உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8

பகுதி 5 · 5 / 7

15 கோடி ரூபாய் செலவில் இன்வால் (மெடிக்கல்) இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் குருதிப் பைகள் (Blood bags) தயாரிக்கும் தொழிற்சாலை.

20 கோடி ரூபாய் செலவில் ஓசூரில் டான்போரா இன்ப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தொழில் வளாகம்.

6 கோடி ரூபாய் செலவில் Bio-technology Park for women, சென்னையில் மகளிருக்கான உயிர் தொழில் நுட்பப் பூங்கா.

210 கோடி ரூபாய் செலவிலே செங்கல்பட்டில் மகேந்திரா இண்டஸ்ட்ரியல் பார்க் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ உதிரிப் பாகங்களுக்கான தொழில் வளாகம்.

27.7 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மெடிடெக் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை.

5.6 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இந்தியன் அண்டு நேச்சுரல் மெடிக்கல் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை.

24 கோடி ரூபாய் செலவில் மறைமலை நகரில் ஆப்டிகல் பைபர் கேபிள் ப்ராஜெக்ட் தொழிற்சாலை.

320 கோடி ரூபாய் செலவில் தரமணியில் டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்தின் தொழில் வளாகம்.

320 கோடி ரூபாய் செலவில் கடலூரில் பென்னார் ரிபைனர்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை. இப்போது விரைவிலே அதற்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. 2001ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக அது முடிவடையும் என்கிற உறுதியோடு அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. 3,200 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலை.

142.65 கோடி ரூபாய் செலவில் சேலத்தில் சிஸ்கால் நிறுவனத்தின் மெட்டல் கோக் தயாரிக்கும் தொழிற்சாலை.

44.78 கோடி ரூபாய் செலவில் தரமணியில் கவாடா ரிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அலுமினியத் தொழிற்சாலை.

200 கோடி ரூபாய் செலவில் தரமணியில் வான் ஓம்மரன் டேங்க் டெர்மினல் நிறுவனத்தின் கெமிக்கல் சேமிப்பு டேங்க் தயாரிக்கும் தொழிற்சாலை.

எண்ணூரில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எல்.என்.ஜி. எரிவாயு மின்திட்டம். இப்போது பிரச்சினை எழுப்பப்பட்ட அந்தத் திட்டம்.

ஜெயங்கொண்டத்தில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டி எடுத்து, 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் அனல் மின் திட்டம். அதற்கான நிலம் கையகப்படுத்துகின்ற பணி வெகுவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் 4, 5 கோப்புகள் வருவது, நிலம் கையகப்படுத்துகின்ற கோப்புகளிலே நான் கையெழுத்திட்டுக் கொண்டே வருகிறேன். அந்த அளவுக்கு வெகுவேகமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

(மேசையைத் தட்டும் ஒலி). இது மொத்த முதலீடு, நான் இப்போது படித்தது. மீதமுள்ள 28 இனங்களுக்கான மொத்த முதலீடு 22,946 கோடி ரூபாய். நேரடி வேலைவாய்ப்பு 11,000 பேருக்கு. மறைமுக வேலைவாய்ப்பு 1½ இலட்சம் பேருக்கு (மேசையைத் தட்டும் ஒலி) என்ற இந்த மிக மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழில் முதலீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நம்முடைய திருமதி பொன்னம்மாள் அவர்களும், திரு. ரங்கநாதன் அவர்களும் பேசும்போது குறிப்பிட்டார்கள். மற்றும் ஆளுங்கட்சி சார்பிலே பேசிய மற்ற உறுப்பினர்களும் பேசும் போது குறிப்பிட்டிருக்கிறார்கள். நானே சொல்லி, கை தட்டல் வாங்க வேண்டுமென்று இருந்தேன். ஆனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியக் கோரிக்கைக் குறிப்பிலேயே அதை அவர்கள் வெளியிட்டுவிட்ட காரணத்தால், அதை எல்லோருமே படித்து பேசியிருக்கிறீர்கள்.

தொழில் வளர்ச்சி குறித்து நான் 23-2-1999 அன்று ஆளுநர் உரைமீது நடைபெற்ற விவாதத்தின் போது பதிலளித்து உரையாற்றியபோது, மே 1996-ல் தொழில் நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் அடிப்படையில் தமிழகம் அகில இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் ஐந்தாம் இடத்திலிருந்தது என்றும், 1996-ல் கழக அரசு மீண்டும் அமைந்து தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊக்கம் காரணமாக, 1999 சனவரி நிலையில் முதலீடுகள் அடிப்படையில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது

என்று குறிப்பிட்டு, அதற்குரிய புள்ளி விவரங்களையும் இந்த அவையிலே நான் தெரிவித்தேன்.

அண்மையில் 1991 மே மாதத்திலிருந்து 1999 சனவரி மாதம் வரை இந்திய மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை எல்லாம் தொகுத்து, 1999 ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy-C.M.I.E.) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை விவரங்களின்படி தமிழ்நாடு தொழில் முதலீடுகளின் அடிப்படையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி). அதனுடைய விவரம் என்ன என்பதைச் சொல்லவேண்டும். திருமதி பொன்னம்மாள் அவர்கள் சொன்னதைப் போல, அகில இந்தியாவில் மொத்த தொழில் முதலீடு ஒதுக்கீடு 1999 சனவரி வரையில் 13,15,017 கோடி 13 இலட்சம் கோடி. அந்த 13 இலட்சம் கோடியில் ஆந்திராவினுடைய பங்கு அவர்கள் அங்கே செய்துள்ள முதலீடு 1,06,364 கோடி, 8.09% கர்நாடகத்தில் 1,07,703 கோடி, 8.19% ஒரிஸ்ஸாவில் 1,14,033 கோடி, 8.67% குஜராத்தில் 1,46,703 கோடி, 11.16% மராட்டியத்தில் 1,51,058 கோடி, 11.49% தமிழ்நாடு 1,51,187 கோடி, 11.50% (மேசையைத் தட்டும் ஒலி).

குதிரைப் பந்தயத்தில் மூக்கை நீட்டுகிற மாதிரி நீட்டி, முதலிடத்திற்கு வந்திருக்கிறோம். சென்ற ஆண்டு மராட்டியம் நம்மை விட .02% அதிகமாக இருந்தது. இப்பொழுது நாம் மராட்டியத்தைவிட .01% அதிகமாக இருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி). ஆக, இந்தக் கயிறு இழுக்கும் போட்டி மாதிரி, ஒரு பெரிய சவாலாக மராட்டியமும், தமிழகமும் இன்றைக்கு இருக்கின்றன. முதலிடத்தில் இன்றைக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

முதலீட்டில் மாத்திரமல்ல, ஏற்றுமதித் தொழிலிலும்கூட நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 'Economic Times' என்ற பத்திரிகையை உங்களுக்குத் தெரியும். புகழ்பெற்ற பொருளாதார ஏடு. அது நேற்றையதினம், 28-4-1999-ல் எழுதியிருக்கிறது.

"Tamil Nadu followed closely by Gujarat has taken the lead in terms of the number of 100 per cent export oriented units set up since liberalisation, displacing Maharashtra the traditional leader amongst the industrially developed States."

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பின், 100 விழுக்காடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு, தொழில் நிறுவனங்களை நிறுவுவதில் தமிழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). குஜராத் அதற்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்த மாநிலங்கள் வரிசையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்த மராட்டிய மாநிலத்தை தமிழகம் தற்போது முந்தியுள்ளது.

(மேசையைத் தட்டும் ஒலி).

இன்னும் அந்த ஏடு, 'Economic Times' எழுதுகிறது. "The State-wise distribution of 100 per cent export oriented units since liberalisation indicates that Tamil Nadu has taken the lead in terms of the number of units set up."

(தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பின், 100 விழுக்காடு ஏற்றுமதி அடிப்படையில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை மாநில வாரியாகக் கணக்கிட்டதில் தமிழகம்தான் தலைமை இடத்தைப் பெற்றுள்ளது.) (மேசையைத் தட்டும் ஒலி).

மேலும் அந்த ஏடு எழுதுகிறது. "As against 3,503, cent per cent EOUS which have come up country-wide, since liberalisation, one sixth have been in Tamil Nadu, followed by Maharashtra, Gujarat, Andhra Pradesh and Karnataka."

பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பின் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்ட 100 விழுக்காடு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட 3,503 தொழில்களில் ஆறில் ஒரு பங்கு தொழில்கள், அதாவது 584 தொழில்கள் தமிழகத்திலே தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தை அடுத்து மராட்டியம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன

என்று ‘எகனாமிக் டைம்ஸ்’ குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதுமாத்திரம் அல்ல, மேலும் இன்னொரு ஆதாரம். அகில இந்திய அளவில் கடன் வைப்புத்தொகை விகிதாச்சாரம் பற்றி Times of India எழுதுகிறது, கடன் வைப்புத் தொகையில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம் என்றும் Times of India எழுதுகிறது.