நமது நிலை
பகுதி 13 · 13 / 13
தேர்தல் முடிந்து விட்டது. தேர்தலுக்குப் பிறகு நடைபெற்றிருக்கிற சம்பவங்களானாலும் முன்பு நடைபெற்ற சம்பவங்களானாலும் அவை அரசியல் ரீதியில் நடைபெற்றிருக்கிற சம்பவங்களானாலும் உள்ளபடியே அதற்காக நாமெல்லாம் வருத்தப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். அரசியல் கட்சியில் ஈடுபட்டிருக்கிற அத்தனைபேரையும் கேட்டுக் கொள்கிறேன், கொலை வெறிக்கு யாரும் ஆட்படாமல், மனமாச்சரியங்கள், அரசியல் மாச்சரியங்கள் எவ்வளவு இருந்தாலும் அவை பேச்சின் மூலம், எழுத்தின் மூலம் தீர்த்துக் கொள்வதில்தான் தமிழ் நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் காப்பாற்ற முடியும்.
வன்முறையைச் சகியோம்
வேண்டுகோள் விடுக்கிற அதே நேரத்தில், இப்படிப்பட்ட வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்கிற எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டின் நலன் கருதி, தமிழ்நாட்டின் எதிர்காலம் கருதி, அரசியல் பண்பாட்டைக் காப்பாற்றும் பெருநோக்கின் அடிப்படையில் இந்தக் கண்டிப்பான எச்சரிக்கையை வன்முறை எண்ணம் கொண்டவர்களுக்கு விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு பக்கத்திலும் நம்முடைய உரிமைக்குரல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டேன். இந்த உரிமையைப் பெற என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று உறுப்பினர் திரு. சாமிநாதன் கேட்டார். எந்த நடவடிக்கையானாலும் தமிழக அரசினைப் பொறுத்தவரை, பாராளுமன்ற முறைப்படித்தான் நடவடிக்கைகளை எடுக்குமே அல்லாமல், வன்முறைப் போக்கில் நம் நடவடிக்கைகள் இருக்காது.
அன்று கொண்டாடிய எழுச்சி நாள்
ஆளும் கட்சியாக நாங்கள் வந்த நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் காங்கிரசைத் தவிர்த்த ஏனைய அனைத்துக் கட்சிகளையும் சேர்த்து,தூத்துக்குடித் துறைமுகத்திற்காகவும், சேலம் இரும்பாலைக்காகவும் எழுச்சி நாள் கொண்டாடினார்கள். ஆளும் கட்சி எழுச்சி நாள் கொண்டாடலாமா என்றெல்லாம் அப்போது கேலி புரிந்தார்கள். அந்த எழுச்சி நாள் குரலுக்கு நல்ல மதிப்பிருந்தது. தூத்துக்குடித் துறைமுகம் ஆழ்கடல் துறைமுகமாக அறிவிக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
சேலம் இரும்பாலை வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று பாராளுமன்ற முறைப்படி சொன்ன பிறகு சேலம் இரும்புத் தொழிற்சாலைக்கு அனுமதி கிடைத்தது.
அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவோமேயானால், ஒரு கட்சியின் நன்மைக்காக அல்ல, தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக எழுப்புவோமேயானால், கிடைக்க வேண்டிய நியாயங்கள் நிச்சயமாகக் கிடைக்கும். அதுவரை நாம் தொடர்ந்து நம்முடைய அறப்போராட்டங்களைப் பாராளுமன்ற முறைப்படி நடத்திக் கொண்டிருப்போம்.
எடுத்த காவடியை இறக்குவது எப்போது?
காவடி எடுக்க வேண்டிய நிலைமை இருக்கலாமா என்று குறிப்பிட்டார்கள். எங்கள் உறுப்பினர் மாத்திரமல்ல, திரு. காமராசரே கூடக் கேட்டார். யார் எடுத்தாலும் காவடிதான். நான் சொல்வது எல்லாம், எடுத்த காவடியை எப்போது இறக்கி வைப்பது? அதற்கு எல்லோரும் ஒன்று சேர வேண்டாமா? என்பதுதான்! அந்த வழியில்தான் மாநில சுயாட்சியைப் பெறமுடியும் என்று நாம் கூறுகிறோம். அப்படிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அரசு எடுக்கிற முடிவானாலும், இந்த மாமன்றத்தில் இருக்கிற அனைவரும் எடுக்கிற முடிவானாலும், அந்த முடிவிற்கு மத்திய அரசு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டுமென்று இந்த மன்றத்தின் சார்பில் மத்திய அரசிற்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
இங்கே பேசப்படுகிற பேச்சுக்கள் ஏதோ ஒரு சிறிய கூடத்திற்குள், 40, 50 பேர் அமர்ந்து பேசுகிறோம் என்றாலும், இந்தப் பேச்சிற்கு உரிய மதிப்பு இல்லாமல் போகவில்லை. இந்தப் பேச்சுக்கள் நிச்சயம் டெல்லிப் பட்டணத்தில் எதிரொலிக்கக் கூடிய பேச்சுக்கள். தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி இப்படி கருத்து தெரிவித்திருக்கிறார் என்றும், அதை எல்லாக் கட்சிகளும் ஆதரித்திருக்கின்றன என்றும் செய்திகள் டெல்லிப் பட்டணத்தில் பரவும்.
இதை நான் கூறுவது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல ; இந்த நாட்டிலிருக்கிற எல்லா மக்களுடைய பிரதிநிதிகளும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறார்கள், தமிழ் நாட்டிற்குத் தேவையான நிதியினை அளிக்க வேண்டும் என்று கோருகிறார்கள் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இதனைச் சொல்லுகிறேன்.
அறுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் ஆசை. ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க் கட்சிகளின் தலைவர்களும், அனைவரும் குறிப்பிட்டார்கள். திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் மத்திய சர்க்காரைக் கேட்பதை வரவேற்கிறேன் என்றார்கள். இப்பொழுது உறுதியாக, நிச்சயமாக வரவேற்பார்கள். நம்முடைய ஹாண்டே அவர்கள் மத்திய சர்க்காரைக் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களே, அவர்கள் கொடுக்காவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள் என்றார்கள்.
ஏதாவது செய்து அறுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை. ஆகவே, என்ன செய்யப் போகிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள்? என்றார்கள். அவரையே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று நான் கேட்டேன்.
நாங்கள் இந்திரா அம்மையாருக்குக் கொடுக்கும் ஆதரவு மாநிலத்திற்குப் பணம் பெறுவதைப் பொறுத்த காரியம் அல்ல. நாங்கள் தந்த ஆதரவு, நாங்களும் முற்போக்குக் கூட்டணிக் கட்சித்தலைவர்களும், நண்பர்களும் தந்த ஆதரவெல்லாம், கொள்கை ரீதியான ஆதரவு, ஏதோ பேரம் பேசிக்கொண்டு தரப்பட்ட ஆதரவு அல்ல.
நாங்கள் ஆதரவு தந்தாலும் தராவிட்டாலும் திருமதி இந்திரா அம்மையார் அவர்களுடைய அரசு மத்தியில் பலமான அரசாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு நாங்கள் ஆதரவு தராத நிலைமையிலும் கூட, மத்திய அரசு முற்போக்கான கொள்கைகளை உருவாக்குகின்ற நேரத்தில் எங்களுடைய 23 ஓட்டுகள் விழுந்தாலும் விழாவிட்டாலும் வெற்றிபெறும் நிலையில் மத்திய அரசு இருக்கிறது. முற்போக்கான கருத்துக்கு ஆதரவாக எங்களுடைய கைகள் உயருமே அல்லாமல் எங்களுடைய கைகள் தாழாது என்பதை எதிர்க்கட்சிக்காரர்களுக்கும், சுதந்திராக் கட்சிச் சட்டமன்றத் தலைவர் திரு.
ஹாண்டே அவர்களுக்கும் எடுத்துக்காட்டி, இது கொள்கை ரீதியான ஆதரவே என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
இந்தி திணிக்கப்பட்டால் ......
இன்றைக்கு ராஜமானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கும் திட்டம் இவைகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளையத் தினமே தமிழ் நாட்டில் இந்தி திணிக்கப்படும் என்ற நிலை, மறைமுகமான முறையில் திணிக்கப்படும் என்ற நிலை, ஜாடைமாடையாகத் தெரிந்தாலும் கூட, அங்கே இருக்கிற எங்களுடைய தோழர்கள் பட்டாளத்துச் சிப்பாய்களாய் இருந்து அதை எதிர்த்துப் போர்க்குரல் கொடுப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம் என்று சொல்லிக்கொள்கிறேன்.
மத்திய அரசுடன் உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் எங்களுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"நீங்கள் மத்திய அரசுக்கு வணங்காதீர்கள், வளையாதீர்கள்" என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மையார் சொன்னது, அவர் மறவர் குல மங்கை என்ற காரணத்தால் வீரத்தைப் போதித்தார் என்று கருதுகிறேன். ஒரு தாய், அதுவும் புறநானூற்றுத் தாய் என்று எடுத்துக் கொண்டேனேயல்லாமல், எங்களை இழிவுபடுத்துவதற்காக வணங்காதீர்கள், வளையாதீர்கள் என்று சொன்னதாக நான் கருதவில்லை. அவர் அப்படிச் சொன்னது, நாங்கள் உங்களுடன் சேர்ந்து உங்களுக்காகப் போராட நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒத்துழைக்க இருக்கிறோம் என்ற கருத்தில்தான் பேசினார்கள் என்று நான் கருதுகிறேன்.
மாநிலத் திட்டக் குழு, போட்டிக் குழு அல்ல !
இன்னும் நம் நாட்டிற்குப் பல்வேறு திட்டங்களை அமைக்க வேண்டும். அதற்கேற்ற வகையில்தான் மாநிலத் திட்ட ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்திப் பத்தாண்டு காலத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கவர்னர் உரையிலும், என்னுடைய அறிக்கையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்ட ஆணைக்குழு, மத்தியில் இருக்கிற திட்டக் குழுவிற்குப் போட்டியாக ஏற்படுவதல்ல ; இந்தக் குழு பத்தாண்டுக் காலத்தில் தமிழகத்தில் மக்கள் தொகை எந்த அளவிற்குப் பெருகும்? அவர்களுக்கான வாய்ப்புகள், வசதிகள் எந்த வகையில் அரசு செய்ய வேண்டும்? அவர்களுக்கான கல்வியைத் தர வாய்ப்புக் கூறுகள் என்னென்ன? மருத்துவ வசதி எந்த வகையில் தேவைப்படும்? விவசாயத்தில் முன்னேற்றம் அந்த நேரத்தில் எப்படி இருக்கவேண்டும்?
தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படுமானால் அதற்கெல்லாம் எப்படி வழி வகை செய்ய வேண்டும்? இப்படிப் பல்வேறு அம்சங்களை அந்த மாநிலத் திட்ட ஆணைக்குழு ஆராய்ந்து தங்களுடைய அறிக்கையில் அவைகளைச் சமர்ப்பிக்கும்.
பத்து ஆண்டு காலத்திற்கு எப்படித் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று வரையறுத்துக்கொண்டு, அதை வைத்துக்கொண்டு போராட முடியும். என்னென்ன காரியங்களுக்காகக் கேட்கப்பட்டது என்று கேள்வி வருமானால்,
அதற்கு இந்தத் திட்டக் குழுவின் அறிக்கை பயன்படும்.
அடுத்தாண்டில் 1972-73-க்கான நிதி நிலை அறிக்கை வைக்கப்படுகிற நேரத்தில், அதற்குள்ளாக அந்தக் குழுவின் அறிக்கை அவையில் வைக்கப்பட்டு, அந்தத் திட்ட வரைவு பற்றி நாமெல்லாம் விவாதிக்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு உறுதியோடு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
உரிமைக் குரல்
மாநில சுயாட்சி என்னும்போது அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும்; ஒரே இடத்தில் அதிகாரங்கள் குவிந்துவிடக் கூடாது; அரசியல் துறையில் சமுதாயத் துறையில், பொருளாதாரத் துறையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்கிறோம். மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் முடக்கி வைத்துக்கொண்டும், மாநிலங்கள் கையைக் கட்டிக் கொண்டும் இருக்கிற நிலை இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.
பாகிஸ்தான் ஏன் ஏற்பட்டது? மாநில சுயாட்சிக்கு இணங்காத காரணத்தால்தான் பாகிஸ்தான் ஏற்பட்டது. இன்றைக்கு கிழக்குப் பாகிஸ்தானில் என்ன நிலைமை? மாநில உரிமைகளைத் தடுத்திடும் போக்கால் மாநிலத்திற்கு மாநிலம் ரகுமான்களைத் தோற்றுவிக்க இந்தியாவிலே யாரும் முன்வரமாட்டார்கள் என்று நானும் நிச்சயமாக நம்புகிறேன்.
இந்த நிதி நிலை அறிக்கை தமிழ் நாட்டு மக்களுடைய உரிமைக் குரலை எதிரொலிக்கிற ஒரு அறிக்கையாகும். பாராளுமன்ற முறைகளை ஏற்றுக் கொண்டிருக்கிற நாம், அந்த அடிப்படையில் நம்முடைய உரிமைக் குரலை இதன் மூலம் எழுப்பியிருக்கிறோம்.
