நமது நிலை
பகுதி 6 · 6 / 13
ஆனாலும், 6,500 ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்தச் சம்பளமும் பெறாமல், குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு ஓரளவு ஊதியமாவது கிடைக்க வேண்டும் என்று, தொழில் பயில் ஆசிரியர்களுக்கு உதவியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 6,500 ஆசிரியர்களுக்கு வேலை அளிக்கப்பட்டு, அனைவரும் வேலைக்குச் சேர்ந்து விட்டனர்.
அதேபோலத்தான் 2,400 பொறியாளர்களுக்கு உதவியளிக்க முன்வந்ததில், 1971 பிப்ரவரி முடிய 1,795 பேர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி 6,500 ஆசிரியர்களுக்கும், 2,400 பொறியாளர்களுக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்தோம். இதனால் தமிழ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அறவே ஒழிந்துவிடும் என்பதல்ல. இந்த அரசுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டத்தான், இது செய்யப்பட்டது. இந்த ஆர்வம் மேலும் மேலும் பெருகும். மேலும் மேலும் பெருகுகின்ற வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்பதற்கு இது விடிவெள்ளி என்று அளவில் இந்தக் காரியம் செய்யப்பட்டது.
இதை வைத்துக் கொண்டு வேலை வாய்ப்புப் போதுமா என்று கேட்பது நல்லதல்ல.
குமுறிக் கொந்தளிக்கும் கேள்வி
மேலும் மேலும் வேலை வாய்ப்புகள் பெருகிட மத்திய அரசினரும் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,000 பேர்களுக்கு வேலை கொடுப்பது என்பது திட்டம். கிராமப்புறத்தை ப்ளாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு ப்ளாக்கிலும் 100 பேர்களுக்கு வேலை கொடுப்பது. ஒரு மாவட்டத்தில் 10 ப்ளாக்குகள் எடுத்து, 1,000 பேர்களுக்கு வேலை கொடுப்பது என்பது மத்திய சர்க்காருடைய திட்டம்.
டெல்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் இந்தக் கிராமப்புறத்திட்டம் விவாதிக்கப்படும்.
கிராமப்புற மக்களுக்கு இந்த அளவில் வேலைகள் கொடுப்பது மாத்திரம் போதுமா? விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் வருஷத்தில் ஆறு மாதம் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது வேலை கொடுக்கும். ஆனால் படித்துவிட்டு வேலையற்றிருப்பவர்களுக்கு, நம்முடைய வாலிபர்களுக்கு- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்ன என்று கேள்வி போட்டார்கள்.
இந்தக் கேள்வி எதிர்க் கட்சியில் இருக்கிறவர்களுடைய உள்ளங்களில் மட்டும் இருப்பது என்பதில்லை. ஆளுங் கட்சியிலிருக்கிற அத்தனை உறுப்பினர்களுடைய உள்ளங்களிலும் குமுறிக் கொந்தளிக்கும் கேள்வி இது.
பதில் சொல்லத் தான் போகிறோம்!
புதிய புதிய கல்லூரிகளைத் திறந்து, கல்லூரிகளில் சலுகைகள் கொடுத்துப் படிக்கவிட்டு, அனுப்புகிறோம். மருத்துவக் கல்லூரிகளுக்கும் மற்ற கல்லூரிகளுக்கும் அனுப்பி விடுகிறோம். பட்டதாரிகளாக ஆகிறார்கள். அப்படிப் படித்து விட்டுக் கல்லூரிகளிலிருந்து வெளிவந்ததும், அவர்கள் வேலை எங்கே, வேலை எங்கே என்று கேட்கிறார்கள். நாம் அவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். பதில் சொல்லப்போகிறோம்; நல்ல முறையில் பதில் சொல்லப் போகிறோம்.
அதனால்தான் இந்தத் தேர்தலில் முற்போக்குக் கூட்டணி வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து, ஆதரவு பெற்று, இந்த மாமன்றத்திலும், மத்திய சர்க்காரிலும் அரசுகள் அமைத்திருக்கும் காட்சியைக் காண்கிறோம்.
சொன்னதைச் செய்தோம்
அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்னின்றிருக்கிறது. முன்பு 1967-ம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவற்றை திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
இந்தப் புதிய அரசு, திராவிட முன்னேற்றக் கழக அரசு, அறிஞர் அண்ணா அவர்களுடைய வழியில் நின்று தேர்தல் நேரத்தில் எடுத்துச் சொன்ன நாட்டு மக்களுக்குத் தேவையான காரியங்கள் என்ன எப்படி வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும். சுதந்திர நாட்டில் ஏழைக்கு எத்தகைய சுதந்திரம் வேண்டும். பாட்டாளிக்கும், தொழிலாளிக்கும் விடிவு காலம் எந்த வகையில் ஏற்படவேண்டும், ஏழை வீட்டில் என்றென்றும் நல்ல விளக்கு எரிந்திட வேண்டுமென்பதற்காக என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோமோ,
அந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற இந்த அரசு கொஞ்சம் கூடத் தயங்காது என்பதை மிகுந்த திட்டவட்டமாக இந்த மன்றத்தில் எடுத்துக் கூறிக்கொள்ளுகிறேன்.
மின்சார வாரியத்தில் வேலைகள்
மின்சாரத் துறையில் பல்லாயிரக் கணக்கான மனுக்களைப் பெற்றீர்களே, ஒருவரைக் கூட வேலைக்குச் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹாண்டே கேட்டார்கள்.
டாக்டர் ஹாண்டே போன்றவர்கள் இப்படித் தகவல் அறியாமல் பேசுகிறார்களே என்பதுதான் என் கவலை. பல்லாயிரக் கணக்கான மனுக்களைப் பெற்றது உண்மை. அந்த மனுக்கள் என்னனென்ன வேலைகளுக்காகக் கோரப்பட்டதோ அந்த வேலைகளுக்கு எல்லாம் ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் - பில் கலெக்டர்கள் 360 பேர் ; டைப்பிஸ்ட் 100 பேர் ; கிளார்க்குகள் 1,500 பேர்.
டாக்டர் ஹாண்டே அவர்களுக்குத் தரப்பட்ட தகவல் - அவர் சொல்லிய தகவல் என்று சொல்லவில்லை - தவறான தகவல். மின்சார வாரியத்தில் மனுக்களைப் பெற்று யாரையும் வேலையில் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது.
விலைவாசி குறைவின் அளவு
விலைவாசி பற்றிப் பேசப்பட்டது. எல்லா வகையிலும் விலைவாசி அறவே குறைந்து விட்டது என்று யாரும் கூறிக் கொள்ளவில்லை. உணவு தானியங்களைப் பொறுத்தவரை விலைவாசி குறைந்திருக்கிறது. வேறு சில விஷயங்களிலும் குறைந்திருக்கிறது.
எல்லாப் பொருள்களின் விலையும் குறையவேண்டுமென்றால் மத்திய சர்க்கார் ஒத்துழைப்புடன் தான் செய்யமுடியும். இதுதான் கவர்னர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதனை யாரும் மறுத்திட முடியாது.
விலைவாசியைப் பொறுத்த வரை திருச்சி மார்க்கெட்டை எடுத்துக்கொண்டால் இரண்டாம் ரக அரிசி மார்ச் 70-ல் 100 கிலோ கிராம் கொண்ட மூட்டைக்கு ரூ. 100 ஆக இருந்தது. மார்ச் 71-ல் ரூ.86·60 ஆகக் குறைந்திருக்கிறது. சோளம் மார்ச் 70-ல் 85·3 ஆக இருந்தது. மார்ச் 71-ல் ரூ.73·35 ஆகக் குறைந்திருக்கிறது. கம்பு 90 ரூபாயாக இருந்தது. 52 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. ராகி 70 ரூபாயாக இருந்தது. 62 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.
கடலை எண்ணெய் 470 ரூபாயாக இருந்தது. 445 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.
பருப்புக்கு ஒரு திட்டம்
பருப்பு வகை, சில எண்ணெய் வகைகளின் விலை சற்று ஏறி இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அவற்றின் விலை குறைய, உற்பத்தியைப் பெருக்கியாக வேண்டும். அதற்காகத்தான் பருப்பு வகைகளின் உற்பத்தியைப் பெருக்க நாம் தனித் தொகை ஒதுக்கி, தமிழ்நாட்டில் ஆறு லட்சம் ஏக்கரில் பருப்பு வகைகளை விளைவிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டியிருக்கிறோம்.
மிளகாய் 100 கிலோ கிராம் 1970-ல் 410 ரூபாயாக இருந்தது. 1971-ல் 350 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. மஞ்சள்- ஈரோடுதான் மஞ்சளுக்குப் பேர் போனது - ஈரோடு மார்க்கெட்டின்படி 380 ரூபாயாக இருந்தது, 180 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. மஞ்சள் விலை குறைந்ததைப் பெண்கள் அதிகமாக வரவேற்பார்கள் என்று கருதுகிறேன்.
விறகுவிலை 14-ல் இருந்து 18 ஆக ஏறியுள்ளது.
ஒன்றுபட்டு வாதாடுவோம்
