தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 10
பகுதி 3 · 3 / 3
இப்போது அறிவிப்புகள். நீண்டநேரம் பேசப் போவதில்லை. இறுதியாக, சில அறிவிப்புகளோடு முடிக்க விரும்புகின்றேன். அறிவிப்புகள்; தொழில் நயமிக்க அணுகுமுறையும், தொழில் முன்னேற்றத்திலே ஈடுபாடும் கொண்டுள்ள தி.மு.க. அரசின்மீது நம்பிக்கை வைத்து, தொழில் முனைவோர் பேரார்வத்தோடு, தமிழகத்திற்குக் கொண்டுவரக் கருதியுள்ள முதலீடுகளை வெளிப்படையான முறையில் வரவேற்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சலுகைகளையும் காலதாமதமின்றி உரிய நேரத்தில் வழங்கி, மாநிலத் தொழில் வளர்ச்சிக்கு மீண்டும் வழி அமைத்துக்கொடுக்கும் வகையில், தொழில் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவை தொடர்பான முக்கியமான சில அறிவிப்புகளை இப்பொழுது வெளியிட விரும்புகின்றேன்.
‘சிப்காட்’ நிறுவனத்தின் திருப்பெரும்புதூர் மற்றும் ஓரகடம் தொழில் பூங்காக்கள், தொழில் மையங்களாக உருவெடுத்துள்ளன. தினந்தோறும், தமிழகத்தில் தற்போது புதிய தொழில் முதலீட்டுக்கான திட்டங்கள் வந்தவண்ணம் உள்ளன. புதிய முதலீடுகளையொட்டி, புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவைப்படும் நிலங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதால், திருப்பெரும்புதூர் மற்றும் ஓரகடம் தொழில் பூங்காக்களை விரிவாக்கம் செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, மேலும் 2000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
ஹூண்டாய், ஃபோர்டு, மிட்சுபிஷி, பி.எம்.டபிள்யூ., அசோக் லேலண்ட் போன்ற பெரும் மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்ததன் காரணமாக - இதனை யார் யார் அமைத்தது, எந்த ஆட்சியில் அமைத்தது என்று சொல்லவில்லை; இந்த நிறுவனங்கள் தமிழகத்திலே மோட்டார் உற்பத்தி நிறுவனங்களை ஏராளமாக
அமைத்ததன் காரணமாக - சென்னை, “ஆசியாவின் டெட்ராய்ட்” (Detroit) என்று வர்ணிக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி). இந்தியாவின் மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தியில், 35 சதவிகிதம், சென்னையில் உற்பத்தியாகின்றன. இந்த உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்களில் பலரும், பெரும் ஏற்றுமதியாளர்களாகவும் உள்ளனர். இத்துறையில் புதிய முதலீடுகளின்மூலமாக ஏற்படக்கூடிய தேவையை நிறைவு செய்ய, ஓரகடம் ‘சிப்காட்’ தொழில் பூங்காவில் மோட்டார் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Automotive Special Economic Zone) ஏற்படுத்தப்படும்.
(மேசையைத் தட்டும் ஒலி).
மிகப் பெரிய சுற்றுலாத் தலமாகவும், கோயில் நகரமாகவும் விளங்குகின்ற மதுரையில், நீண்டகாலமாக பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டும் வகையில், மதுரை அருகில் ‘சிப்காட்’ நிறுவனம் மூலமாக, ஒரு பெரிய தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருள் உற்பத்தி, தமிழகத்தின் தொழில் துறையில் நீண்டகாலமாக ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இத்துறையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினைச் சரி செய்யும்வகையில், ரூபாய் 115 கோடி மதிப்பில், 11 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் (Reverse Osmosis) சாதனங்களை அமைக்க, நிதியுதவி கோரி மாண்புமிகு பிரதமரிடம் நான் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
தோல் பதப்படுத்தும் மற்றும் தோல் பொருள் உற்பத்தி வளாகம் ஒன்று அமைக்க, சென்னை அருகில் ‘சிப்காட்’ நிறுவனம் மூலமாக 250 ஏக்கர் பரப்பில் ஒரு புதிய தோல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
கரூர் மாவட்டம், புகலூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2,30,000 மெட்ரிக்
டன் காகிதம் உற்பத்தியாகி வருகிறது. இந்த உற்பத்தியை அதிகரிக்க, தற்போது காகிதம் தயாரிக்கும் இயந்திரத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்யும் திட்டத்தை, மொத்தம் 650 கோடி ரூபாயில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் ஆண்டொன்றிற்கு மேலும் கூடுதலாக, 1,20,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய அதி நவீன தொழில்நுட்பத்துடனான காகித இயந்திரம் அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 30 கோடி முதலீட்டில், ஐந்து புதிய காற்றாலைகளை நிறுவி, 6.25 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
(மேசையைத் தட்டும் ஒலி).
சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி (Co-generation) செய்வதன் மூலம் அந்த ஆலைகளின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கும் உதவுகிறது. கள்ளக்குறிச்சி இரண்டாவது கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 13.50 கோடி செலவில் 6 மெகாவாட் திறன் கொண்ட ஒரு இணை மின் நிலையம் அமைக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
சேலம் மற்றும் அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில், 6 கோடி ரூபாய் செலவில் எத்தனால் எனும் எரிபொருள் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
பெரம்பலூர் மாவட்டம், தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டம் என்பதை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின்மூலம் (டிட்கோ) இம்மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில் பூங்காவோடு சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றினையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தப் பகுதிக்கு படிப்படியாக ரூபாய் 5,000 கோடி அளவிலான முதலீடும், (மேசையைத் தட்டும் ஒலி) ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
தமிழகத்திலே உள்ள இயற்கை எரிவாயு, பெரும்பகுதி காவேரிப் படுகை பகுதியிலே காணப்படுகிறது. புதிய ஆய்வு தொழில்நுட்பத்தின்மூலமாக, அந்த இருப்பைப் பயன்பாட்டிற்குக்
கொண்டுவர இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலே உள்ள கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இக்குறிக்கோளை அடையும்வகையில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான புதிய இணைத் துறை நிறுவனத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கும். இப்புதிய நிறுவனம் தமிழகம் முழுவதும் தேவையான குழாய் கட்டமைப்பை அமைத்து, இயற்கை எரிவாயு விநியோகத் தொகுப்பை (Natural gas distribution network) உருவாக்கும். அரசின் இப்புதிய முயற்சி, இம்மாநிலத்தின் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, தமிழகத்தின் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக்கும், மாநில அரசின் வருவாய்ப் பெருக்கத்திற்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம்.
(மேசையைத் தட்டும் ஒலி).
தற்போது 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு எடுத்துச் செல்லும் லாரி வாடகையைக் கரும்பு விவசாயிகளே செலுத்துகின்றார்கள். பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கான லாரி வாடகையை இந்த ஆலைகளே ஏற்றுக்கொள்கின்றன. தேர்தல் அறிக்கையிலே கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றும்வண்ணம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு பத்து கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளிருந்து கொண்டுவரப்படும் கரும்புக்கான லாரி வாடகையை, வரும் அரவைப் பருவத்திலிருந்து சர்க்கரை ஆலைகளே ஏற்றுக்கொள்ளும்.
(மேசையைத் தட்டும் பலத்த ஒலி). இதனால் ஆண்டுக்குக் கூடுதலாக 40 கோடி ரூபாய் செலவாகும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள பலன்களையெல்லாம் ஒன்று திரட்டி, அத்துறை மேலும் வேகமாகப் பயனுள்ளவகையில் வளர்ச்சியடைய, புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை ஒன்று வகுத்து அறிவிக்கப்படும்.
4-7-2000 அன்று, ‘டைடல்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கி வைக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டபடியும், தொடர்ந்து
தேர்தல் அறிக்கையிலும், நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடியும், இரண்டாவது ‘டைடல்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று, சென்னை தரமணியில் நிறுவப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
தமிழக அரசும், மத்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவனமும், தனியார் துறையும் இணைந்து, கோவையில் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை நிறுவும். (மேசையைத் தட்டும் ஒலி).
சென்னையில் மட்டும் பெரிதும் மையம் கொண்டுள்ள தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்களிலும் பரவி, பலனளிக்கும்வகையில் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
மத்திய அரசு அறிவித்துள்ள, உலக தரத்திலான தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கான இந்தியக் கல்வி நிறுவனம் சென்னைக்கு அருகே நிறுவப்படும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வெகுவான முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகளை வகுத்துச் செயல்படுத்த, முன்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அமைக்கப்பட்டு, இடைக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாமல் விடப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பணிமுனைப்புக் குழு (I.T. Task Force) ஒன்று மீண்டும் உருவாக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
மின்னணு ஆளுமை (e-governance) நகரங்களில் உள்ள மக்களைப் போலவே கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்படும், தமிழகம் ஒரு முன்னோடி மின்னணு ஆளுமை மாநிலமாகத் திகழும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
தற்பொழுது சென்னையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கென தனியே சொந்தமாகக் கட்டடம் அமைவதற்கேற்ற நிலமும், ஒரு கோடி ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).
முன்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, நான்கு வழித்தடங்கள் கொண்ட சாலையாக அமைக்கப்பட்டு, இடையில் தொய்வு ஏற்பட்ட, தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை (I.T. Expressway) திட்டத்தின் முதற்கட்டமாக, பழைய மாமல்லபுரம் சாலையில் தரமணி முதல் சிறுசேரி வரை உள்ள சாலையை, உலகத் தரம் வாய்ந்த ஆறு வழித்தடங்கள் கொண்ட சாலையாக மேம்படுத்தும் பணிகள் (மேசையைத் தட்டும் ஒலி) 205 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இச்சாலையினை மேம்படுத்தும் வகையில், இரண்டாம் கட்டமாக சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரையுள்ள சுமார் 25 கிலோ மீட்டர் நீள சாலையை, ஆறு வழித்தடங்கள் கொண்ட சாலையாக மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் மற்றும் ஓரகடம் பகுதிகள் முக்கியமான தொழில் மையமாக உருவாகி வருகிறது. அதனால், தொழிற்சாலைகளின் வசதிக்காக சாலைக் கட்டமைப்பினை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. எனவே, 24 கிலோ மீட்டர் நீள சிங்கப்பெருமாள் கோவில் - திருப்பெரும்புதூர் சாலை மற்றும் 20 கிலோ மீட்டர் நீள வண்டலூர் - வாலாஜாபாத் சாலை ஆகிய சாலைகளின் முக்கிய பகுதிகளை ஆறு வழித்தடச் சாலையாகவும் பிற பகுதிகளை நான்கு வழித்தடச் சாலையாகவும், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
(மேசையைத் தட்டும் ஒலி).
இந்த இனிய அறிவிப்புக்களோடு, நீங்கள் அளித்த அருமையான கருத்துக்கள், அவை எதிர்க் கருத்துக்களானாலும், ஆதரவுக் கருத்துக்களானாலும், அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அவற்றின்படி தொழில் துறை மானியத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறி, இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
