உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 3
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 3 · 3 / 13

கருணாநிதி தன்னுடைய கட்சிப் பணத்தை, தேர்தல் நிதியைக்கொண்டு சினிமா எடுத்து விட்டான் என்று பத்திரிகையில் செய்தி போட்டார்கள். நானும் ஒவ்வொரு கூட்டத்திலும் இல்லை, இல்லை என்று சொன்னேன். அவர்கள், ஆமாம், ஆமாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நீதி மன்றத்திற்குச் சென்றால்தான் அதற்குச் சரியான தீர்வு காண முடியும் என்று நீதி மன்றத்திற்குச் சென்றோம்.

நீதி மன்றத்திற்குச் செல்கிறவர்கள், நீதி மன்றம் தரும் தீர்ப்பை ஏற்கத் தயார் என்று சொல்லும் நேரத்தில், எழுதியவர்கள் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

நாடகத் தடைகுறித்துக் கூறியது யார்?

எங்கள் மீது சில பத்திரிகைகளால் சுமத்தப்பட்ட அபாண்டங்களை மறுத்து, உண்மையை நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, எந்தப் பத்திரிகையும் தடை செய்யப்படவில்லை. எந்த நாடகமும் தடை செய்யப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாடகத்தைத் தடை செய்ய வேண்டுமென்று, காங்கிரஸ் ஒன்றாக இருந்த காலத்தில், காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசிய நேரத்தில் கூட நான் எழுந்து, "எழுத்து உரிமையைப் பறிப்பது நல்லதல்ல. எங்களைப் பொறுத்த வரையில் மக்கள் ஆதரித்தால் ஆதரிக்கட்டும்.

இல்லாவிட்டால், ஆதரிக்காது செல்லட்டும்"! என்று சொன்னேனே தவிர, "ஆமாம், நாடகம் தடை செய்யப்பட வேண்டும்" என்று சொல்லவில்லை. இதை நாடு நன்றாக அறியும். அது பத்திரிகையிலும் வந்து இருக்கிறது.

அரசியலும் கொலைகளும்.

தேர்தல் நேரத்தில் நடந்துவிட்ட கொலைகள் 17 என்று திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் குறிப்பிட்டார்கள். 17 கொலைகள் நடந்து இருக்கின்றன என்று சொன்னால் அவை தேர்தல் காலத்திற்கு முன்னும் பின்னும் நடைபெற்றவை. நடைபெற்ற கொலைகள் எல்லாம் தேர்தலுக்குத் தொடர்புடைய கொலைகள் என்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது தவறாகும்.

17 கொலைகளில், ஒன்பது, பத்து கொலைகள் அரசியல் தொடர்புடையதாக உள்ளன. மற்றவை தனிப்பட்ட தகராறுகள் அவர்களுக்குள்ளே இருந்ததால் ஏற்பட்டவை என்று தான் நமக்குச் செய்திகள் கூறுகின்றன.

அந்த வழக்குகள் அனைத்தும் நீதி மன்றத்தில் இருக்கிற காரணத்தால், நான் அவற்றின் மீது அதிகம் ஆராயப் புகவில்லை. என்றாலும் கொலைகள் விழக்கூடாது. வன்முறைச் சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்று நாம் இந்த மன்றத்தில் ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டே இருக்கிற காலத்தில்தான், இரண்டு நாளைக்கு முன்பு கூட, பரங்கிமலைத் தொகுதியில், எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றி பெற்று வந்த தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த முருகேசன் குத்திக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆகவே, கொலைகள் எந்த அரசியல் காரணத்திற்காக நடைபெற்றாலும், எந்த அரசியல் கட்சிக்காரர்களால் நடத்தப்பட்டாலும், அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் இதைச் செய்தாலும் மிகவும் கண்டிக்கத்தக்கது தான்.

நாம் பலரும் இங்கே அபிப்பிராயம் தெரிவித்தார்கள், சர்வ கட்சித் தலைவர்களும் சேர்ந்து அறிக்கை விட வேண்டுமென்று சொன்னார்கள். நான் அதற்கு மறுப்புக் கூறவில்லை. நாம் அறிக்கை விடுகின்ற அதே நேரத்தில், நமக்கு அடுத்து இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தலைவர்களும், கிளை அமைப்புக்களும் அந்த முறையைக் கடைப்பிடித்தாக வேண்டும். தமிழ் நாட்டில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் பண்பாடும், நாகரீகமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நமது கொள்கை

கவர்னர் உரையில் எந்தத் திட்டங்களும் இல்லை, எந்தக்கொள்கையும் இல்லை என்று குறைசொல்லப்பட்டது. ஆனால், கவர்னர் உரை மீது நடைபெற்ற இந்த விவாதத்திலும், இடைக்கால நிதி நிலை அறிக்கை மீது விவாதம் நடைபெற்ற நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் நாம் பல்வேறு வகையான முற்போக்குக் கொள்கைகளை எல்லாம் நிறைவேற்றக் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

முற்போக்குத் திட்டங்களையெல்லாம் இந்த அரசு நிறைவேற்றித் தரவேண்டுமென்று கோரிக்கை வருகின்ற நேரத்தில், அதுவும் குறிப்பாக நிஜலிங்கப்பா காங்கிரஸ் கோரிக்கை விடுகிற நேரத்தில் நாம் மெத்த மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

முற்போக்குத் திட்டம் யார் சொன்னாலும் அதை நிறைவேற்றித்தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அவற்றின் மூலம் எங்களுக்கு நன்மையே தவிர, தீமை ஒன்றும் இல்லை.

கைத்தறி நெசவாளர்களைப்பற்றிச் சொல்லவில்லை, சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிச் சொல்லவில்லை. வேறு சிலவற்றைக் குறித்துச் சொல்லவில்லை என்ற காரணத்தால் அவற்றில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

மிகவும் குறிப்பாகவும், சிறப்பாகவும், மாநிலத் திட்டக் குழு அமைப்பது ஆளுநர் அவர்கள் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நிர்வாகச் சீர்திருத்தம்

நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், ஒழுங்காகவும், செம்மையாகவும் விரைவாகவும் விறுவிறுப்பாகவும், செயல்பட வேண்டுமானால், நிர்வாக இயந்திரம் ஒழுங்காக இருக்க வேண்டும். நிர்வாக இயந்திரம் ஒழுங்காக இருந்திடவும், மேலும் நல்ல முறையில் முடுக்கி விடப்பட வேண்டுமென்பதற்காகவும், அதிகாரிகளின் கடமைகளை நல்ல வகையில் பயன்படுத்துவதற்காகவும்தான் நிர்வாகச் சீர்திருத்த ஆணைக் குழுவை இந்த அரசாங்கத்தின் சார்பில் ஆளுநர் அவர்கள் தங்களுடைய உரையில் அறிவித்து இருக்கிறார்கள்.

நிர்வாகத்தில் இருக்கும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி இந்த மன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் கோடிட்டுக் காட்டிய எண்ணங்களை நான் வரவேற்கிறேன். அதற்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இந்தத் தாமதங்கள் தவிர்க்கப்பட்டால்தான், அரசாங்கம் நிறைவேற்றும் திட்டங்கள், அந்தத் திட்டங்களுக்காக அரசு அள்ளி இறைக்கும் பணம் ஆகியவை எல்லாம் ஏழை எளிய மக்களின் படிக்கட்டுகளில் சென்று மக்கள் அமைதியான வாழ்வு பெற வகை செய்ய முடியும்.

நமது அதிகாரிகள் கடமை உணர்ந்தவர்கள். கடமை உணர்ந்த அதிகாரிகள் பலபேர் இருக்கிறார்கள். அதே நேரத்தில் சில அதிகாரிகள் வேறு மாதிரி எண்ணம் கொண்டு இருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் திருந்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகள் திருந்திக் கொண்டால் மட்டும் போதாது. திருந்திக் கொண்ட அதிகாரிகளை இணைத்து, நிர்வாக இயந்திரத்தை மிகவேகமாக இயக்கிடவும், ஆக்கபூர்வமாகக் கருத்துக்களை எடுத்துக் கூறவும் இந்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவை அமைத்து இருக்கிறோம்.

காரியம் ஒன்று, கடிதங்கள் பதினொன்று

பட்டா வழங்குவதில் அரசு எந்த வகையில் பரிசீலித்துப் பணியாற்ற வேண்டும் என்று எடுத்துக்காட்டி, நிர்வாகத் துறையில் இருக்கிற சிக்கல்களையெல்லாம் திரு. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் சொன்னார்கள். ஒரே காரியத்திற்கு 11 கடிதங்கள் எழுதப்பட்டு 11 உறைகளில் இடப்பட்டு 11 வில்லைகள் ஒட்டி அனுப்பப்பட்டன என்று சுட்டிக்காட்டினார்கள். அதுகூட அறிவிக்க வேண்டிய ஒன்றுதான்.

எந்த நிலம் பட்டா செய்யப்படுகிறது, ஆர்ஜிதம் செய்யப்படுகிறது என்பது சம்பந்தப்பட்ட ஒருவருக்கு மட்டும் தெரிவிக்கக் கூடியது அல்ல. தமிழக அரசு பட்டா வழங்குகிற நேரத்தில் யார் யாருக்கு என்று எந்த எந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டது என்று அந்த அந்த எம். எல். ஏ., எம். எல். சி., எம். பி.-க்களுக்கு அறிவிக்க வேண்டியதுதான். அந்த விவரங்களை ஒன்றாகக்கூட அனுப்பி இருக்கலாம். நிர்வாகத்தில் இப்படிப்பட்ட சீர்கேடுகளைக் களைவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

பதவி நீடிப்புப் பிரச்சினை

திரு கே. டி. கே. தங்கமணி அவர்கள் நிர்வாகச் சீர்திருத்தக் குழு அமைத்தது சரிதான் ; அதிகாரிகளுக்குப் பதவி நீடிப்பு விஷயத்தில் யாருக்கும் சலுகை காட்டக் கூடாது என்று சொன்னார்கள். அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறோம்.

பதவி நீடிப்பைப் பொறுத்தவரையில், "சிலர் நிபுணர்கள், இவர்களை விட்டால் அந்த இடங்களுக்கு வேறு தகுதியான ஆட்கள் கிடையாது, அவ்வளவு நிபுணத்துவம் உள்ளவர்கள்" என்ற நிலையில், மருத்துவத் துறைபோன்ற சில அத்தியாவசியத் துறைகளைத் தவிர மற்றத் துறைகளில் பதவி நீடிப்புக் கிடையாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.