உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 10

பகுதி 2 · 2 / 3

விவாதிக்க”, என்று கேட்டிருக்கிறார். இது மிக மிக முக்கியமான ஒன்று. ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்தபோதே, அதை அமைக்கவந்த கொரியா நாட்டைச் சேர்ந்த அந்த அதிகாரிகளிடத்திலே, நான் முதலில் போட்ட நிபந்தனை, இந்த வட்டாரத்திலுள்ள உள்ளூர்க்காரர்களுக்கு வேலைகொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துத்தான், அந்தத் தொழிற்சாலைக்கான அனுமதியை அளித்தேன் அப்பொழுது. எனவே, இது ஒரு நல்ல நிபந்தனை. இந்த நிபந்தனை ஏற்கப்படும்.

அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையிலே தான், தொழிற்சாலைகள் அமையும்.

திரு. கோவை தங்கம், சின்கோனா மரத் தொழில், அந்தப் பகுதியிலே விரிவடைய வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். C.P.I.-ஐச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி திரு. உலகநாதன், “திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியில், அரிசியைப் பயன்படுத்தி, wine தொழிற்சாலை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விவாதிக்க” அவர் வெட்டுத் தீர்மானம் கொடுத்திருக்கின்றார். அரிசியிலே wine-ஆம்! அதைத் தயாரிக்க வேண்டுமாம்!

(சிரிப்பு). நாம் இப்பொழுதுதான் அரிசியை இரண்டு ரூபாய் விலைக்குக் கொடுப்பதற்குப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). அதிலே, wine-உம் தயாரித்துவிட்டால் என்ன ஆவது என்பதை எல்லாம் தீர யோசித்து, பரிசீலித்து, அதுபற்றி முடிவெடுக்கப்படும் என்று நான் அவருக்குச் சொல்லிக்கொள்கின்றேன்.

திரு. ஜி.கே. மணி, மேட்டூர்; “தமிழகத்திலே உள்ள அனைத்துக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, உடனே வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து” - அவர் அதை இப்போது எதிர்பார்க்கிறார். - “உடனடியாகக் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

நிச்சயமாக அரசு அதற்கான நடவடிக்கையைக் கடுமையாக எடுக்கும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. சி. ஞானசேகரன்; “வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், செய்யாறு கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் சக்கைகளிலேயிருந்து அதிக மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க” - அவர் சக்கையைக் கூட விடமாட்டார்! (சிரிப்பு). அதையும் தினந்தோறும் இந்த அவையிலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள். அவர் கேட்டு இல்லையென்று சொல்ல முடியுமா? எனவே, அதைப்பற்றி நிச்சயமாகக் கவனம் செலுத்தப்படும்.

திரு. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள்; “இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்போடு - C.I.I-இணைந்து, தொழில் திறன் மேம்பாட்டு - Skill development - மையங்களை மாவட்ட அளவில் உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க” என்று கேட்டிருக்கிறார்.

நான் மீண்டும் சொல்கிறேன். தொழிற் கொள்கை விரைவிலே வகுக்கப்பட இருக்கிறது. ஆகவே, இது கவனத்திலே கொள்ளப்படும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. டி. ஜெயக்குமார், ராயபுரம்; “வடசென்னையிலே உள்ள எண்ணூர் பகுதியைப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு, இதுவரை இப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.” - அம்மா காலத்திலேகூடவா? (சிரிப்பு). (குறுக்கீடு). கவலைப்படாதீர்கள், அமைத்துவிடலாம். “வேலை வாய்ப்பைப் பெருக்குகின்ற வகையில், வடசென்னை மக்கள் பெரிதும் பயன்படக்கூடிய வகையில், இப்பகுதியில் Special Economic Zone உடனடியாக அமைக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க,” என்று கேட்டிருக்கிறார்.

நிச்சயமாக அதுவும் கவனிக்கப்படும், அவர் மகிழத்தக்க அளவில். (மேசையைத் தட்டும் ஒலி).

செங்கல்பட்டு திரு. கி. ஆறுமுகம் அவர்கள்; “திருக்கழுக்குன்றம் வட்டத்தைத் தொழிலில் பின்தங்கிய பகுதியாக அறிவித்து, தொழில் தொடங்குவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் 25% மானியம் வழங்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க,” என்று கேட்டிருக்கின்றார்.

அதுவும் கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., கரூர்; “கரூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் - T.N.P.L - பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்மீது, முதல் தகவல் அறிக்கை - F.I.R.- காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டாலே, அவர்களைப் பணிக்கு வரவிடாமல் நிறுவனம் தடை செய்து விடுகின்றது. இந்த முறையை மாற்றி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணி செய்வதைத் தடை செய்யவேண்டும் என்பது குறித்து விவாதிக்க” என்று கேட்டிருக்கிறார்.

இந்தக் கொள்கையிலே எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஒருவர்மீது குற்றம் சுமத்திவிட்டதாலேயே, குற்றவாளியாக ஆகிவிடமுடியாது. தொழிலாளர் என்பதற்காக, அவரை ஏறி மிதிப்பதை, நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆகவே, நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே, பணித் தடை வேண்டுமே தவிர, குற்றஞ்சாட்டிவிட்டு, அவர் தகுதி இல்லையென்று விரட்டிவிட, எந்தத் தொழிலாளியையும், அப்படிப் பழிவாங்க இந்த அரசு இடம் தராது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

திரு. சி. சண்முகவேலு, அடிக்கடி எழுந்து நிற்பவர், அ.தி.மு.க., உடுமலை; “வங்கியில் வட்டி குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திலும், கடன் கொடுப்பதிலே உள்ள நிபந்தனைகளை எளிமையாக்கி, வட்டியைக் குறைத்துக் கொடுக்கவேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க” என்றொரு முக்கியமான விஷயத்தை அவர் வெட்டுத் தீர்மானத்திலே முன்மொழிந்திருக்கிறார். இது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்பதை நான் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி செல்வி இராமஜெயம், புவனகிரி; “புவனகிரி தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியப் பகுதிகளில், அதிகம் பயிரிடப்படும் மலர்களைக் கொண்டு, அந்தப் பகுதியிலே வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க” என்று திருமதி செல்வி இராமஜெயம் கேட்டிருக்கின்றார்கள்.

திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன்; “பொள்ளாச்சிப் பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்க, ஒரு பெரிய தொழிற்சாலையைப்

பொள்ளாச்சியிலே ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க” என்று கேட்டிருக்கிறார். நிச்சயமாக அவருடைய குறை தீர்க்கப்பட, பொள்ளாச்சி, தொழிற்சாலை ஒன்றை விரைவிலே பெறும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

மயிலாடுதுறை திரு. எஸ். ராஜகுமார், ராஜபாளையம் திருமதி மு. சந்திரா ஆகியோர் அளித்துள்ள கோரிக்கைகளும் கவனிக்கப்படும் என்பதை நான் தெரிவித்து, 285 வெட்டுத் தீர்மானங்களுக்கும் விளக்கம் அளிக்கவில்லையே என்று யாரும் என்னிடம் வருத்தப்படாமல், பொறுக்கியெடுத்து, சிலபல வெட்டுத் தீர்மானங்களுக்கு மாத்திரமே விளக்கம் அளித்திருக்கின்ற வகையிலே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிறகு, பொதுவாக, இந்தத் தொழில் மானியத்தைப் பற்றிப் பேசும்போது, நமது நாட்டினுடைய சமுதாயப் பொருளாதார வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், வேளாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு இணையான முக்கியத்துவம் தொழிலுக்கு உண்டு. வேளாண்மை உற்பத்தியும், தொழில் உற்பத்தியும், கை கோர்த்துச் செல்வதற்கானப் பாதையே, இந்தியத் திருநாடு அகிலத்தின் முன்னிலை வரிசையில் இடம்பெற பண்பட்ட பாதை ஆகும்.

18-வது நூற்றாண்டிலேயிருந்து ஏற்பட்டுவரும் தொழில் புரட்சி, புதிய புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. ஆனால், பொருட்களை உற்பத்திச் செய்யும் பெரிய பெரிய தொழிற்சாலைகள் தோன்றின. இதன் விளைவாக, உலகம் முழுவதும் சமூகப் பொருளாதார நிலைகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய ஒரு பொற்கால மாற்றங்களால், ஊரகப் பகுதியிலேயிருந்து வாழ்வாதாரத்திற்கான சிறந்த வாய்ப்புகளைத் தேடி, நகரப் பகுதிகளுக்கு ஏற்பட்ட குடிபெயர்ப்புகள், நகரப் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாயின.

நிலக்கரி, பெட்ரோல், வாயு போன்ற எரிபொருள்கள், தொழில் வளர்ச்சியிலே உந்துதல் சக்திகளாக விளங்கிவருகின்றன. இந்தியத் திருநாட்டின்

விடுதலைக்குப் பின்னர், 1956-ல், மத்திய அரசு வகுத்தளித்த தொழில் கொள்கை, தொழில் புரட்சியின் நன்மைகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. தொடக்க நிலையில், இரும்பு, கனரகத் தொழில்கள், மின் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சியை உருவாக்குவதே குறிக்கோளாக இருந்தது.

அதன் பிறகு தகவல் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியது. கணினி இயக்கத்தில், அனைத்து முனைகளிலும் கணினி நுழைந்ததால், தகவல் தொழில்நுட்பப் புரட்சி தொழில் துறையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பல்வேறு வகையான மாற்றங்களை உருவாக்கியது. அறிவுசார்ந்த கணினிப் புரட்சி, மனித வரலாற்றில், புதிய, ஆனால் புத்துணர்ச்சி மிகுந்த அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. நமது சமுதாய, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் கணினி ஊடுருவி, யாரும் மறுக்கமுடியாத தாக்கத்தை உண்டாக்கி வருகிறது.

இதனால், உலகமே சுருங்கி, உலகம் சிலிர்த்து குவித்துவரும் அறிவை, கடைக்கோடியிலே உள்ள கிராமத்தில் இருந்துகொண்டே பெற்று, உயரும் உன்னதமான வாய்ப்பு இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருப்பது பெருமைப் படத்தக்க முன்னேற்றமாகும்.

தொடர்ந்து நிகழ்ந்துவரும் இந்தப் புரட்சியின் அடுத்த கட்டமாக, உயிரியல் தொழில்நுட்பப் புரட்சி - Bio-Technology Revolution - ஏற்படும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள். உயிரியல் தொழில்நுட்பப் புரட்சி முழுமையடையும்போது, மானுட வாழ்க்கைமுறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் தரத்தில், வாழும் வயது பெருகுவதில், நோய் கட்டுப்பாட்டில், உணவுப் பொருள் உற்பத்தியில், உயிரியல் தொழில்நுட்பப் புரட்சி, பெரும் பங்காற்றும் என்பது, நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

தொழிற்சாலைகள் உருவாக, தொழில் வளம் பெருக, முதன்மையாகத் தேவைப்படும் நிலமும், அதனையொட்டி அடிப்படைக் கட்டமைப்பு வசதியும், இதனைக் கருத்திலே கொண்டுதான் தி.மு.க. ஆட்சியில், 1971ஆம் ஆண்டு இந்தியாவிலே

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்திலேதான் அன்றைக்கு ‘சிப்காட்’ - State Industries Promotion Corporation of Tamil Nadu என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம். இன்றைக்குப் பேசப்படுகிற ‘சிப்காட்’ இருக்கிறதே, தமிழகமெங்கும் இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற தொழில் வளத்தை உருவாக்கி இருக்கிறதே, அந்த ‘சிப்காட்’, யார் முதலில் கொண்டு வந்தார்கள், யார் பின்னால் கொண்டு வந்தார்கள் என்று தொழிற்சாலைகளுக்கெல்லாம் இன்றைக்கு நாம் சண்டை போட்டுக் கொள்கிறோமே, நான் அவர்களுக்குச் சொல்லுகின்றேன், அதற்கு முன்பு ‘சிப்காட்’ போன்ற பெரிய அளவிலே இல்லாத சிறு சிறு அமைப்புகள், park-கள் பூங்காக்கள் இருந்தாலும்கூட, பெரிய அளவில் இராணிப்பேட்டையிலும், ஓசூரிலும், ‘சிப்காட்’ என்ற இந்த நிறுவனத்தை (மேசையைத் தட்டும் ஒலி) அமைத்து, 1971ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை நான் மிகுந்த அடக்கத்தோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

‘சிப்காட்’ நிறுவனம் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும், ஓரிடத்தில் வழங்கக்கூடிய தொழில் வளாகங்களை அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட இடங்களிலே ஒன்றுதான், இராணிப்பேட்டை என்பதை நீங்கள் அறிவீர்கள். இராணிப்பேட்டைதான் தமிழ்நாட்டில் அமைந்த முதல் தொழில் வளாகம் என்பதை நான் எடுத்துக்கூற விரும்புகின்றேன். எப்படி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் சிறுதொழில் வளர்ச்சிக்கு, காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடைய ஆட்சியில், பக்தவச்சலம் போன்றவர்களுடைய ஆட்சியில், சுப்பரமணியம் போன்றவர்கள் நடத்திய ஆட்சியில், கிண்டி தொழிற்பேட்டையையும், அம்பத்தூர் தொழிற்பேட்டையையும், ஆதாரத் தளங்களாக அமைத்தனவோ, அதைப்போல, பெரிய தொழில் வளர்ச்சிக்கு கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட ‘சிப்காட்’ வளாகங்களே, ஆரம்பத் தளங்களாக அமைந்தன என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

இராணிப்பேட்டையிலும், ஓசூரிலும், ‘சிப்காட்’ தொழில் வளாகம் நிறுவப்பட்டு, இராணிப்பேட்டையிலே, 729 ஏக்கர் பரப்பளவில், தொழில் வளாகம்

அமைக்கப்பட்டு, அதிலே 168 கோடி ரூபாய் முதலீட்டில், 107 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. அதற்கு அடுத்து, ஓசூரில் 1236 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாட்டில் இரண்டாவது தொழில் வளாகம், கழக அரசால் அமைக்கப்பட்டது. அதில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, 1997-ல் இராணிப்பேட்டை ‘சிப்காட்’ தொழில் வளாகத்திற்கு 496 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மேலும் பல தொழிற்சாலைகள் அமைவதற்கு அந்த வளாகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1997ஆம் ஆண்டு வந்த கழக ஆட்சியில் ஓசூர் சிப்காட் வளாகத்திற்கு மேலும் 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதில் 64 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. ஏறத்தாழ 6,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். இப்படி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக, இராணிப்பேட்டை, ஓசூர் ஆகிய இடங்களில் மட்டுமல்லாமல், கழக ஆட்சியில், கடலூரில், 1198 ஏக்கர் நிலப்பரப்பில், 1997ஆம் ஆண்டில் ஒரு தொழில் வளாகமும், இருங்காட்டுக்கோட்டையில் 1,830 ஏக்கர் நிலப்பரப்பில், 1996ஆம் ஆண்டில் ஒரு தொழில் வளாகமும், தூத்துக்குடியில் 437 ஏக்கர் நிலப்பரப்பில், 1996ஆம் ஆண்டில் ஒரு தொழில் வளாகமும், பூந்தமல்லியில் 2,469 ஏக்கர் நிலப்பரப்பில், 1997ஆம் ஆண்டில் ஒரு தொழில் வளாகமும், ஓரகடத்தில் 2,043 ஏக்கர் நிலப்பரப்பில், 1997ஆம் ஆண்டில் ஒரு தொழில் வளாகமும், சிறுசேரியில் 756 ஏக்கர் நிலப்பரப்பில், 1998ஆம் ஆண்டில் ஒரு தொழில் வளாகமும் எனப் பல்வேறு இடங்களில் ‘சிப்காட்’ தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டன.

என்ன தொழில், யாரால் வந்தது என்பதல்ல; அவை எல்லாம் வந்து இறங்குவதற்கு ஏற்ற இடங்கள், யாரால், எப்பொழுது, எந்த ஆட்சியால் அமைக்கப்பட்டன என்பதை மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதைச் சொல்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இவ்வாறு கழக ஆட்சிக் காலங்களில், தமிழகத்தில் தொய்வில்லாத தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலியதோடு, பெரும் அளவான

வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் கூறவேண்டுமேயானால், இருங்காட்டுக்கோட்டையிலே, JBM Sung Woo Ltd. தொழிற்சாலை; JKM Gem தொழிற்சாலை; Orchid Chemicals மற்றும் Pharmaceuticals தொழிற்சாலை; Citizen Watch தொழிற்சாலை, Sam Greaves Limited நிறுவனத்தின் Tractor தொழிற்சாலை; GMR Vasavi-யின் தனியார் மின் உற்பத்தித் திட்டம்; Matsushita Airconditioner தொழிற்சாலை; Reynolds Ball Pen தொழிற்சாலை; Sembawang Shriram பொருள் விநியோகத் தொழிற்சாலை; Markcube India காகித அட்டை இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை; Optic Fibre Telecom Cable தொழிற்சாலை.

அக்டோபர் மாதத்தில், 2000ஆம் ஆண்டு ‘Centre for Monitoring Indian Economy’ - அதாவது, ‘இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்’, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பற்றி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழ்நாடு 145.62 குறியீட்டு எண்ணைப் பெற்று முதல் நிலையிலே இருந்தது; கர்நாடகம் 106.12 குறியீட்டு எண்; ஆந்திரம் 104.01 குறியீட்டு எண். அதைப்போல, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மாநகரங்களுக்கிடையேயான மதிப்பீட்டில், அன்றைக்கு 2000ஆம் வருடத்திலே, சென்னை மாநகரம் 472.48 குறியீட்டு எண்ணைப் பெற்று, முதல் நிலையிலே இருந்தது; ஹைதராபாத் 153 குறியீட்டு எண்; பெங்களூர் 100.28 குறியீட்டு எண் பெற்றிருந்தன.

1989-1991 காலக்கட்டத்தில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு கழக அரசு அளித்த உறுதியான ஊக்கத்தின் காரணமாக, தமிழ்நாடு, இந்தியாவில் 3-ஆம் இடத்தை அடைந்திருந்தது. 1991-1996 காலக்கட்டத்தில் நடைபெற்ற ஆட்சியின்போது, தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின்தங்கி, 5-ம் இடத்திற்கு இறங்கி இருந்தது. இதை நான், யாரையும் தாழ்த்துவதற்காகச் சொல்லவில்லை. தொழில் வளர்ச்சியினுடைய அன்றைய நிலவரத்தை எடுத்துக் கூறுவதற்காகக் குறிப்பிடுகின்றேன்.

எல்லோரும் சேர்ந்துதான் தொழில் வளத்தைத் தமிழகத்திலே பெருக்க வேண்டும் என்ற அந்த ஊக்கத்தை, உற்சாகத்தை, ஆர்வத்தை, அக்கறையைப் பெறவேண்டும் என்பதற்காகச் சொல்லுகின்றேன்.

1994-1995-இல் 8.7 சதவிகிதம் அளவுக்கு இருந்த தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, 1999-2000ஆம் ஆண்டில் 15.02 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். கழக அரசு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் காட்டிய அக்கறைக்கும், உயர்ந்த செயல்பாட்டிற்கும் அடையாளமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இங்கே திரு. அப்பாவு அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நம்முடைய கழகத்தின் சார்பிலே உரையாற்றிய திரு.

ரங்கநாதன் குறிப்பிட்டதைப்போல, 1998ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரே விண்ணப்பப் படிவத்தை உள்ளடக்கிய, ஒற்றைச் சாளர முறையை - Single Window System - இதை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். (மேசையைத் தட்டும் ஒலி). அதற்கு முன்பெல்லாம், தமிழ்நாட்டிலே ஒரு தொழிலைத் தொடங்கவேண்டுமென்றால், உள்ளாட்சி மன்றத்தினுடைய அனுமதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினிடமிருந்து சுற்றுச்சூழலுக்கான அனுமதி, நில ஒதுக்கீடு பெற அனுமதி, நில வகைப்பாட்டை மாற்ற அனுமதி, நகர்ப்புற நில உச்ச வரம்பிலேயிருந்து விலக்குபெற அனுமதி, தேவையான தண்ணீருக்கான அனுமதி, மின்சாரத்திற்கான அனுமதி, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பெற வேண்டிய அனுமதி என்று 8 வெவ்வேறு துறைகளுடைய அனுமதியைப் பெற வேண்டுமென்ற நிலைமை இருந்தது.

இந்த எட்டையும் ஒழித்துவிட்டு, ஒரே அனுமதி பெற்றால் போதும், அதிலே எல்லாம் அடங்கும் என்கிற அந்த ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வந்ததே, தொழில் துறையிலே பெரிய முன்னேற்றத்திற்குக் காரணமான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. (மேசையைத் தட்டும் ஒலி). ஆனால், இப்பொழுது அந்த நிலைமைகள் எல்லாம் இல்லை. புதிதாக நாங்கள் இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில், அந்த ஒற்றைச் சாளர முறையினுடைய பலன்கள் எதுவும் இல்லாத ஒரு சூழ்நிலை.

இது எப்படி இருந்தது என்றால், பரமபத சோபானப் படத்தில், ஏணியிலே ஏறிய காட்சியும், பாம்பின் தலையிலே மாட்டிய காட்சியுமாக, பரமபத சோபானப் படமாகத் தமிழ்நாடு

ஆகிவிட்டது. மறுபடியும் தாயம் போட்டு, ஏணியிலே ஏற வேண்டும், ஏறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி).