உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 7

பகுதி 3 · 3 / 6

சதான் ஸ்ட்ரக்சரல்ஸ் நிறுவனம். பொதுத் துறை, தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மினரல்ஸ் - கனிம நிறுவனம் (டாமின்), தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு உப்பு நிறுவனம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மாநிலத் தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தொழில் அடிப்படை மேம்பாட்டு நிறுவனம் (டாசிக்), அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலே நிறுவப்பட்டது.

பிறகு நான் அதிலே சில விவரங்களைச் சொல்ல வேண்டுமேயானால், இராணிப்பேட்டையிலே உள்ள 'சிப்காட்' - அந்த வளாகம் 1971-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே உருவாக்கப்பட்டது. நான் பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே இடம் வாங்கப்பட்டு, பிறகு அந்த இடம் தொழில் வளாகம் அமைப்பதற்குத் தகுதி அல்ல என்று அதை விற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான கோப்பு வருகிற நேரத்திலேதான் - 1967-லே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றது.

அண்ணா மறைவிற்குப் பிறகு, நான் பொறுப்பேற்ற பிறகு, நானும், அன்றைய தொழிலமைச்சர் திரு. மாதவனும் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இதை எதற்காக விற்க வேண்டும், இங்கே ஒரு வளாகத்தை ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்து, இராணிப்பேட்டையிலே சிப்காட் வளாகம் 1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உங்களுக்கு ஒரு விவரம் சொல்லுகிறேன். 3 ஆண்டு காலத்தில், 1971-லே ஆரம்பிக்கப்பட்ட 'சிப்காட்' வளாகம், 1973-லேயிருந்து 1976 வரை, மூன்றாண்டு காலத்தில் 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 தொழில் நிறுவனங்களை 729 ஏக்கர் பரப்பிலே அங்கே தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றது. அதற்குப் பிறகு 12 ஆண்டு காலம், 1976-லேயிருந்து 1988 வரை அங்கே உருவான தொழில் நிறுவனங்கள் 49 தான். பிறகு 1989-லேயிருந்து 90 மீண்டும் நாங்கள் ஆட்சியிலே இருந்தபோது, 1989, 1990 - இரண்டு ஆண்டுகளில் 25 தொழில் நிறுவனங்கள்.

1991 முதல் 1996 வரை 5 ஆண்டு காலத்தில், கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 30 தொழில் நிறுவனங்கள், 5 வருஷத்திலே. 1996 மே

முதல் 1998 மார்ச் வரை 65 தொழில் நிறுவனங்கள், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்.

1974-ஆம் ஆண்டு 500 கோடி முதலீட்டில் 186 தொழில் நிறுவனங்கள் ஓசூரில் தொடங்கப்பட்டன. 1991-96, 5 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 35 தொழில் நிறுவனங்கள். 1996-98 இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 133 நிறுவனங்கள். புதுக்கோட்டை சிப்காட், 1991-96, 5 ஆண்டுகளில் 13 தொழில்கள். 1996-98 இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 14 தொழில் நிறுவனங்கள். கும்மிடிப்பூண்டியில் 1991-96 வரை 5 ஆண்டுகளில் 65 தொழில் நிறுவனங்கள்.

1996-98, இந்த இரண்டு ஆண்டுகளில் கழக ஆட்சியில் 78 தொழில் நிறுவனங்கள்.

நமது அரசு மத்தியிலே உள்ளவர்களிடத்திலே வலியுறுத்தி சில பொதுத் துறை நிறுவனங்களை, தொழில்களைப் பெற வேண்டுமென்று திரு. சுப்பராயன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நெய்வேலி என்ன ஆயிற்று என்று கேட்டார். நான் கடந்த ஆண்டு தொழில் மானியத்திற்குப் பதில் அளிக்கும்போது குறிப்பிட்டிருக்கின்றேன். ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொதுத் துறை நிறுவனங்கள் தமிழக அரசால் இன்றைக்குப் பரிபாலிக்கப்படுகின்றன என்றாலும்கூட, மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில்கள் பொதுத் துறையிலே வர வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டேன்.

அப்படிக் குறிப்பிட்ட 4, 5 பெரிய தொழில்களில் ஒன்றாக நெய்வேலி சுரங்கம், Third mine cut, அவர்கள் கேட்டார்களே, அந்த Third mine cut-க்கு 6,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன், தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக (மேசையைத் தட்டும் ஒலி).

அதைப்போலவே, எம்.ஆர்.எல். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். அதனுடைய உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டம், அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. 1,200 கோடி ரூபாய் அதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், எண்ணெய்க் கசடு

வருகிறதே, அதிலேயிருந்து மின்சாரம் தயாரிக்கலாம், 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று அந்தத் திட்டத்திற்கு விரைவில் அனுமதி தேவை என்ற முறைப்படி நம்முடைய அலுவலர்கள், அதிகாரிகள் எல்லாம் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதைப் பற்றிப் பல நேரங்களிலே மத்திய அரசிடம் பேசும்போது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தி அந்த எண்ணெய்க் கசடு மூலமாக 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற திட்டத்திற்கு விரைவில் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதை இங்கே நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இஃதன்னியில், சிப்காட் வாயிலாக உருவாக்கப்படும் புதிய தொழில் வளாகங்கள் என்று எடுத்துக் கொண்டால் - புதியவை என்ன என்று கேட்டார் திரு. ரங்கநாதன். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமேயானால் - 1996-97ஆம் ஆண்டினுடைய அறிவிப்புகள், செய்யாறு தொழில் வளாகம், இருங்காட்டுக்கோட்டை தொழில் வளாகம், கும்மிடிப்பூண்டி இரண்டாம் கட்டத் தொழில் வளாகம்; இதிலே செய்யாறைப் பொறுத்தவரையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யாறு தொழில் வளாகத்தின் முதல் கட்டம் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டது.

260 ஏக்கர் நிலம் அதற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. செய்யாறு தொழில் வளாகத்திற்குரிய முதன்மைத் திட்டம், மாஸ்டர் பிளான் தயாரிக்க, ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். பாலாற்றுப் படுகையிலிருந்து செய்யாறு தொழில் வளாகத்திற்குத் தண்ணீர் கொணருவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இருங்காட்டுக்கோட்டை தொழில் வளாகம் - 1,829 ஏக்கர் நிலப்பரப்பில் இருங்காட்டுக்கோட்டைத் தொழில் வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 1,314 ஏக்கர் நிலம் அதற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 700 ஏக்கர் நிலம் தொழில் முகவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிலேதான் யூண்டாய் மோட்டார் கார் தொழிற்சாலைக்கு மாத்திரம் 532 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இருங்காட்டுக்கோட்டையிலே சிப்காட் மேம்படுத்தியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், 10 கிலோ மீட்டர்

நீளத்திற்குச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மெயின் சாலைப் பணிகள் 1998 ஜூன் மாதத்திற்குள் முடிவடைய இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கும்மிடிப்பூண்டி இரண்டாம் கட்டத் தொழில் வளாகத்தில் ஏற்றுமதி மேம்பாட்டுத் தொழில் பூங்கா அமைக்க 224 ஏக்கர் நிலப்பரப்பு; அதிலே 160 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டிற்குத் தயாராக ஆக்கப்பட்டுள்ளது. 15 ஏக்கர் நிலம் வாசனைத் திரவியப் பொருள்களை உற்பத்தி செய்யும் 'புஷ்போக் ஆலன்' கம்பெனிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் ஜூன் மாதத்திற்குள்ளேயே முடிவடையவிருக்கின்றன.

அடுத்து, 1997-98ஆம் ஆண்டுக்கான அறிவிப்புகளும் நிறைவேற்றமும், 1997-98ஆம் ஆண்டு திருப்பெரும்புதூர், நெமிலி, வடமங்கலம் ஆகிய இடங்களில் தொழில் வளாகங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவற்றின் முன்னேற்ற விவரங்களைச் சொல்ல வேண்டுமேயானால் திருப்பெரும்புதூர் சிப்காட் தொழில் வளாகம் 2,469 ஏக்கரில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 292 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 125 ஏக்கர் நிலம் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளாகம் உருவாக்கத்திற்கு ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. சாலை முதலிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மண், தண்ணீர் குறித்த ஆரம்ப நிலை ஆய்வு முதலியன மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெமிலி சாட்டிலைட் நகரையும் 2,429 ஏக்கர் பரப்பிலும், வடமங்கலம் தொழில் பூங்கா 1,408 ஏக்கர் பரப்பிலும் - தொழில் வளாகங்கள் - அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவற்றுக்கான நில எடுப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய மாநிலத்தினுடைய நிலையை நாம் சற்றுக் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 1991 ஜூலை முதல் 1996 ஏப்ரல் வரை தமிழக தொழில் துறையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட

மொத்த முதலீடு 90,609 கோடி ரூபாய் ஆகும். அதாவது 60 மாதத்திலே 90,609 கோடி ரூபாய். அப்போது இம்மாநிலம் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது, கழக ஆட்சியில். 1998 சனவரி வரை, 20 மாதங்களில் இம்மாநிலம் 33,560 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று, அது நாட்டின் மொத்த மூலதனத்தில் 17.6 சதவீதம் என்ற நிலையில், மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

1991-92-இல் 6,781 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி 1996-97-இல் 18,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 1997-98-இல் 20,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் ஏற்றுமதியிலே தமிழகம் 17 சதவீதத்தை அடக்கியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

'பி.டி. கேலம்' 1997 டிசம்பரில் வெளியிட்ட முதுநிலை வணிக நிர்வாக ஆய்வு அறிக்கையில் முதலீட்டாளர்களை மிகவும் கவருவதில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும்கூட, Business Today 'the best States to invest in' என்ற இந்த பத்திரிகையில், முதல் இடத்திலே திரு. மனோகர் ஜோஷி அவர்களுடைய படத்தைப் போட்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடமும், இரண்டாவது இடம் குஜராத் - அதிலே திரு.

திலீப் பரக் அவர்களுடைய படத்தைப் போட்டு இரண்டாவது இடமும், தமிழ்நாடு என்று என்னுடைய படத்தைப் போட்டு, தமிழ்நாடு மூன்றாம் இடம் என்றும் (மேசையைத் தட்டும் ஒலி) வெளியிட்டு இருப்பதை உங்களுக்கு எல்லாம் நான் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். அதிலே ஒன்றைச் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன். இந்த இடங்களிலே ஒரு சிறு தகராறு என்னவென்றால், மகாராஷ்டிரா, Objective-லும் 1, Perception-லும் 1, Rank-லும் 1: இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது.

குஜராத் Objective-லே 3, Perception-லே 2, Rank-லே 2; தமிழ்நாடு Objective-லே 2, Perception-லே 3, Rank-லே 3: இதற்கு என்ன விளக்கம் என்றால் Objective என்றால், உண்மை, உண்மையான நிலை. Perception என்றால் பார்வையிலே பார்க்கும்போது உள்ள நிலை. நாம் உண்மையிலேயே இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறோமாம். ஆனால், வெளி உலகத்திற்கு நாம் மூன்றாவது

இடமாகத் தெரிகிறோமாம். காரணம், அந்த அளவிற்கு விளம்பரம் இதுவரையிலும் செய்துகொள்ளாமல் இருந்ததினாலே நாம் மூன்றாவது இடத்திலே இருக்கிறோமாம். (மேசையைத் தட்டும் ஒலி). இதையும் அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.