உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 10

பகுதி 1 · 1 / 3

**உரை : 10**

**நாள் : 23.08.2006**

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் குறித்தும் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்தும் காலையிலேயிருந்து இதுவரையிலே இந்த மாமன்றத்திலே பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள், தலைவர்கள், தங்களுடைய கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். எனக்கு முன்னால் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கூறியதுபோல, ஏதோ, நானும் தட்டுத் தடுமாறி என்னுடைய பதிலுரையைத் தருவதற்கு முன்வந்திருக்கின்றேன்.

எல்லோருக்கும் தட்டுத் தடுமாறுகின்ற பருவம் வரும். (மேசையைத் தட்டும் ஒலி). அதை யாரும் தவிர்க்க முடியாது. நான் அவரை எல்லாம் கேலியாகவோ, கிண்டலாகவோ, வசையாகவோ கருதுபவன் அல்ல. இசையாகவே கருதிக்கொண்டு சந்திப்பவன். (மேசையைத் தட்டும் ஒலி).

என்னுடைய உடல்நிலை காரணமாக, நீண்டநேரம் இந்த விவாதத்திலே கலந்துகொள்வதற்கு இயலாது என்பதற்காக, முதலில் பட்டியலிடப்பட்ட மானியக் கோரிக்கைகளை ஒரு சிறிது மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர், கொறடா, இவர்களுடைய ஒப்புதலோடு, தேதி மாற்றம் செய்யப்பட்டு, இன்றைக்குக்கூட அதே உடல்நிலையோடு தான் சில கருத்துக்களை எடுத்து வைக்கின்ற வாய்ப்பை இங்கே நான் பெற்றிருக்கின்றேன். இது தற்காலிகமாக எனக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு நலிவு.

யாரும் நிரந்தரமாக இருக்கக்கூடிய நலிவு என்று எண்ணி ஆறுதலடைய மாட்டார்கள்; அகமகிழ்ச்சி கொள்ளமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இன்று, என்னுடைய விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர், நம்முடைய நண்பர் மாண்புமிகு உறுப்பினர் ஜெயக்குமார்

ஆவார்கள். அவர்கள் பேசும்போது கேட்டார்கள்; Centre for Monitoring Indian Economy (CMIE), பிப்ரவரி 2006ஆம் ஆண்டு தந்துள்ள விவரப்படி, Investment in Manufacturing Sector என்ற விவரப்படி, அவர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள். உற்பத்தித் துறையிலே, அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சிதான் முதலிடத்தில் இருந்ததாகச் சொன்னார்கள். என்னுடைய கையிலே இருப்பவை C.M.I.E. வெளியிட்ட புத்தகங்கள். இரண்டு புத்தகங்கள் வைத்திருக்கின்றேன்.

அந்தப் புத்தகத்திலே உள்ள ஆதாரங்களை, புள்ளிவிவரங்களை வைத்துத்தான் நான் இந்தக் கருத்தை எடுத்துக்கூறக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

நான் முதலிலே சொன்னதுமாதிரி Centre for Monitoring Indian Economy (CMIE), பிப்ரவரி 2006-ல் தந்துள்ள விவரப்படி, கடந்த ஆண்டு; ஒரிசாவில் 1,76,770 கோடி ரூபாய் உற்பத்தித் துறையில் முதலீடு, ஜார்க்கண்ட் 1,70,460 கோடி ரூபாய், குஜராத் 96,162 கோடி ரூபாய், கர்நாடகா 55,485 கோடி ரூபாய், ஆந்திரா 55,359 கோடி ரூபாய், தமிழ்நாடு 54,488 கோடி ரூபாய். வரிசைப்படி ஆறாவது இடத்திலே அம்மையார் அவர்கள் ஆண்ட மாநிலம், தமிழகம் அமைந்திருக்கிறது இந்த விவரப்படி.

ஆனால் இங்கே முதலிடம் பெற்றிருந்ததாக நண்பர்கள் வாதிட்டிருக்கின்றார்கள்.

இன்னொரு ஆதாரத்தையும் சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே என்ன நிலை என்றால், 2001 என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 2001ஆம் ஆண்டு முடிவில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அன்றைய நிலையில், தற்காலிகமாக முடிந்த அந்தக் காலகட்டத்தில், ஒரிசாவில் 23,366 கோடி ரூபாய், ஜார்க்கண்ட் வெறும் 731 கோடி ரூபாய், குஜராத் 36,058 கோடி ரூபாய், கர்நாடகா 27,345 கோடி ரூபாய், ஆந்திரா 34,928 கோடி ரூபாய், மராட்டியம் 26,218 கோடி ரூபாய், தமிழ்நாடுதான் 36,778 கோடி ரூபாய்.

(மேசையைத் தட்டும் ஒலி). ஆக, அன்றைய நிலையில், இதில், தமிழ்நாடுதான் முதல் இடத்திலே இருந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். நான் இந்தப் 'போட்டாபோட்டி', 'காட்டாங்குஸ்தி'-யில் என்னைச் சிக்க வைத்துக்கொள்ள விரும்பவில்லை. இன்று நாம் எல்லோரும் அமர்ந்து, இந்த மாமன்றத்தில், தமிழ்நாட்டினுடைய மொத்த

தொழில் வளத்தை வளர்ப்பதற்குப் பணியாற்ற வேண்டும்; பாடுபடவேண்டும்; ஆர்வம் கொள்ளவேண்டும்; அக்கறை காட்டவேண்டும் என்ற அளவிலேதான், இன்றைய விவாதம் அமைந்து, உங்களுடைய உரைகளும், என்னுடைய பதிலுரையும் அவ்வாறு விளங்கிட வேண்டுமென்றே நான் கருதுகின்றேன். இதற்கிடையிலே இதற்கெல்லாம் யார் காரணம், நீயா, நானா என்ற அந்த விவாதங்களுக்கு நான் செல்லவேண்டிய தேவையில்லை; வம்புக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை; வந்த வம்பை விடவும் தேவையில்லை.

(மேசையைத் தட்டும் ஒலி) ஏனென்றால், வந்த வம்பை விட்டுவிட்டால், வழங்கவேண்டிய விளக்கத்தை வழங்காமல் போய்விடக்கூடும். அதனால் சொல்லுகிறேன், விளக்கம் தேவைப்படுகிற நேரத்தில் தந்தே தீரவேண்டிய நிலையில் நாம் இருப்பதால், நான் அதற்கு அந்தக் கருத்தைச் சொன்னேனே அல்லாமல் வேறு அல்ல.

திரு. ஜெயக்குமார் அவர்கள் இன்னொன்றும் சொன்னார்கள். தொழில் துறை மானியத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிடக் குறைந்துவிட்டது என்று குறிப்பிட்டார். பத்திரிகைகளுக்கு பெரிய தலைப்பு அது. அவர் நீண்டகாலமாகச் சட்டமன்ற அனுபவம் உள்ளவர் என்பதும், அதைப்போலவே, பத்திரிகைத் துறையைப் பற்றிய அனுபவம் உள்ளவர் என்பதும், எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர் ஒரே அடியாக தொழில் துறை மானியம் கடந்த ஆண்டைவிட குறைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

2005-2006-ல் திருத்திய மதிப்பீடு, 227 கோடி ரூபாய் என்றபோதிலும், Final Modified Appropriation. இறுதித் திருத்த ஒதுக்கீடு என்று பார்க்கும்போது, 186 கோடி ரூபாய்தான்; திருத்த ஒதுக்கீடு. ஆனால், சொல்லப்பட்டது 227 கோடி ரூபாய்; திருத்த ஒதுக்கீடு என்று குறிப்பிடப்பட்டது 186 கோடி ரூபாய். அதாவது, 40 கோடி ரூபாய், கடந்த ஆட்சியில், செலவழிக்கப்படாமல் surrender செய்யப்பட்டுவிட்டது. இந்த surrender எனக்குப் பிடிக்காது.

(மேசையைத் தட்டும் ஒலி). அதனால்தான், அந்தக் கணக்கின் அடிப்படையில்தான், தற்போது கடந்த ஆண்டைவிட அதிகமாகவே ஒதுக்கிய நிதியின்படி மொத்தமாக 193 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. திரு. ஜெயக்குமார் அவர்களுடைய சந்தேகத்திற்கு, கேள்விக்கு

இதை நான் விளக்கமாகத் தருகிறேன். ஏதோ அவருக்குப் பதிலுக்குப் பதில் சொல்வதாக அவரும் கருதிக்கொள்ளக்கூடாது; விளக்கம்தான்.

தமிழ்நாடு, உற்பத்தித் துறை முதலீட்டில் கடந்த ஆட்சியில், முதல் மாநிலமாகத் திகழ்ந்தது என்ற வாதமும் அடிபட்டுப் போகின்ற புள்ளிவிவரங்களை எடுத்து வைத்திருக்கின்றேன். Annual Survey of Industries, 2003-2004-ன்படி வெளிவந்துள்ள விவரப்படி, மராட்டியத்தில் Fixed Capital 83,472 கோடி ரூபாய், குஜராத்தில் 85,788 கோடி ரூபாய், தமிழ்நாடு 46,430 கோடி ரூபாய், 2004 விவரப்படி, Invested Capital மராட்டியத்தில் 1,24,019 கோடி ரூபாய், குஜராத்தில் 1,15,027 கோடி ரூபாய், தமிழ்நாடு 68,330 கோடி ரூபாய்.

எனவே, எப்படித் தமிழ்நாடு இவற்றில் எல்லாம் முதல் நிலையிலே இருக்கமுடியும் என்ற கேள்விக்கு நாமே பதிலைத் தேடிக்கொள்ளவேண்டும்.

இன்னொன்றும் கேட்டார்கள்; எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்திற்கு 900 கோடி ரூபாய் என்றும், கிருஷ்ணகிரி மாவட்டச் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் என்றும், நாங்குநேரி உயர் தொழில் நுட்பப் பூங்கா திட்டத்திற்கு 640 கோடி ரூபாய் என்றும் செலவாகும் எனக் குறிப்பிடப்பட்டுவிட்டு, அதற்கான 2040 கோடி ரூபாயை, நிதியை, நிதிநிலை அறிக்கையிலே ஒதுக்கீடு செய்யவில்லையே, ஏன் என்று கேட்டார்கள். எடுத்த எடுப்பிலே, மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சரியான கேள்வி என்றுதான் தோன்றும்.

ஆனால், அது சரியான கேள்வி என்று அதை மறந்து, நான் பதில் சொல்ல விரும்பவில்லை; விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.

இவற்றிற்கெல்லாம் தேவைப்படும் நிதி, பங்கு முதலீடுகள், Share Capital மூலமாகவும், கடனாகப் பெறுவதன் மூலமாகவும் திரட்டப்படும். பங்கு முதலீடுகள் மூலமாக ஏற்படும் ஈவுத் தொகை, Equity, சிறிய பகுதியேயாகும். இதனை, இந்தத் திட்டங்களை நிறைவேற்ற, TIDCO நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். தேவைப்படும் நிதியின் பெரும் பகுதி, வங்கிகளிடமிருந்தும், நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடனாகப் பெறப்படும். பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கெல்லாம், இந்த முறையில்தான் நிதிக்கான

ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை, அமைச்சராகப் பணியாற்றி யிருந்த நம்முடைய திரு. டி. ஜெயக்குமார் அவர்கள், நன்றாகவே அறிவார்கள் என்று கருதுகிறேன். இது எல்லா ஆட்சிக் காலங்களிலும் பின்பற்றப்பட்டுவரும் வழிமுறையேயாகும்.

இங்கே, நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்றக் கட்சித் தலைவர், திரு. டி. சுதர்சனம் அவர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பினார். கடந்த ஆட்சியில், Aswanth Sugars என்ற நிறுவனம் என்பதன் பேரில் (குறுக்கீடு) - Aswanth Sugars- தானே?- பேரில் நடைபெற்ற விதிமீறல்கள், முறைகேடுகள் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் பின்னணியிலே இருப்பவர்கள் யார், யார்; என்ன நடவடிக்கை என்றெல்லாம் கேட்டார்கள். அதைப்பற்றி எல்லாம் நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏனென்றால், அவருக்கு ஏதேனும் உறுதியளிக்க வேண்டும்; நேற்றைக்கே கோபம் வந்து விட்டது அல்லவா? (சிரிப்பு). ஆகவே, இதற்கும் உறுதியளிக்க வேண்டும். உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு, ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்கு நிச்சயமாகக் கொண்டு வருவோம் என்பதை மாத்திரம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. டி. சுதர்சனம் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இங்கே, தொழில் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, இந்த இரண்டு தலைப்புகளிலும், மொத்தம் 285 வெட்டுத் தீர்மானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நானும் 1957 ஆம் ஆண்டிலேயிருந்து இந்த அவையிலே இருந்திருக்கின்றேன். பேராசிரியரும், 1957-லே என்னோடு இருந்தார். பிறகு Parliament-க்குச் சென்றுவிட்டு இங்கே வந்தார். தொடர்ச்சியாக 1957ஆம் ஆண்டிலேயிருந்து, இதுவரையில் இருந்திருக்கின்றேன். இவ்வளவு வெட்டுத் தீர்மானங்களை நான் பார்த்ததேயில்லை.

அவர்கள் கூட சொன்னார்கள்; ஒவ்வொரு நாளும், இங்கே மானியங்களைத் தொடங்குவதற்கு முன்பு, நம்முடைய சபாநாயகர் அவர்கள், பள்ளிக்கூடத்திலே attendance எடுப்பதுபோல, ஒவ்வொருவருடைய பெயரைக் கூப்பிடுவதும், அவர்களும் 'உள்ளேன் ஐயா' என்று கூறுகின்றவிதத்தைப்போல, (சிரிப்பு) அவர்கள் பெயர் சொல்வதும் - ஆக, 285 வெட்டுத் தீர்மானங்கள்;

இந்த இரண்டு தலைப்புகளிலே மாத்திரம், மானியங்களிலே மாத்திரம் 285 வெட்டுத் தீர்மானங்கள். ஆனால், அந்த 285-ல், அவற்றிலே எல்லாம், அரசுக்கு அல்லது இந்த இலாகாவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற எனக்கு நினைவூட்டுகின்ற, கவனப்படுத்துகின்ற பல வெட்டுத் தீர்மானங்கள் இருக்கின்றன. குறிப்பாகச் சிலவற்றை மாத்திரம், நான் இங்கே நினைவூட்டுவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன். இல்லாவிட்டால், அந்த ‘வெட்டுத் தீர்மானங்கள்’ எல்லாம் ‘வெட்டித் தீர்மானங்கள்’ ஆக ஆகிவிடும்.

(சிரிப்பு). (மேசையைத் தட்டும் ஒலி). எனவே, சிலவற்றை மாத்திரம், நினைவூட்ட விரும்புகின்றேன். கட்சிச் சார்பில்லாமல், பொதுவான முறையில், யார் யார் தந்திருக்கிறார்களோ, அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, அந்தக் கருத்துக்களைச் சொல்லி, அதற்கான விளக்கங்களை, விவரங்களைக் கூற விரும்புகின்றேன்.

செல்வி கே. பாலபாரதி அவர்களின் வெட்டுத் தீர்மானம்; “திண்டுக்கல் தொகுதியில், ஜவுளி ஏற்றுமதி வளாகம், ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க” என்று சொல்லியிருக்கிறார்கள். இது பத்திரிகையிலே வரும்; வாக்களித்தவர்கள் அதைப் படித்துப் பார்த்து வாழ்த்துவார்கள். இதைப்பற்றிப் பரிசீலித்து, அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற உறுதியை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. என். நன்மாறன், ‘மதுரை மாவட்டத்தில், புதிய தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க” என்ற வெட்டுத் தீர்மானம் தந்திருக்கிறார். மாவட்ட ரீதியான ஆய்வுகள் வரும்போது, இதுவும் ஆய்வு செய்யப்பட்டு கிடைக்கப்படும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

டாக்டர் எம். கே. விஷ்ணுபிரசாத், காங்கிரஸ்; “செய்யாறில் இந்த ஆண்டிலேயே சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்படச் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க” என்று கேட்டிருக்கிறார். நான் அவருக்குச் சொல்வேன்; சிப்காட், இராணிப்பேட்டையிலே இருக்கிறது. இராணிப்பேட்டைக்கும், செய்யாறுக்கும் அதிக தொலைவு இல்லை. அங்கிருக்கிற

தொழிற்சாலைகள் செய்யாறு வரையிலே வரலாம். செய்யக் கூடியவர்களுக்கு இராணிப்பேட்டை என்ன? எங்கிருந்தாலும் வரும். செய்யாறு என்றால்தான் வராது. எனவே, விஷ்ணுபிரசாத் அவர்களுக்கு நான் உறுதி அளிக்கின்றேன்; இராணிப்பேட்டையிலே தொழில்கள் வைப்பதற்கு, இடமில்லாத அளவுக்கு மிதமிஞ்சிவிட்டால், செய்யாறுக்கு நிச்சயமாக சிப்காட் தொழிற்பேட்டை வருவதற்கு வழிவகுக்கப்படும் என்று சொல்லிக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. தி. வேல்முருகன்; அவர் பண்ருட்டியிலே பலாப் பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை கேட்டார். அதோடு விடவில்லை; முந்திரிப் பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். முந்திரி ஜூஸ், பலாப்பழ ஜூஸ்; மாம்பழ ஜூஸ் கேட்கவில்லை, கேட்க வேண்டியவர் தேர்தல் சின்னத்தின்படி கேட்கவில்லை. (சிரிப்பு). அந்த இரண்டு ஜூஸும் பிழிவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க அரசு கவனிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

“திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அடங்கிய மறைமலை நகர் தொழிற்பேட்டையில், பெரும்பாலான தொழிற்சாலைகளில், வேலை செய்யும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டிய அவசியம் பற்றி விவாதிக்க” திரு. டி. மூர்த்தி வெட்டுத் தீர்மானம் கொடுத்திருக்கிறார். தொழிலை மாத்திரம் கவனித்தால் போதாது; அந்தத் தொழிலை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களையும் வாழவைக்க வேண்டும் என்ற கவலை உள்ள அரசு, நிச்சயமாக அதையும் கவனிக்கும் என்று நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

கம்பம் இராமகிருஷ்ணன்; “கம்பம் தொகுதியில் தென்னை, திராட்சை சார்ந்த தொழிற்பேட்டையை உருவாக்குவதனுடைய அவசியம் குறித்து விவாதிக்க” என்று கேட்டிருக்கிறார். தென்னையானாலும், திராட்சையானாலும், அதற்கான தொழிற்பேட்டை கம்பத்திலே உருவாக்குவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. இளவழகன், பா.ம.க., ஆற்காடு; “தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சீரமைக்க, முதலீட்டாளர்களுக்குள்ள பல்வேறு கட்டுப்பாடுகளைக் களைந்து, முதலீட்டை ஊக்கப்படுத்த நடவடிக்கையும், தொழில் கட்டுப்பாடுகளை நீக்கியும், மேலும் வட்டி விகிதங்களைக் குறைத்தும், தொழிலாளர் துறை சீர்திருத்தமும், தகுந்த எரிசக்தி விலை நிர்ணயித்தும், தொழில்முறை காலவிரயத்தைக் குறைத்தும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை கூட்டாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க” என்று திரு.

இளவழகன், பா.ம.க., ஆற்காடு தொகுதியைச் சேர்ந்தவர் கேட்டிருக்கிறார், வெட்டுத் தீர்மானத்தில். தொழில் கொள்கை ஒன்று வகுக்கப்பட இருக்கிறது விரைவில். அந்தத் தொழில் கொள்கையிலே சேர்த்துக்கொள்ள வேண்டிய ஷரத்துகளிலே இது ஒன்று என்பதை நான் அவருக்கு உறுதியாக அளிக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

முனைவர் டாக்டர் ஜெயக்குமார்; “நாமக்கல், வாகனத் தொழிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். எனவே, இத்தொழிலை மேம்படுத்தவும், இப்பகுதியிலே உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், நாமக்கல்லில் வாகனத் தொழிற்பேட்டை ஒன்று ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க” என்று சொல்லியிருக்கின்றார்.

நாமக்கல்லில் நடைபெறுகின்ற வாகனத் தொழில், நாட்டிலேயே மிக முக்கியமான தொழில். பெரும் போராட்டங்கள், அறப் போராட்டங்கள், அந்த வாகனங்கள்மூலமாக நடைபெற்றிருப்பதையும், அதைச் சமாளிக்க முடியாமல் சர்க்கார்கள் திணறி இருப்பதையும் நான் அறிந்திருக்கின்றேன். எனவே, வாகனத் தொழிலுக்கு வாகான பல சௌகரியங்களைச் செய்வதற்கு அரசு முனையும். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. விடியல் சேகர் சொல்லியிருக்கிறார், வெட்டுத் தீர்மானத்தில், “வெளிநாட்டு நிறுவனங்கள், புதிய தொழில் தமிழகத்தில் தொடங்கும்போது, 80 சதவிகிதப் பணியாளர்கள் தமிழகத்திற்குள்ளும், அதிலும் குறிப்பாக, தொழிற்சாலை அமையும் இடத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு, முன்னுரிமை வாய்ப்பு வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து