தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 9
பகுதி 1 · 1 / 4
**உரை : 9**
**நாள் : 8.05.2000**
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘பெருந் தொழில்கள்’ என்ற மானியத்தில் மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. ச. அழகிரி, திரு. ஆர். சிவராமன், திரு. கே. சுப்பராயன், திரு. தங்கம் தென்னரசு, திரு. பி. ஆர். சுந்தரம், திரு. ஜி. கே. மணி, திரு. அப்துல் லத்தீப், திரு. மோகன் கந்தசாமி ஆகியோர் தங்களுடைய அரிய கருத்துகள் பலவற்றை எடுத்துக்கூறி, ‘பெருந் தொழில்கள்’ என்ற தலைப்பில் இந்த மானியம் இன்றைக்கு விவாதிக்கப்பட்டாலும் கூட, இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அவரவர் தொகுதிகளிலே தொடங்கப்பட வேண்டிய சிறு தொழில்கள் குறித்தும், ஏன் தீயணைப்பு நிலையங்கள் வரையில், இங்கே பேசி முடித்திருக்கிறார்கள்.
நான் என்னுடைய விளக்கத்தைச் சுருக்கமாக இந்த அவையிலே வைக்க விரும்புகிறேன்.
முதலில் நம்முடைய அழகிரி அவர்கள் “14 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது; ஓர் ஆண்டுக்கு இந்த பத்திரிகை வாங்கக்கூட இந்தப் பணம் போதாது” என்று குறிப்பிட்டார்கள். உடனடியாக நான் ‘இந்தப் பத்திரிகை நிருவாகத்தோடு தொடர்பு கொண்டு (சிரிப்பு) “இந்தப் பத்திரிகையினுடைய ஆண்டுச் சந்தா எவ்வளவு” என்று கேட்டேன்.
1015 ரூபாய் என்றார்கள். (பலத்த சிரிப்பு) (மேசையைத் தட்டும் ஒலி). அதுதான் அதற்குப் பதில் (சிரிப்பு). இந்த 14 ஆயிரம் ரூபாய் மானியக் கோரிக்கையில்.
**திரு. ச. அழகிரி :** ஒருவேளை ஆயுள் சந்தா கட்டி இருப்பார்களோ? (சிரிப்பு).
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** ஆயுள் சந்தா என்று அழகிரி சொல்கிறார். அது யாருடைய ஆயுள்? கட்டுகிறவர்களுடைய ஆயுளா, பத்திரிகையினுடைய ஆயுளா, என்பதை ஆராய வேண்டும். இந்த 14 ஆயிரம் ரூபாய் மின்சக்தித்
திட்டங்கள் குறித்த மூலதனச் செலவு - எல்லாமே மூலதனச் செலவுதான் - மூலதனச் செலவுக்குத்தான் இந்த 14 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மின்சக்தி திட்டங்கள் குறித்த மூலதனச் செலவு - ஆயிரம் ரூபாய்; தொலைத் தொடர்பு, மின்னணுவியல் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; நுகர்பொருள் தொழில் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; சர்க்கரைத் தொழில் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; உப்புத் தொழில் குறித்த மூலதனச் செலவு ஆயிரம் ரூபாய்; ஏனைய தொழில்கள் குறித்த மூலதனச் செலவு 5 ஆயிரம் ரூபாய்; சரிகைத் தொழில் நிறுவனம் நிதியுதவி ஆயிரம் ரூபாய்; தமிழ்நாடு தோல் தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு பங்கு மூலதனம் ஆயிரம் ரூபாய்.
கூட்டு மின் உற்பத்தித் தளவாடங்களுக்கு ஆயிரம் ரூபாய். தன்னாட்சி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறும் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய். எனவே இந்த மூலதனச் செலவுக்கு அடையாள ஒதுக்கீடு மாத்திரம்தான் செய்யப்பட்டுள்ளது. அதுதான் 14 ஆயிரம் ரூபாய் என்று குறைவாகத் தெரிந்து, அழகிரி அவர்கள் எல்லா அமைச்சர்களுக்கும் அதிக மானியம் தரப்படும்போது, அதிகத் தொகை ஒதுக்கப்படும்போது, பாவம் முதலமைச்சருக்கு மாத்திரம் 14 ஆயிரம் ரூபாய்தானா என்று பரிதாபப்பட்டதற்காக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
என்ன செய்வது, தாய் சிக்கனம் பிடித்துத்தான் பிள்ளைகளையெல்லாம் காப்பாற்ற வேண்டியிருக்கிறது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதையும் நான் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
மற்றொன்று, தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு இன்றைக்கு எந்த இடத்தில் இருக்கிறது என்ற ஒரு சர்ச்சையை நிதிநிலை அறிக்கையினுடைய விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசும்போது நண்பர் அழகிரி அவர்கள் எழுப்பி, “முதலிடத்திற்கு வந்து விட்டதாக முதலமைச்சர் சொன்னார். இப்போது அது மூன்றாவது, நான்காவது இடத்திற்குப் போய்விட்டது” என்று ஒரு புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டார்கள்.
ஆனால் அது இரண்டாவது இடம் என்ற நிலையை அடைந்து, மீண்டும் முதலிடத்தை அடையக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொழில் முதலீடுகளில் தமிழ்நாட்டினுடைய நிலவரத்தைப் படிப்படியாகப் பார்த்தால், 1989-91 கால கட்டத்தில் தமிழகத்தினுடைய தொழில் வளர்ச்சிக்கு
அப்போதைய கழக அரசு அளித்த ஊக்கத்தின் காரணமாக தமிழகம் இந்தியாவிலே மூன்றாவது இடத்தை அடைந்திருந்தது. இது 1989-91-ல். அப்போது தி.மு.க. ஆட்சி. பிறகு, 1991-96 கால கட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியின்போது, தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பின்தங்கி, ஐந்தாவது இடத்திற்கு இறங்கிவிட்டது. 1996-ல் கழக அரசு மீண்டும் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தொழில் வளர்ச்சிக்குத் தொடர்நிலை அளித்துவரும் ஆக்கம், ஊக்கம் ஆகியவற்றின் காரணமாக, தமிழகம் தொழில் வளர்ச்சியிலே மீண்டும் தலை நிமிர்ந்து, முன்னணியிலே இருந்து வருகிறது.
அண்மையில் 22-4-200 தேதியிட்ட இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் C.M.I.E. - Centre for Monitoring Indian Economy, இந்திய மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை யெல்லாம் தொகுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டது, 22-4-2000 அன்று. அதன் விவரங்களை இங்கே தர விரும்புகிறேன். தமிழ் நாடு 1,14,893 கோடி ரூபாய். இது ஒப்புதல் அளிக்கப்பட்டு செயலாக்கத்தில் உள்ள இந்தியாவின் மொத்த முதலீட்டில் 10.89 சதவீதம் ஆகும்.
மராட்டியம், 1,55,326 கோடி ரூபாய், குஜராத் 1,41,207 கோடி ரூபாய், ஆந்திரா 1,33,587 கோடி ரூபாய், ஒரிசா 1,14,070 கோடி ரூபாய், கர்நாடகம் 93,754 கோடி ரூபாய். இந்தப் புள்ளிவிவரங்களின்படி மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. அதாவது, வித்தியாசம் 1.04 சதவீதம்தான்.
ஆனால், அதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்ன வென்றால், இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் - C.M.I.E.-அதாவது Centre for Monitoring Indian Economy முதலீடுகளைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் தொகுக்கும்போது, தமிழ் நாட்டில் சேர்த்திருக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாயை-விவரங்களைச் சொல்ல வேண்டுமானால் அந்த 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நெய்வேலி மூன்றாவது சுரங்கம் வெட்டுவதற்கான 5,500 கோடி ரூபாய் முதலீடு, நெய்வேலி மூன்றாவது அனல் பவர் ஸ்டேஷனுக்கான 7,500 கோடி ரூபாய் முதலீடு, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டத்தின் வித்தியாச முதலீடான 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆகியவற்றைச் - சேர்க்காமல் விட்டுவிட்டார்கள்.
இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயையும் சேர்த்திருப்பார்களேயானால், இந்த நிலை முதல் நிலையாவே ஆகியிருக்கும். மராட்டியம் அடுத்த நிலைக்குச் சென்றிருக்கும். இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டுமென்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிறுவனமும், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி நிறுவனமும், இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்திற்குக் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளன. நியாயமாக இந்த 15 ஆயிரம் கோடி ரூபாயையும் நமது மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள முதலீட்டோடு சேர்க்க வேண்டும். அப்படி 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டையும் சேர்த்துக் கொள்வதாகவும், 15-5-2000 அன்று C.M.I.E. எழுதியுள்ள கடிதத்திலே நமக்கு அறிவித்துள்ளார்கள். அப்படி அறிவிக்கும்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீட்டின் அளவு 1,41,893 + 15,000 ஆக மொத்தம் 1,56,893 கோடி ரூபாய் என்ற வகையில் வரும்.
அப்போது மராட்டிய மாநிலத்தை மிஞ்சி தமிழ்நாடு முதல் நிலைக்கு வந்துவிடும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை (மேசையைத் தட்டும் ஒலி) நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏறத்தாழ, நான்கு ஆண்டுகளில் இந்திய அளவில் முதலீடுகளில் ஏற்பட்ட உயர்வு 2,29,721 கோடி ரூபாய். அதிலே, தமிழ் நாட்டிலே ஏற்பட்டுள்ள உயர்வு மாத்திரம் 51,243 கோடி ரூபாய் என்பது நம்முடைய சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். சுமார் நான்கு ஆண்டுகளில் அகில இந்தியாவிலும் தொழில் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள உயர்விலே, தமிழகத்தின் பங்கு 22.31 விழுக்காடு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்றுமதி வளர்ச்சியிலே பார்த்தால், தமிழ்நாட்டிலே இருந்து என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன என்று பார்க்கும் போது handicrafts-கைவினைப்பொருட்கள், coir-கயிறு, Readymade garments-ஆயத்த ஆடைகள், Textiles-ஜவுளி, Computer Software-கணினி மென்பொருட்கள், Chemicals-இரசாயனப் பொருட்கள், Gems and Jewellery-முத்துக்கள் மற்றும் தங்க ஆபரணங்கள், Drugs-மருந்துகள், தோல் மற்றும் தோல் பொருட்கள்-Leather and Leather Products,முந்திரி மற்றும் முந்திரிப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், உலோகத் தாதுக்கள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், காபி, டீ, புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் இவை எல்லாம் ஏற்றுமதி ஆகின்றன.
ஏதோ இந்த ஆட்சி வந்து, தொழிலில், பொருளாதாரத்தில் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டது என்று நம்முடைய சுந்தரம் அவர்கள் இங்கே வருத்தப்பட்டோ, அல்லது ஆத்திரப்பட்டோ, அல்லது கேலிபுரியும் எண்ணத்தோடோ குறிப்பிட்டார்கள். ஒரு புள்ளிவிவரத்தை அவருக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1992-93 அ.தி.மு.க. ஆட்சியில் 6,808 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழ்நாட்டிலேயிருந்து ஏற்றுமதி. 1996-97-ல் கழக ஆட்சியில் 17,802 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி.
1997-98-ல் 18,982 கோடி அளவுக்கு அது உயர்ந்துள்ளது. ஆறாயிரம் கோடி என்பது பதினெட்டு ஆயிரம் கோடி என்று உயர்ந்துள்ளது.
7-2-2000 என்று தேதியிட்ட Economic Times என்ற ஆங்கில நாளிதழில் "Exports in Tamil Nadu" என்ற தலைப்பில், "Tamil Nadu is one of the highly industrialised State of our Country and is a major contributor to the Country's exports.
Of late there is a spurt in the growth of industries like software, artificial diamonds and imitation jewellery.
Chennai has now become an important base for global software majors, as the city has the infrastructure with adequate manpower" என்று அந்த ஏடு குறிப்பிடுகிறது - Economic Times.
அதாவது, “இந்தியாவில் பெரிதும் தொழில்மயப்படுத்தப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டின் ஏற்றுமதிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். அண்மைக்காலத்திலே மென்பொருள், செயற்கை வைரங்கள் மற்றும் imitation நகைகள் போன்ற பலதொழில்களின் வளர்ச்சி மிகக் கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னை, தேவையான மனித வளத்தோடு, உரிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுத் திகழ்வதால், உலகின் மிகப் பெரிய மென்பொருட்களின் முக்கிய தளமாக விளங்குகிறது” என்று 7-2-2000 அன்று வெளிவந்த Economic Times ஏடு குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
கணினி மென்பொருட்கள் தமிழகத்திலே இருந்து எந்த அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அந்தக் கணக்கைப் பார்த்தால், 1995-96-ல் 37 கோடி ரூபாய் அளவிற்குத்தான் கணினி மென்பொருள் ஏற்றுமதி ஆயிற்று. 1998-99-ல் 1246 கோடியே 16 இலட்சம் ரூபாய் (மேசையைத் தட்டும் ஒலி). இந்த 1999-2000-ல்
1890 கோடி ரூபாய். இதிலே கோவையிலேயிருந்து மாத்திரம், கோயம்புத்தூரிலிருந்து மாத்திரம் மென்பொருள் ஏற்றுமதி 1996-97-லே ஒரு கோடியே 51 இலட்சம் ரூபாய். 1999-2000-லே 21 கோடியே 17 இலட்சம் ரூபாய்; கோயம்புத்தூரிலிருந்து மாத்திரம் இந்த மென்பொருள் ஏற்றுமதி;
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால், “இண்டஸ்ட்ரியல் ஹெரால்ட்” (ஏப்ரல் 2000) என்ற ஆங்கில நாளிதழ் தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியைப் பற்றி, "Now the third largest, the Tamil Nadu economy is all set to emerge as the second largest among the States. With a heavy concentration of vehicle and auto component production units, the capital city Chennai is rightly called the Detroit of India" என்று குறிப்பிடுகிறது.
“பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களுக்கு இடையே தற்போது மூன்றாவது இடத்திலுள்ள தமிழ்நாடு, இரண்டாவது இடத்தை அடையும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஏராளமாக அமைந்துள்ளதால் சென்னை மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட் என்று பொருத்தமாக அழைக்கப்படுகிறது” என்று இண்டஸ்ட்ரியல் ஹெரால்ட் மிக அழகாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
டெட்ராய்ட் என்பது அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்திலே உள்ள ஒரு நகரம். அங்கேதான் ஹென்றி போர்டு 1908ஆம் ஆண்டு தனது Ford நிறுவனத்தை உருவாக்கினார். உலகத்தின் மிகப் பெரிய ராட்சச கார் நிறுவனங்கள் Auto Giants என்று சொல்லக்கூடிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு மோட்டார்ஸ், கிரிஸ்லர் ஆகிய மூன்றும் டெட்ராய்ட் நகரில்தான் உள்ளன. அந்த நகரத்தோடு ஒப்பிட்டு சென்னை இன்றைக்கு முன்னேறி வருகிறது என்று இந்த ஏடு குறிப்பிடுகிறது என்பதைத்தான் நான் இங்கே ஞாபகப்படுத்துகின்றேன்.
(மேசையைத் தட்டும் ஒலி).
இன்று உலகத்திலேயே தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சிதான் பிரதானமாக விளங்குகின்றது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், எழுபதுகளில் வெறும் கருத்துப் படிவமாக
