உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நமது நிலை/பகுதி 11
சட்டமன்ற உரைகள்

நமது நிலை

பகுதி 11 · 11 / 13

திரு. கே. எம். சுப்பிரமணியம் பேசுகிற நேரத்தில் ஒன்றைச் சொன்னார்கள். மத்திய அரசிடமிருந்து பெற்ற கடன் தொகைகள்,அவை அனுமதிக்கப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற விவரத்தைத் தரவேண்டுமென்று சொன்னார்கள். அவர்கள் இந்த நிதி நிலை அறிக்கையிலும், மாநகராட்சி மன்றத்தின் நிலையில் இருக்கிறார்கள்.

மாநகராட்சி மன்றக் கணக்கிற்கும், மாநில அரசின் கணக்கிற்கும் இருக்கிற வேறுபாடுகளே நாம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.

கார்ப்பரேஷன் முதலிலேயே அரசிடமிருந்து கடனைப் பெற்றுவிட்டு, பிறகு செலவுகளைச் செய்கிறது. ஆனால், மாநில அரசு அப்படி அல்ல. பெரும்பாலும் செலவுகளைச் செய்துவிட்டு, அதற்கு ஈடுகட்ட மத்திய அரசிடம் கடன் அல்லது மான்யங்களைப் பெறுகிறது. ஆகவே, செய்யப்பட்ட செலவுகளுக்குத்தான் மாநில அரசு மத்திய அரசிடமிருந்து பெரும்பாலும் கடனாகவோ, மான்யமாகவோ பெறுகிறதே அல்லாமல் இன்னின்ன செலவுகளைச் செய்ய வேண்டுமென்று கடன் பெற்றுப் பிறகு அவைகளைச் செய்யாமல் வைத்துக் கொண்டு இருக்கிறது என்று குற்றம் கூற வேண்டிய எந்த விதமான அவசியமும் நேர்ந்துவிடவில்லை என்று நான் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எல்.ஐ.சி.-யிடமிருந்து மாநகராட்சி பெற்ற கடன்

இன்னொன்றையும் குறிப்பிட்டார்கள். சென்னை மாநகராட்சி மன்றம் எல்.ஐ.சி.-யிடமிருந்து 5 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த 5 கோடி ரூபாயை அரசாங்கம் வைத்துக்கொண்டு இருக்கிறது என்று சொன்னதோடு நிற்காமல், கொஞ்சம் பயங்கரமான ஒரு விஷயத்தையும் வெளியிட்டார்கள். ஏதோ ரிசர்வ் பாங்க் ‘ஓவர் டிராப்டை' அடைப்பதற்காக சென்னை மாநகராட்சி எல்.ஐ.சி. மூலமாகப் பெற்ற கடனை இந்த அரசு பயன்படுத்திக்கொண்டது என்ற குற்றச்சாட்டைச் சொன்னார்கள்.

உள்ளபடியே எல்.ஐ.சி.யிடமிருந்து பெற்ற கடன் ரூ.5 கோடி ரூபாய் அல்ல, எல்.ஐ.சி.யிடமிருந்து பெற்ற கடன் 3 கோடி ரூபாய்தான். அந்த 3 கோடி ரூபாயை எல்.ஐ.சி.யிடமிருந்து மாநகராட்சி மன்றத்திற்காக அரசாங்கம் பெற்றது.

மாநகராட்சி மன்றம் 3 கோடி ரூபாய் கடன் அரசாங்கத்தின் மூலமாகப் பெற்று இல்லாவிட்டால், அதை ஒரு வங்கியில் வைத்து, அந்த வங்கியிடமிருந்து மாநகராட்சி மன்றம் பெறும் வட்டி 4 சத விகிதமாக இருந்து இருக்கும். எல்.ஐ.சி.-க்கு மாநகராட்சி மன்றம் 7 சதவிகித வட்டியைக் கொடுத்து இருக்க வேண்டும். அந்தத் தர்மசங்கடத்திலிருந்து மாநகராட்சி மன்றத்தை விடுவிப்பதற்காக எல்.ஐ.சி.யிடமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு 7 சதவீதம் வட்டியை அரசாங்கமே தருவதாக வாக்களித்து 3 கோடி ரூபாய் கடனைப் பெற்றது.

திரு. கே. எம். சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டது போல், பெற்றது 5 கோடி ரூபாய் அல்ல, 3 கோடி ரூபாய்தான்.

அந்த மூன்று கோடி ரூபாயில் 1 கோடி ரூபாய் மாநகராட்சி மன்றத்துக்குத் தரப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 2 கோடி ரூபாய் அரசாங்கத்திடம் பத்திரமாக இருக்கிறது. அது மாத்திரம் அல்லாமல், கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி ரூபாய் மாநகராட்சி மன்றத்திற்கு 'வழிவகை முன்பணமாக' (வேய்ஸ் அண்டு மீன்ஸ் அட்வான்ஸ்) இந்த அரசு கொடுத்து இருக்கிறது. அது அந்தக் கடனோடு இணைந்தது அல்ல, என்றாலும் மாநகராட்சி மன்றத்திற்கு இந்த அரசு, எவ்வகையில் உதவி செய்து இருக்கிறது என்பதைக் கூற இதனை நான் குறிப்பிடுகிறேன்.

பொதுநலக் கடனாக மாநகராட்சி திரட்டிய ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயில், 5 லட்சத்தை வைத்துக் கொண்டு, பாக்கிக் கடனை, 1 கோடி 5 லட்சம் ரூபாயை, அரசிடமே ஒப்படைத்து இருக்கிறது. அதற்கான 6 சதவீத வட்டியை இந்த அரசு தந்து கொண்டு இருக்கிறது என்பது உண்மை நிலையாகும்.

சிறு தொழில் துறைக்கு நிதி குறையவில்லை

சிறு தொழில்கள், கிராமத் தொழில்களுக்காக நிதி ஒதுக்கீடு குறைந்து விட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாகக் குறைந்துவிட்டது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் தம்மிடத்திலுள்ள 'ஒயிட் பேப்பர் ஆன் பட்ஜெட்' என்று இருக்கிற புத்தகத்தில் இருக்கிற குறிப்பை மாத்திரம் படித்த காரணத்தால் அந்தக் குற்றச்சாட்டைச் சாட்டினார்கள்.

அதிலே உள்ள குறிப்பை நான் மறுத்திடவில்லை. ஆனால், ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 24 லட்சத்திற்குக் குறைந்து விட்டது என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

இந்த ரூ.24 லட்சம் அல்லாமல், சிட்கோ, அதாவது ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன், சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் ஒன்றை அரசு நிறுவி, அதன் பெயரால் ரூ.100 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, ரூ.100 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது 1971-72-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில்தான். வெள்ளை அறிக்கை என்ற பெரிய புத்தகத்திலே இது பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அக்கறை குறைந்து விடவில்லை

அதே புத்தகத்தில் 25-ம் பக்கத்தைப் பார்த்தால், அந்தப் பக்கத்திலே கூட கிராமச் சிறு தொழில்களுக்காக எந்த அளவுக்கு இந்த அரசு முயன்று, பணத்தை அதிகமாக ஒதுக்கியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், பெரிய பெரிய நடுத்தரத் தொழில்கள், கனிவள மேம்பாட்டிற்காக 1970-71-ம் ஆண்டு வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 3·92 கோடியாக இருந்தது, இப்பொழுது 1971-72-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 5·35 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கூட இடைக்கால வரவு- செலவுத் திட்டம்தான் என்பதை நான் நினைவு படுத்துகிறேன். அது போலத்தான் கிராமச் சிறு தொழில்களுக்காக ஏற்கனவே 1970-71-ம் ஆண்டில் ரூ.

360 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 1971-72-ம் ஆண்டில் ரூ. 421 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இடைக்காலத் திட்டம்தான். மேலும் ஒதுக்கப்படும் என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆகவே, சிறுதொழில் வளர்ச்சியிலே அரசினுடைய அக்கறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, கரைந்து, தேய்ந்துவிட்டது என்று யாரும் எண்ணிக்கொள்ளத் தேவையில்லை.

மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு எந்தெந்த இனங்களிலிருந்து வருமானம் வருகிறது என்றால், 'வருமானவரி', 'மத்திய ஆயத்தீர்வை’ (எக்சைஸ் டியூடி), 'சொத்து உரிமை' போன்ற மற்றைய இனங்களின் மூலம் நம் மாநில அரசுக்குப் பங்கு கிடைக்கிறது. அது போலவே, நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப அளிக்கப்படும் தனி மானியங்களின்மூலம் மாநில அரசுக்குப் பணம் கிடைக்கிறது. மூன்றுவதாகத் திட்ட நிதி உதவியின் மூலம் பணம் கிடைக்கிறது.

நான்காவதாக, திட்டம் அல்லாத, திட்டத்தில் சேராத சில பணிகளுக்காக நிதி உதவி கிடைக்கிறது. இதிலே மூன்று, நான்கு என்று நான் சொன்ன, திட்டநிதி உதவி, திட்டத்தில் சேராத பல பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிற தொகையைத் தவிர, மற்றபடி நான் ஏற்கனவே எடுத்துக்காட்டிய, வருமானவரி, மத்திய ஆயத்தீர்வை, நிதி ஆணைக் குழுவின் பரிந்துரைகளின் மூலம் கிடைக்கும் பணம் இவையெல்லாம் நமது அரசினுடைய நிதியில் பொதுவாக இணைக்கப்பட்டு, செலவு செய்யப்படுகின்ற காரணத்தினால், எந்தத் தனிப்பட்ட வேலைக்காக அவை செலவு செய்யப்படுகின்றன என்று கணக்கிட்டுக் கூற இயலாது.

மொத்தத்தில் நம்முடைய மாநிலத்தின் தேவைகளுக்காக இந்தப் பணத்தின் மூலம் செலவுகள் செய்யப்படுகின்றன. முறையாகச் செய்யப்படுகின்றன என்பதை மாத்திரம் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

டிராக்டர்கள் வாங்க நிதி ஒதுக்கீடு

டிராக்டர்கள் வாங்க நிதி ஒதுக்கம் குறைந்து விட்டது என்று குறிப்பிட்டார்கள். நான் ஒரு புள்ளி விவரத்தை இந்த மாமன்றத்தின் முன்னால் வைப்பது நல்லது என்று கருதுகிறேன். 'டிராக்டர்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கத்தைக் குறைத்து விட்டது’ என்பது குற்றச்சாட்டு, அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடு.

1946-ம் ஆண்டு முதல் 1966-67-ம் ஆண்டு வரை, 20 ஆண்டுக்காலத்தில் டிராக்டர்கள் வாங்க, பழைய அரசு—பழைய அரசு என்றால் மிகப் பழைய அரசு—அந்த அரசு செலவிட்ட தொகை ரூ. 76 லட்சம்—20 ஆண்டு காலத்தில் ரூ. 76 லட்சம். ஆனால், 1967-68-ல் ரூ. 6 லட்சம், 1968-69-ல் ரூ. 22.68 லட்சம், 1969-70-ல் ரூ.69.95 லட்சம், 1970-71-ம் ஆண்டில் ரூ. 29.55 லட்சம் செலவிட்டிருக்கிறோம். அதிலே கூட மேலும் 16 டிராக்டர்கள் வாங்க ரூ. 30 லட்சம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பணம் இதில் சேரவில்லை. அது சேர்ந்தால் 1970-71-ல் அதுவும் ரூ. 59 லட்சம் என்கின்ற அளவுக்கு வந்து நிற்கும்.

ஆக, நான்கு ஆண்டு காலத்தில் டிராக்டர்கள் வாங்க இந்த அரசு ரூ. 129 லட்சம் பணம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால், 20 ஆண்டு காலத்தில் அவர்கள் செய்த பண ஒதுக்கீடோ ரூ.76 லட்சம்தான் என்பதைக் குற்றச் சாட்டாக அல்ல, உறுப்பினர்களின் கவனத்திற்காகக் குறிப்பிடவிரும்புகிறேன்.

குடிசை ஒழிப்பைப்பற்றி அம்மையார் அவர்களும், கே.எம்.எஸ். அவர்களும் பேசினார்கள். இருவரும் சென்னைவாசிகள் என்கின்ற காரணத்தினால் இனிமேல் குடிசையைப்பற்றி அதிகமாகப்பேசவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படும் என்கின்ற காரணத்தினால் பேசினார்கள். அவர்களுடைய அரசு இருந்த காலத்திலே ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது, நீங்கள் என்ன புதிதாகச் செய்து விட்டீர்கள் என்று பொருள் தொனிக்கும் வகையில் அவர்களுடைய பேச்சு அமைந்திருந்தது.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ்—குடிசைவாழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட டெனமெண்ட்ஸ், மாடி வீடுகள் 2,688. அவர்கள் ஆட்சிக் காலத்தில் 1966-67-ல் கட்டப்பட்ட டெனமெண்ட்ஸ் 1,476. ஆக, அவர்களுடைய 20 ஆண்டுக் கால ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட டெனமெண்ட்ஸ் 4,164. நான்கு வருடங்களில் கழக ஆட்சியில் 1970 டிசம்பர் 31 முடிய கட்டப்பட்டுள்ள டெனமெண்ட்ஸ் 7,037. நான்கே ஆண்டுக் காலத்தில், அதுவன்னியில் 2,247 தீப்பிடிக்காத வீடுகளும் கட்டப்பட்டிருக்கின்றன.

அதைப்பற்றி அம்மையார் அவர்கள் அவை தீப்பிடிக்காத வீடுகள் அல்ல, தீப்பெட்டி வீடுகள் என்று சொன்னார்கள். தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள் இருக்கும். ஆகவே தீப்பெட்டி என்றால், அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. தீக்குச்சிகள் வைப்பதற்குத் தீப்பெட்டிகள் தேவைப்படுகின்றன. குடிசைகளிலே இருக்கிற ஏழை எளிய மக்கள் தீக்குச்சிகளுக்குச் சமமானவர்கள் என்பதை அவர்களுக்குத் தலைவர் அவர்களின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்ந்து எழும்பும் வீடுகள்

இந்தத் தீக்குச்சிகள் தீ பற்றாமல் பார்த்துக் கொள்ளும் கடமை அரசைச் சார்ந்தது. அதற்காகத்தான் ரூ. 40 கோடி அளவில் 7 ஆண்டுக்கான ஒரு திட்டம் வகுத்து, குடிசைகளை மாற்றி, நல்ல எழிலான காற்றோட்டம் மிகுந்த வலுவான வீடுகளைக் கட்டுவதற்குக் 'குடிசை மாற்று வாரியம்' என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாமான்றத்தின் உறுப்பினரான திரு. இராம. அரங்கண்ணல் அவர்கள் குடிசைப் பகுதி மக்களோடு நீண்ட நாட்களாக உறவும், தோழமையும் கொண்டுள்ள காரணத்தினால் அவரை அவ்வாரியத்திற்குத் தலைவராக நியமனம் செய்திருக்கிறோம்.

குடிசை மாற்று வாரியம் திறம்படப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. குடிசைவாழ் மக்களுக்கு எந்த அளவுக்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்று கேட்பவர்கள் சென்னை மாநகரத்தில் சில பகுதிகளைச் சுற்றிப் பார்க்கலாம், அங்கெல்லாம் உயர்ந்து எழும்பிக்கொண்டிருக்கிற அந்த வீடுகள் அவர்களுக்குப் பதில் சொல்லும் என்பதை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண்மைக்கு அளித்த வசதி

வசதிகள் பெருகவில்லை என்கின்ற குற்றச்சாட்டு அடிக்கடி கூறப்படுகிறது. வேளாண்மைத் துறையில் மாத்திரம் 1966-67-ம் ஆண்டில் குறுகிய காலக் கடனாகக் கொடுக்கப்பட்ட தொகை ரூ.31 கோடி. 1970-71-ல் அந்தக் குறுகிய காலக் கடன் தொகை ரூ.55 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 1966-67-ம் ஆண்டில் வேளாண்மைத் துறையில் கொடுக்கப்பட்ட நீண்டகாலக் கடன் தொகை ரூ.3 கோடி; ஆனால், 1970-71-ம் ஆண்டில் நீண்டகாலக் கடன் தொகை ரூ.

19 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது- வசதிகளைப் பெருக்குவதற்காகச் செய்யப்பட்ட காரியம் அல்லவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேளாண்மைக்காக மொத்தச் செலவு என்ற அடிப்படையில் பார்த்தால்கூட, 1966-67-ம் ஆண்டில் ரூ 11.80 கோடி, 1970-71-ல் ரூ 14.74 கோடி, 1971-72-ல் ரூ. 18.39 கோடி, அதுவும் முதல் (ஃபர்ஸ்ட் பார்ட்) திட்டமாக ரூ. 18 கோடி என்ற அளவுக்கு வேளாண்மைக்கான மொத்தச் செலவு இன்றைய தினம் பெருக்கப்பட்டிருக்கிறது.