தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 8
பகுதி 1 · 1 / 7
**உரை : 8**
**நாள் : 29.04.1999**
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் மானியத்தின் மீது மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தங்களுடைய சீரிய, செழுமிய கருத்துக்களை எடுத்துக்கூறி, நல்லவைகளைப் பாராட்டி தேவைகளைத் தொகுத்து அளித்திருக்கின்றார்கள். முதலில் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர் திரு. ரங்கநாதன் அவர்கள், தமிழகத்திலே இன்றைக்குத் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கின்ற வேகமான முன்னேற்றத்தைப் பாராட்டி, அதே நேரத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை எல்லாம் திறந்திட வேண்டும் என்பதை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
அந்தத் தொழிற்சாலைகள் ஏன் மூடப்பட்டன, தொழிலாளர்களுடைய தகராறு காரணமாகவா அல்லது அரசின் செயல்பாடு காரணமாகவா என்ற விளக்கங்களுக்குக் கிடைக்கின்ற விடை, “அல்ல” என்பதுதான். அந்தத் தொழில் அதிபர்களுடைய நிர்வாகத் திறன், நிதிப் பற்றாக்குறை, அவர்களிடையே ஏற்படுகின்ற பூசல், நீதிமன்றத்திலே அவை கிடப்பிலே இருக்கிற சூழல், இந்தக் காரணங்களால் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் குறித்து பல விளக்கங்கள் இந்த அவையிலே அரசின் சார்பிலே அளிக்கப்பட்டிருக்கின்றன.
தொழிற்சாலைகள் மூடிக் கிடப்பது என்பது அரசுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி அல்ல. அவற்றை எந்த வகையிலே திறக்கலாம், எந்த முயற்சியில் ஈடுபடலாம் என்பதில் அரசு கவனம் செலுத்தும் என்பதை நண்பர் ரங்கநாதன் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தென் மாவட்டங்களில் தொழில்கள் தொடங்குவதன் மூலம் நல்ல பொருளாதார மேம்பாட்டை அங்கே ஏற்படுத்தி, இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிற சாதி சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி
வைக்கலாம் என்ற நல்ல யோசனையை, ஏற்கெனவே அரசு கொண்டிருக்கிற கருத்தை, தி. மு. கழகத்தின் சார்பில் இங்கே பேசிய சிவராமன் அவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு, தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம், வேறு பல மேம்பாடுகளை எவ்வாறு இந்த அரசு செய்யலாம் என்ற பரிந்துரைகளை அளிக்கும் என்ற நிதிநிலை அறிக்கையிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே அது விரைவிலே செய்யப்படும், அந்தக் குழு அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய நம்முடைய சுப்பராயன் அவர்கள், இன்று பஞ்சாலைத் தொழிலில் ஏற்பட்டுள்ள கடுமையான பிரச்சினையை எடுத்துக்காட்டி, அது குறித்து நான் இருசாராரையும் அழைத்து வைத்து, இதே கோட்டையில், நாமக்கல் கவிஞர் மாளிகையிலே நீண்ட நேரம் கலந்து பேசியதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இது மாநில அளவிலான பிரச்சினை அல்ல, அகில இந்தியப் பிரச்சினை என்பதையும், அதற்கு அகில இந்திய அளவிலே மத்திய அரசு வழி காண வேண்டும் என்பதையும் நாம் பல முறை எடுத்துரைத்து, அதை வலியுறுத்தி அரசின் சார்பில் மத்திய அரசுக்குப் பல வேண்டுகோள்களை விடுத்திருக்கிறோம்.
அவர்கள் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டார்கள், ‘டான்செம்’ பற்றி. அதைப்பற்றிப் பேசும்போது தொழில் துறைச் செயலாளரைக் கடுமையாகச் சாடினார்கள். அதிகாரிகளைச் சாடுவது என்றால் சுப்பராயனுக்கு அதிரசம் சாப்பிடுவதுபோல (சிரிப்பு). ஆனால், நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழகத்திலே இந்த அளவிற்கு தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமானவர்களில் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபொழுது இருந்த தொழில்துறைச் செயலாளரும், இப்போதிருக்கின்ற தொழில் துறைச் செயலாளரும் முக்கியமானவர்கள் என்பதை நான் நன்றியுணர்வோடு இங்கே எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).
‘டான்செம்’ பற்றி அவர்கள் குறிப்பிடும்பொழுது, மாயனூர் கல்நார்த் தொழிற்சாலையைப் பற்றியும் குறிப்பிட்டார்கள். அதற்கு, நான் ஒரு சுருக்கமான விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.
19-2-1997 அன்று வெளியிடப்பட்ட அரசாணை, நிதித் துறையினுடைய ஆணையின்படி, அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல், பாதுகாப்பு மற்றும் விலை முன்னுரிமை நீக்கப்பட்டது. 30-3-1998 வரை ‘ட்வாடு’ நிறுவனம் தனது மொத்த, குழாய் மற்றும் இணைப்புகள் தேவைக்கு, ‘டான்செம்’ நிறுவனத்திடமிருந்தே பெற்று வந்தது. எனவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், ‘ட்வாடு’ தனது கல்நார்க் குழாய்த் தேவைகளுக்குப் பொது ஒப்பந்த முறைப்படி பெற முனைந்தது.
‘ட்வாடு’ தனது 1998-99 ஆம் ஆண்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூபாய் 22 கோடி மதிப்புள்ள குழாய்களுக்குப் பொது ஒப்பந்த முறைப்படி பெற நடவடிக்கை எடுத்தது. இதில் எல்-1 ஒப்பந்தக்காரர் M/s. Infrastructure - மெஸர்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், இராஜஸ்தான் என்ற நிறுவனம். இதனுடைய விலை ரூபாய் 11,964 per Metric Tonne ஆகும்.
‘ட்வாடு’ தனது தேவைகளுக்கேற்ப, ‘டான்செம்’ நிறுவனத்தை, ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட எல்-1 விலைக்கு சம்மதிக்கக் கேட்டுக்கொண்டது. ‘டான்செம்’ நிறுவனம் எல்-1 விலைக்கு விநியோகம் செய்ய 50 சதவீதம் மட்டும் ஒப்புக் கொண்டு அதைப் பெற்றுக்கொண்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, ‘டான்செம்’ அறவே புறக்கணிக்கப்பட்டு விடவில்லை. அவர்களுக்கு 50 சதவீதம் தரப்பட்டிருக்கிறது என்பதையும் நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து, திரு. சுப்பராயன் அவர்கள் பேசும்பொழுது, திருப்பூரிலே கட்டமைப்பில், மேம்பாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் குறித்து சொன்னார்கள். அதைப் பற்றி அவரும், நானும், உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களும், எவ்வளவு தூரம் அக்கறை எடுத்துப் பணியாற்றி வருகிறோம் என்பதும், இடையிலே இப்போது ஏற்பட்டுள்ள இந்த நீதிமன்ற இடைக்காலத் தடையை எப்படி எதிர்கொண்டு, அதிலிருந்து நாம் மீண்டு வருவது என்பதும், இப்பொழுது ஆலோசிக்கப்பட்டு வருகின்றவைகளாகும்.
எனவே, விரைவில் அந்த மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குகின்ற முயற்சியில் நாம் வெற்றி அடைவோம் என்பதை திரு. சுப்பராயன் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. சார்பில் உரையாற்றிய திரு. சுந்தரம் அவர்கள், சிங்கப்பூர் போனாயே, யாரைப் பார்த்தாய்; என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டார்கள்; அதற்கு திரு. குழந்தை தமிழரசன் சில விளக்கங்களை அளித்தார்கள் என்றாலும்கூட, சிங்கப்பூரில் பிரதமரைச் சந்தித்தேன்; அமைச்சர்களைச் சந்தித்தேன்; சிங்கப்பூர் தொழிலதிபர்களைச் சந்தித்தேன். அவர்கள் எனக்களித்த வரவேற்பிலே கலந்து கொண்டு, அவர்கள் எல்லாம் தொழில் தொடங்க, தமிழகத்திற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
அவர்களில் பலர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். சிலர் வந்தும் இருக்கிறார்கள். மலேசியப் பிரதமரைச் சந்தித்தேன். மலேசியாவில் உள்ள பல அமைச்சர் பெருமக்களைச் சந்தித்தேன். தொழில் விற்பன்னர்களை, தொழிலதிபர்களைச் சந்தித்தேன். அவர்கள் அளித்த விருந்திலே கலந்து கொண்டு, அவர்களும் தமிழகத்திலே தொழில் தொடங்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். இப்போதும்கூட, திரு. டத்தோ சாமிவேல் என்ற பொதுப்பணித் துறை அமைச்சருடைய தலைமையில் 20 பேர் கொண்ட ஒரு பெரிய குழு தமிழகத்திற்கு வந்து, குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தைச் சீர் படுத்த, ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருந்த துறைமுகத்தை இப்போது இயங்காமல் இருக்கின்ற சூழ்நிலையிலேயிருந்து மாற்றி, அது ஏற்றத்தாழ சிறிய துறைமுகம் என்றாலும்கூட, தூத்துக்குடித் துறைமுகத்திற்கு அடுத்து, அதற்கு ஈடாகக்கூட அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.
சுமார் 2 மணி நேரம் அது பற்றி விவாதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கோட்டையில் நடைபெற்றிருக்கின்றது. அதைப்போலவே, அவர்களுடைய முழு முயற்சியோடு - இது தனிப்பட்டவர்கள் செய்கின்ற ஒப்பந்தமல்ல - மலேசிய அரசு, தமிழக அரசு செய்து கொள்கின்ற ஒப்பந்தம். அடுத்து, பறக்கும் சாலை என்று சொன்னால்தான் புரியும் என்பதற்காகச் சொல்கிறேன். துறைமுகத்திலேயிருந்து மீனம்பாக்கம் விமானநிலையம் வரையில் முதற்கட்டமாக ஈரடுக்குச் சாலை ஒன்றை அமைப்பதற்கும் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான வரைவுகளும் அன்றைக்கு விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, மலேசியா, சிங்கப்பூர் சென்றது என்பது, அரசாங்கச் செலவில், அரசாங்க விமானத்தை எடுத்துக்கொண்டு
நெல்லூர் சுப்பிரமணிரெட்டியாருடைய சாவிற்குப் போனதைப் போல அல்ல என்பதை நான் நம்முடைய சுந்தரம் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
அவர் “என்னுடைய தொகுதிக்குத் தொழிற்சாலை இல்லை, இரண்டு முறை சொல்லிவிட்டேன்” என்றார். கணக்குக்குக்கூட மூன்று முறை தவணை கொடுப்பார்கள். எனவே, திரு. சுந்தரம் அவர்களை, மூன்றாவது தவணை கொடுக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன். மூன்றாவது தவணையிலே தொழிற்சாலை தொடங்குவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
“கார் தொழிற்சாலைகள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்ததுதான். ஃபோர்டு தொழிற்சாலை நாங்கள்தான் கொண்டு வந்தோம். நீங்கள் பெயர்தட்டிக் கொண்டு போகிறீர்கள்” என்று அவர் சொன்னார். இல்லை, ஃபோர்டு தொழிற்சாலைக்கு MoU போட்டதோடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகு கழக அரசு பொறுப்பேற்றது 1996 ஆம் ஆண்டு. அதற்கு நிலம் வாங்கி ஒப்படைத்தது உட்பட, எல்லாப் பணிகளையும் மேற்கொண்டு, அந்தத் தொழிற்சாலையைத் தொடங்கிவைத்து வரையில், திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் (மேசையைத் தட்டும் ஒலி) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே ஆரம்பித்ததற்காக நான் ஒன்றும் குறை சொல்லவில்லை. ஏன் ஆரம்பித்தீர்கள் என்று கேட்கவில்லை. அவர்கள் ஆரம்பித்த காரணத்தாலே நாங்கள் அதை நிறுத்திவிடவில்லை. இதற்கு முன்பிருந்த அரசு எதைத் தொடங்கியிருந்தாலும், அது நல்லவைகளாக இருந்தால் அவற்றைத் தொடர்ந்து செய்வதுதான் பிறகு வருகின்ற அரசுக்கு ஜனநாயகத்திலே அழகு. அந்த ஜனநாயகக் கடமையை நாங்கள் நிறைவேற்றிக்கொண்டுதான் வருகிறோம் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
புகளூர் பற்றிப் புகார் கொடுத்தேன், என்ன ஆயிற்று என்று அவர் கேட்டார். அது ஊழல் விசாரிப்புக் குழுவிற்கு
அனுப்பப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது என்பதையும், விசாரணை முடிந்து, அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் விரைவிலே தெரிவிப்பேன். உடனடியாக அந்தக் குழுவிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. அதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
தி.மு.க. சார்பில் பேசிய திரு. சண்முகம் அவர்கள், பொள்ளாச்சியை தொழிலில் பின்தங்கிய வட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பின்தங்கிய வட்டமாக ஒரு பகுதியை அறிவிப்பது என்றால், அதற்கு என்னென்ன நிலைகள் தேவை, எத்தகைய அடிப்படைகள் தேவை என்பதையெல்லாம், ஒரு முறை அல்ல, பல முறை இந்த அவையிலே கேள்வி நேரத்திலும், வேறு பல நேரங்களிலும் நான் விளக்கியிருக்கிறேன். எத்தகைய அடிப்படைகள் அமைகின்றபோது பொள்ளாச்சியைப் பின்தங்கிய வட்டமாக அறிவிப்பதற்கான பரிசீலனை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய தேசிய லீக் சார்பில் பேசிய முகம்மது இஸ்மாயில் அவர்கள், அவருடைய தொகுதியிலே முருங்கைக்காய் தொழிற்சாலை ஒன்று வேண்டுமென்று சொன்னார், அதை அமைத்து, பாக்கியராஜை அழைத்துத் திறப்பு விழா நடத்தலாம் என்று (சிரிப்பு) நான் அவருக்கு உறுதி கூறுகிறேன்.
குடகனாற்றில் மணல் எடுப்பதைப் பற்றி, அதிலே இருக்கின்ற குறைபாடுகளைப் பற்றியெல்லாம் இங்கே நம்முடைய இஸ்மாயில் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். இப்பொழுது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கின்ற திரு. அய்யர் அவர்கள், இந்த மணல் குவாரியில் நடைபெறுகின்ற ஊழல்களை யெல்லாம் பெரிதும் கண்டுபிடித்து, தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதைப்போல இந்த மாவட்டத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படும் என்பதை முகம்மது இஸ்மாயில் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பேசிய டாக்டர் செல்லக்குமார் அவர்கள் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். Best and Crompton கம்பெனியின் Urban Land Ceiling சம்பந்தமான கோப்பு 10 மாத காலமாக ஏன் உறங்குகிறது, அதிலே மறைந்து கிடக்கின்ற மர்மம் என்ன என்றெல்லாம் கேட்டார். “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவோ” என்பது தில்லானா மோகனாம்பாளிலே நான் கேட்ட பாட்டு. தம்பி செல்லக்குமாரும் அதைக் கேட்டிருப்பார், ஆர்வத்தோடு பார்த்திருப்பார் அதை.
ஆகவே, இதிலே எந்த மர்மமும் கிடையாது. ஒரு கோப்பு சில நாள் தங்கி விடுகின்ற காரணத்தாலே, இதிலே மர்மம் இருப்பதாகக் கருதிவிடக் கூடாது. இதிலே என்ன பிரச்சினை என்றால், அவர்கள் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மேலாக, அங்கே உள்ள surplus vacant land-ஐ விற்றுவிட வேண்டுமென்று அனுமதி கேட்டார்கள். அதற்கு ஒரேடியாக ஒரு அதிகாரியோ, ஒரு அமைச்சரோ உத்தரவு போட்டு விட முடியாது. முதலமைச்சரேகூட உத்தரவு போட முடியாது.
அது மிகத் தேவை, பொது நலனுக்கு உகந்தது என்றால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டித்தான் அந்த முடிவெடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்படித்தான்.
அவருக்கே தெரியும். காங்கிரஸ் மைதானத்திலே 22 மாடிக் கட்டடம் கட்டுவதற்கு அறங்காவல் குழுத் தலைவராக உள்ள சி. சுப்பிரமணியம் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில்கூட 10 மாதம் ஆயிற்று. 10 மாதம் ஆயிற்றே, இடையிலே என்ன மர்மம் என்றா என்னைக் கேட்டது? அப்படி சி.எஸ்.ஸும் என்னைச் சந்தேகித்து விட மாட்டார், நானும் அப்படிச் சந்தேகத்திற்கு உரியவனாக இருக்க மாட்டேன் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும்.
ஆனாலும் அந்த அனுமதியைக் கொடுப்பதற்கு அமைச்சரவையைத்தான் கூட்டினோம். நானாக ஒரு கையெழுத்துப் போட்டு, கொடுத்து விட்டோம் அனுமதியை என்று சொல்லவில்லை. புதிதாக ஒரு கொள்கை நிலை எடுக்கும் பொழுது, அமைச்சரவைக் கூட்டத்திலேதான் அந்த நிலையை எடுக்க வேண்டியிருக்கிறது.
அதைப்போலவே Best & Crompton கோரிக்கை அமைச்சரவைக் கூட்டத்திலே விவாதித்து முடிவெடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறதேயல்லாமல், வேறல்ல. மிகை வெற்று நிலம் அது. Surplus vacant land அதை விற்பனை செய்துகொள்ள இதுவரை யாருக்கும் அரசு அனுமதி கொடுத்தது இல்லை. அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி கேட்கின்ற காரணத்தினாலேதான், அமைச்சரவைக் கூட்டம் தேவைப்படுகிறது என்பதை நான் டாக்டர் செல்லக்குமார் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதைப்போல, அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள். L.N.G. இதிலே நீங்கள் படித்த அந்த 13 பேரில் இல்லாதவருக்குக் கொடுத்திருக்கிறீர்களே, எப்படி என்று கேட்டார்கள். அந்தப் படித்த பேர்களில் இப்பொழுது யாருக்குக் கொடுத்திருக்கிறோம் என்றால், Siemens என்ற நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறோம். அப்பொழுது இருந்த பேர்களில் UNOCAL அமெரிக்காவைச் சேர்ந்தது. C.M.S. அமெரிக்காவைச் சேர்ந்தது. GRASIM இந்தியாவைச் சேர்ந்தது.
WOODSIDE ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது. இவைகள் அனைத்தும் சேர்ந்து Siemens என்ற பெயரிலே இப்பொழுது ஒரு தொகுப்பாக அவர்கள் செயல்படுகிறார்கள். இத்தனையும் சேர்ந்துதான் Siemens. அதற்குத்தான் இது கொடுக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல், வேறல்ல. மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் எழுதிய கடிதத்திற்கு விளக்கமான பதில் கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டு, அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இடையிலே ஏற்படுகின்ற அரசியல் பேச்சுவார்த்தைகளெல்லாம், இதிலே எந்தவிதமான தொடர்பும் உடையன அல்ல என்பதையும் திரு. செல்லக்குமார் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
