உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 7

பகுதி 6 · 6 / 6

அதாவது தகவல் தொழில்நுட்பம். (Information Technology) நம்முடைய மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்குத் திறவுகோல் என்று கருதப்படுகிறது. தகவல் தொடர்புகளில் ஏற்பட்டுவரும் புரட்சிகரமான மாற்றங்கள் காரணமாக இந்தப் பூமிப் பந்தே குக்கிராமங்களாக Global Village ஆகக் குறுகிக் கொண்டு வருகிறது. அந்தத் துறையில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், குறிப்பிடும் மாற்றங்கள் தோன்றி, நேற்றைய தொழில்நுட்பத்தைப் பத்தாம்பசலியாக மாற்றிவிடுகின்றன.

அடுத்த நூற்றாண்டு, தகவல் துறை தொழில்நுட்ப நூற்றாண்டு ஆகும். அதற்கேற்ற அடிப்படையை உருவாக்கும் வகையிலும், 21-ஆம் நூற்றாண்டுக்கேற்ப தகவல் துறை தொழில் நுட்பத் துறையில் உலகத்தின் முன்னோடியாக இருக்கும் விதத்திலும், இந்தியாவிலே முதல் முறையாக, சென்னையில் Information Technology Institute of Tamil Nadu (ITIT) என்ற அமைப்பு நிறுவப்படும். முதலில், பதிவு செய்யப்பட்ட சுயநிதி அமைப்பாக Registered society ஆகத் தொடங்கப்பட்டு, படிப்படியாக அது ஒரு சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றப்படும்.

இத்துறையில் முன்னணியிலே இருக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களோடும், புகழ்பெற்ற தனியார் அமைப்புகளோடும் இந்த அமைப்பு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, Computer Graphics, Software Engineering and Hardware Systems, Multimedia, Telecommunications, Information Technology, Digital Technology போன்ற தகவல் தொழில் நுட்பத் துறையின் அனைத்து அம்சங்களிலும் தன்னிகரற்று விளங்கும் இளைஞர்கள் உருவாக்கப்படுவார்கள். இதற்காக, வரும் ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அப்போது அறிவித்திருந்தேன்.

அதற்கேற்ப, இப்போது அதன் பெயர் மாற்றப்படுகிறது தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பக் கல்வி மையம் என்று. TANITEC என்று சுருக்கமாக அதனுடைய பெயர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நிறுவ, தொழில் நிறுவனங்களின் உதவிகளுக்காகவும், நடைமுறை வசதிகளுக்காகவும், இந்திய நிறுவனங்கள் சட்டம் 56-ன் பிரிவு 25-ன் கீழ், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பக் கல்வி மையம் பதிவு செய்யப்பட்டது. இந்த மையம், முதலில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு, பின்னர் படிப்படியாக, சுயநிதிப் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடையும்.

இந்த மையம் தொடக்கத்தில் 1998-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் தகவல் தொழில் நுட்பப் பட்ட மேற்படிப்பு, பட்ட வகுப்புகளை சென்னைக்கு அருகிலே உள்ள பெருங்குடியில் 'எல்காட்' நிறுவனத்தின் கட்டடத்திலே தொடங்க உள்ளது. இளங்கலை மற்றும் முதுகலைத் தொழில் நுட்பப் பட்டப் படிப்புகளை படிப்படியாக ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த

மையத்திற்காக 1997-98ஆம் ஆண்டு பங்குத் தொகையாக தொடக்கத்தில் 5 கோடி ரூபாயை அரசு அளித்தது. 1998-99ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மேலும் 5 கோடி ரூபாயை இந்த மையத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளது.

'எல்காட்' நிறுவனத்தின், விற்பனையின் சாதனையை எடுத்துக்கொண்டால், 1995-96ஆம் ஆண்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசில், அதனுடைய டர்ன்-ஓவர் 7.86 கோடி ரூபாய். 1997-98இல் 'எல்காட்'டினுடைய மொத்த விற்பனை - டர்ன்-ஓவர்-38.79 கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி) 'எல்காட்'ன் நிகர இலாபம் 1995-96இல் ரூ. 2.71 இலட்சம். 1996-97இல் ரூ. 33.59 இலட்சம். 1997-98இல் 4½ கோடி ரூபாய். (மேசையைத் தட்டும் ஒலி).

மற்றொரு அறிவிப்பு. 'Software' பற்றியது. இப்படி 'Software' 'Software' என்று சொல்லும்போது, பல பேருக்கு என்ன என்று தெரியாது. எனக்குக்கூட ஆரம்பத்திலே அந்தக் காலத்திலே புரியாமல் இருந்தது. என்ன இது 'Software', 'Software' என்று சொல்லுகிறார்களே என்று.

ஒருவரிடம், பையன் என்ன செய்கிறான் என்று கேட்டால் 'Software' தொழிலில் இருக்கிறான் என்பார். 'Hardware' 'Software' என்று சொல்லுகிறோம். 'Software' என்றால் என்ன என்பதை - மன்னித்துக்கொள்ள வேண்டும், உறுப்பினர்கள் யாருக்காவது தெரியாமல்கூட இருக்கும். இருந்தாலும், ஆங்கிலப் படம் பார்ப்பது மாதிரி, என்னோடு சேர்ந்து அவர்களும் தலையாட்டக் கூடும். 'Software' என்றால் என்ன என்பதைச் சொல்லவேண்டுமென்றால் - கணினி மற்றும் அதைச் சார்ந்த Monitor, Key Board, Printer ஆகியவை 'Hardware' என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கணினியை இயக்குவதற்காகக் கொடுக்கப்படுகின்ற தொகுப்புக்குத்தான் 'மென்பொருள்' என்று பெயர். தற்போது மென்பொருள் துறையில், உலகத்திலேயே பரபரப்பாகப் பேசப்படுவது, 2000-ஆவது ஆண்டு -Y2 K-1 பிரச்சினையாகும்.

கடந்த 30 ஆண்டுகளாக, கணினி மொழியிலே இடச் சிக்கனத்தைக் கருதி, ஆண்டுகளைக் குறிப்பிடும்போது, இரண்டு இலக்கங்களை மாத்திரம்தான் பயன்படுத்துகிறார்கள். அது

ஆபத்தாகப் போய்விடுமோ என்ற பயம் இப்போது வந்திருக்கிறது. நான் கோப்புகளில் கையெழுத்துப் போடும்பொழுது எல்லாம், உதாரணமாக 7-2-98 என்று போடுவதில்லை. 7-2-1998 என்றுதான் போடுவேன். என்னிடம் செகரட்டரி எல்லாம்கூட கேட்டார்கள். “எல்லா மினிஸ்டர்களும் '98' என்றுதான் போடுகிறார்கள், ஏன் நீங்கள் மாத்திரம் '1998' என்று போடுகிறீர்கள் என்று கேட்டார்கள்”.

எல்லா மினிஸ்டர்களும் இந்த வருடம் '98' என்று போடுவார்கள். அடுத்த வருடம் '99' என்று போடுவார்கள். அதற்கு அடுத்த வருடம், இரண்டு இலக்கம் என்ன போடுவார்கள் என்று கேட்டேன். 2000 என்று வரும்போது, இரண்டு சைபர்கள்தான் போடவேண்டும். (சிரிப்பு) அதனால்தான் இப்போதே நான் பழகிக்கொள்கிறேன். இரண்டாயிரத்திற்குத் தயாராகி, இப்போதே '1998' என்று போடுகிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி). இது Software-ன் தத்துவம். 30 வருடங்களாக கணினி மொழியிலே இடச்சிக்கனத்தைக் கருதி எல்லோருமே இந்த இரண்டு இலக்கங்கள், இரண்டு சைபர்களைப் போடுவதா அல்லது போடாமல் விட்டு விடுவதா, '98', '68', '78' என்று போடுவதா - இதன் விளைவு என்னவாகும் என்றால் 2000-ஆவது ஆண்டு வரும் காலத்தில் கணினி துறையில் '00' என்ற எண்கள் மாத்திரம் வரும்பொழுது அனைத்து கணினிகளைச் சார்ந்து நடக்கும் அத்தனை நடவடிக்கைகளும் திடீரென்று நின்றுபோக நேரிடும்.

விமானம் போய்க் கொண்டிருக்கிறது என்றால் - அப்படி நடக்கப் போவதில்லை; உதாரணத்திற்காகச் சொல்கிறேன் - விமானம் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அந்த இரண்டு '00' மாத்திரம் வைத்திருந்தால், விமானம் போய்க்கொண்டிருக்கும்பொழுது, 2000 ஆவது வருடத்தில், இந்தக் கணக்கு தவறிவிட்டால், 4 இலக்கத்தில் இல்லாமல் இரண்டு இலக்கத்தில் இருந்தால், விமானம் நடுவழியில் வானத்தில் நின்றுவிடும். நின்றால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியும்.

அப்படிப்பட்ட ஆபத்து இந்த கணினி யுகத்தில் ஏற்படக்கூடும். இதன் விளைவாக மிகவும் முன்னேற்றமடைந்துள்ள மேலை நாடுகளில்கூட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இதைச் சரிசெய்யும் பணி நம் நாட்டில் உள்ள மென்பொருள் நிறுவனங்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பை

அளிக்கும் என்று நம்பப்படுகிறது. சென்னையில் மாத்திரம் தற்பொழுது 2000 மென்பொருள் (Software) வல்லுநர்கள் இந்தப் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள். இதேபோல் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஒரே நாணய முறைக்கு மாறும்போது கணினித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். ஒரு மதிப்பீட்டின்படி சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பணிகளின் மதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலமாகவும் நமது நாட்டில் மென்பொருள் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்துதான் இந்த அறிவிப்பை நான் செய்கின்றேன்.

டைடல் மென்பொருள் பூங்கா, தரமணி, 1998-99ஆம்-ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 74-ஆவது பத்தியில் டிட்கோ நிறுவனம் சென்னையில் தரமணியில் மென்பொருள் தொழில் பூங்கா ஒன்றினை நிறுவுவதுபற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் தற்பொழுது மென்பொருள் (Software) துறையில் தங்களது அலுவலகங்களையும், வசதிகளையும் நிறுவுவதற்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Information Technology Companies) உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் தேவையைப் பூர்த்தி செய்யும்பொருட்டு தரமணியில் 7.5 ஏக்கர் பரப்பளவில் டிட்கோவும், எல்காட்டும் இணைந்து 160 கோடி ரூபாய் முதலீட்டில் 8 இலட்சம் சதுர அடி அளவில் மிக நவீன மென்பொருள் பூங்கா ஒன்றை நிறுவி வருகின்றன.

வேலை ஆரம்பமாகிவிட்டது. நிலத்தைச் சுத்தப்படுத்தும் பணி தற்பொழுது நடந்து வருகின்றது. இதற்கான அனைத்து ஆய்வுகளும் முடியும் தருவாயிலே உள்ளன. ஜூலை மாதத்தில் கட்டுமானப் பணி தொடங்கி பன்னிரண்டே மாதங்களில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பூங்காவில் மிக நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு மற்றும் வி.எஸ்.என்.எல். மூலமாக உலகின் அனைத்து பகுதிகளோடும் தொடர்புகொள்ள ஏதுவாக தொடர்பு வசதி அளிக்கப்படும்.

இப்பூங்காவில் ஏறத்தாழ 8,000 மென்பொருள் தொழில் வல்லுநர்கள் Software Professionals

பணிபுரிவார்கள். இதன்மூலம் கணிசமான அன்னியச் செலாவணி ஈட்டப்படும். மற்றும் மென்பொருள் துறையில் நாட்டில் சென்னை ஒரு முன்னோடியான இடத்தை அடைய முடியும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

சென்னையை அடுத்து, கோவை மாநகரிலும் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும் கிளைகளையும் நிறுவி வருகின்றன. இவற்றின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு எல்காட் நிறுவனமும், சிப்காட் நிறுவனமும் இணைந்து கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள 6 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நவீன மென்பொருள் பூங்கா ஒன்றை நிறுவி வருகின்றன. சுமார் 50 கோடி ரூபாய் செலவில், 2.5 இலட்சம் சதுர அடி கட்டட அளவில் அமையவிருக்கும் இப்பூங்காவின் கட்டுமானப் பணி அடுத்த மாதம் தொடங்கி 12 மாதங்களில் முடிவுறும்.

இப்பூங்காவில் ஏறத்தாழ 2,500 மென்பொருள் தொழில் வல்லுநர்கள் பணிபுரிவார்கள் என்ற அறிவிப்பையும் இங்கே நான் செய்கிறேன்.

கடைசியாக, உறுப்பினர் திரு. ரங்கநாதன் தொடங்கிய விஷயம். தொடங்கியதோடு முடிக்கின்றேன். 'Single Window System' தொழில் துறையை வளர்ப்பதற்கும், மேலும் முன்னேறுவதற்கும் தேவை என்ற அரிய கருத்தை அவர் சொன்னார். பிற மாநிலங்களில், நம்முடைய அண்டை மாநிலங்களில் எல்லாம் அந்த 'Single Window System' இப்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இதிலே முக்கியமாக, தொடங்கிய பெரிய தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், உதாரணமாக யூண்டாய், செயிண்ட் கோபைன், மிட்சுபிஷி போன்றவைகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளைப் பரிசீலிக்க தொழில் துறைச் செயலாளர் தலைமையில் ஒவ்வொரு திங்களும் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட தொழில் முதலீட்டார்களும் சந்தித்து Pending issues பற்றிப் பரிசீலித்துப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

மேலும் புதிதாகத் தொழில் தொடங்க வருபவர்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கத்தக்க வகையில் 100 கோடி ரூபாய்க்குமேல் ஒரு தொழிற்சாலைக்கு முதலீடு செய்து

தொழில் தொடங்கும் திட்டத்தைப் பரிசீலித்து அதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியையும் உடனுக்குடன் பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் தலைமையிலே ஓர் உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அதைப்போலவே, 100 கோடி ரூபாய்க்குக் குறைவாக முதலீடு செய்து தொழில் தொடங்குவோருக்கு விரைவில் அனைத்துத் துறையின் அனுமதியையும் பெற்றுத்தர தலைமைச் செயலாளர் தலைமையிலே ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). எனவே, இந்த வெட்டுத் தீர்மானங்களை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு இந்த அளவில் கேட்டு முடித்துக்கொள்கிறேன்.

**திரு. கே. சுப்பராயன் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டினுடைய பொருளாதார வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிப்பது பஞ்சாலைகள். அங்கு கடுமையான நெருக்கடி நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பஞ்சாலைகளும் அத்தகைய பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கு, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து மாநில அரசின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய குறைபாடு என்ன என்பதையும், பஞ்சு நெருக்கடிக்கு என்ன காரணம் என்பதையும், அவர்களை அழைத்துக் கேட்டு அறிந்து, அவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசு முயற்சிக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களே பேசும்போது சொன்னார்கள். பஞ்சு நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமானால், பருத்தி அதிகமாக விளைவிக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் நெருக்கடி தீரும் என்றும் சொன்னார்கள். ஆகவே, அந்த வகையிலே அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** திருமதி ஏ.எஸ். பொன்னம்மாள்.

**திருமதி ஏ.எஸ். பொன்னம்மாள் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் நீண்டகாலமாக - 413 ஏக்கர், 413 ஏக்கர் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய காலத்திலேதான் அது எடுக்கப்பட்டது. இப்போது அங்கே என்ன இருக்கிறது? நான், ஒரு கனரகத் தொழிற்சாலை வரும் என்று ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தேன். சோழவந்தான் தொகுதியில் அலங்காநல்லூர் சுகர் பேக்டரி கொண்டுவந்த காரணத்தினால் - அது எங்களுடைய காலத்திலேதான் கொண்டுவரப்பட்டது; 2,500 பேர் அங்கே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிலைமையை இந்த 1999-லும் ஏற்படுத்தலாம் என்று நான் கனவு கண்டேன். அதை விடுத்து, இன்றைக்கு அங்கு என்ன போட்டு இருக்கிறீர்கள்? இந்த குறிப்பிலே, 380 ஏக்கர் கையகப் படுத்தப்பட்டு இருப்பதாக இருக்கிறது. இதிலே தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளில் அது அமைக்கப்படும்? இது எப்போது அமைக்கப்படும்? இதற்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதுபற்றி எல்லாம் சொல்லாமல், வேலைவாய்ப்புப்பற்றி எல்லாம் சொல்லாமல் இருக்கிறீர்கள்.

இதையும் சும்மா கண் துடைப்பு வேலையாகத்தான் நான் கருதுகிறேனே தவிர, வேறல்ல. அதைப்பற்றி நான் சொல்வதற்காகத்தான் தங்களிடத்திலே கேட்டேன். இதில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்களா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** பேரவைத் தலைவர் அவர்களே, அம்மையார் அவர்கள் இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். கனவு கண்டேன் என்பது ஒன்று; கண் துடைப்பது என்பது மற்றொன்று. கனவு கண்டு விழித்தவர்கள் கண்ணைத் துடைத்துக்கொள்ள வேண்டியதுதான். (சிரிப்பு).

**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** திருமதி பொன்னம்மாள் அவர்கள் கருத்துச்சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் கட்சி சார்பிலே பேசி இருக்க வேண்டும். கட்சி சார்பிலே பேசுவதற்கு வாய்ப்புக் கொடுப்பது நான் அல்ல, அடுத்து திரு. பி. வெங்கடசாமி.

**THIRU B. VENKATASAMY :** Hon. Speaker Sir, Hon. Chief Minister was telling that the ELCOT, Hosur has earned a profit of Rs.4 crores. But I am sorry to state that the ELCOT which was started in Hosur, now converted into ELNET is now under the process of closure because of the mis-management of the Managing Director, who was posted there. So, I request our Hon. Chief Minister to rectify this.

I am also giving a letter to the Hon. Chief Minister to set right the things.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** பேரவைத் தலைவர் அவர்களே, ஹோசூர் எல்காட் பற்றித்தானே? என்ன பிரச்சினை.

**திரு. பி. வெங்கடசாமி :** பேரவைத் தலைவர் அவர்களே, அதற்கு வேறு எம்.டி.-ஐப் போட்டு விட்டார்கள்.

**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அதைப்பற்றித் தனியாக என்னிடத்திலே விவரம் தருவார்களேயானால், உடனடியாக விசாரித்து அதைப்பற்றிக் கூற இயலும்.