நமது நிலை
பகுதி 1 · 1 / 13
Editorial unit 1 — ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதில்
நமது நிலை
தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை-மேலவை உறுப்பினர்களடங்கிய கூட்டவையில் 24-3-1971 அன்று ஆளுநர் சர்தார் உஜ்ஜல்சிங் அவர்கள் நிகழ்த்திய பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குத் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், இரு அவைகளிலும் விடையளித்தார்கள். அவருடைய உரை வருமாறு:-
கவர்னர் பெருமானுடைய உரையின்மீது இந்த மாமன்றத்தில் உறுப்பினர் திரு. வேழவேந்தன் கொண்டுவந்த நன்றி அறிவிப்புத் தீர்மானத்தையொட்டி எல்லாக் கட்சிகளின் தலைவர்களும், கட்சிகளினுடைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களுடைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.
இறுதியாகப் பேசிய நிஜலிங்கப்பா காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் உட்பட மொத்தம் 67 பேர் இந்த விவாதத்திலே கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 183 பேர் இங்கே இருந்தாலும் கழகத்தின் சார்பிலே உரையாற்றியவர்கள் 33 பேர். எதிர்க்கட்சியிலே மொத்தம் 52 பேர் இருந்தாலும் 34 பேர் உரையாற்றுவதற்கான வாய்ப்பினை இங்கே பெற்றிருக்கிறார்கள்.
இது ஒன்றே ஆளுங்கட்சி, எதிர்த்தரப்பிலே உள்ளவர்களை நல்ல வகையிலே மதிக்கிறது என்பதற்குச் சரியான சான்றாகும்.
கவர்னர் அவர்களுடைய உரையில் குறிப்பிட்ட, தேர்தலைப் பற்றி உறுப்பினர்கள் உரையாற்றும்போது காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
தீமையை எதிர்ப்பதில் ஒற்றுமை
ஆனால், ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியில் நடைபெற்ற அசம்பாவிதங்களை எடுத்துச் சொல்லிவிட்டு இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறியதில் இருந்தே, இந்த வன்முறை வெறியாட்டங்களைத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் யாரும் விரும்பவில்லை என்பது வெகு தெளிவாகத் தெரிகிறது.
முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் திருப்பூர் மொய்தீன் அவர்கள் பேசும்போது, "நடந்தவைகளை மறந்துவிட்டு ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்" என்று அழகாகக் குறிப்பிட்டார்கள்.
அப்படிப் பாடுபட வேண்டும் என்று எண்ணுகிற நேரத்தில் நடந்து முடிந்த தேர்தல் ஏதோ மோசடியானது, தவறாக நடந்துவிட்டது - என்ற பிரச்சாரம் இங்கே அவையில் செய்யப்பட்டாலும் சரி, அல்லது வெளியிலே செய்யப்பட்டாலும் சரி, அது நல்லதல்ல, பொருத்தமுடையதுமல்ல.
தேர்தல் முடிவு வெளியானதும் சுதந்திராக் கட்சியின் பெருந்தலைவரான மசானி அவர்கள் தெரிவித்த கருத்து வெளியாகி இருக்கிறது.
ஜனநாயக மரபு
நாடாளுமன்றத்திற்கும், அவர்களது கட்சிக்கும் வாக்காளர்கள் நம்பிக்கையோடு அளித்த வாக்குகளை, ஜனநாயகவாதி என்ற ரீதியில் மக்கள் அளித்த தீர்ப்பாகத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகச் சுதந்திரக் கட்சித் தலைவர் திரு மசானி கூறிய கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. அதுதான் ஜனநாயகத்திலே போற்றிப் பாராட்டவேண்டிய நல்ல மரபாகும்.
அடுத்தபடியாக மையிலே ஏதோ ரசாயனக் கலவை, ஏதோ மாயங்கள் நடந்தன, இந்திரஜாலங்கள் நடந்துவிட்டன - என்று உறுப்பினர் பொன்னப்ப நாடார் பேசும்போது சொன்னார்கள்.
இந்திரஜாலங்கள் என்று அவர் குறிப்பிடுவதை நான் புரிந்து கொள்கிறேன். 'மையிலே தவறு இருக்கிறது' அதை வைத்தால் உடனே காய்ந்து விடுகிறது 'வேறு மாதிரி மாறி விடுகிறது' என்றெல்லாம் இன்றைக்கும் பேசப்படுகிறது; எழுதப்படுகிறது.
டாட்டாவின் மறுப்பு
வாக்குச் சீட்டில் மோசடி நடந்ததா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்ட நேரத்தில் ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் ஆதரவோடு சுயேச்சையாகப் போட்டியிட்ட டாட்டா அவர்கள் அந்தப் புகாரை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.
தமது தோல்வியை எதிர்த்து, தான் வழக்குத் தொடரப்போவதாக வந்துள்ள செய்தியை மறுத்து நாவல் டாட்டா அறிக்கை ஒன்று விட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களாவன:
"நான் தேர்தல் முடிவை எதிர்த்து மனு எதையும் தாக்கல் செய்ய விரும்பவில்லை. அவ்வாறு ஒருபோதும் யோசித்ததும் இல்லை. நான் வழக்காடப்போவதாக வந்துள்ள செய்தி குறும்புத்தனமானது. வாக்குச் சீட்டுகளில் ரசாயன மை பயன்படுத்தப்பட்டது எனும் புகார்கள் நெருங்கிய தொடர்பில்லாதவை ; கற்பனையானவை. மர்ம ரசாயன மை பயன்படுத்தப்பட்டது, விசேஷ வாக்குச் சீட்டுகளிருந்தன என்ற புகார்களெல்லாம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் நான் சுமார் 20,000 வாக்குகளைத் தான் பெற்றிருப்பேன்.
நீரிலிருந்து வெளியே தூக்கிப்போட்ட மீன் போலாகி விட்டேன். மீண்டும் தண்ணீருக்கே போக விரும்புகிறேன்."
மக்களின் தீர்ப்பை எவ்வளவு மிகுந்த பெருந்தன்மையோடு அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்பதற்காகத்தான் நான் இவைகளை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறேன்.
தெளிவான தீர்ப்பு
அதே போல் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆர். டி. பார்த்தசாரதி அவர்கள், "சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு தந்ததால் அதன் முற்போக்குக் கொள்கையில் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்தனர் என்பது நிரூபணமாகிவிட்டது. இந்திரா காந்தியின் தலைமைக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு அளித்தனர். ஜனநாயகவாதி என்ற முறையில் மக்கள் தீர்ப்பை நான் ஏற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அந்தக் காங்கிரசிலிருந்து கூட அவர் வெளியேறியிருக்கிறார். அவரோடு வேறு சிலரும் சென்றிருக்கிறார்கள்.
இப்படி, தேர்தல் முடிவை அவர்கள் மிகுந்த பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.
குறை வேறு ; குற்றம் வேறு.
