உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 2
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 2 · 2 / 13

தேர்தலில் இன்னும் நவீனமான முறைகள் எல்லாம் பயன்படுத்தப்படவேண்டும் என்று இங்கு பலர் பேசியிருக்கிறார்கள், அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. மேலும் நவீனமான முறைகள் தேவை தான்.

ஆனால், தேர்தலில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சில குறைகள் இருக்கலாமே தவிர, குற்றங்கள் இருப்பதாக நாம் கூறுவது நல்லதல்ல. குறைகளுக்கும் குற்றங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் ஆழ்ந்து கவனிக்கவேண்டும்;

குறைகள் என்றால் ஆங்காங்கே சென்று உடனடியாகக் களையப்படவேண்டியவை. தெரிந்து மீறி செய்யப்படுகின்ற காரியங்கள் குற்றங்களாகும். அப்படி எந்தக் குற்றமும் இந்தத் தேர்தலில் நடைபெறவில்லை.

நம்முடைய பெருமதிப்பிற்குரிய உறுப்பினர் மணலி கந்தசாமி அவர்கள் பேசும்போது, இந்தத் தேர்தலில் ஜாதி உணர்வுகள் தலைகாட்டின; கடவுளர் இழுக்கப்பட்டார்கள்; ஆஸ்திக நாஸ்திக வாதங்கள் தேவையில்லாமல் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

ஆமாம் ! இந்தத் தேர்தலில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு வகுப்புணர்ச்சிகள் தூண்டப்பட்ட காட்சியைப் பார்த்தோம். ஆனால் அந்த வகுப்புவாத சக்திகள் பெரும்பான்மையான அளவில் வெற்றியைப் பெறவில்லை என்பதையும் நாம் கண்டோம்.

சேலம் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைத்து, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியோடு இணைத்து- ஆகவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கக்கூடாது என்றெல்லாம் சேலம் நிகழ்ச்சியோடு தேர்தலுக்கு முடி போட்டார்கள்.

சேலம் நிகழ்ச்சி ; ஒரு விளக்கம்!

இன்றும் சொல்கிறேன். சேலம் நிகழ்ச்சியை யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. சேலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள இயலாது.

நான் சேலம் சம்பவம் நடைபெற்ற இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் மதுரை சென்றிருந்த போது நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட நேரத்தில் 'சேலம் நிகழ்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, காவல் துறையினர் அதைப்பற்றி நடவடிக்கைகள் எடுப்பார்கள்' என்றுதான் கூறினேனே அல்லாமல், அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது என்று கூறினேனே தவிர, சேலம் நிகழ்ச்சியில் என்ன தவறு என்று நான் கேட்கவில்லை.

ஆனால், சேலம் நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்ட பிறகும் சேலம் நிகழ்ச்சியில் என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் பெரிய பெரிய சுவரொட்டிகள் போட்டு ஊர் எல்லாம் ஒட்ட வேண்டியது அவசியம் தானா? எண்ணிப்பார்க்க வேண்டும். உள்ளபடியே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றால் அப்படிச் செய்வார்களா ?

என்ன போட்டிருந்தார்கள் சுவரொட்டிகளில் ? ராமன் படத்தையும், முருகன் படத்தையும் போட்டு, பெரியார் அதைச் செருப்பால் தாக்குவது போலவும் போட்டு, அதை நான் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் போலவும் போட்டிருந்தார்கள். அந்தச் சுவரொட்டிகளை ஊரெல்லாம் ஒட்டினார்கள்.

உள்ளபடியே, அது அனுமதிக்கக் கூடிய காரியமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சேலம் நிகழ்ச்சி தவறு என்றால், ஊரெல்லாம் அந்தச் சுவரொட்டிகளை ஒட்டி, தவறு இப்படித்தான் நடந்தது என்று சொல்ல வேண்டுமா ?

தவறைச் செய்து காட்டுவது முறையா?

ஒருவரின் தகப்பனாரை ஒருவன் சண்டையில் அடித்து விடுகிறான். அப்படி அடிபட்ட நேரத்தில் அதைப் புகைப்படமும் எடுத்து விடுகிறான் ஒருவன். அடித்தவன் மீது அடிபட்டவனின் மகன், வழக்குப் போடச் செல்வான். இல்லை, வழக்கு மன்றத்திற்குச் சென்று விவகாரத்தை அவ்வளவு பெரிதாக்காமல் சும்மா இருந்து விடுவான்.

இந்த இரண்டையும் விட்டு விட்டு, அடித்தவன் தீயவன் என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக, எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தைப் பெரிதாக்கி அதைப் பிளாக் செய்து, அழகான வண்ணத்தில் சுவரொட்டிகள் அடித்து, அதை ஊரெல்லாம் ஒட்டினால் என்ன நடக்கும்? அந்தத் தந்தை மகனைக் கூப்பிட்டு, "அடப் பாவி ! அவன் ஒரு இடத்தில் தான் என்னை அடித்தான், நீ ஊரெல்லாம் என்னை அடிக்கச் செய்திருக்கிறாயே" என்று கூறி அவர் வருத்தப்பட மாட்டாரா ?

மகேசனும் சேர்ந்து அளித்த தீர்ப்பு

எங்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்லுவதுண்டு, "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று. மகேசனும் சேர்ந்து அளித்த தீர்ப்புதான் இந்தத் தீர்ப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் இந்த ஆட்சியிலே பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டார்கள்.

ஒரு பத்திரிகையிலே சில வெறுக்கத்தக்க, வேண்டத்தகாத படங்கள், வெளிவரத்தகாத படங்கள், வெளியிடப்பட்டன என்ற காரணத்தால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த நடவடிக்கைகளின் உட்பொருளுக்கு நான் செல்ல விரும்பவில்லை.

இந்த ஆட்சி 4 ஆண்டுக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுத்தது? எத்தனை பத்திரிகைகள் மீது ஜாமீன் தொகை கேட்டது? எத்தனை நாடகத்திற்குத் தடை போட்டது ? எத்தனை நூலுக்குத் தடை போட்டது?

பத்திரிகை சுதந்திரம்: அன்றும் இன்றும்.

இருபது ஆண்டு காலக் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தெரியுமா? 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் 'மித்திரன்' பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? அதனுடைய ஆசிரியர் கைது செய்யப்படவில்லையா? 'மாலை மணி' பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா ? அதனுடைய அலுவலகத்தில் புகுந்து ஆசிரியர் கைது செய்யப்படவில்லையா?

'விடுதலை', 'திராவிட நாடு' போன்ற பத்திரிகைகளிடத்தில் ஜாமீன் தொகை கேட்கப்படவில்லையா?

இரணியன் நாடகம் தடை செய்யப்படவில்லையா ? 'தூக்குமேடை' 'உதய சூரியன்' நாடகங்கள் தடை செய்யப்படவில்லையா ? 'போர்வாள்' நாடகம் தடை செய்யப்படவில்லையா ?

நூல்களைப் பொறுத்த வரையில், 'பெரியார் பொன் மொழி'. 'இலட்சிய வரலாறு' 'இராவண காவியம்' போன்ற பல நூல்கள் தடுக்கப்படவில்லையா ?

அரசாங்கச் சார்பில் தடை உத்திரவு போடப்பட்டது, பத்திரிகைச் சுதந்திரம் பறி போயிற்று என்று எப்படிச் சொல்லுகிறார்களென்றால் எங்கள் அமைச்சரவையில் இருக்கும் யாரைப் பற்றியாவது ஆளும் கட்சியில் இருக்கும் எவரைப் பற்றியாவது தனிப்பட்ட முறையில் மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டுமென்று கெட்ட நோக்கத்தோடு எழுதப்படுகிற நேரத்தில் விஷயங்களை நாங்கள் நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லாமல் வேறு எங்கே செல்வது?