தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 9
பகுதி 4 · 4 / 4
மேலும், தருமபுரி மாவட்டத்தில் 432 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் நூறு சதவிகிதம் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒருங்கிணைந்த ஜவுளி ஆலை ஒன்றினை அமைத்திட TIDCO நிறுவனம், திருவாளர்கள் வாசவி தொழில் குழுமத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் பணியில், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள
பெரிய நிறுவனங்கள் பங்கேற்கும். வர்த்தக ரீதியான உற்பத்தியினை இந்நிறுவனம் அடுத்த ஆண்டில் தொடங்கும். (மேசையைத் தட்டும் ஒலி).
சேலம் மாவட்டம் கஞ்சமலைப் பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டம் வேதியப்பன் மலை - நம்முடைய அப்துல் லத்தீப் அவர்கள் சொல்லுவார்கள் - கவிதி மலைப் பகுதிகளிலும், ஏறத்தாழ 450 மில்லியன் டன் அளவுக்குக் குறைந்த தரமுடைய இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன என்பது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த எம்.எல். தஸ்தூர் அண்டு கம்பெனி மூலமாக TIDCO சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
500 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 2 மில்லியன் டன் இரும்புத் தாதுக்களை கஞ்சமலைப் பகுதியிலும், ஒரு மில்லியன் டன் இரும்புத் தாதுக்களை திருவண்ணாமலைப் பகுதியிலும் தோண்டி எடுத்தல், இரும்புத் தாதுக்களை 35 விழுக்காட்டிலிருந்து 67 விழுக்காடு அளவிற்கு வீரியமுள்ளதாக ஆக்குதல்; இந்த இரும்புத் தாதுக்களைப் பயன்படுத்தி, சேலத்தில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் இரும்புத் துண்டங்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்தல் ஆகிய திட்டங்களை TIDCO நிறைவேற்றிட உள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
அதைப்போலவே, 80 கோடி ரூபாய் முதலீட்டில் நாம்தா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு நவீன ஆடை தயாரிப்புப் பிரிவினை அமைத்திட TIDCO திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளில் கலை நுணுக்கத்துடன் கூடிய 8,000 கிலோ பின்னலாடைகளையும், நெய்யப்பட்ட 70,000 மீட்டர் ஆடைகளையும் உற்பத்தி செய்வதுடன், 4,500 கிலோ எடையுள்ள நூல்களுக்குச் சாயம் ஏற்றும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும் இப்பிரிவு அமையும்; இத்துடன் ஆயத்த ஆடை தயாரிக்கும் பிரிவு ஒன்றும் இவ்வளாகத்திலே அமையும்.
இதற்காக, 40 கோடி ரூபாய் மதிப்புடைய இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படும். முதல் ஐந்தாண்டுகளில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்யும். இத்திட்டத்தின் முழுமையான உற்பத்தி 2001 மார்ச் மாதத்திற்குள் தொடங்கும்.
நாட்டிலேயே உயிரியல் தொழில்நுட்பத் தொழில் மண்டலத்தினை உருவாக்கிச் செயல்படுத்தும் - நான் முதலிலே குறிப்பிட்ட படி - முதல் மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. (மேசையைத் தட்டும் ஒலி). உலகில் இத்துறையில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இம்மண்டலத்தை வழி நடத்தும். உயிரியல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தை ஒரு முன்னணி மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில் அரசு இந்த மண்டலத்தை அமைக்கிறது.
உயிரியல் தொழில்நுட்பத் துறையின் பல்வேறு பலன்களைக் கருத்தில் கொண்டு, ஒரு முன்னோடி உயிரியல் தொழில் நுட்பக் கொள்கை உருவாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் 24-3-2001 அன்று நான் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி, அந்தக் கொள்கையை உருவாக்க வேளாண்துறை விஞ்ஞானி டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் தலைமையில், மத்திய அரசு முன்னாள் உயிரியல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் டாக்டர் எஸ். இராமச்சந்திரன், மருந்துகள் துறை ஆலோசகர் டாக்டர் எம்.
டி. நாயர், தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ். சந்திரசேகர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபுத் துறை பொறியமைப்பு உயிரியல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் டாக்டர் கே. தாமலிங்கம், அண்ணா பல்கலைக்கழக உயிரியல் தொழில் நுட்பத் துறை மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. காளிராஜ், ஸ்பிக் நிறுவனத்தின் உயிரியல் தொழில்நுட்பப் பகுதித் துணைத் தலைவர் டாக்டர் ஜோசப் தாமஸ், ஸ்பிக் ஆய்வக உயிரியல் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் டாக்டர் குந்தளா ஜெயராமன், அரசு தொழில் துறைச் செயலாளர், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிருவாக இயக்குநர் ஆகியோரைக் கொண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மூன்று மாத காலத்தில் அரசுக்கு அறிக்கையை அளிக்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு உயிரியல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
இவ்வாறு சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாத்திரமல்லாமல், திருப்பெரும்புதூரிலும், திருவண்ணா
மலையிலும், சேலத்திலும், தருமபுரியிலும், கோவையிலும், ஈரோட்டிலும், நாங்குநேரியிலும் என்று தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க நாம் முடிவு செய்துள்ளோம். அந்தப் பணிகளைத் தொடர்ந்து ஆர்வத்தோடு வேகவேகமாக நடத்திக் கொண்டு வருகிறோம். விரைவிலே இங்கே குறிப்பிட்டவாறு அந்த நாட்களிலே இவையெல்லாம் தொடங்கி, பணிகளை ஆற்றும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கே மாண்புமிகு உறுப்பினர் சுந்தரம் அவர்கள். ராசிபுரம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிற வருத்தத்தோடு இருக்கிறார். அந்த வருத்தத்தில், அவருக்கு ஏற்பட்ட கோபத்தில் அரியலூரை ஒரு தாக்குத் தாக்கினார்; என்னை ஒரு தாக்குத் தாக்கினார். “எல்லாமே கொள்ளை போயிற்று” என்று சொன்னார்.
கொள்ளை போய்க்கொண்டிருந்த காலமெல்லாம் கொள்ளை போயிற்று. (மேசையைத் தட்டும் ஒலி). இப்பொழுது நாம் நல்ல காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, அந்தக் கவலை நண்பர் சுந்தரம் அவர்களுக்கு இருக்கத் தேவையில்லை. சுந்தரமும், அவருடைய கட்சிக்காரர்களும், அடிக்கடி அரியலூரைப்பற்றிப் பேசுவார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள்கூட, இன்றைக்குப் பேசவில்லை யானாலும், பல நேரங்களில் “அரியலூர் சிமெண்ட் ஆலையை விற்றுவிடப் போகிறார்கள்” என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு இந்த அவையிலே உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அரியலூர் சிமெண்ட் ஆலையை நிச்சயமாக இந்த அரசு விற்காது, விற்காது என்பதைத் திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). ஏனென்றால், அதை அறிவிப்பாகச் சொல்கிறேன். அரியலூர் சிமெண்ட் ஆலையையோ அல்லது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் எந்தப் பிரிவையுமோ, தனியார்மயமாக்கிட எந்தவிதமான நடவடிக்கையும், எந்தவிதமான முயற்சியும், எந்தவிதமான முடிவும் எந்தக் கட்டத்திலும் இந்த அரசால் எடுக்கப்படவில்லை; எடுக்கப்படமாட்டாது என்பதை மீண்டும் மீண்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால், தினமும்
அறிக்கை வருகிறது; அம்மையாருடைய அறிக்கை. “அரியலூர் சிமெண்ட் ஆலையை விற்கப்போகிறார்; அவருடைய மருமகனுக்கே கொடுக்கப்போகிறார்; என்று தினமும் அறிக்கை வந்துகொண்டிருக்கிறது. நீங்களெல்லாம் பார்த்துப் படித்திருப்பீர்கள். விற்பதையே ஒரு பெரிய பாவம் என்று இன்றைக்குச் சொல்கிறார்களே, ரைட், பாவம்தான், நான் விற்கப் போவதில்லை. விற்றால், சுப்பராயன் ஏற்றுக்கொள்கிறாரோ, பழனிசாமி ஏற்றுக் கொள்கிறாரோ, அல்லது நம்முடைய டி.
மணி ஏற்றுக் கொள்கிறாரோ, ஹேமச்சந்திரன் ஏற்றுக்கொள்கிறாரோ, இல்லையோ, மற்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, இல்லையோ, நானே ஏற்றுக்கொள்ள மாட்டேன், அதை. ஏனென்றால், நான் ஒரு பொதுவுடைமைவாதி என்பதை நான் சொல்லியிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). தமிழ் நாட்டிலே உள்ள பொதுவுடைமைக்காரர்கள் சில பேருக்கு என்னைப் பிடிக்காததற்குக் காரணமே, இவன் போட்டிக்குப் பொதுவுடைமைவாதியாக இருக்கிறானே என்பதுதான்.
அதற்காகவே சில பேருக்குப் பிடிக்கவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி). அந்த அளவுக்கு நான் பொதுவுடைமைவாதி என்று மனதிலே கை வைத்துப் பார்த்து, எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். எனவே, இருப்பதைத் தனியார்மயமாக ஆக்குவதை, தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில், தனியார் மயத்தை வரவேற்கிற ஒரே சூழ்நிலையில், இருப்பதை, இருக்கின்ற பொதுத் துறையை, தனியார்மயமாக ஆக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் எப்போது வந்தாலும் அதை எதிர்க்கக் கூடியவன்தான் கருணாநிதி என்பதை இந்த அவையிலே மீண்டும் மீண்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
(மேசையைத் தட்டும் ஒலி).
இவர்கள் என்ன செய்தார்களாம்? இன்று, தி.மு.க. ஆட்சியிலே, “அரியலூர் சிமெண்ட் ஆலையை விற்கப் போகிறார்கள்” என்று சொல்லி, தினம் தினம் ஆருடம் கணித்துக் கொண்டு, அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்களே, இவர்கள் என்ன செய்தார்களாம்? ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான், அரியலூர் சிமெண்ட் ஆலை மாத்திரமல்லாமல், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, மாயனூர்
சிமெண்ட் குழாய் ஆலை, ஆலங்குளம் கல்நார் தகட்டாலை, விருத்தாசலம் கல்நார் குழாய் ஆலை; ஆக மொத்தம் 'TANCEM' நிறுவனத்தையே விற்பனை செய்து, தனியார்மயமாக்க, 12-12-1994 அன்று பத்திரிகையிலே விளம்பரம் செய்யப்பட்டது. உண்டா? இல்லையா? 12-12-1994 அன்று ...... (குறுக்கீடு).
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த கழகத்தின் சார்பிலே அன்றைக்குப் பெருமுயற்சி எடுத்து, அன்று நம்முடைய இன்றைய அமைச்சர், அன்றைய கழகத்தினுடைய பொருளாளர் ஆற்காடு வீராசாமி அவர்களைக் கொண்டுதான் உயர்நீதிமன்றத்திலே வழக்குத் தொடரச் சொல்லி இடைக்காலத் தடையாணை வாங்கப்பட்டது அப்போதுதான். அரியலூரை மாத்திரம் அல்ல; இப்போது சொன்ன இவ்வளவு நிறுவனங்களையும் சேர்த்து விற்பதற்கு, தனியார் மயமாக்குவதற்கு எடுத்த முயற்சியை வீராசாமி அவர்களால் வழக்குப் போடப்பட்டு அதை அன்றையதினம் தடுக்க முடிந்தது.
அந்த வழக்கில், அ.தி.மு.க. அரசு ஒரு Counter Affidavit போட்டார்கள். அதைப் படித்துக் காட்டுகிறேன். அவர்களோடு சேர்ந்துகொண்டு, எங்களை கிண்டல் பண்ணுகிறார் (சிரிப்பு) எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். நான் - சேர்ந்ததைத் தப்பாகவெல்லாம் சொல்லவில்லை. அதற்காகச் சொல்லவில்லை - எண்ணிப் பாருங்கள் என்பதற்காகச் சொல்கிறேன். அந்த Affidavit-லே என்ன இருக்கிறது தெரியுமா? அந்த Counter Affidavit-லே "In the present situation, there is no shortage of cement in the market and the social obligation of the third respondent (TANCEM) to supply an essential commodity does not exist.
As already stated the interests of the workers will be adequately protected". அதாவது, “தற்போதைய சூழ்நிலையில், சந்தைகளில் சிமெண்ட் பற்றாக்குறை இல்லை, அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் தமக்குள்ள சமுதாயக் கடமையை மூன்றாவது பிரதிவாதியான டான்செம் நிறைவேற்றவில்லை.”
- அதை மூன்றாவது பிரதிவாதியாகவே ஆக்கிவிட்டார்கள். Government நிறுவனம் அது. அதை மூன்றாவது பிரதிவாதியாக ஆக்கி - அதற்கு அக்கறை இல்லை. ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதுபோல், தொழிலாளர்களின் நலன்கள்
போதுமான அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து, "The Government of Tamil Nadu are not in a position to provide substantial funding due to the present financial situation and other priorities." அதாவது “தற்போதைய நிதி நிலவரம் மற்றும் பிற முன்னுரிமைகள் காரணமாக, மேலும் நிதி வழங்கும் நிலையிலே தமிழக அரசு இல்லை. அந்த ஆலைக்கு இல்லை.”
என்று மறுபடியும் கடைசியாகச் சொல்கிறார்கள், பாருங்கள், "The Government have taken a decision that wherever possible the investment in the Public Sector Companies may be disinvested." அதாவது “பொதுத்துறை கம்பெனிப் பிரிவுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை எங்கெங்கு முடியுமோ, அங்கெல்லாம் திரும்பப்பெற அரசு ஒரு முடிவு செய்துள்ளது” என்று அ.தி.மு.க.
அரசு கொடுத்த Affidavit-லே குறிப்பிட்டுவிட்டு, இந்த இலட்சணத்திலே எங்களைப் பார்த்து, “நீங்கள் அரியலூர் சிமெண்ட் ஆலையை விற்கப்போகிறீர்கள்” என்று சொல்வது, (மேசையைத் தட்டும் ஒலி) மயிலைப் பார்த்து, ஏதோ பழித்த கதையாகத்தான் இது இருக்கிறது.
நாகரிகமாகச் சொல்கிறேன். ஏதோ என்று, அந்த அளவுக்கு வேண்டுமென்றே இந்த அரசு மீது, எந்தத் துறையானாலும், அந்தத் துறையை மையப்படுத்தி, புகார் சொல்ல, புழுதி வாரித் தூற்ற அ.தி.மு.க. வின் நண்பர்கள், அதனுடைய தலைவர் அறிக்கைகள் மூலமாகச் செய்கின்ற முயற்சிகள் எடுபடாது என்பதையும், தொழில் வளர்ச்சிக்காக இந்த அரசு..... (குறுக்கீடு).
**திரு. சோ. பாலகிருஷ்ணன் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரே ஒரு விஷயம். இன்று தனியார் சிமெண்ட் ஆலைகள் எல்லாம் மிக நவீனமான இயந்திரங்களை வைத்து சிறப்பான முறையில், சிமெண்ட் தயார் செய்வதன் மூலமாக அவர்கள் குறைந்த விலையில் தயார் செய்து, நிறைந்த விலையில் விற்கின்ற வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த சிமெண்ட் ஆலைகளை நவீனப் படுத்துவதற்கு நீங்கள் என்ன முயற்சிகளை எடுத்திருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அந்த விடையை விளக்கத்தோடு அளிக்கிறேன். இப்போதுகூட “அரியலூர் சிமெண்ட் ஆலையினுடைய உற்பத்தி குறைந்து போய்விட்டது” என்று அறிக்கையிலே சொல்லிக்கொண்டு வருகிறார்கள்; “உற்பத்தி எல்லாம் குறைந்து போய் விட்டது கருணாநிதி ஆட்சியிலே” என்று சொல்கிறார்கள்.
ஒன்றும் குறையவில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலே 1991-92-லே அரியலூர் சிமெண்ட் உற்பத்தி 3,33,000 டன், 1992-93-லே 4,13,000 டன், 1993-94-ல் 4,34,000 டன், 1994-95-ல் 3,77,000 டன், 1995-96-ல் 4,29,000 டன். கழக ஆட்சியிலே 1996-97-ல் 4,63,000 டன், குறையவில்லை. 1997-98-ல் 5,38,000 டன். 1998-99-ல் 4,87,000 டன், 1999-2000-ல் 4,46,000 டன், குறையவேவில்லை. அந்த அளவிற்கும் ஆகியிருக்கிறது; அந்த அளவைவிட அதிகமாகவும் ஆகியிருக்கிறது.
ஆனால், உற்பத்தி ஒன்றும் குறைந்துவிடவில்லை. ஏன் நட்டம் ஏற்படுகிறது என்று கேட்டால், அதற்கு ஒரேயொரு காரணம், தனியார் நடத்துகிற நிறுவனங்களில் தொழிலாளர்களுடைய ஊதியங்கள், பொதுத் துறையிலே கொடுக்கப்படுகிற அளவிற்குக் கொடுக்கப்படுவதில்லை. இதிலே அதிகச் செலவாகிறது என்பதை ஒத்துக்கொண்டு தான் தீர வேண்டும். நான் தொழிலாளர்களைக் குறை கூறவில்லை. தனியார் பஸ், நம்முடைய போக்குவரத்துக் கழகங்களுடைய பஸ், இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் எப்படியோ, அதுமாதிரிதான், இதிலேயும், தனியார் நடத்தும்போது இலாபம் ஏற்படுகிறது; தனியார் நடத்தும்போது நல்ல உற்பத்தி இருக்கிறது.
இப்படியும் உற்பத்தி குறைந்து போய்விடவில்லை. உற்பத்தி அதே அளவிற்கு இருந்தாலும்கூட, இலாபம் இல்லாததற்குக் காரணம், நாம் தொழிலாளர்களுக்குத் தனியாரைப் போலக் குறைந்த சம்பளம் கூடக் கொடுப்பதில்லை, அவர்களுக்கு நியாயமான சம்பளம் என்ற பெயரில் அவர்களுக்குச் சம்பளம் தர வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரு காரணம்.
நவீனமயமாக்க வேண்டுமென்று கேட்டார்கள். இப்போது ‘அரசு சிமெண்ட்’ வாங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இப்போது அரசு சிமெண்ட் வாங்கப்படுகிறது. ஆனால், வெளி மார்க்கெட்டிலிருந்து வருகின்ற சிமெண்ட் - அது இங்கே சொன்ன ‘அம்புஜா’ மாத்திரம் அல்ல, எல்லா சிமெண்டும் வந்திருக்கிறது. இப்போது மின்சாரத் துறைக்குக்கூட அந்த சிமெண்ட்தான் வாங்கப்பட்டு இருக்கிறது - 85 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அதே நேரத்தில் அரசு சிமெண்ட் 145 ரூபாய் விலை ஆகிறது.
145 ரூபாய் சிமெண்ட் அவர்களால் வாங்க முடியவில்லை. வாங்கினால் திட்டச் செலவு அதிகமாக ஆகும். எனவே, வாங்க முடியவில்லை, ஆகவே வாங்குவதில்லை, அதுவும் ஒரு காரணம். இவற்றை யெல்லாம் சரிபார்த்து - இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்கள் இங்கே சொன்னார்களே, 50 சதவிகிதத்திலே போட்டி போட்டுக் கொண்டு, டெண்டரில் போட்டி போட்டுத்தான் சிமெண்டை விற்க வேண்டியிருக்கிறது. மாற்ற வேண்டுமென்று சொன்னார்கள் - அதை மாற்ற முடியுமா, அதை மாற்றி ஒரு நிலைக்குக் கொண்டுவர முடியுமா என்று பார்ப்பதற்காக, அதைச் சீரமைத்து நவீனப் படுத்துவதற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, நம்முடைய தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் குழு பரிசீலித்து, ஒரு கருத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி அந்தக் கருத்து தெரிவிக்கப்பட்ட பிறகு, நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, மேலும் நவீனப்படுத்தி, இந்தச் செலவினங்களைக் குறைக்கவும், சிமெண்ட் உற்பத்தியை அதிகமாக்கவும், அப்படி அதிகமாக்கும் சிமெண்ட்டுக்கு நல்ல கிராக்கி ஏற்படுத்துவதற்கும், அந்தக் குழுவின் மூலம் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொண்டு, இந்த அளவில் இன்றைக்கு (குறுக்கீடு) இதை முடித்து விடுகிறேன்.
நிறைய வெட்டுத் தீர்மானங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வெட்டுத் தீர்மானங்களுடைய எண்ணிக்கை 111. நம்பர்
நன்றாக இல்லை. (பலத்த சிரிப்பு). இல்லாவிட்டாலும் கூட 111 வெட்டுத்தீர்மானங்களையும் எல்லோரும் திரும்பப் பெற்றுக் கொண்டு, மானியத்தை ஆதரித்து, கோரிய நிதியை அரசுக்குத் தர வேண்டுமென்று கேட்டு அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** திரு. பி. ஆர். சுந்தரம்.
**திரு. பி. ஆர். சுந்தரம் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் முன்பு பேசியபோது, இந்த அழகப்பா சிமெண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான அரசினுடைய நிலத்தை, வேறொரு பினாமி கம்பெனிக்கு 100 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார்கள் என்று கூறினேன். அதனுடைய மதிப்பு 2,000 கோடி என்று கூறினேன். அதை மாற்றி 2,000 இலட்சம், அதாவது 20 கோடி என்று பதிவேட்டில் பதிந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேசும்போது, ராசிபுரம்.....
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** அது ஒன்றுக்கு மட்டும்தான் என்னிடம் அனுமதி வாங்கினீர்கள். அதோடு உட்காருங்கள். நீங்கள் கேட்ட அனுமதியைக் கொடுத்தேன். அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (குறுக்கீடு). நீங்கள் பேச்சிலே ஏதோ தப்பாக 200 கோடி, 20 இலட்சம், 2,000 கோடி என்று சொல்லிவிட்டு, அதை மாற்ற வேண்டுமென்று சொன்னீர்கள். அனுமதி கொடுத்துவிட்டேன், மாற்றிவிட்டார்கள். இனிமேல் உட்காருங்கள்.
