தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 7
பகுதி 5 · 5 / 6
தொழிற்சாலையை அமைத்திட 12-9-1997 அன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடையவுள்ளது.
டைனமேட்டிக் தொழிற்சாலை. கொரியா நாட்டைச் சேர்ந்த டேரிம் என்டர்பிரைசஸ் கம்பெனி. அதேபோல் ஜே.கே.எம். ஆட்டோமோட்டிவ் நிறுவனம். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யாங்கோப் தொழில் நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இருங்காட்டுக்கோட்டையில் 23 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கும் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தங்கள் 7-1-1998 அன்று கையெழுத்தாயின. 1,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 2,000 நபர்களுக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மார்க்யூப் இந்தியத் தொழிற்சாலை. மொரீஷியல் நாட்டைச் சேர்ந்த மார்க்யூப் ஏசியா நிறுவனம், மார்க்யூப் இந்தியத் தொழிற்சாலையை அமைத்திட முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் 7-1-1998 அன்று நடைபெற்றது. 36 கோடியே 50 இலட்சம் ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டை தொழில் வளாகத்தில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இத்தொழிற்சாலை அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும்.
இது 100 விழுக்காடு ஏற்றுமதித் தொழிற்சாலையாகும்.
மேண்டோ பிரேக் சிஸ்டம் தொழிற்சாலை. கொரியா நாட்டைச் சேர்ந்த மேண்டோ மிஷினரி கார்ப்பரேஷன் நிறுவனம், மேண்டோ பிரேக் சிஸ்டம் தொழிற்சாலையை 30 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கிறது. ஏறத்தாழ 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலை கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும். இதற்கான ஒப்பந்தம் 9-1-1998 அன்று ஏற்பட்டது.
போஸ் யூண்டாய் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் இந்தியா தொழிற்சாலை. கொரியா நாட்டைச் சேர்ந்த யூண்டாய் கார்ப்பரேஷனில் போஸ் ஸ்டீல் மற்றும் போஸ் கோ நிறுவனம் போஸ் யூண்டாய் ஸ்டீல் மேனுஃபேக்சரிங் இந்தியா தொழிற்சாலையை 44 கோடியே 19 இலட்சம் ரூபாய் முதலீட்டில் அமைக்க முன்வந்துள்ளது. இருங்காட்டுக்கோட்டை
தொழில் வளாகத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இத் தொழிற்சாலைக்குரிய ஒப்பந்தம் 9-1-1998 அன்று கையெழுத்தானது. கார்களுக்குப் பயன்படும் இரும்புத் தகடுகளைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிந்து இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
மறைமலை நகரில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் தொழிற்சாலை. காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்ஸ் சிஸ்டத்தை டிட்கோ மத்திய அரசு நிறுவனமான திருவாளர்கள் Telecommunication Consultant India Limited, ஜப்பானைச் சேர்ந்த ப்யூஜிகுரா லிமிடெட் ஆகியவற்றோடு இணைந்து கூட்டுத் துறையில் தொடங்குவதற்குரிய ஒப்பந்தம் 2-8-1996 அன்று கையெழுத்தானது. மொத்த மதிப்பீடு இந்தத் திட்டத்திற்கு 40 கோடி ரூபாய்.
இத்தொழிற்சாலைக்காக 10 ஏக்கர் நிலம் மறைமலைநகருக்கு அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குத் தேவையான இயந்திரங்களை வாங்குவதற்கும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1999ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தத் தொழிற்சாலை செயல்படத் தொடங்கும்.
MCC Scrab Agro Limited தேங்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை 38 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் 'டிட்கோ' நிறுவனம் கூட்டுத் துறையில் திருவாளர்கள் MCC Scrab Agro Limited உடன் இணைந்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, கிணத்துக்கடவு என்ற - கிராமத்தில் தேங்காய்ப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ 29-8-1996 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் தொழிற்சாலையில் தேங்காய் எண்ணெய், தேங்காய்ப் பால் மற்றும் தேங்காய் நார் சம்பந்தப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலை 44 ஏக்கர் நிலப் பரப்பில் அமைகிறது. ஜூன் 1999-இல் உற்பத்தி தொடங்கப்படும்.
Metal Halide Lamp தொழிற்சாலை. தமிழக அரசு இத்திட்டத்திற்கு 27-1-1997 அன்று ஒப்புதல் அளித்தது. தொழில்
முனைவோரோடு ஒப்பந்தம் 10-3-1997 அன்று கையெழுத்தானது. இத்திட்டத்தின் மதிப்பு 28.6 கோடியாகும். இந்நிறுவனம் 'டிட்கோ' மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த Advanced Lighting Technology மற்றும் Axes Technology ஆகியோரால் இணைத் துறையில் நிறுவப்பட்டுள்ளது. இது 100 சதவிகிதம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட தொழிலாகும். தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி வளாகத்தில் அமைந்துள்ள இத்தொழிற்சாலை 26-3-1998 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்து Tauraus Novelties Limited தென்கொரியா நாட்டு தொழில் நுட்பத்தோடு இத்திட்டத்தை 'டிட்கோ' பெங்களூரைச் சேர்ந்த Srivathsan and Associates நிறுவனத்தோடு இணைந்து இணைத் துறையிலே தர்மபுரி மாவட்டத்திலேயுள்ள, ஓசூரிலே நிறுவியுள்ளது. இத்திட்டம் dolomite மற்றும் stoneware பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இதன் மதிப்பீடு 10 கோடி ரூபாய் ஆகும். இதற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 30-5-1997 அன்று கையெழுத்தானது.
ஜூன் மாதம் முதல் வணிக அளவிலான உற்பத்தி நடைபெறும். சோதனை அடிப்படையில் தற்போது உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டது.
100 சதவிகிதம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை. இத்திட்டம் 32 கோடி ரூபாய் முதலீட்டில் Pioneer Breeding Farms நிறுவனத்தால் இணைத் துறையில் கோவை மாவட்டம், பொங்கலூரில் அமைய உள்ளது. இதற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 7-1-1998 அன்று கையெழுத்தானது. இத்தொழிலுக்கான சந்தை நிலவரம் ஆய்வு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.
இன்னும் ஓராண்டு காலத்தில் இத்திட்டம் உற்பத்தியைத் தொடங்கும்.
100 சதவிகிதம் ஏற்றுமதி செய்யும் Frozen French Fries நிறுவனம். குவைத் நாட்டைச் சேர்ந்த ஆர்.சி. சுரேஷ் மற்றும் அசோசியேட் நிறுவனத்தோடு 'டிட்கோ' இணைந்து, இணைத் துறையில் சுமார் 32 கோடி ரூபாய் முதலீட்டில் உருளைக் கிழங்கு பதப்படுத்தும் திட்டம் நிறுவப்பட உள்ளது. இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் அமைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 7-1-1998 அன்று கையெழுத்தானது.
PVC foamed sheets -செயற்கை மரப்பொருள் திட்டம். இத்திட்டம் இத்தாலியைச் சேர்ந்த வினோத் சகாய் என்பவரால் இணைத் துறையிலே சுமார் 45 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமையவுள்ளது. இதற்கான தொழில் முனைவோர் ஒப்பந்தம் 25-2-1998-இல் கையெழுத்தானது. இத்திட்டத்திற்குத் தேவையான 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. தேவையான இயந்திரங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
Sriram Auto Components (Madras) Limited தொழிற்சாலை. 'டிட்கோ' சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் உறுப்பு நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களுக்குத் தேவையான நுட்பமான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைத்துள்ளது. இத்திட்டம் இணைத் துறையில் 21 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 7-1-1998-இல் கையெழுத்தானது. 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிறுவனம் சோதனை உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது.
ரமண சேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை. 19-6-1997 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்ட இத்தொழிற்சாலையை 'டிட்கோ' ரமண சேகர் அசோசியேட்ஸ் உடன் இணைந்து, இணைத் துறையில் அமைத்துள்ளது. இத்தொழிற்சாலை உருட்டுச் சுருள்களாக வரும் இரும்பினைத் தகடுகளாக மாற்றும். இது சென்னையை அடுத்த மணலியில் ரூ. 10 கோடியே 18 இலட்சம் முதலீட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சோதனை உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வணிக உற்பத்தி ஜூன் மாதத்திலே தொடங்கப்படும்.
எஸ்.கே.எம். முட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை. ஈரோட்டில் 100 சதவிகிதம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட முட்டை பதப்படுத்தும் தொழிற்சாலை 40 கோடி ரூபாய் செலவில் 12-2-1997 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் நாள்தோறும் 10 இலட்சம் முட்டைகளிலிருந்து albumen powder. yolk powder ஆகியவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவை எல்லாம், அறிவிக்கப்பட்டவை எத்தனை, நடப்பவை எத்தனை என்ற கேள்விக்கு விளக்கமான பதில்கள்
ஆகும். இன்னும் இரண்டொரு விஷயங்களை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன். கழக ஆட்சியிலே, கடந்த இரண்டு ஆண்டு காலத்திலே மொத்தம் 33 புதிய தொழிற்சாலைகள் 'டிட்கோ'-வுடன் சேர்ந்து இணைத் துறையிலும், தனியாகவும் நிறுவுவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில் 8 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கிவிட்டன. 6 தொழிற்சாலைகள் 1998ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்க உள்ளன. மூன்று தொழிற்சாலைகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து இயந்திர சாதனங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
12 தொழிற்சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றே மூன்று தொழிற்சாலைகளில்தான் இன்னும் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. 33-இல் 30 தொழிற்சாலைகளில் நான் சொன்ன இந்த வளர்ச்சிகள், மூன்று தொழிற்சாலைகளில் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதில்தான் யூண்டாய் மோட்டார் தொழிற்சாலையும் ஒன்று.
நான் சொன்ன இந்த 30 தொழிற்சாலைகளில் யூண்டாய் உள்பட எல்லாம் நிறைவேறி முடிந்தால் - முடிப்பதற்கு நாம் எல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலை தமிழ்நாடு மக்களால் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு இவற்றையெல்லாம் நாம் நிறைவேற்றினால் - இந்தத் தொழிற்சாலைகள்மூலம் மாத்திரம், மூன்றரை இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
(மேசையைத் தட்டும் ஒலி).
சில அறிவிப்புகளை இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நான் சொல்ல விரும்புகின்றேன். டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அனைவரும் அறிவீர்கள். நல்ல விஞ்ஞானபூர்வமான கருத்துக்களைச் சொல்லக்கூடியவர், செயல்பாடுகளைச் செய்யக்கூடியவர். அவரோடு கலந்து பேசியதில் விளைந்த ஒன்று இந்த அறிவிப்பு. 1998-99ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பத்தி 108-இல் கேளம்பாக்கம் அருகே உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவுவதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
ஆராய்ச்சியகம், மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிட்கோவும் இணைந்து ஒரு கூட்டு நிறுவனம் அமைத்து, சிறுசேரியில் ஓர் உயர்ரக உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவி வருகின்றன. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதற்கென 20 ஏக்கர் நிலம் சிறுசேரியில் தமிழக அரசாங்கத்தால் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவரமான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
இந்தப் பூங்கா உயிரியல் தொழில்நுட்பத் துறையில் மிக நவீன அம்சங்களான 'டிஷ்யூ கல்ச்சர்' (tissue culture) காய்கறி மற்றும் பழ உற்பத்தியை பன்மடங்கு அதிகரிப்பது, கலப்பின உயர்ரக விதைகளைத் தயாரித்து எண்ணிக்கையைப் பெருக்குவது, (seed multiplication) அரிய மூலிகைகளை வளர்த்து பரப்புவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 21ஆம் நூற்றாண்டிற்கான முக்கியமான துறைகளில் இத்துறையும் ஒன்று என்பதை நான் இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
இரண்டாவது அறிவிப்பாக மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பதில் தமிழ்நாடு ஏற்கெனவே ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஃபோர்டு, யூண்டாய், மிட்சுபிஷி போன்ற பெரிய கார் நிறுவனங்களும், அசோக் லேலண்ட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 'இவெகோ' (IVECO) நிறுவனத்தோடு சேர்ந்து ஆரம்பிக்கும் புதிய தொழிற்சாலை ஆகியவற்றின் விளைவாக மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் துறை வேகமாக வளர்ந்து வருகின்றது.
இவற்றை மேலும் ஊக்குவித்து புதிய முதலீடுகளைத் துறையிலே ஈர்க்கும் பொருட்டு டிட்கோ நிறுவனம், ஐ.எல்.எப்.எஸ். என்ற சர்வதேச நிதி நிறுவனம் (International Finance Corporation) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டி.இ.ஜி (D.E.G.) நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து புதிய தொழில் முனைவோர்க்கு உதவ venture capital அட்வென்சர் என்பதுபோல venture capital துணிந்து முதலீடு செய்ய வருகின்றது. venture capital என்ற திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதன் ஆரம்ப மூலதனம் சுமார் 20 கோடி ரூபாய். டிட்கோவும், ஐ.எல்.எப்.எஸ்-ம் சேர்ந்து ஒவ்வொன்றும் 10 கோடி என்ற அளவில் 20 கோடி ரூபாய் ஆரம்ப மூலதனம்.
தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மென்பொருள் துறையை ஊக்குவித்து, தொழில்முனைவோருக்கு உதவி செய்ய டிட்கோ, ஐ.எல்.எப்.எஸ். நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு புதிய 'venture capital'-ஐ நிறுவி உள்ளன. இதனுடைய ஆரம்ப மூலதனம் 30 கோடி ரூபாய் ஆகும். தமிழக அரசு ஏற்கெனவே மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு, மென்பொருள் தகவல் தொழில் நுட்பம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறை ஆகியவற்றை முந்துதல் துறைகளாக, thrust sector -ஆக அறிவித்துள்ளது.
உணவு பதப்படுத்தும் துறையைப் பொறுத்தவரையில் விரைவில் தமிழக அரசு தன்னுடைய கொள்கை அறிவிப்பை வெளியிடும். இத்துறைக்கும் தொழில் முனைவோருக்கும் உதவும் நிதி வசதி - venture capital -அமைக்கும் கருத்துரு பரிசீலனையில் உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கூறிய துறைகளில் நிறுவப்படும் - venture capital - நிதித் திட்டம் இத்துறைகளில் முதலீடு செய்யும் சிறு தொழில் முனைவோருக்கு குறிப்பாக முதல் சந்ததி தொழில் முனைவோருக்கு மிக்க பயன் அளிக்கும்.
இதைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான புதிய தொழில் முனைவோர்கள் தமிழ்நாட்டில் உருவாகிவிடுவார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.
1997-98ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒன்றைக் குறிப்பிட்டு இருந்தேன். அன்றைய மத்திய தொழில்துறை அமைச்சரோடு கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவின்படி 1997-98 நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தேன்.
