உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 9

பகுதி 2 · 2 / 4

மாத்திரமே இருந்த தகவல் தொழில் நுட்பம், இன்று எங்கும் நிறைந்த பொருளாக ஆகிவிட்டு இருக்கின்றது. மானுட சமுதாயத்தின் சகல துறைகளும் தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு பிரிவும் தகவல் தொழில்நுட்பத்தால், குறிப்பாக "e" என்ற ஒரு எழுத்து மந்திரத்தால்தான் பின்னிப் பிணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. உதாரணமாக,

e-Mail. e-Commerce, e-Medicine, e-Value, e-biz. e-biz என்றால் e-business--, e-Stock, e-Education -என இப்படி "e" என்பது சொல்வதற்கு சாதாரண பொருளாக இருந்தாலும்கூட இந்த "e" தான் இன்றைக்கு உலகத்திலே பிரதானமாக எலக்ட்ரானிக் என்கிற அளவிற்கு எல்லா இடத்திலும் எங்கும் நிறைந்த நாதமாகப் பரவிக் கிடக்கின்றது.

செவிக்கும் கண்ணுக்கும் உலகத்தையே காட்டுகின்ற Internet-ல் இப்போது கண்ணால் பார்க்கிறோம்; காதால் கேட்கிறோம்; இது Internet-னுடைய பயனாக இன்றைக்கு இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் மனத்தைக்கூட நுகரக்கூடிய அளவுக்கு internet வரப் போகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சியிலே உலகம் முன்னேறிக்கொண்டு இருக்கிறபொழுது, அதோடு சேர்ந்து போட்டியிடக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதற்கு இந்தியாவிலே இன்றைக்கு தமிழ்நாடுதான் முதலிடத்தைப் பெற்று இருக்கிறது என்று (மேசையைத் தட்டும் ஒலி) எல்லோரும் பாராட்டுகிறார்கள்; எல்லா ஏடுகளும் புகழ்ந்து எழுதுகின்றன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேதான், ஒவ்வோர் ஆண்டும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொடர்பான கல்வியைப் பெற்று வெளியே வரும் பொறியியல் பட்டதாரிகளினுடைய எண்ணிக்கை மிகவும் அதிகம்: தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் படித்து வெளியே வரும் 23 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில், 13 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொடர்பான கல்வியைப் பெற்று வெளியே வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள்

வேலை செய்து வருகின்றார்கள். இன்றைய அளவில் தமிழகத்தில் 22 ஆயிரம் பேர்களுக்கு மேலாக மென்பொருள் நிபுணர்கள் Software Professionals பணியாற்றி வருகின்றார்கள். 1998 அக்டோபர் முதல் 1999 செப்டம்பர் வரையில் - இந்த ஒரு புள்ளிவிவரத்தை மாத்திரம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 1998 அக்டோபர் முதல் 1999 செப்டம்பர் வரையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 21,371 பேர்களுக்கு விசா வழங்கி உள்ளது; சென்னையில் உள்ள தூதரகம் 21 ஆயிரத்து சொச்சம் பேர்களுக்கு வழங்கி உள்ளது.

இதே கால கட்டத்தில் மும்பை தூதரகத்தில் 9734 விசாக்கள்தான் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதுடில்லி தூதரகத்தில் 5460 பேர்களுக்கும், கல்கத்தா தூதரகத்தில் 1367 பேர்களுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய மென்பொருள் மற்றும் பணி நிறுவனங்கள் சங்கம் - National Association of Software and Services Companies (NASSCOM) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் முதல் நகரம் சென்னை (மேசையைத் தட்டும் ஒலி) என்று அறிவித்துள்ளது.

தகவல் தொழில் நுட்பத்திற்கென்றே, சென்னை, தலைமைச் செயலகத்தில் தனியே ஒரு துறை, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையின் கீழ் 5-10-1998-இல் உருவாக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் தலைமையில் தகவல் தொழில் நுட்ப பணி முனைப்புக் குழு - I.T. Task Force - உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழில் நுட்பத்திற்கென்று, தனியே கொள்கை - I.T. Policy - ஒன்றை உருவாக்கி, அறிவித்துள்ள அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

(மேசையைத் தட்டும் ஒலி).

27-3-1998 அன்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு தமிழக அரசு நிறுவனங்களான TIDCO, ELCOT-ம் இணைந்து 340 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் டைடல் மென்பொருள் பூங்காவை தரமணியில் உருவாக்கி வருகிறது. TIDEL Park - அதைத்தான் நம்முடைய சுப்பராயன் அவர்கள் சொன்னார்கள். கலைஞருடைய கேமரா வெளிச்சமான இடங்களுக்குத்தான்

போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். இந்தக் கேமிராவில் இருக்கிற அதிசயம் என்னவென்றால், இதில் ஒரு லைட்டும் இருக்கிறது. இந்தக் கேமிரா கழுவும்போது இருட்டான இடங்களையும் வெளிச்சமாக்கும். அப்படிப்பட்ட அதிசயமான கேமரா என்பதை நண்பர் சுப்பராயன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

டிட்கோவும், எல்காட்டும் இணைந்து 340 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 8 ஏக்கர் பரப்பளவு 12 இலட்சத்து 80 ஆயிரம் சதுர அடி கட்டடம் கொண்ட 14 தளங்கள் - அமைக்கப்படுகின்றன. இந்த டைடல் பூங்காவிற்கு 21-8-1998 அன்று நான் அடிக்கல் நாட்டினேன். இந்தப் பூங்காவில் தரை வழியாகவும், செயற்கைக் கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப இக்கட்டடத்தின் மேல் தளத்தில் V.S.N.L., DoT ஆகிய நிறுவனங்கள் பிரத்தியேகமான முறையில் வசதிகளை உருவாக்கி வருகின்றன.

இந்தப் பூங்காவிற்கு 6 ஆயிரம் டன் திறன் கொண்ட குளிர்பதன வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமையும் Thermal Energy Storage System உலகிலேயே மூன்றாவது பெரிய சிஸ்டம் ஆகும். ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டில் ஒன்றும், ஜப்பான் நாட்டில் ஒன்றும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளன. இவை மட்டுமின்றி உலகத் தரத்திலான நவீனமயமாக்கப்பட்ட ஏராளமான வசதிகள் இந்தப் பூங்காவில் அமைந்துள்ளன. ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள மென்பொருள் பூங்காக்களைவிட - அங்கேயிருப்பவை இரண்டும் பெரிய மென்பொருள் பூங்காக்கள் அவற்றைவிட இது மிகப் பெரியது.

இதுவரை பூங்காவின் 60 சதவீத இடம் உலகில் பிரசித்தி பெற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 4-ந் தேதியன்று இந்த மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள் என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் முதலாவது Venture Capital Fund அதாவது தமிழ்நாடு மென்பொருள் நிதி என்ற ஒன்றை டிட்கோ நிறுவனம் தொடங்கி, இதுவரை நான்கு மென்பொருள் தொழில் முனைவோருக்கு எட்டு கோடி ரூபாய் முதலீட்டுதவியை வழங்கியுள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுசேரி என்ற இடத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் வளர்ச்சிக்குப் பன்னாட்டுத் தரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்னும் நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தைத் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இந்தப் பகுதிகளில் நிறுவி உள்ளன.

தமிழக அரசு ‘தமிழ்நெட் 1999’ என்ற உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாட்டை சென்னையில் நடத்தியது. அதையொட்டி, தமிழ் விசைப் பலகையும், தமிழ்க் குறியீடுகளும் தரப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவிலுள்ள யூனிகோட் கன்சோர்ட்டியம் என்னும் மையத்தில் தமிழ்நாடு, கூட்டு அங்கத்தினராகப் பதிவு செய்து கொண்டுள்ளது. இதில் அங்கத்தினராகும் முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் Tamil Virtual University - டாக்டர் வா. செ. குழந்தைசாமி அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல் நிலைப் பள்ளிகளிலும் - கடந்த ஆண்டு 600 பள்ளிகள், இந்த ஆண்டு கல்வித் துறையினுடைய முயற்சியினால் மேலும் 600 பள்ளிகள் - 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாக வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டுவிட்டது. இத்திட்டத்தினை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 23-4-1999 அன்று தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம். அப்போது உயர்நீதிமன்றம் சொன்னது - தள்ளுபடி செய்துவிட்டு தீர்ப்பிலே உயர்நீதிமன்றம் சொன்னது - ‘அரசின் இந்தப் பொன்னான நோக்கத்தால், அடுத்த ஆண்டு 48 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்பதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

தமிழக அரசின்மீது இந்த நீதிமன்றம்

நம்பிக்கை வைத்திருக்கிறது. சமூக நீதிக் காவலனாகப் பாடுபடும் இந்த அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே, படித்து வந்தவர்களின் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்கிறது’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க தமிழ் இணைய ஆய்வு மையம் ஒன்று டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1996 மே மாதத்திற்கு முன்பு வரை 34 மென் பொருள் நிறுவனங்களே இருந்தன. கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு இதுவரை 562 மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்திலே ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையிலே - சிறப்பாக கோவையைச் சொல்ல வேண்டுமானால் - 1995-96-லே நான்கே நான்கு மென்பொருள் நிறுவனங்கள்தான் இருந்தன. இன்றைக்கு கோவையிலே மாத்திரம் 58 மென்பொருள் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமாத்திரமல்ல, ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தேவையான மென்பொருட்களில் பெரும்பாலானவை, சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனங்களில்தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன என்ற இந்த மகிழ்ச்சியான செய்தியையும் இந்த அவைக்கு நான் கவனமூட்ட விரும்புகிறேன்.

‘வேர்ல்ட் டெல்’ நிறுவனம் இம்மாநிலம் முழுவதிலும் 13,000 சமுதாய இணைய மையங்களாக அமைப்பதற்கான பணியைத் தொடங்கிவிட்டது. அதன் மூலமாக, சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்குப் பரவலாக வேலைவாய்ப்பும் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

பிப்ரவரி 5 ஆம் தேதி, 11 ஆம் தேதி இரண்டு தேதியிட்ட Economic and Political Weekly பத்திரிகையில் வெளிவந்துள்ள Raising Global Competitiveness of Tamil Nadu's IT Industry என்ற கட்டுரையில் நிருபம் பாஜ்பாய், நவி ரட்ஜிவ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரையில்,

“தமிழ்நாடு பெரிய அளவில் திறன் வாய்ந்த மனித வளத்தைக் கொண்டுள்ளது. அதனால், இந்தியாவில் தமிழ்நாடு

Intellectual Power House” என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த மாதிரியான பலமும், உலகளாவிய கண்ணோட்டமும் முதலீட்டாளர்களுக்கு இசைவான நிர்வாகமும் சேர்ந்து இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திடக்கூடிய முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்தில் வேகமான முன்னேற்றத்தை உருவாக்கி வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படை யுத்தியாக தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

வேகமான தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு தன்னுடைய முயற்சிகளைப் பன்மடங்கு பெருக்கியுள்ளது. தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பம் அண்மைக் காலங்களில் மிகவும் நேர்த்தியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அதன் அண்டை மாநிலங்களைவிட வேகமாக முன்னேறி வருகிறது. மல்டிமீடியா மென்பொருள் வளர்ச்சியிலும் மிக முக்கியமான இடமாக சென்னை வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடு வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது. இப்படி பத்திரிகைகள் அனைத்தும் பாராட்டக்கூடிய அளவிற்கு, உலகத்திலே உள்ள பல்வேறு நாடுகளுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவிற்கு இந்தியாவிலே, குறிப்பாக தமிழகத்திலே தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் இன்றைக்கு முகிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.