'பீப்ள்ஸ் வில் என்ற பத்திரிகையில் ரகுமானுடைய ஆறு அம்சத் திட்டம் இருக்கிறது.
இவைகளை யெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொண்டு அதைத் திருப்பித் திருப்பிச் சொல்கிறது என்று யாரும் கருதவேண்டாம்.
இப்போது சுதந்திர நாடு என்று கேட்கிற ரகுமான் முதலில் ஆறு அம்சத் திட்டத்தைத்தான் முன்வைத்தார். அவரது முதல் திட்டம் கிழக்குப் பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் இரண்டு மாநிலங்களில் உண்மையான தன்மையில் கூட்டாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது. இது நாம் கேட்கிற சுயாட்சியின் உண்மையான தன்மையில், கூட்டாட்சி ஏற்படவேண்டும் என்பதன் சாயலாகத் தோன்றக் கூடும்.
இரண்டாவது திட்டம், பாதுகாப்பு, வெளி விவகாரம் ஆகிய இரண்டு மட்டும் மத்திய அரசின் அதிகார வரம்பில் வரவேண்டும்; மீதி அத்தனை அதிகாரங்களும் மாநிலத்திற்கு வரவேண்டும் என்பது. நான் அப்படிச் சொல்லவில்லை. நம்முடைய மாநில சுயாட்சியில் அப்படிச் சொல்லவில்லை. நமக்கும் அதற்கும் வித்தியாசமிருக்கிறது.
மூன்றுவதாக, இரண்டு பகுதிகளுக்கும் கரன்சி நோட்டு தனித் தனியாக இருக்க வேண்டும். அடுத்தது, வரி போடும் அதிகாரமும், வசூலிக்கும் அதிகாரமும் மாநிலத்திற்கே இருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்த வருமானத்திலிருந்து மத்திய அரசின் நிர்வாகத்திற்கு ஒரு பகுதியைச் செலுத்துவது என்பது அவருடைய திட்டம். இங்கே தலை கீழாக இருக்கிறது. மத்திய அரசு வசூலித்து ஒரு பகுதியைத்தான் நமக்குக் கொடுத்து வருகிறது.
அடுத்து, அந்தந்த மாநில அந்நியச் செலாவணிவருமானம் அந்தந்த மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பது. மத்திய அரசுக்குச் செலவுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை மாநில அரசு பங்காகச் செலுத்த வேண்டும். அடுத்து, வர்த்தகம், தொழில் வளர்ச்சிகளுக்காக வெளிநாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்கிற உரிமைகளை மாநிலத்திற்கே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையாகும்.
ஆறாவது (ஏ) தனி ராணுவம். இருமாநிலங்களுக்கும் தனித் தனியாக இருக்க வேண்டும். அதிலேயும் (பி) வங்க மொழியும் கூட்டாட்சி மொழிகளில் ஒன்றாக வேண்டும்.
இவை எல்லாம் முஜிபுர் ரகுமான் தன்னுடைய மாநில சுயாட்சித் திட்டத்திற்காக எடுத்து வைத்த 6 அம்சமாகும். இப்போது அவரது மாநில சுயாட்சித் திட்டம் நாட்டுக்குச் சுதந்திரம் தேடுகிற திட்டமாக, பாகிஸ்தானில் இருந்தே பிரிந்து போகிற திட்டமாக ஆகிவிட்டதைக் காண்கிறோம்.
எதிர்க் கட்சித் தலைவரின் ஆதரவு
