நமது நிலை
பகுதி 12 · 12 / 13
கல்விக்கான நிதி ஒதுக்கம்
கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், 1966- 67-ல் ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டதற்கு மாறாக, இன்றைக்கு ரூ.79 கோடி செலவழிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையில் 1966-67-ல் ஒதுக்கப்பட்ட ரூ.11 கோடிக்கு மாறாக, இன்றைக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சுவாமிதாஸ் அவர்கள் பேசும்போது இந்த சதவிகிதத்தைப் பார்த்தால், கல்விக்காகச் செலவிடும் தொகையை 1971-72-க்கு உள்ளதை 1966-67-க்கு உள்ளதை ஒப்பிட்டுப் பார்த்தால், குறைவாக உள்ளதே என்று குறிப்பிட்டார்கள்.
அது சரியான வாதம் அல்ல. சரியான புள்ளியும் அல்ல.
1966-67 வருவாய்க் கணக்கில் மொத்தத் தொகையில் ரூ. 201 கோடியில், கல்விக்காக நிதி ஒதுக்கம் செய்யப்பட்டது ரூ. 43.86 கோடி.
இது மொத்தத் தொகையில் 22 சத விகிதம்; 1971-72-ல் மொத்தத் தொகை ரூ. 349 கோடியில், கல்விக்காக ஒதுக்கப்பட்டது ரூ. 79.11 கோடி. இது மொத்தத்தில் 22.6 சத விகிதம். ஆக, அவர் குறைந்துவிட்டது என்று கூறுவது சரியாகாது. எந்த அளவிற்கு வருமானம் பெருகியிருக்கிறதோ, எந்த அளவுக்கு மொத்தச் செலவுகள் செய்யப்படுகின்றனவோ, அந்த அளவிற்குக் கல்வித்துறையில் கூடுதலாகச் செலவழிக்கப்படுகிறது. சதவிகிதக் கணக்கைப் பார்த்தாலும், புள்ளிவிவரங்களைப் பார்த்தாலும், குறைந்து விடவில்லை, உயர்ந்திருக்கிறது என்பதையும் அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
மின்ஒளி இல்லாத ஊர் இல்லை
வசதிகள் பெருகவில்லை, வசதிகள் பெருகவில்லை என்று அம்மையார் குற்றம் சொன்னார்கள். வசதிகளைப் பெருக்குவதற்காகத்தான், தண்ணீர்த் திட்டத்திற்காக இந்த அரசாங்கம் ரூ. 15 கோடி ஒதுக்கியிருக்கிறது. மின் வசதிகள் கொடுக்க ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் மின் விளக்குகள் இல்லாத கிராமமே இருக்கலாகாது என்கின்ற சபதத்தை எடுத்துக்கொண்டு, அதற்கென ஒதுக்கீடு செய்து அந்தக் காரியத்தில் தீவிரம் காட்டுகிறது இந்த அரசு.
பின்தங்கியவர்கள் நலனுக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் இருந்த போது அம்மையார் ஆளும் கட்சி வரிசையில் உட்கார்ந்து கொண்டு, பின்தங்கிய மக்கள் நலனுக்காக ஒரு தனி இலாகா வேண்டும் என்றெல்லாம் நாங்கள் வாதாடிய நேரத்திலெல்லாம், யாராவது காதில் போட்டுக் கொண்டார்களா? காது கொடுத்துக் கேட்டார்களா? உரிமையோடு "உட்கார்" என்று உட்கார வைக்கப்பட்டது கிடையாதா?
இன்றைக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில், அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின்னால், நான் பொறுப்பேற்ற நேரத்தில் சொன்னேன், 'நான் மிகப் பின்தங்கிய வகுப்பில் பிறந்தவன் - 'மிக', 'மிக' 'மிக' என்று எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்.
ஆகவே, இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பின்தங்கிய மக்களுக்காக, என் உயிரைப் பணயமாக வைத்து, அவர்கள் வாழப் பாடுபடுவேன் என்று எடுத்துச் சொன்னேன்.
பின்தங்கியவர்கள் நிலை உயர உதவிகள்
அது வாய்ச் சொல் அல்ல என்று நிரூபிக்க, உடனடியாகவே பின்தங்கியவர் நலனுக்காக ஒரு தனி இலாகா அமைக்கப்பட்டது. தனி இலாகா, தனி அமைச்சர் அல்லாமல், ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன்னுடைய பரிந்துரைகளைத் தந்து, அந்தப் பரிந்துரைகளை அரசு ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அது மாத்திரமல்ல, பின்தங்கியோர் நலத்துறையில், மாணவர்களுக்கு 50 சத விகிதம் எண்கள் பெற்றால் தான் அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படும் என்கிற நிலையை மாற்றி, 40 சதவிகிதம் எண்கள் பெற்றவர்களும் ஸ்காலர்ஷிப் பெற வகை செய்தோம்.
ஏற்கனவே ரூ. 90 லட்சம் உதவிப் பணம் என்றிருந்ததை ரூ. 300 லட்சம் உதவிப்பணம் தரும் அளவில் திருத்தி அமைத்தோம்.
அதேபோல், இடைக்கால வரவு- செலவுக் கணக்கில் ரூ. 9 கோடி ஒதுக்கி, பின்தங்கியவர்களுக்கு ரூ.3 கோடி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரூ.6 கோடி என்ற விவரத்தைப் புள்ளி விவரம் காட்டுவது மட்டுமல்ல ; தாழ்த்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்காகப் பல பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. கிராமங்களில் இடுகாட்டுக்குக்கூடச் செல்ல முடியாத அளவில் கஷ்டங்கள் இருந்ததை, எதிர்க் கட்சியிலிருந்தபோது சுட்டிக்காட்டியவற்றை மறந்து விடாமல், மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக, இன்றைக்கு அந்தக் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.
எத்தனையோ கிராமங்களில் அரிசனக் காலனிகளுக்கு இணைப்புச் சாலைகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறோம்.
முன்னால் இருபத்து மூன்று ஆண்டுக் காலத்தில் 5,000-க்கு மேற்பட்ட அரிசனக் காலனிகள் மின் வசதி பெறாமல் இருந்தன.
இருள் அகலுகிறது
இந்தப் புதிய அரசு வந்தபின், அந்த 5,000-காலனிகளில் 4,000 காலனிகளுக்கு மின் விளக்குக் கொடுத்திருக்கிறது. ஆகவே, இந்த அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களுடைய முன்னேற்றத்திற்காகச் செயல்படுகிறது என்பது தெளிவு.
தொழிலாளர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று திரு. கே. டி. கே. தங்கமணி குறிப்பிட்டார்கள். தொழிலாளர்களுடைய முன்னேற்றத்திற்காக, இங்கே கூறினாலும், கூறவிட்டாலும், தொழிலாளர்கள், பாட்டாளி மக்கள், ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள், பின்தங்கிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சமுதாயத்தின் அடித்தளத்தில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்கள் இவர்களுக்காகப் பாடுபட இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது. அதற்குத் தோழமை உணர்ச்சி உள்ளவர்களின் உதவி தேவை.
தேவை என்று மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் நிதி நிலைகளை ஆராய்ந்து, மத்திய சர்க்கார், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளாமல், தேவைகளை நிறைவேற்றிட நிதியைத் தந்திட வேண்டும் என்று அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
இது இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால், இதில் எழுப்பப்பட்டிருக்கும் உரிமைக்குரல் இடைக்கால உரிமைக்குரலோ என்று யாரும் எண்ணத் தேவையில்லை.
ஒருமித்த உரிமைக்குரல்
மேலவையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், பேசிய மற்ற உறுப்பினர்களும் நீங்கள் மத்திய அரசிடமிருந்து அதிகமான நிதியைப் பெற எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்கள். மேலவை எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் இந்த அரசின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக அப்படிப்பட்ட உறுதியைத் தெரிவித்தார்கள் என்று கருதுகிறேன்.
வன்முறைச் செயலில் நாட்டம் கொண்டவர்கள் அமைச்சரவையில் இருப்பார்கள் என்றால் அந்த வார்த்தையை அவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
அவர்கள் கள்ளம் கபடமின்றி, வெள்ளை உள்ளத்தோடு இப்படிக் கூறக் காரணம், எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் நிதானத்தோடு, நேர்மையோடு, நாடாளுமன்ற முறைப்படி இருக்கும் ; அண்ணா அவர்களின் பாதையில் தான் அந்த நடவடிக்கை இருக்கும் என்று அவர்கள் நம்பியதால் தான் இவ்வளவு அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்கள். நான்கூட அவருடைய இந்தப் பேச்சைக் கேட்டு அவருடைய கட்சிக் காரர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்தேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் கொண்டிருக்கிற இந்த ஆர்வத்தைப் பாராட்டப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
நமக்கு வந்து சேர வேண்டிய நிதிநிலைக் கூறுகள் வந்து சேராததற்கான காரணங்கள் என்னென்ன என்பதையெல்லாம் உறுப்பினர் திரு. சாமிநாதன் ஆராய்ந்தார். மத்திய அரசின் தூதுவர் ஒருவர் பேசுகிறாரோ என்று எண்ணக் கூடிய அளவிற்கு அவருடைய பேச்சு போய்விடுமோ என்று கூட எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் பேச்சை முடித்த பிறகுதான் பரவாயில்லை, தமிழக அரசு, மத்திய அரசிற்கு எதிராக நடத்துகின்ற அறப் போராட்டத்திற்கு—உரிமைப் போராட்டத்திற்கு—பாராளுமன்ற முறைக்கேற்ற போராட்டத்திற்குத் திரு.
சாமிநாதன் அவர்களும், நிச்சயமாக நம்மோடு இருப்பார் என்ற துணிவினைப் பெற்றேன்.
இந்த அரசு ஒன்றுதான் மத்திய அரசோடு வீரமாக எதிர்த்துக் குரலை எழுப்பக்கூடிய அரசு என்பதை அனைவரும் அறிவார்கள்.
தமிழ்நாட்டின் பண்பாடு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நீண்ட காலம் பணியாற்றிய பெரியவர் திரு. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களும் மேலவையில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் பேசிய நேரத்தில், குடும்பத்திலுள்ள ஒரு பெரியவர் வாழ்த்துவது போன்ற உணர்ச்சியையும், உள்ள உணர்வையும் நான் பெற்றேன். தேர்தலுக்கு முன்பு அவர்கள் தங்களுடைய கட்சிக்காகப் பணியாற்றிய நேரத்தில் அவர்களுடைய எண்ணமெல்லாம் அவர்களுடைய கட்சியின் அரசு வர வேண்டும் என்பதுதானே தவிர, நாங்கள் வரக்கூடாது என்ற தீய நோக்கத்தோடு பணியாற்றவில்லை.
தமிழ்நாட்டில் பலர், இந்தச் சாதாரணமானவர்கள், சாமான்யமானவர்கள் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருப்பதா என்ற எரிச்சலோடு பார்த்தவர்கள் உண்டு. நான்காண்டுக் காலத்தில் நாங்கள் நாட்டிற்குச் செய்திருக்கிற நன்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு, எடுத்துக் கூறிய சாதனைகளெல்லாம் எள்ளி நகையாடப்பட்டு, நாங்கள் அகற்றப்பட வேண்டுமென்ற முறையில் தேர்தலில் பணியாற்றியவர்களும் உண்டு.
உள்ளத் தூய்மையோடு பாராட்டு
ஆனால் இங்கே வாழ்த்திய இந்தப் பெரியவர்கள் அந்த எண்ணத்தோடு இந்தத் தேர்தலில் பணியாற்றவில்லை. உள்ளத்தூய்மையோடு அவர்கள் அளித்த பாராட்டுக்களை மிகுந்த கனிவோடும் பணிவோடும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். அந்தப் பாராட்டுக்கள் என்னுடைய பணிக்கும், சக அமைச்சர்களுடைய பணிக்கும் நல்ல உறுதுணையாக அமைந்திடும்.
