உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 5
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 5 · 5 / 13

ஆகவே, சொன்னவைகளையும் செய்தவைகளையும் நாங்கள்தான் என்று எடுக்காமல், அதை விட்டுவிட்டு மேலும் அது தொடர்பாக முயற்சியில் ஈடுபட்டு நல்லவைகளைச் செய்து முடித்திருக்கிறோமா, இல்லையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'நாங்கள் செய்தோம், நாங்கள் செய்தோம்' என்று சொன்னால் எப்படி அது முறை ஆகும்?

உணவு உற்பத்தி பெருகியது என்றால், மழை பெய்தது ஆகவே தான் அதிக உணவு உற்பத்தி என்று சொல்வது எப்படி ஒரு வாதம் ஆகும்? அப்படி வாதத்திற்கு எடுத்துக் கொள்வோ மானால், நல்லவர்கள் இருக்கிறார்கள், மழை பெய்கிறது என்று அதையும் சொல்லலாம் அல்லவா ?

நான் சொல்கிறேன் : மழை, பற்றாக்குறையாக இருந்தது உண்டு. கடந்த நான்காண்டு காலத்தில் வறட்சி கூட வந்தது. வறட்சியையும் சமாளித்துத்தான் நாங்கள் உணவு உற்பத்தியை கணிசமாகப் பெருக்கியிருக்கிறோம், அதில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

தொழிலில் நமது வளர்ச்சி.

சேலம் உருக்காலையைப் போல அடுத்து பல பெரிய தொழிற்சாலைகள் நம்முடைய நாட்டுக்குக் கிடைத்திருக்கின்றன. நம்முடைய மாநிலம் பெற்றிருக்கின்றது. அந்த அளவுக்குப் பெரிய தொகை கொண்ட தொழிற்சாலைகள் இல்லை என்றாலும், டயர் தொழிற்சாலை ஒன்று வருகிறது. சோடியம் ஹைட்ரோ சல்பேட் தொழிற்சாலை ஒன்று உருவாகிறது. சோடா ஆஷ் தொழிற்சாலை அதுவும் கூட்டுத் துறையிலே உருவாகிறது. நைலான் தொழிற்சாலை விரைவிலே வரும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன.

பாலிஸ்டர் ஃபைபர் தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

நமது மாநிலத்தில் எந்த அளவுக்குத் தொழில்கள் வளர்ந்திருக்கின்றன என்பதற்கான விவரங்களைக் காட்டுகிற குறிப்புகளை இங்கே எடுத்துக் கூறுவது பொருத்தமுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தொழில் உற்பத்திக் குறிப்பீட்டெண் என்ற தலைப்பிலே 1967-ல் 158·3, 1968-ல் 166·3, 1969-ல் 172·8, 1970-ல் 182·3 என்கின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அதைப்போலவே பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் 1967-ல் 7,065, 1970-ல் 7,922, எதுவும் குறைந்து விடவில்லை.

பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் பதிவான நிறுவனங்கள், கம்பெனிகள் 1967-ல் 91, 1969-ல் 116, 1970-ல் முதல் 6 மாதங்களில் 76 கம்பெனிகள் பதிவாகியிருக்கின்றன.

தொழில் உரிமங்களுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள், 1967-ல் 38 விண்ணப்பங்கள் அனுப்பினோம். அதிலே 16 விண்ணப்பங்களுக்குத் தொழிற்சாலை ஆரம்பிக்க உரிமங்கள் கிடைத்தன. 1968-ல் 51 விண்ணப்பங்கள் அனுப்பினோம். அதிலே 9-க்கு லைசென்ஸ் கிடைத்தது. 1969-ல் 97 அனுப்பினோம். 12-க்கு லைசென்ஸ் கிடைத்தது. 1970-ல் 142 விண்ணப்பங்கள் அனுப்பினோம். அதில் இதுவரையிலே 36-க்கு லைசென்ஸ் கிடைத்திருக்கிறது.

ஆகவே, தொழிற்சாலைகள் ஆரம்பிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமலே இருந்துவிட்டோம் என்று குறை சொல்வதற்கில்லை.

சிறு தொழில் நிறுவனங்கள்.

சிறுதொழில்கள் வகையில் தொழில் வர்த்தக இயக்குநரால் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள்:

- 1967-ல் — 11,929 - 1968-ல் — 13,571 - 1969-ல் — 18,063 - 1970-ல் — 21,857

ஆக, இந்த அளவிற்குத் தொழில் துறையில் நாம் முன்னேறியிருக்கிறோம் என்றாலும், இது உள்ளபடியே போதுமான முன்னேற்றம் இல்லை. இன்னும் அனுமதிகள் கொடுக்கப்படவேண்டும். 100 கேட்டால் 30-க்கு அனுமதி கிடைக்கிறது. ஆகவே, இதில் குறைபாடு இல்லாமல் இல்லை. இன்னும் அதிகமாகத் தொழில் வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து மத்திய சர்க்காரிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

கூட்டுத்துறையின் சிறப்பு.

மேலும், மேலும் தொழிற்சாலைகளை விரைவில் உருவாக்க வேண்டும் என்று மத்திய சர்க்காரைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுத் துறை இவைகளைப் பற்றி விவாதத்தில் குறிப்பிடப்பட்டது. கூட்டுத்துறை என்பது என்ன? கூட்டுத் துறை என்பது அநேகமாகத் தனியார் துறையாகத்தான் இருக்கிறது என்று உறுப்பினர்கள் சிலரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டுத்துறை என்பதில், தனியாருடைய ஊக்கமும், அரசாங்கக் கண்காணிப்பும் இருக்கும். முன்பெல்லாம் தனியார் துறை என்றால் அரசாங்கக் கண்காணிப்புக் கிடையாது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், மெட்றாஸ் அலுமினியம் பாக்டரியில், அதற்குப் பங்கு மூலதனம் -முதலீடு ரூ. 3 கோடி. அதிலே, தனியார் ஒன்றரைக் கோடி ரூபாயும், அரசாங்கம் ஒன்றரைக் கோடி ரூபாயும் போட்டார்கள். கண்காணிக்கும் பொறுப்பை அரசாங்கம் வைத்துக் கொள்ளாமல் இருந்தது. அரசின் சார்பில் ஒரே ஒரு டைரக்டர் அதில் இருக்கிறார். அரசைக் கலந்து கொண்டு பாக்டரியில் தனியார் தங்கள் காரியங்களைச் செய்வதில்லை.

இப்பொழுது ஏற்பட்டிருக்கிற கூட்டுத் துறையில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. தனியாருடைய ஊக்கம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அரசாங்கத்தின் கண்காணிப்பும் இருக்கிறது. இரண்டும் இணைந்து கூட்டுத்துறைக் கொள்கை நிறைவேறுகிறது என்ற அளவில், இந்த அரசு புதிய கொள்கையை உருவாக்கியிருக்கிறது.

நமது முடிவான லட்சியம்

தமிழ்நாடு தொழில் வளம்பெற வேண்டும் என்கிற எண்ணத்தில், பொதுத் துறைதான் நம் முடிவான லட்சியம். ஆனாலும் அப்படிச் சொல்லிக்கொண்டே தொய்ந்து விடக் கூடாது என்கிற அடிப்படையில்தான் இன்றைக்கு இந்தக் கூட்டுத் துறையை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். இறுதி லட்சியம் பொதுத் துறையே.

கவர்னர் உரையில் குறிப்பிட்டபடி, வேலை வாய்ப்புக்கள் பற்றி உறுப்பினர்கள் பெரிதும் எடுத்துச் சொன்னார்கள். வேலை வாய்ப்புக்களை அளிப்பதில், தமிழ்நாடு அரசும் மத்திய சர்க்கார் அளவிலும் பல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்றார்கள்.

படித்தோரிடையே வேலை இல்லா அவதி

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் காலதாமதம் ஆனதன் காரணத்தாலும், திட்டங்கள் இல்லாததாலும், வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது. பட்டதாரிகள், பொறியாளர் இவர்களுக்கெல்லாம், வேலை அளிக்கக் கூடிய திட்டங்கள் இல்லை என்பதால், வேலை வாய்ப்பின்மை நாட்டில் பெருகியதை மறுத்திட இயலாது.

மாநில மட்டத்தில் சில காரியங்களைச் செய்து இருந்தாலும், அது பூரண திருப்தி அளிக்கக் கூடியதாக இல்லை. புன்னகை அளிக்கக் கூடியதாக இல்லை.

ஆர்வத்தைக் காட்டும் அறிகுறி