உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 10
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 10 · 10 / 13

இடைக்கால நிதிநிலை அறிக்கைமீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெகு விளக்கமாக நல்ல பல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்த அவையில் இன்றைக்கு ஒரு புதிய அரசு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கிற நிலையில், நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் என்ற முறையில் நான் முன்வைத்து உங்களுடைய சீரிய கருத்துக்களையெல்லாம் கேட்டுப் பதிலளிக்கிற பேறு பெற்றமைக்குப் பெருமைப்படுகிறேன்.

மிகுந்த பூரிப்பும் அடைகிறேன்.

ஆற்றல் படைத்தவர்கள்

பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு நான்காண்டுக்காலம் அவர் வழி நின்று ஆட்சி நடாத்தித்தமிழ் நாட்டுப்பெருங்குடி மக்களின் பேராதரவினைப்பெரும்பான்மையாகப் பெற்று இந்த அரசு அமைந்திருக்கிறது. இங்கு வந்திருக்கிற உறுப்பினர்கள் எவ்வளவு ஆற்றல் மிக்கவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

இந்த மாமன்றத்திற்கு வந்திருக்கிற உறுப்பினர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாத்திரம் 30 வழக்கறிஞர்களும், நிஜலிங்கப்பா காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 வழக்கறிஞர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2 வழக்கறிஞர்களும், பார்வேர்ட் ப்ளாக் கட்சியின் சார்பில் ஒரு வழக்கறிஞரும், முஸ்லீம் லீக் சார்பில் ஒரு வழக்கறிஞரும் ஆக 39 வழக்கறிஞர்கள் இந்த மாமன்றத்தின் உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர்கள் 4 பேரும், சுதந்திரா கட்சி சார்பில் 2 பேரும் ஆக ஆறு பேர்கள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் ஆற்றல் மிகு கருத்துரைகளை மாத்திரம் அல்ல, சமயத்தில் உதவக் கூடிய அளவிலும் இங்கே ஆறு டாக்டர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் பிரதிநிதிகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 பேரும் சுயேச்சை ஒருவரும் ஆக 6 பேர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பொறியாளர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒருவர் இடம் பெற்றிருக்கிறார். பட்டதாரிகள் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேரும், ஆக 23 பேர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் வரிசை

இந்த அளவிற்கு ஆற்றல் படைத்தவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவத்துறை நண்பர்கள், பொறியாளர் இப்படிப்பட்டவர்கள் நிறைந்திருக்கிற இந்த மாமன்றத்தில் நான் முதல் அமைச்சராக இருப்பதிலும், விவாதங்களுக்குப் பதில் அளிப்பதிலும் உள்ளபடியே பெரும்பேறு பெற்றவன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக வீற்றிருக்கும் திரு.

பொன்னப்ப நாடார் அவர்கள். அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க வேண்டுமென்று நான் பலமுறை ஆசைப்பட்டவன். அந்த ஆசை இன்றைக்கு அரைகுறையாக நிறைவேறியிருப்பதற்காக நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நல்ல வாதத்திறமையோடும், கருத்தாழத்தோடும், புள்ளி விவரங்களோடும், மெத்த மரியாதையுணர்ச்சியோடும், அரசியல் பண்போடும், தமிழர்களின் நாகரீகத்திற்கு ஏற்றவாறு அவர்கள் பேசக் கூடியவர்கள் என்ற காரணத்தினாலும், அவர்கள் இந்த மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கக் கூடாதா என்று நான் பல நேரங்களில் எண்ணியதுண்டு.

என்னுடைய அமைச்சர் பெருமக்களிடத்திலும் அதைப் பற்றிச்சில நேரங்களில் அங்கலாய்த்துக் கொண்டதும் உண்டு. இன்று அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாவிட்டாலும் இன்றைக்கு எதிர்க்கட்சிக் குழுவில் பிரதான கட்சியாக இருக்கிற காங்கிரஸ்கட்சியின் தலைவராக அமர்ந்திருக்கிறார்கள். அதற்கு வழி வகுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் நான் அவர்கள் இங்கு இடம் பெற்றிருக்கிறார்களே என்ற வகையில் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலைவராக வீற்றிருக்கிற மதிப்பிற்குரிய திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் ஐந்தாண்டுக் காலத்திற்கு மேலாகப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தில் நீண்ட நேரம் பேசக்கூடியவர் என்ற பெயரையும், நல்ல பல கருத்துக்களை எடுத்துச் சொல்லக்கூடியவர் என்ற புகழையும் பெற்றவர்களாவார்கள். அவர்களுடைய முற்போக்கு எண்ணங்களை இந்த மாமன்றத்தில் தங்குதடையில்லாமல் எடுத்துச் சொல்லட்டும்.

அவைகள் எல்லாம் எங்களுக்கு நல்ல அறிவுரைகளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தோழமை உணர்ச்சி

முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக வீற்றிருக்கிற பெரு மதிப்பிற்குரிய திருப்பூர் மொய்தீன் அவர்கள் நாங்களெல்லாம் மாணவர்களாக இருந்த காலத்தில் மேடைப் பேச்சுகள் மூலமாக நாங்கள் எல்லாம் உணர்ச்சியும் உத்வேகமும் அடையக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தவர்களாவார். இன்று சட்ட மன்றத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று அவர்கள் தரக்கூடிய இனிய கருத்துக்கள், தோழமை உணர்ச்சியோடு பரிமாறிக் கொள்ளக்கூடிய நல்லெண்ணங்கள் இவைகளுக்கெல்லாம் இந்த மாமன்றத்தில் நல்ல மதிப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

பார்வார்ட் பிளாக் கட்சியின் தலைவராக அமர்ந்திருக்கக் கூடிய நண்பர் திரு. பெருமாள் அவர்கள் வீர உரை ஆற்றுவர், அதே நேரத்தில் விவேகம் மிளிர்ந்திருக்கத் தக்க அளவிற்கு உரையாற்றுவார். அவர்கள் கட்சி சார்பில் எடுத்துச் சொல்கிற கருத்துக்களையும் இம்மாமன்றம் நின்று நிதானித்துக்கவனித்து நல்லவைகளைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறது என்றும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

குட்டியைக் கவ்வும் பூனை

சுதந்திராக் கட்சியின் தலைவராக வீற்றிருக்கிற மதிப்பிற்குரிய டாக்டர் ஹாண்டே அவர்கள் மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். இம்மாமன்றத்திலும் நான்கு ஆண்டுக் காலம் உறுப்பினராக வீற்றிருந்து இப்போதும் உறுப்பினராகவும், சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் வீற்றிருக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அவர்கள் ஒருமுறை அரசினுடைய கொள்கைகளைக் கண்டித்துப் பேசிய நேரத்தில் அன்றைய தினம் முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ஹாண்டே அவர்கள் எங்களைக்கண்டிப்பது பூனை தன் குட்டியை வாயால் கவ்விச் செல்வது போல் இருக்கிறது.

மாறாகக் காங்கிரஸ்காரர்கள்கண்டிப்பது பூனை எலியைத் தூக்கிச் செல்வது போல் இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். ஆனால் இனிமேல் எந்த லாவகத்தைக் கையாள்வார்களோ தெரியாது. ஏனென்றால் எலியைத் தூக்குகிற நிலைமையில் உள்ளவர்களைச் சேர்ந்திருக்கிற காரணத்தினால் அவர்கள் குட்டியைக் கவ்வுவது போல் கண்டனங்கள் தெரிவிப்பார்களா அல்லது எலியைப் பிடிப்பது போல் கண்டனங்கள் தெரிவிப்பார்களா என்று எனக்குத் தெரியாது.

ஆனாலும் இன்றைக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களும் நிச்சயமாக பூனை, குட்டியைக் கவ்வுவது போலவே கண்டனங்கள் தெரிவிப்பார்கள் என்று நம்பிக்கை எனக்கிருப்பதால் இருவரும் ஒருசாராராகயிருந்து நல்ல வகையில் தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு அறிவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

மிகுந்த அடக்கத்திற்கும் எளிமைக்கும் பெயர்போனவராக விளங்குகிற நம் மதிப்பிற்குரிய திரு. மாரிமுத்து அவர்கள் பி.எஸ்.பி. கட்சியின் தலைவராக வீற்றிருக்கிறார் அவர்களது பேச்சில். காரம் இருக்காது. என்றாலும் சாரம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய நல்ல அறிவுரைகளை ஏற்றிட ஆளும்கட்சித் தரப்பில் இருக்கிற நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழரசுக் கழகத்தின் தலைவராக வீற்றிருக்கிற நண்பர் திரு. தியாகராஜன் அவர்கள் பொதுப்பணிகளில் நாட்டம் கொண்டவர். பல பொது நிறுவனங்களில் இருந்தவர். அவருடைய தலைவர் இங்கு வரமுடியாமல் போனாலும் அவருடைய தலைவரின் எண்ணங்களையெல்லாம் இங்கு எதிரொலிப்பார் என்ற அளவிலும் அவருடைய தலைவர் சிலம்புச் செல்வர் உரையாகவே அவரது உரையை நாங்கள் மதிப்போம் என்று இங்கு எடுத்துக்கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த மாமன்றத்திலே அமர்ந்திருக்கிற உறுப்பினர்களின் பணி எவ்வளவு நேர்த்தியாக இருந்திட வேண்டும், எவ்வளவு பொறுப்புடையதாக இருந்திட வேண்டும் என்பதனை முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பேசிய மாண்புமிகு உறுப்பினர் லத்தீப் அவர்கள் இங்கே எடுத்துக்காட்டினார்கள். மின்விசிறியின் கீழே அமர்ந்து இருக்கும் நாம், இந்த நாட்டிலே நமக்காக வாக்களித்த லட்சோபலட்சம் மக்கள், ஏழை எளியவர்கள், சாதாரண மக்கள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், அவர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்வுக்காக மின்விசிறியைப் போல் சுழன்று கொண்டு, அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டியவர்களாவோம்.

நல்ல மெத்தையில் அமர்ந்து இருக்கிறோம், மேலே விசிறி ஓடிக் கொண்டு இருக்கிறது, எவ்வளவு பெரிய அந்தஸ்து நமக்குக் கிடைத்து இருக்கிறது என்று கருதாமல், இந்த இடத்தை நமக்குத் தந்த லட்சோப லட்சம் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்ற நியாய உணர்வோடு, நேர்மை எண்ணத்தோடு, நாம் அவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை மனதில் கொண்டு ஒவ்வொரு உறுப்பினரும் பணியாற்ற வேண்டும் என்று இந்த அவையில் வீற்றிருக்கும் எல்லாக் கட்சித் தரப்பினர்களையும் கேட்டுக்கொள்வது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.

ஜூன் மாதத்தில் விரிந்த நிலையில் கொள்கை விளக்கம்

இங்கே வைக்கப்பட்டுள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கொள்கை விளக்கங்கள் எதுவும் அதிகமாகச் சொல்லிவிட முடியாது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள். நம்முடைய மாண்புமிகு பொன்னப்ப நாடார் அவர்கள் எடுத்துக்காட்டியது போல் ஜூன் மாதத்தில் வெளிவர இருக்கிற முழு வடிவம் உடைய நிதி நிலை அறிக்கையில்தான் அமைச்சரவையினுடைய கொள்கை விளக்கங்களை அதிகமாக எடுத்துச் சொல்ல முடியும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நம்முடைய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் மாண்புமிகு அம்மையார் அனந்த நாயகி அவர்கள் “வரிகள் குறையவில்லை, வசதிகள் பெருகவில்லை” என்று தங்களுடைய பேச்சை முடித்தார்கள்.

வரிகள் குறையவில்லை என்று அவர்கள் சொல்லுகிற அதே நேரத்தில், நஞ்சைக்கும், புஞ்சைக்கும் நில வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதை தமிழ் நாட்டிலே உள்ள மக்கள் யாரும் மறந்து இருக்க முடியாது. இன்னும் ஏராளமான வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

மாண்புமிகு உறுப்பினர் அன்புச்செழியன் எடுத்துக் காட்டியதுபோல், ஒரு அரசாங்கம் என்றால், அது வரி போடாமலேயே நடக்க வேண்டும் என்கிற கொள்கையை யாரும் ஏற்றுக் கொண்டது கிடையாது.

தாங்கக்கூடியவர்களுக்கு வரி

நாங்களும் வரியைப் போடமாட்டோம் என்று சொன்னது கிடையாது. தாங்கக் கூடியவர்களுக்கு வரி போட்டு, தாங்க முடியாத மக்களுக்கு வசதிகளைப் பெருக்குவதுதான் ஒரு முற்போக்கு அரசாங்கத்தின் நல்ல கொள்கையாக இருக்க முடியும். அந்த வகையிலேதான் வரிகள் இந்த நாட்டிலே நான்காண்டுக் காலமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இதிலே நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. எம். சுப்பிரமணியம் அவர்களும், அம்மையார் அனந்த நாயகி அவர்களும் தரப்பட்டுள்ள குறிப்பேடுகளிலிருந்து இரண்டொன்றைச் சுட்டிக் காட்டினார்கள்.

ரிஜிஸ்டிரேஷனுக்கு எந்த அளவிற்கு இடைக்கால வருமானம் உயர்ந்து இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். ரிஜிஸ்டிரேஷனுக்கு உயர்ந்திருக்கிற அந்த வருமானம் இன்றைக்கு 316 லட்சம் ரூபாயாக இருக்கிறது. ஆனால், 1938-39 ஆண்டிலே 32 லட்சம் ரூபாயாக இருந்தது. 1962-ம் ஆண்டிலேயே 124 லட்சம் ரூபாயாக உயர ஆரம்பித்து விட்டது. ரிஜிஸ்டிரேஷனில் ஏதோ நாம் கூடுதலாக வருமானத்தைப் பார்க்கிறோம் என்று மாத்திரம் எடுத்துக்கொள்ளாமல் ரிஜிஸ்டிரேஷனில் அதிக வருமானம் வருவதற்குக் காரணம், அந்தக் காலத்தை ஒட்டி நிலங்களின் மதிப்பீடுகள் உயர்ந்து கொண்டு போகிறது என்பதையும், அதற்கு ஏற்றவாறு ரிஜிஸ்டிரேஷன் கட்டணம் மூலமாக அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வருகிறது என்பதையும் நாம் மறந்து விடுவதற்கு இல்லை.

வருமானம் உயர்ந்ததின் காரணம்

அடுத்ததாக, மோட்டார் வாகனங்கள் மீதானவரி. இதன்பேரில் 1938-ல் 81 லட்சமாக இருந்த வருமானம், இப்போது 23 கோடியாக வருகிறது என்றால் அந்தஅளவுக்கு வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது என்பது தான் காரணமே தவிர, வரிகள் மட்டும் உயர்ந்துவிட்டன என்பது காரணமல்ல.