உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 7
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 7 · 7 / 13

விலைவாசி குறைவதற்கு உற்பத்தியைப் பெருக்கவேண்டும். அதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு விலைவாசிகளை உயர்த்தும் போது நம்மைக் கலந்து கொண்டு செய்தாக வேண்டும். அதைத்தான் திரு கே.எம். சுப்பிரமணியம் அவர்கள் விலை உயர்வை எதிர்த்தீர்களா ? என்று கேட்டார்கள்.

எதிர்ப்பதற்கு எங்கள் கையைப் பலப்படுத்துங்கள். எல்லோரும் சேர்ந்து எதிர்ப்போம். எதிர்ப்பதற்கு நாங்கள் அஞ்சுபவர்கள் அல்ல. எந்த முறையிலே எதிர்ப்பது? அந்த எதிர்ப்பைத்தான் கவர்னர் உரையிலும் நிதிநிலை அறிக்கையிலும் இணைத்திருக்கும் வாசகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு சம்பள உயர்வு அறிக்கையாக இருந்தாலும் விலைவாசிகளை உயர்த்துவதாக இருந்தாலும் மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

அவை நம்முடைய எதிர்ப்பைக் காட்டுகின்ற உணர்ச்சியின் அடிப்படையிலே உள்ள வாசகங்கள்தான்.

நியாயத்தைக் கேட்டோம்

திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு நீங்கள் அவர்களுடன் வாதித்தீர்களா என்று டாக்டர் ஹாண்டே அவர்கள் கேட்டார்கள். எத்தனை முறை கடிதம் எழுதினோம்? எத்தனை முறை சந்தித்துப் பேசி இருக்கிறோம்? கடிதங்களின் முழு விவரங்களைக் கொடுக்க முடியாவிட்டாலும் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

பேரவைத் தலைவராக இருக்கின்ற அன்றைய நிதியமைச்சர் அவர்கள் 1969 ஆகஸ்டில் இந்தச் சட்டமன்றத்தில் அறிக்கை ஒன்றை வைத்தார்கள். அதில் நம்முடைய மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதி அளவின் சதவிகிதம் குறைந்தது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பிரதமருக்கு 1969 செப்டம்பரில் நான் எழுதிய கடிதத்தில் இந்திய நிதிஆணைக்குழு இழைத்த அநீதி, திட்டக் குழுவின் தகுதிவரைமுறைகளினால் நேர்ந்துள்ள நஷ்டம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நியாயம் வழங்கப்பட வேண்டுமென்று கேட்டிருக்கிறேன்.

மூன்று நிபந்தனைகள்

இந்தியப் பிரதமருக்கு மீண்டும் 1969 நவம்பரில் ஒரு கடிதம் எழுதியதோடு இந்தியப் பிரதமரையும், திட்டக்குழுத் துணைத்தலைவர் அவர்களையும் சந்தித்து நீண்ட நேரம் இதைப்பற்றி விவாதித்திருக்கிறேன்.

இதற்குப் பிறகு இரண்டு மூன்று தடவை நிதியமைச்சர் திட்டக் குழுவினரோடு பேசி நமக்குச் சாதகமான ஒரு முடிவுக்கு வரமுடியாததால் ஐந்தாண்டுத் திட்டத்தின் அளவு நிச்சயிக்கப்படாமல் போய்விட்டது.

ஊதியக் குழுவின் சிபாரிசுகளால் ஏற்படக்கூடிய பெரும் செலவினை ஈடுகட்ட மத்திய அரசு உதவியளிக்க வேண்டுமென 1970 மார்ச்சில் வலியுறுத்தப்பட்டது.

தேசிய அபிவிருத்திக்குழு 21—3—70 அன்று கூடியபோது அக்கூட்டத்தில் எதிர்ப்புக் குறிப்பு எழுதினார்களா என்று கேட்டார்கள். அந்தக் கூட்டத்திலேதான் நான் மூன்று நிபந்தனைகளைச் சொன்னேன். ஒன்று சேலம் உருக்காலை ; இரண்டாவது சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்ட 800 கோடி ரூபாயில் நம்முடைய மாநிலத்திற்குப் பங்கு வர வேண்டும் என்பது. மூன்றாவது ஒவ்வொரு மாநிலத்திலும் பின்தங்கிய பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயில் நம்முடைய மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கும் பணம் ஒதுக்க வேண்டுமென்பது.

ஆக, இந்த மூன்று நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால்தான் திட்டத்திற்குச் சம்மதம் தருவோம் என்று சொன்னோம். அதற்குப் பிறகுதான் 800 கோடி ரூபாயில் முதல் தடவையாக 7 கோடி ரூபாய் தந்தார்கள். இந்த ஆண்டு தர மறுக்கிறார்கள். நம்முடைய மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், தர்மபுரி மாவட்டத்திற்கும் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். முதலிலே சொல்லப்பட்ட சேலம் உருக்காலைக்கும் இசைவு தந்தார்கள்.

இடைவிடாத முயற்சி

நமக்குச் சிறப்பு உதவியளிப்பது அவசியம் என்றும் அதற்காக நம் நிதி வாயில்களைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் 1970 ஏப்ரல் 15 அன்று நாம் கோரினோம். 25—4—70 அன்று இந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது; நமது இக்கட்டான நிதி நிலையை 1970 ஆகஸ்டில் விவரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம். டாக்டர் காட்கில் அவர்கள் உடல்நிலை சரியாக இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டிருந்த சந்திப்பு துரிதமாக நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தினோம்.

நம்முடைய தொழிலமைச்சர், அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து 1970 அக்டோபர் 12 அன்று டாக்டர் காட்கில் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். நம் வாதத்தில் நியாயம் இருக்கிறது என்பதை ஓரளவுக்கு ஒப்புக்கொண்ட காட்கில் அவர்கள், அதிகாரிகள் மட்டத்தில் நம் நிதி பற்றிய புள்ளி விவரங்கள் திரும்பப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற அளவோடு பேச்சு வார்த்தை முடிந்தது. அந்த சந்திப்புக்குப் பிறகு 1970 அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய இரு நாட்களிலும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

தலைமையமைச்சரிடம் 1970 டிசம்பர் இறுதியில் இக் கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென்று கூறியிருக்கிறேன்.

1971 ஜனவரி 19-ல் தலைமை அமைச்சருக்கு மீண்டும் இது குறித்து வற்புறுத்திக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

தொடரும் போராட்டம்

நம் வாதங்களுக்கு ஒரு சில மறுப்புகள் தெரிவிக்கும் நீண்ட குறிப்பை திட்டக்குழுச் செயலாளர் 1971 ஜனவரி 12-ல் அரசுக்கு அனுப்பியுள்ளார். அதற்கு பிப்ரவரி 3-ம் நாள் மறுபடியும் பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து மத்திய அரசோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.

டாக்டர். எச். வி. ஹாண்டே : 21—3—70 அன்று நடந்த என்.டி.சி. மீட்டிங்கில் சில நிபந்தனைகளைக் கூறியதாக முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அந்த மீட்டிங்கில் இதையெல்லாம் செயலில் ஒத்துக்கொள்ளும் வகையில் அதிகார பூர்வமாகத் தெரிவிக்கும் வகையில் வாயில் சொன்னதோடு மட்டுமில்லாமல் 'டிஸ்சென்டிங் நோட் ' எழுதியிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்.

முதல்வர் : அங்கே நமது பேச்சுக்கள்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி ரிகார்டுகள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை.

நாம் எந்தெந்த அளவுக்குப் போராடி இருக்கிறோம், எந்தெந்த அளவுக்குப் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம், பெற வேண்டிய உரிமைகளை எப்படி எப்படியெல்லாம் வலியுறுத்திப் பெற்றிருக்கிறோம் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறேன்.

தகுதி வரைமுறையை எதிர்ப்பது ஏன்?

திட்டத்திற்காக மத்திய அரசு கொடுக்க ஏற்கெனவே ஒத்துக் கொண்ட தொகை 250 கோடி ரூபாய்; ஆனால் மத்திய அரசு 202 கோடி ரூபாய் அளவுக்கு குறைத்திருக்கிறது. மத்திய அரசின் சார்பிலே அங்கே இருக்கிற திட்டக்குழு, மாநிலங்களுக்கு என்று சில தகுதிகளை வரையறுத்தது. அந்தத் தகுதிகள் என்ன என்ன என்று பார்த்தால் மக்கள் தொகுதியிலே 60 சதவீதம், நபர்வாரி வருமானம் என்பதிலே ஒரு 10 சதவீதம், தனிப் பிரச்சினைகள் என்பதற்காக ஒரு 10 சதவீதம் ; வரி விதிக்க எடுத்த முயற்சிக்காக ஒரு 10 சதவீதம், தொடர்ந்து திட்டவேலைகள் நடைபெறுகிறதா என்ற அடிப்படையில் 10 சதவீதம் என்ற அளவில் வரையறுத்திருக்கிறது.

இந்த அளவிலேதான் மாநிலத்தின் தகுதிகள் என்று தகுதியை உருவாக்கினார்கள்.

இந்த அடிப்படையின் காரணமாகத் தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கக்கூடியது கிடைக்காமல் போய் இருக்கிறது. ஆகவே, இந்தத் தகுதிகளை வரையறுத்த முறைகளை எதிர்க்கிறேன். இப்படித் தகுதி வரையறுத்த முறைகளால் ஆந்திரா 40 கோடி ரூபாய் இழந்துவிட்டது; மத்தியப்பிரதேசம் 26 கோடி ரூபாயை இழந்திருக்கிறது ; மைசூர் 49 கோடி ரூபாயை இழந்து விட்டது, மேற்கு வங்காளம் 24 கோடி ரூபாயை இழந்து விட்டது, தமிழ்நாடு 48 கோடி ரூபாயை இழந்து விட்டது.

வராது போன உதவி

நபர்வாரி சராசரி வருமானம் என்றிருக்கிறதே ஒரு பத்து சதவீதம்; அதை அகில இந்தியக் கணக்கிலே பார்த்தால் அனைத்திந்திய சராசரி 418 ரூபாய். தமிழ் நாட்டின் நபர்வாரி சராசரி வருமானம் 434 ரூபாய். 418 ரூபாய்க்கு மேல் நபர்வாரி வருமானம் இருந்தவர்களுக்கு உதவி மறுக்கப்பட்டது. நமக்கு - தமிழ் நாட்டுக்கு 16 ரூபாய் அதிகமானது என்ற காரணத்தாலே, நமக்கு அந்தப் பத்து சதவீதத்தில் பங்கு இல்லையென்று சொல்லிவிட்டார்கள்.

418-க்கும் 434-க்கும் அதிக வித்தியாசம் இல்லையென்ற அளவில் அவர்கள் செயல்பட்டிருந்தால் நமக்கு மேலும் 25 அல்லது 30 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.