உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8

பகுதி 2 · 2 / 7

நம்முடைய ஃபார்வர்டு பிளாக் கட்சியினுடைய சார்பில் உரையாற்றிய திரு. சந்தானம் அவர்கள், அலங்காநல்லூர் தொழிற்சாலை - பொதுத் துறை ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டார்கள். அதையேதான் நம்முடைய திருமதி பொன்னம்மாள் அவர்களும் குறிப்பிட்டார். அது நீண்ட காலமாக ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

அங்கேயுள்ள விவசாயிகள் எல்லாம்கூட என்னை வந்து பார்த்து, அதை யாராவது ஒரு தனியாருக்கு, நல்ல வாய்ப்பு உள்ளவர்கள், அதை ஒழுங்காகச் செய்யக்கூடியவர்கள், நல்ல முறையிலே நிர்வாகம் நடத்தக்கூடியவர்களுக்குத் தரவேண்டும் என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள். அதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு யார் முன்வருகிறார்கள் என்பதை நாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில பேர் முன் வந்திருக்கிறார்கள்.

அதிலே யார் தகுதியுடையவர்கள் என்பதைப் பார்த்து, அந்த ஆலையை ஒழுங்காக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நம்முடைய திரு. வேலாயுதன் அவர்கள், கயிறு திரிக்கும் தொழில் கன்னியாகுமரியிலே வேண்டுமென்று கேட்டார்கள். நல்ல முறையிலே கயிறு திரிக்க (சிரிப்பு) கன்னியாகுமரி மாவட்டத்திலே அந்தத் தொழிற்சாலை தொடங்குவதற்கு, அது தொடர்ந்து நடப்பதற்குத் தேவையான கச்சாப்பொருட்கள் இவை எல்லாம் கிடைப்பதற்கு, அரசு ஒழுங்கு செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரப்பர் தொழிற்சாலை ஆரம்பிப்பதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இன்னும் வரவில்லை என்கிறார்கள். ரப்பர் என்றாலே கொஞ்சம் இழுக்கத்தான் செய்யும். அதற்கும் பல முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. அதற்குரியவர்கள் வருகின்ற நேரத்திலே நிச்சயமாக ரப்பர் தொழிற்சாலை அங்கே அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறுதியாகப் பேசிய திருமதி பொன்னம்மாள் அவர்கள், மல்லிகைப் பூ சென்ட் தொழிற்சாலை ஒன்றை அவரது தொகுதியிலே அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சிங்கப்பூருக்குப் பெண்களை எல்லாம் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். பெண்களை அனுப்பலாம் சிங்கப்பூருக்கு; ஆனால், அங்கே போய் சேலைகளை எடுத்துக்கொண்டு வரக்கூடாது. (மேசையைத் தட்டும் ஒலி). தமிழகத்திற்குத் தேவையான, நல்ல வேலைகளை

நல்லத் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதற்கானத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

அவர்கள் இன்னொன்று சொன்னார்கள். கரும்பு விலை பற்றிச் சொன்னார்கள். தேர்தல் அறிக்கையிலே 1,000 ரூபாய் என்று போட்டுவிட்டு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டார்கள். நானும் பல முறை இந்த அவையிலே விளக்கி விட்டேன். ஒருவேளை நான் பேசும்போது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் இல்லையோ அல்லது நான்தான் அவர்களுக்குப் புரியும்படியாக விளக்கவில்லையோ என்பது எனக்குத் தெரியவில்லை. தேர்தல் அறிக்கையிலே அப்படி ஒன்றும் சொல்லவில்லை.

அன்றைக்கு திரு. பழனிசாமி அவர்களுக்கு நினைவூட்டியதைப்போல, திருச்சியில், தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஒரு மாநாட்டில், 1,000 ரூபாய் கரும்புக்குத் தர வேண்டுமென்று தீர்மானம் போட்டது உண்மை. ஏனென்றால், எதிர்க்கட்சி அப்படித்தான் போடும். ஆளுங்கட்சியாக வந்த பிறகுதான் கஷ்டம். அதனுடைய சிரமம் தெரியும். 1,000 ரூபாய் தரவேண்டுமென்று தீர்மானம் போட்டது உண்மை. ஆனால், தேர்தல் அறிக்கையிலே, மிகுந்த எச்சரிக்கையோடு அதை நாங்கள் குறிப்பிடவில்லை.

“கட்டுப்படியான விலை தரவும், அவர்களுக்கு வண்டிச் சத்தம் போன்றவைகளை ஏற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு நிர்வாகத்தின் மூலமாகக் கிடைக்கக் கூடிய ஆதாயங்கள் எவையெவையாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றியும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நல்ல முடிவு காண்பதற்கு, தி.மு.கழகம் வென்றால் பாடுபடும்” என்றுதான் தேர்தல் அறிக்கையிலே இருக்கிறது.

1,000 ரூபாய் என்று குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிடாததற்காக, அதிக விலை கொடுக்க முடியாது என்று சொல்லவில்லை. நான் மீண்டும் ஒருமுறை ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன், மாநில வாரியாக.

சர்க்கரைக் கட்டுமானம் 10.22 சதவிகிதம் இருக்கின்ற ஆந்திராவில் சராசரி கரும்பு விலை, ஒரு டன் 630 ரூபாய். 10.54 சதவிகிதம் கட்டுமானம் உள்ள கர்நாடகத்தில் கரும்பு விலை ஒரு டன் 730 ரூபாய். சர்க்கரைக் கட்டுமானம் 11.11 சதவிகிதம் என்று உள்ள மராட்டியத்தில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு 680 ரூபாய். 10.72 சதவிகிதம் கட்டுமானம் உள்ள குஜராத்தில்

கரும்பு விலை ஒரு டன் 648 ரூபாய். இவைகளை எல்லாம் விடக் குறைவாக 8.94 சதவிகிதம் சர்க்கரைக் கட்டுமானம் உள்ள தமிழ்நாட்டில் சராசரி கரும்பு விலை ஒரு டன் 753 ரூபாய். இது எல்லா மாநிலங்களோடும் ஒப்பிடும்போது அதிக விலையா, இல்லையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் இந்த விலையைச் சற்று ஏற்றித் தருவதற்கு இயலாத நிலையிலே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். இடைக் காலத்தடையை சில தனி அதிபர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சரால் இங்கே பலமுறை விளக்கப்பட்டிருக்கிறது.

முத்தரப்புப் பேச்சு வார்த்தையின் மூலமாக இன்னும் எந்த அளவுக்கு இதை உயர்த்தித் தரமுடியும் என்பதை அரசு ஆலோசிக்கும் என்பதை இங்கே நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

WORLD TEL நிறுவனத்தைப்பற்றி டாக்டர் செல்லக்குமார் அவர்கள் சொன்னார்கள். அந்த WORLD TEL என்பது தனியார் கம்பெனி அல்ல; அந்த நிறுவனத்திலே உள்ள சாம் பிட்ரோடா என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதர் அல்ல. அவர் நிறுவனத்தினுடைய தலைவர். WORLD TEL நிறுவனம் என்பது International Telecommunication Union (ITU) என்கிற ஒரு யூ.என். ஏஜென்ஸியால் ஏற்படுத்தப்பட்டது. அந்த நிர்வாகத்தில் Assembly of Governors - மத்திய அரசின் பிரதிநிதியும் அதிலே இருக்கிறார்.

இதுவொரு தனியார் நிறுவனம் அல்ல. சாம் பிட்ரோடாவினுடைய சொந்த நிறுவனம் அல்ல. அவர் அந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவ்வளவுதான். WORLD TEL நிறுவனத்தின் திட்டத்தில் தமிழக அரசு கூட்டாக இணைந்து, Joint Sector Project ஆக செயல்படுத்துவதால் இதற்கு உலக அளவிலே ஒப்பந்தப்புள்ளி கோரும் அவசியம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிலேகூட சமீபத்திலே WORLD TEL நிறுவனத்தோடு நம்முடைய அதிகாரிகள் பேசினார்கள். அவர்கள் இன்னும் சில நிபந்தனைகளை விதித்து, கொஞ்சம் தாமதமாகும்போல்கூட எங்களுக்குத் தெரிகிறது. இந்தப் பெரிய முயற்சி

தாமதமாகுமேயானால் WORLD TEL-க்குப் பதிலாக வேறு ஒரு பெரிய நிறுவனத்தை அணுகி விரைவில் இந்த சமுதாய இணையம் தமிழகம் முழுவதும் பரவிடவும், இல்லத்திற்கேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் அந்தப் பெருமுயற்சியை அவர்களிடமிருந்து மாற்றிக்கூட வேறு ஒரு நிறுவனத்திற்கு அதை ஒப்படைக்கலாமா என்றுகூட அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது, இன்னும் முடிவாகவில்லை. இப்படிச் சொல்வதால் இவர்களுக்கு அறவே இல்லை என்றும் பொருள் அல்ல.

அவர்கள் தாமதம் செய்வார்களேயானால் வேறு ஒருவருக்கு இதை மாற்ற முடியுமா என்பதையும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

**டாக்டர் அ. செல்லக்குமார் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சாம் பிட்ரோடாவினுடைய சொந்த நிறுவனம் என்பது அல்ல என்னுடைய கருத்து. அதைப்போன்று இன்னும் பல நிறுவனங்கள் International Level-ல் இருக்கின்றன. நீங்கள் இந்தத் துறையைப் பொறுத்தவரையில், 1½ இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு வணிகமாக நடைபெற இருக்கிறது. நாளையதினம் 13,000 இணைப்புகள் ஆங்காங்கு பொருத்தப்பட்ட பிறகு, தமிழகத்து மக்களிடமிருந்து ஒரு மணி நேரத்திற்கு இத்தனை ரூபாய் என்று வசூலிக்க இருக்கிறார்கள்.

அதிலே அரசுக்கு ஒரு பங்கு, 26 சதவிகிதம் என்று நான் கருதுகிறேன். அந்த 26 சதவிகிதம் அரசுக்குக் கிடைத்திருந்தாலும் இன்னொரு நிறுவனத்திற்கு போக இருக்கிறது. இதைவிடக் குறைவான கட்டணத்திலே வேறு நிறுவனங்கள், இதைவிடத் திறமையான நிறுவனங்கள் இதிலே பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும். எனவே, Transparency என்று சொல்கிறபோது Global tender-ல் நீங்கள் இதற்கும் அழைப்புகளை விடுத்திருக்கலாம். இதைவிடச் சிறந்தவர்கள் இதிலே பங்கு பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதை ஏன் விடவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** பேரவைத் தலைவர் அவர்களே, இந்த யோசனையை முன்வைத்து இந்தியா

முழுவதும், எல்லா மாநிலங்களிலும் அலைந்து திரிந்தவர் சாம் பிட்ரோடா. அதை அவரே ஒரு பேட்டியில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்திலே குறிப்பிட்டிருக்கிறார். எந்த மாநிலமும் இந்த முயற்சிக்கு அவருக்குக் கை கொடுக்க முன்வரவில்லை. அந்தநேரத்திலேதான் நாம் அவரை அழைத்துத் தமிழ்நாட்டிற்கு அந்தப் பணியைச் செய்து கொடுப்பீர்களா என்று கேட்டபோது ஒத்துக்கொண்டார். இப்போது வேறு பல நிறுவனங்களும் அதே அளவிற்கு இருக்கின்றன என்றால் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவருக்கேதான் கொடுக்க வேண்டும் என்கிற பிடிவாத குணத்தோடு அரசு செயல்படாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் குறைந்த அளவிலே, இவர் விதிக்கின்ற நிபந்தனைகளுக்குக் குறைவான நிபந்தனைகளை விதித்து, வேறொரு பெரிய நிறுவனம் முன் வருமானால் - ஆனால் அவர்கள் செய்து முடிக்க வேண்டும் - செய்து முடிக்கின்ற அத்தகைய திறனுள்ள ஒரு நிறுவனம், எந்த நிறுவனமாக இருந்தாலும், அவற்றை அழைப்பதிலே எந்த விதமான தயக்கமும் இந்த அரசுக்குக் கிடையாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். யாரோ ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமென்பதற்காக அல்ல.

அந்த முதல் முயற்சியை அவர் எடுத்தார். திரு. ராஜீவ்காந்தி அவர்களிடத்திலே நல்ல பழக்கம் உடையவர் அவர். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்றைக்கு அகில உலகத்தில் இப்படிப்பட்ட ஒரு விஞ்ஞான ரீதியான செயல்களைச் செய்வதிலே நல்ல பாண்டித்யம் பெற்றவராகத் திகழ்பவர். எனவே, அவர் பல மாநிலங்களில் முயன்றும் அது நடைபெறாத சூழ்நிலையில், தமிழகத்திற்கு அவரை அழைத்து இந்தப் பணியை ஒப்படைக்கலாம் என்று கருதியது. தமிழகம் அந்த முயற்சியை மேற்கொண்ட பிறகு, வேறு பல மாநிலங்களிலே உள்ள முதலமைச்சர்கள் எல்லாம் அவரைத் தொடர்பு கொண்டு, ‘அங்கே வருக, இங்கே வருக’ என்று அழைத்தார்கள்.

ஆனால் அவர் ‘முதலிலே என்னை அழைத்தது தமிழ்நாடுதான். அங்கேதான் இந்தப் பணியைச் செய்வேன்’ என்று சொன்னார். (மேசையைத் தட்டும் ஒலி). ஆனால் இப்போது அண்மையில் அவர் என்னோடு பேசியபோது, சில நிபந்தனைகள் நாம் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருப்பதை எண்ணிப் பார்த்து, டாக்டர் செல்லக்குமார்

அவர்கள் சொல்வதைப்போல, வேறு நிறுவனங்களையும் அழைத்துப் பேசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் துறையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1967ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு - அதற்கு முன்பு பெருந்தலைவர் காமராஜருடைய தலைமையில், பக்தவத்சலம் அவர்களுடைய தலைமையில், இந்த ஆட்சி இங்கே நடைபெற்ற பொழுதெல்லாம் தொழிற்சாலைகளிலே பெரும் கவனம் செலுத்தப்பட்டது என்பதும், அன்றைய தொழில்துறை தமிழகத்திலே வளருவதற்குக் காரணமாக அப்போது தீட்டப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் அமைந்தன என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால் ஐந்தாண்டுத் திட்டம் நலிந்து திட்டத்தினுடைய தொகை குறைந்துபோன ஒரு சூழ்நிலையிலே தான் 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஏற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது என்பதையும் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

இருந்தாலும் 1969 முதல் 1975 வரையிலே உள்ள அந்த இடைக் காலத்திலேதான் தூத்துக்குடியிலே பெரிய தொழிற்சாலை, ஸ்பிக் உரத் தொழிற்சாலையை தொடங்கினோம், அன்றைக்கு ஒரு 100 கோடி, 150 கோடி ரூபாய்தான். இன்றைக்கு 1,000 கோடி, 2,000 கோடி ரூபாய் என்கிற அளவுக்கு அது வளர்ந்து பெரிய தொழிற்சாலையாக தூத்துக்குடி உரத் தொழிற்சாலை விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாமல், தமிழகத்தில்தான் அன்றைக்கு சிப்காட் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கினோம். ஆங்காங்கு ஒரு தொழிற்சாலை அமைவது, ஒரு மாநிலத்திலே, ஒரு நாட்டிலே என்ற நிலைக்கு மாறாக, வளாகங்கள் அமைத்து, அந்த வளாகங்களுக்கு உள்ளே பல தொழிற்சாலைகளை அமைப்பது, Park என்ற பெயராலோ அல்லது வளாகம் என்ற பெயராலோ, பல தொழிற்சாலைகளை அமைக்கின்ற சிப்காட் நிறுவனமே கழக ஆட்சியிலேதான்

1969 முதல் 1975 வரையிலே உள்ள அந்த இடைக்காலத்திலே தான் தொடங்கப்பட்டது. அதிலே அந்த சிப்காட்டின்படி, தூத்துக்குடியிலே ஸ்பிக் தொழிற்சாலை, இராணிப்பேட்டையிலே தொழில் வளாகங்கள், ஓசூரிலே தொழில் வளாகங்கள் இவை எல்லாம் 1969-லிருந்து 1975 வரையிலே தொடங்கப்பட்டன. State Industries Promotion Corporation of Tamil Nadu என்பதுதான் சிப்காட். அந்தக் காலகட்டத்திலேதான் சேலம் இரும்பு ஆலை கிடைத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சேலம் இரும்பு ஆலை கிடைப்பதற்காக, அன்றைக்குப் பாராளுமன்றத்திலே இருந்த 24 கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதிட்டோம், போரிட்டோம். அப்போது இந்திரா காந்தி அவர்கள் மைனாரிட்டி கவர்ன்மெண்ட் என்ற நிலையிலே அந்த சர்க்கார் இருந்தபோது, 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம் இதுதான் நேரம் என்று பயன் படுத்திக்கொண்டு, இந்திரா காந்தியை நாங்கள் மிரட்டவில்லை; இந்திரா காந்தியிடத்திலே நாங்கள் மிரட்டியதெல்லாம் எங்களுக்குத் தொழிற்சாலை கொடுங்கள் என்பதற்காகத்தான்; இந்திரா காந்தியிடத்திலே நாங்கள் வாதாடினோம், போராடினோம், இன்னும் சொல்லப்போனால் அந்தத் திட்ட வரைவுக்காக முதலமைச்சர்களை எல்லாம் அழைத்து, இந்திரா காந்தி அவர்கள் பிரதமராகவும் மொரார்ஜி தேசாய் அவர்கள் துணைப் பிரதமராகவும் இருந்து நடத்திய அந்தக் கூட்டத்தில், அந்தத் திட்ட வரைவை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, “இதிலே சேலம் திட்டம் இல்லை.

ஆகவே நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம்” என்று நானும் அன்றைய நிதிஅமைச்சராக இருந்த நாவலர் மதியழகனும் வெளிநடப்பே செய்தோம். அதற்கு அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் டில்லிக்கு என்னை வருமாறு தந்தி கொடுத்து அழைத்து, சேலம் தொழிற்சாலைக்கான அந்த ஆணையை வழங்கினார்கள் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி நாட்டுக்காக, மாநிலத்திற்காகத்தான் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்றைக்குப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.

இந்தக் காலகட்டத்திலேதான் ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. இவைகளுக்கு எல்லாம் நாம் உருவாக்கிய சிப்காட் நிறுவனம் பெரும் பயனுள்ளதாக அமைந்து என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 1973ஆம் ஆண்டில் இராணிப்பேட்டையில் 729 ஏக்கர் பரப்பு நிலம் இருந்தது. நாங்கள் பொறுப்புக்கு வந்தவுடன், அந்த இடம் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியிலே வாங்கிப்போடப்பட்ட இடம் என்றும், அது எதற்கும் பயன்படாத இடம், ஆகவே அதை விற்றுவிடலாம் என்றும் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

நானும் அன்றைய தொழில் அமைச்சர் மாதவனும் இராணிப்பேட்டைக்குச் சென்று அந்த இடத்தைப் பார்த்து, அப்போதுதான் சிப்காட்டை உருவாக்கி ஒரு வளாகத்தை இங்கு அமைத்தால் என்ன என்ற கேள்வி எழுப்பி, இராணிப்பேட்டையிலே அந்த வளாகத்தை அன்றைக்கு அமைத்தோம். இதிலே அந்த வளாகத்திலே 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன.

அதற்கு அடுத்து 1974ஆம் ஆண்டில் ஓசூரில் 1,236 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது தொழில் வளாகம் கழக அரசால் அமைக்கப்பட்டது. அதில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இராணிப்பேட்டை, ஓசூர் ஆகிய இரண்டு தொழில் வளாகங்களிலும் தொடங்கப்பட்டுள்ள 293 தொழில்களில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்பதையும் நான் மகிழ்ச்சியோடு இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

1989-க்குப் பிறகு, 1989 முதல் 1990 வரையிலே அமைந்த தொழிற்சாலைகளினுடைய விவரங்களைப் பார்த்தால், 1989-90இல் தான் 22 கோடி ரூபாய் முதலீட்டில் “ஏஷியன் பெயிண்ட்ஸ்” என்ற தொழில் நிறுவனம் தொடங்கப்பட்டது.

29 கோடி ரூபாய் முதலீட்டில் “டெலி கம்யூனிகேஷன்ஸ் கன்சல்டண்ட் இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.