தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 9
பகுதி 3 · 3 / 4
இந்த உரையின் ஒரு கட்டமாகத் தொடங்கப்பட்ட இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் பற்றி இந்த அவைக்குச் சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன்.
சென்னைக்கு அருகே உள்ள நாவலூரில் உருவாக்கப்பட்டுள்ளது போலாரிஸ் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா. இதில் ஆயிரத்திற்கும் மேலான மென்பொருள் வல்லுநர்கள் பணி புரிவார்கள். போலாரிஸ் நிறுவனம் இந்தியாவிலுள்ள 15 முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று. இந்த மென்பொருள் பூங்காவை 24-5-2000 அன்று நான் திறந்து வைக்க இருக்கிறேன். இங்கே ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பணிபுரிவார்கள் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
போலாரிஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. அருண் ஜெயின் 2000 ஏப்ரல் 20 ஆம் தேதி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :
"I spent for 30 years of my life in Delhi and decided to set up Polaris in Chennai with the Management team because I like the environment and ethical values prevailing in the State of Tamil Nadu. With the support of State Government and people of the State, we are able to grow at a pace of more then 100% per year. I admire your leadership, which is giving this conducive environment for companies to flourish in the State of Tamil Nadu.
அதைப்போலவே மறைமலை நகரில் தமிழ்நாடு அரசு நிறுவனமான TIDCO மத்திய அரசு நிறுவனமான TCIL மற்றும் ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகுரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவீனமான Optic Fibre Telecom Cables உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 28 கோடி ரூபாய் செலவிலே நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையை 26-5-2000 அன்று நான் தொடங்கி வைக்கவிரும்புகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).
அடுத்து 2,800 ஏக்கர் பரப்பளவில், 110 கோடி ரூபாய் செலவில் சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது பெருந்துறை வளர்ச்சி மையம் - Perundurai Growth Centre - இந்த மையத்தில் ஈரோடு மஞ்சள் வளாகமும் அமைந்துள்ளது. இந்த மையத்தையும், மஞ்சள் வளாகத்தையும் ஜூலை 1 ஆம் தேதி அன்று காலையிலே நான் திறந்து வைக்கிறேன் என்பதை குறிப்பாக நம்முடைய பெரியசாமி அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு பெரியசாமிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் முதலில் கூறியபடி சென்னையில் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் மென்பொருள் பூங்கா ஜூலை 4 அன்று திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டு இருக்கின்றேன். தொடங்கப்படும் அந்த நாள்,
அந்த 4 ஆம் தேதி அன்று உலகப்புகழ் பெற்ற 28 நிறுவனங்கள் அங்கே தங்கள் மென்பொருள் தயாரிப்பைத் தொடங்கிட இருக்கின்றன. அந்தத் திட்டத்தை இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
டிட்கோவும், டாக்டர் ஏ.வி.கே. ரெட்டி என்னும் அமெரிக்க வாழ் இந்தியரும் இணைந்து திருப்பெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் 27 கோடி ரூபாய் செலவில் Condoms உற்பத்தி செய்யும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட Technical Products தொழிற்சாலை ஜூலைத் திங்களில் தொடங்கப்படவுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் 19.90 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது, ஏற்றுமதித் தொழில் மேம்பாட்டுப் பூங்கா- Export Promotion Industrial Park - இந்தப் பூங்கா அமைப்பதில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகமும் பங்கெடுத்துள்ளது. ஜூலைத் திங்களில் தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
திருப்பெரும்புதூரில் 500 ஏக்கர் பரப்பளவில் 202 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழில் பூங்காவும் ஜூலைத் திங்களில் தொடங்கப்படவுள்ளது.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு மைய சக்தியாக விளங்கும் நாங்குநேரி உயர் தொழில் நுட்பப் பூங்கா மொத்தம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. டிட்கோவும், இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் இணைந்து இந்தப் பூங்காவை உருவாக்கி வருகின்றன. இந்த உயர் தொழில் நுட்பப் பூங்கா, மத்திய அரசின் சமீபத்திய ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் சிறப்புப் பொருளாதாரப் பகுதியாக - Special Economic Zone - அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்பற்றி நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் சிலபேர் இங்கே சொன்னார்கள். இப்படிப்பட்ட பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் ஆரம்பித்து என்ன பயன் என்று சொன்னார்கள். நம்முடைய மோகன் கந்தசாமி அவர்கள் பேசும்போது கூட “பெரிய தொழில்களை ஆரம்பிக்கிறீர்கள். சிறிய தொழில்கள் எல்லாம் என்ன ஆயிற்று” என்று கேட்டார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்று நாம் விவாதித்துக்
கொண்டிருக்கிற மானியமே, பெரும் தொழில்கள் பற்றிய மானியம் தான். இதிலே “சிறு தொழில்கள் என்ன ஆயிற்று” என்று அவர்கள் கேட்டார்கள். சிறுதொழில்களைப் பற்றியும் இந்த அரசு கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. “சில தொழில்கள் செத்து விட்டனவே, மூடப்பட்டுவிட்டனவே” நம்முடைய சுப்பராயன் அவருக்கே உரிய அந்த நவீன பாஷையில் அல்லது கரடு முரடான பாஷையில் “பிறப்பைச் சொல்லுகிறீர்கள், இறப்பைச் சொல்லவில்லையே” என்று சொன்னார்கள்.
என்ன செய்வது? ஒரு வீடு என்று இருந்தால், அங்கே இறந்தவர்களும் இருப்பார்கள், பிறப்பவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள், அது சகஜம், இயற்கை. இரண்டு கிழங்கட்டை இருந்தால் செத்துப் போய்விடும். அதுமாதிரி நலிந்த தொழில்கள் இருந்தால் அவை செத்துப் போய்விடும். புதுத் தொழில்கள் வந்தால் அதைப் பாராட்டி கண்ணே, மணியே என்று கொஞ்ச வேண்டும். அப்படிக் கொஞ்ச வேண்டுமென்றுதான் நான் சுப்பராயனைக் கேட்டுக்கொள்கிறேன்.
அவர் நாங்குநேரியைப் பற்றிச் சொன்னார். அங்கே சுமார் 9,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 55,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டு முதலீடு சுமார் 8,000 கோடி நாங்குநேரிக்கு வரும். இங்கே நிறுவப்படும் தொழில் நிறுவனங்கள் மூலம் நம் நாட்டிலே உள்ள மற்ற நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி எடுத்துச் செய்யலாம். தொழில் நுட்பம் உயரும். தூத்துக்குடி துறைமுக உபயோகம் அதிகரிப்பதால் அதன் விரிவாக்கம் நடைபெற வழிவகுக்கும்.
அயல்நாட்டு முதலீடுகளை மிகவும் பெருக்குகின்ற நடைமுறை இடையூறுகள் இந்தத் திட்டத்தில் அறவே களையப்படும். இந்த Special Economic Zone-ல் அந்த நிலைமை எல்லாம் அறவே களையப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஜூலைத் திங்களில் ஆரம்பித்து வைக்கப்படவிருக்கிறது இந்த நாங்குநேரி பூங்கா.
மகளிர்க்கான உயிரியல் தொழில் நுட்பப் பூங்கா 6.70 கோடி ரூபாய் முதலீட்டில் கேளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 1000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய பூங்கா வரும் ஆகஸ்ட் மாதத்திலே தொடங்கப்படும்.
Tanflora Infrastructure Park; 24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலரைப் பதப்படுத்தும் தொழில் பூங்கா ஒன்று
ஓசூரில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இது 2000 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செயல்படத் தொடங்கும்.
இஃதன்னியில் சென்னை வர்த்தக மையம்; தமிழ்நாடு அரசு, (TIDCO) ஆகியவை இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தோடு (ITPO) இணைந்து கண்காட்சி மற்றும் மாநாட்டுக் கூடத்துடன் கூடிய வர்த்தக மையம் ஒன்றினை நந்தம்பாக்கத்தில் அமைக்கின்றன. தமிழ்நாடு அரசும், டிட்கோ நிறுவனமும் இதற்காக அனைத்து வசதிகளுடன் 20 ஏக்கர் நிலத்தினை வழங்கியுள்ளது, இவ்வளாகம் 20.000 சதுர மீட்டர் பரப்பளவில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும், சாதனங்களுடனும் அமைய இருக்கிறது.
முதல் கட்டத்தில் 5000 சதுர மீட்டர் பரப்புடைய கட்டடம் கட்டப்படும். இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் மிகப் பெரிய சர்வதேசக் கண்காட்சியும், ஆண்டுதோறும் நடைபெறும். இந்திய சர்வதேச தோல்பொருள் கண்காட்சியும் இந்த வளாகத்தில் நடத்தப்படும். இவ்வளாகத்திற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் 30-1-2000 அன்று அடிக்கல் நாட்டியுள்ளார். 2000 நவம்பரில் திறப்பு விழா நடைபெறும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமான இன்னொன்று; இப்போது இந்தத் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானப் புதுமைக்கு இடையே Bio-Technology என்ற அந்தத் தொழில் பற்றியும் - உயிரியல் தொழில் நுட்பத்தைப் பற்றியும் - தமிழக அரசு இன்றைக்குக் கவலை கொண்டிருக்கிறது, உயிரியல் தொழில் நுட்பத் தொழில் மண்டலம் ஒன்றை நிறுவிட TIDCO மூலமாக நாம் திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக 20 கோடி ரூபாயில் உயிரியல் தொழில் நுட்பவியல் ஊக்க மூலதன நிதி ஒன்றை உருவாக்கவும் உத்தேசித்திருக்கிறோம்.
உயிரியல் தொழில் நுட்பத் தொழில்களைத் தொடங்க முன்வருவோருக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிதியுதவியும் வழங்கப்பட விருக்கிறது.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர மோட்டார் ஸ்பிரிட், அதிவேகப் பயன்பாட்டிற்கு
உகந்த டீசல் ஆகியவற்றின் விற்பனை மையத்தினை அமைத்து வருகிறது. இம்மையம் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும்.
ப்ராக்சேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை 50 கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இத் தொழிற்சாலை, தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை - industrial gases - தயாரித்து வழங்கும். இத் தொழிற்சாலையும் டிசம்பர் மாதம் முதலே செயல்படத் தொடங்கும்.
செயிண்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை; இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 480 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள செயிண்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை சோதனை உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. ஜூன் மாதத்திற்குள் வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கிவிடும். இதன் மூலம் 450 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். அங்கு இரண்டாம் கட்டமாக, 3 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் டோலமைட் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்சாலையும் இந்த ஆண்டிலேயே உற்பத்தியைத் தொடங்கவுள்ளது.
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பென்னார் ரிபைனர்ஸ் லிமிடெட் கம்பெனியின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 500 ஏக்கர் நிலப் பரப்பில் அமையும் இத் தொழிற்சாலை 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்படத் தொடங்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
