நமது நிலை
பகுதி 4 · 4 / 13
அது சில இடங்களில் இப்பொழுது சரியான முறையில் நிறைவேறாமல் இருக்கலாம். அதிலே சில சங்கடங்கள் ஏற்பட்டிருந்தன. திரு கே. டி. கே. தங்கமணி அவர்களுடைய உரையை யொட்டி மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். மிகவும் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் அல்லாமல் பதவி நீடிப்பை இந்த அரசாங்கம் இனி நிச்சயம் தராது என்பதையும் நான் இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். (ஆரவாரம்)
ஆசியாவிலேயே பெரிய ஒரு தொழில் திட்டம்
நம்முடைய நாட்டிலே தொழில் வளம் எவ்வாறு இருக்கிறது என்பது, சிலராலே போற்றப்பட்டது, பாராட்டப்பட்டது. தொழில் வளம் நல்ல வகையிலே இல்லை என்றும் சில உறுப்பினர்களால் எடுத்துச் சொல்லப்பட்டது.
கவர்னர் உரையிலே தூத்துக்குடி உரத்தொழிற்சாலையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதற்கான அனுமதி விரைவிலே கிடைக்கும் என்று கூறினார்கள்.
அதே நேரத்தில் கவர்னர் உரையின் மீது விவாதம் நடத்திக்கொண்டிருக்கிற இந்தநேரத்திலே இந்த உரத் தொழிற்சாலைக்கு நாப்தா மூலப்பொருளாக நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தூத்துக்குடி உரத் தொழிற்சாலைத் திட்டம். ரூ. 65 கோடித் திட்டம். ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டம். இதற்கு மாநில அரசு ரூபாய் 3 கோடியும், தனியார் பிரதிநிதிகள் 3 கோடியும் தருகிறார்கள். தனியார் பிரதிநிதிகளின் முயற்சியினால் அரசு சார்புள்ளதும், அரசு சார்பற்றதுமான நிறுவனங்களின் வாயிலாக மீதமுள்ள தொகை திரட்டப்பட்டு இந்த உரத் தொழிற்சாலை அமைகிறது. நாம் இதைக் கூட்டுத்துறையில் அமைத்திருக்கிறோம். கூட்டுத்துறையில் இதனை அமைத்திருப்பதால் அரசாங்கத்தினுடைய கண்காணிப்பு இந்தத் தொழிற்சாலைக்கு இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக அரசாங்கத்தின் சார்பிலே நான்கு டைரக்டர்கள் இதிலே இருக்கிறார்கள்.
அணுமின் நிலையத்திற்குக் கனநீர் உற்பத்தி
அதைப் போலவே ரூ.20 கோடி அளவில் ஹெவி வாட்டர் உற்பத்தித் திட்டம் விரைவிலே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தொடக்கப் பேச்சுவார்த்தைகளெல்லாம் முடிவுற்றிருக்கின்றன. அது சம்பந்தமாக அணுசக்தி ஆணைக்குழுவுடன் நம்முடைய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த ஹெவி வாட்டர் உற்பத்தித் திட்டம் வந்து விடுமேயானால், நம்முடைய கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்குப் பயன்படக்கூடிய இத்திட்டம் ரூ. 20 கோடியில் ஒரு பெரிய திட்டமாக அமையும்.
சேலம் உருக்காலை வந்த விதம்
சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றி இங்கே பலரும் பேசினார்கள். ரூ.110 கோடியில் இந்தத் திட்டம் நமக்குக் கிடைத்தது. இந்தத் திட்டம் கிடைத்ததைப் பற்றிப் பேசிய உறுப்பினர்கள் - எதிர்த் தரப்பில் உள்ளவர்கள் - குறிப்பாக நிஜலிங்கப்பா காங்கிரஸில் உள்ளவர்கள் 'இது எங்களுடைய காலத்தில் சொல்லப்பட்டதுதான். எங்களுடைய காலத்தில் கேட்கப்பட்டதுதான்' என்றெல்லாம் சொன்னார்கள். நானும் அதை மறுக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால், சேலம் உருக்காலைக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்ற நேரத்தில் இந்தத் திட்டத்திற்காக ஆரம்ப காலத்தில் பாடுபட்ட திரு. காமராஜர் அவர்களுக்கும், திரு. வெங்கட்ராமன் அவர்களுக்கும் திரு. சுப்பிரமணியம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். நாங்கள் யாரும் நன்றி மறந்துவிடுபவர்கள் அல்ல. அரசியல் பண்பாட்டை இழந்துவிடுபவர்கள் அல்ல.
ஆனாலும், இந்தத் திட்டம் இடைக்காலத்தில் கிடப்பிலே போடப்பட்டது. இது வராது என்கிற அளவுக்கு நிலைமை போயிருந்தது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இதற்காக நாம் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கட்சியினரும் இணைந்து 'எழுச்சி நாளை'க் கொண்டாடினோம். அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளிலும் பேசி, தீர்மானங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதற்குப்பிறகு நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுவில், முதலமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் நான் "சேலம் உருக்காலைத் திட்டத்தை எங்களுக்கு அளிக்கா விட்டால், நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதை நிறுவாவிட்டால், நான்கு கோடித் தமிழ் மக்களுடைய சார்பாகச் சொல்கிறேன், இந்த நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு என்னுடைய சம்மதத்தைத் தர முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னேன்."
"நீங்கள் எதிர்த்துப் பேசுவதில்லை. அங்கு போனதும் வளைந்து விடுகிறீர்கள், இங்கேதான் வீரமாகப் பேசுகிறீர்கள், அங்கு சென்று துணிச்சலாகக் கேட்பதில்லை!" என்று டாக்டர் ஹாண்டே அவர்களும், திருமதி அனந்த நாயகி அவர்களும் பேசும்பொழுது குறிப்பிட்டதால் அங்கு நடந்ததைச் சொன்னேன்.
தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியே வந்ததும் டெல்லியில் உள்ள சில தமிழ் நாட்டுத் தலைவர்களெல்லாம் என்னைச் சந்தித்து "இப்படி என்.டி.சி. கூட்டத்தில் வேகமாகப் பேசலாமா? நிபந்தனை பாட்டுப் பேசலாமா? ஒருவேளை சேலம் உருக்காலை கிடைக்காவிட்டால் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை விட்டுவிடுவதா?"
என்று கூடக் கேட்டார்கள். பிறகு 10 நாளைக்குள் சேலம் உருக்காலை கிடைத்துவிட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
பெண் கேட்டவர்கள் கதை.
"நாங்கள் தான் கேட்டோம், நாங்கள் தான் கேட்டோம் ஆகவே வெற்றியில் உங்களுக்குச் சொந்தமில்லை" என்று கூறுகிறார்கள்.
ஒரு வீட்டில் அழகான பெண் இருக்கிறாள். பல பேர் போய்ப் பெண் கேட்கிறார்கள். பையன் பிடிக்கவில்லை, நல்ல வருமானம் இல்லை. நல்ல அழகு இல்லை என்று சொல்லித் தட்டிக்கழித்துவிட்டு, கடைசியில் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகி, திருமண ஊர்வலம் வரும்பொழுது, பாதை ஓரத்தில் நின்றுகொண்டு "நான் கேட்ட பெண்தான்" என்று கேலி செய்வதா?
கட்டினவனுக்குத்தான் பெண்ணே தவிர, கேட்டவனுக்கெல்லாம் அல்ல என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதைப்போலத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வெற்றி கிடைத்தது. வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். ஆனால் வெற்றி கிடைத்த நேரத்தில், "நாங்கள் தான் கேட்டோம், நாங்கள் தான் கேட்டோம்" என்று சொல்வதா?
"சேலம் உருக்காலைகுறித்து மேலும் ஒரு அறிக்கை தேவைதானா? ஆராய்ச்சிகள் முடிந்துதானே அறிக்கை கொடுக்கப்பட்டது? மறுபடியும் அறிக்கை எதற்கு?" என்று குறிப்பிட்டார்கள்.
புது அறிக்கை பெரிய அறிக்கையாக இருக்காது, ஒரு திருத்த அறிக்கையாகவே இருக்கும். அது ஏன் தேவை? இந்த அறிக்கை வெளியாகி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தொழிற்சாலை வராது என்ற நிலையில் அறிக்கையை ஏறெடுத்துப் பார்க்காத சூழ்நிலை உருவாகியிருந்தது. உருக்காலை வருகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டு, காலக் கடத்தல் காரணமாக, தாமதம் காரணமாக, அந்த அறிக்கையில் சில திருத்தங்கள் தேவைப்பட்டன.
திருத்த அறிக்கையையும் ஆறுமாத காலத்தில் கொடுத்து, வேலையைத் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறோம். நல்ல சூழ்நிலை இருப்பதால், தேர்தலுக்குப் பின்னால் ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றங்கள் காரணமாக சேலம் உருக்காலை ஏற்படுவதற்கு, சீக்கிரமே செயல்படுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியிருப்பதாக அறிகிறேன்.
இதிலே நாம் அவசரப்படுகிறோம். அதே நேரத்தில், ஆறு மாதத்தில் அறிக்கை வரவேண்டும் என்றும் மத்திய சர்க்காரிடத்தில் வலியுறுத்துகிறோம். அறிக்கை தேவையா - இல்லையா என்பதில்லை வாதம். தேவை என்பதை நாம் அறவே மறுக்கவில்லை. காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக, சில திருத்தம் தேவை என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆறு மாதங்கள்தான். அதற்குள் சமர்ப்பித்துவிட வேண்டும் என்று கூறித் திருத்த அறிக்கைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறோம்.
நல்லதைச் செய்தோமா, இல்லையா?
அம்மையார் ஜோதி வெங்கடாசலம் அவர்கள், இவர்கள் விவசாயத்தை அபிவிருத்தி செய்திருக்கிறார்கள், உணவு உற்பத்தியைப் பெருக்கியிருக்கிறார்கள் என்றால், எங்கள் காலத்தில் போட்ட திட்டம்தான் என்கிறார்கள்.
இப்படியே போய்க் கொண்டிருந்தால், எங்கள் காலத்து வயல்கள் என்றுகூடச் சொல்லலாம்.
