தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 7
பகுதி 2 · 2 / 6
அவர் ஒன்று சொன்னார். டிட்கோ பெரும் நஷ்டத்திலே இருக்கிறது என்று சொன்னார். அது தவறான தகவல். டிட்கோவிற்கு 1995-96-ஆம் ஆண்டு ரூ. 3.21 கோடி இலாபம். 1996-97-இல் ரூ. 2.35 கோடி இலாபம். 1997-98-இல் ரூ. 4.26 கோடி இலாபம். எனவே, திரு. சுந்தரம் சொன்னது மெய் அல்ல. நான் வேறு வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மெய் அல்ல என்று சொல்லுகிறேன். ரூ. 4.26 கோடி 1997-98-லே டிட்கோவிற்கு இலாபம் என்ற செய்தியை அவருக்குச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நண்பர் திரு. அழகராஜா அவர்கள் இங்கே பேசும்போதும், திரு. இராமன் அவர்களும் மற்றும் சிலரும் இங்கே பேசும்போதும் கூட்டுறவு மற்றும் பொதுத் துறைச் சர்க்கரை ஆலைகளுக்கு நஷ்டம் ஏன் ஏற்படுகிறது. அதே நேரத்திலே தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு இலாபம் ஏற்படுகிறதே என்று சுட்டிக்காட்டினார்கள்.
நம்முடைய திரு. சந்தானம் அவர்கள்கூட அவர்களுடைய பேச்சில் சர்க்கரை ஆலைகளில் நஷ்டம் ஏற்படுவதற்குக் காரணம் நீங்கள் விவசாயிகளுக்கு கரும்புக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காததுதான் என்று சொன்னார். அதாவது அதிக நஷ்டம் ஏற்படவேண்டும் என்பதற்காக அவர் அந்தக் கருத்தைச் சொன்னார் என்று நான் கருதுகிறேன். ஆயிரம் ரூபாயைத் தருவதாகத் தேர்தல் நேரத்திலே, தேர்தல் அறிக்கையிலே திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்தது உண்மை.
கரும்பு விவசாயிகளுக்கு ஆயிரம் ரூபாய் தரப்பட வேண்டும் என்பது ஒரு கொள்கை, ஒரு குறிக்கோள். அதை நோக்கி நடைபெறுகிற காரணத்தால்தான் மாநில அரசு, மத்திய அரசு நிர்ணயிக்கின்ற விலையைவிட அதிக விலை தமிழகத்திலே கரும்புக்குத் தந்து வருகின்றது. உதாரணமாக 450 ரூபாய், 470 ரூபாய் அளவிலேதான் மத்திய அரசு விலை நிர்ணயிக்கிறது. இங்கே தமிழக அரசு அதை 650 ரூபாய் என்ற அளவுக்கு, அதாவது பிழி திறனுக்கு ஏற்பவாறு 650 ரூபாய் என்றும், நல்ல பிழி திறன் உள்ள கரும்புக்கு 700 ரூபாயைத் தாண்டுகின்ற அளவுக்கும் இங்கே நாம் விலை கொடுத்து வருகின்றோம்.
அதனால் இந்த ஆயிரம் ரூபாயை
எப்போது தருவீர்கள் என்றால் 2 ஆண்டுதான் முடிந்திருக்கிறது. இன்னும் 3 ஆண்டு இருக்கிறது. இந்த 3 ஆண்டு காலத்திற்குள்ளாக இந்த ஆயிரம் ரூபாயை கரும்பு விலையாகத் தந்து உங்களுடைய பாராட்டுக்களை எல்லாம் பெறுவோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
அவர்கள் கேட்டார்கள்; தனியார் சர்க்கரை ஆலைகளில் இலாபம் ஏற்படும்போது ஏன் கூட்டுறவு, பொதுத் துறைச் சர்க்கரை ஆலைகளிலே இலாபம் இல்லை என்று திரு. அழகராஜா அவர்கள் கேட்டார்கள். அதற்கான சில விளக்கங்களைத் தர விரும்புகிறேன். 1994-95 மற்றும் 1995-96 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலும், அதேபோல மாநில அளவிலே தமிழகத்திலும் கூடுதலான கரும்பு உற்பத்தி, கூடுதலான சர்க்கரை உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக சர்க்கரையினுடைய விற்பனை விலை சர்க்கரையினுடைய உற்பத்திச் செலவைவிடக் குறைந்து போய்விட்டது.
அது நஷ்டத்திற்கு முக்கியமான காரணம். 1994-95 மற்றும் 1995-96 ஆம் ஆண்டில் தனியார் ஆலைகள் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூட்டுறவு ஆலைகளிலே பதிவு செய்யப்பட்ட கரும்பைச் சம்பந்தப்பட்ட தனியார் ஆலைகள் அரவைக்கு எடுத்துக் கொள்ளாததால் அவர்களையும் கூட்டுறவு ஆலைகளிலே அரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனியார் ஆலைகளாக ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்ட அந்தக் கரும்பை அவர்கள் எடுத்துக்கொள்ளாத காரணத்தால் அவர்களையும் கூட்டுறவு ஆலைகளே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் கரும்பு விவசாயிகள் பயிரிட்டுவிட்ட கரும்பை எப்படியாவது அரவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளில் கரும்பு அரவைக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தினுடைய ஆணையின் அடிப்படையில் நீட்டித்த அரவையின் காரணமாகவும் நஷ்டம் ஏற்பட்டது என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
தனியார் ஆலைகளைப் பொறுத்தவரை சர்க்கரைத் தொழில் மட்டும் அல்லாமல், அதைச் சார்ந்த எரிசாராயத் தொழிற்சாலை போன்ற இதர தொழில்களின் வருவாயும் தனியார் ஆலைகளுக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இருப்பினும் அரசு எடுத்த பல நடவடிக்கைகளின்
காரணமாக அவர்கள் இங்கே வருத்தப்பட்டார்கள்; அதற்கு மாறாக 1996-97-இல் 108 கோடி ரூபாய் நஷ்டமாக இருந்த நிலை மாறி 1997-98-இல் 50 கோடி ரூபாய்தான் நஷ்டம் என்ற அளவிற்கு இழப்பின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சர்க்கரை விலை, கழிவுப் பாகு விலை ஆகியவை இலாபகரமாக இருக்கும் பட்சத்தில் சர்க்கரை ஆலைகளை மீண்டும் இலாபத்திலே இயக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் நான் இங்கே திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய திரு. ரங்கநாதன் அவர்கள் தன்னுடைய தொடக்க உரையிலே, அறிவித்ததை எல்லாம் நிறைவேற்றினீர்களா, புதிதாக எத்தனை தொழிற்சாலைகள் என்றெல்லாம் கேட்டார்கள்.
திரு. சுப்பராயன் அவர்கள் அன்னிய முதலீட்டிலே சார்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் ஓராண்டுக்கு முன்பு சொன்ன அந்த வாசகத்தை நினைவு வைத்துக்கொண்டு திரும்ப இங்கே சொன்னார்கள். அன்னிய முதலீடுகள், அவர்களை நாம் இங்கே ஆதரிப்பது எந்த அளவிலே இருக்க வேண்டும் என்றால், நான் அப்போது சொன்னேன், கழுத்திலே விழும் மாலை என்கிற அளவிற்கு இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அதுவே கயிறாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
அதிலே மிகுந்த எச்சரிக்கையோடு இந்த அரசு இருக்கும் என்பதும், இந்த அரசைத் தலைமையேற்று நடத்திச் செல்கின்ற நான், இந்தப் பிரச்சினையிலே எந்த அளவிற்கு முற்போக்கான கொள்கை உடையவன்; இந்த அமைச்சரவையிலே இருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் எத்தகைய முற்போக்கான கொள்கை உடையவர்கள்; யாரால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது திரு. சுப்பராயன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனவே அந்தக் கவலை அவருக்குத் தேவையில்லை. நம்முடைய திரு. இராமன் அவர்கள் கூட ஒரு உதாரணத்தைச் சொன்னார்கள். குதிரையிலே சவாரி செய்யும்போது உடற்பயிற்சி குதிரைக்குத்தான், சவாரி செய்பவனுக்கு அல்ல; அதை மறந்து விடக்கூடாது. எனவே அன்னிய முதலீடு செய்கின்ற
வெளிநாட்டுக்காரர்களுக்குத்தான் இலாபம் ஏற்படும். நமக்கு ஒன்றும் ஏற்படாது என்ற உவமையைச் சொன்னார்கள். அவர்கள் சரியாகச் சொன்னார்களா அல்லது ஏறிப் பார்த்துச் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது. குதிரைக்கும் உடற்பயிற்சி உண்டு. அதே நேரத்தில் ஏறிச் செல்கிறவனுக்கும் ஒரு இலாபம் உண்டு. ஏறிச் செல்கிறவனுக்கு அவன் எண்ணுகிற தூரத்திற்குச் செல்லலாம்; குறிப்பிட்டிருக்கின்ற அந்த இடத்திற்கு அவன் செல்லலாம் குதிரையிலே இருந்தால்.
குதிரைக்கு உடற்பயிற்சி இருக்கலாம், அது வேறு விஷயம். அதற்காகக் குதிரையிலேயே ஏறாமல் இருந்துவிட முடியாது. குதிரையிலேதான் ஏற வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது, கழுதையிலே ஏறாமல், குதிரையிலே ஏறுகிற அளவுக்கு (மேசையைத் தட்டும் ஒலி) நாம் நம்முடைய தொழில் வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபடுவது தவறு அல்ல என்று நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இங்கே குற்றச்சாட்டுக்களைச் சொல்லியே இந்தத் தொழில் துறை மானியத்திலே பேச வேண்டும் என்ற முனைப்போடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் திரு. சுந்தரம் அவர்கள் வந்து இருந்தார்கள். ஆனால் கடந்த காலத்திலே தமிழகத்தினுடைய பொருளாதாரம், தொழில் வளம் எப்படி எல்லாம் கெட்டது என்பதை நம்முடைய திரு. சுப்பராயன் அவர்கள் இங்கே அதிக நேரம் இல்லாத காரணத்தால் ஓரிரு வரிகளில் விளக்கினார்கள்.
நான் ஒன்றை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1994-ஆம் ஆண்டு 'பிசினஸ் இந்தியா' என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அந்தக் கட்டுரையிலே வந்த ஒரு பகுதியை படித்துக் காட்டுகிறேன்.
Says one Madras-based Industrialist. You need not cultivate every Tom, Tick and Harry. If you can please the Presiding Deity, your interests are taken care of. But if you fall out ever, your life is a mess. Jayalalitha's whimsical behaviour has reported to put off several major industrial houses.
Although Tamil Nadu's infrastructure is one of the best, Jayalalitha's behaviour has put off businessmen.
“சென்னையைச் சார்ந்த தொழில் அதிபர் சொல்லுவது. குப்பன், சுப்பன், முனியனை எல்லாம் நீங்கள் தாஜா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மூல விக்கிரகத்தை, ஜெயலலிதாவை, தாஜா செய்து விட்டாலே போதும், உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும், ஆனால் அதிலிருந்து தவறி விட்டாலோ உங்களுடைய வாழ்க்கை முழுவதுமேகூட குழப்பம்தான். ஜெயலலிதாவின் விநோதமான குணாம்சங்கள் பல பெரிய தொழிலகங்களை வர விடாமலேயே செய்து விட்டன.
தமிழ்நாடு மிகச் சிறந்த கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருந்தும் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தொழில் அதிபர்களை தடுத்து விட்டது என்று "Business India"-வில் வந்த ஆங்கிலக் கட்டுரை குறிப்பிடுகின்றது.
அது மாத்திரம் அல்ல, நான் சென்ற ஆண்டே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த அவையிலே. Economic Intelligency Unit என்ற ஒரு Research Unitனுடைய Report-ல் India Uncaged என்ற தலைப்பில் "Seeking opportunities in the South" “தெற்கே உள்ள வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நவம்பர் 1995-இல் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
The report says:
If there is any State with a reputation for corruption, it is Tamil Nadu'.
ஊழலிலே Corruption-லே சிறந்து விளங்குகிறது என்று சொல்ல வேண்டுமானால் அந்த reputation உள்ள மாநிலம் எது என்றால் அது தமிழ்நாடுதான் என்று 1995-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றபோது Economic Intelligency Unit என்ற Research Unit-னுடைய Report குறிப்பிடுகின்றது. இந்த பிரக்ஞாதி பெற்ற அம்மையார்தான் இன்றைக்கு முன்னாள் நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் பற்றியும், முன்னாள் தொழில் அமைச்சர் திரு. முரசொலி மாறன் பற்றியும், ஏதோ அவர்கள் தமிழ்நாட்டையே கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
நான் அந்த அறிக்கைக்குள்ளே அதிகமாகச் சென்று விளக்கம் அளிக்க விரும்பவில்லை. ஏதோ வரி விதிப்பார்கள் இறக்குமதிக்கு ஒரு வரி, ஏற்றுமதிக்கு
ஒரு வரி விதிப்பார்கள் என்றெல்லாம் சொல்லி அதற்கு உடந்தையாக திரு. முரசொலி மாறன் இருந்தார் என்று சொல்லி, இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை, ஏன் இந்திய நாட்டு மக்களையே வேதனைப் படுத்தி விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ஊழலில் நிலைக்களமாக, லஞ்ச அவதாரமாக, தமிழ்நாட்டினுடைய தொழில் வளம் உள்ளிட்ட எல்லா வளங்களையுமே பாழ்படுத்திய ஒருவர், இந்தியாவினுடைய அமைச்சர்களாக இருந்தாலும் கூட, இந்தியாவிலே உள்ள மாநிலங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதோடு, சொந்த மாநிலம் இந்த மாநிலம் என்கிற எண்ணத்தோடு, தமிழகத்துக்குப் பல தொழில் வளங்களைத் தருவதற்கு நிதியும் தந்து, உரிமைகளும் தந்த திரு.
சிதம்பரத்தையும், முரசொலி மாறனையும் குறை கூறியிருப்பது தமிழ்நாட்டிற்கு இவர்கள் செய்கின்ற பெரும் துரோகம் என்றுதான் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)
அவர்கள் - சிதம்பரமும், மாறனும் - ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று பேசவில்லை என்ற குறை அவர்களுக்கு இருக்கலாம். இப்பொழுது அமைச்சர்களாக மத்தியிலே இருப்பவர்களுக்கெல்லாம் - நான் எல்லா அமைச்சர் களையும் சொல்லவில்லை - அ.தி.மு.க. அமைச்சர்களுக்கெல்லாம் - மற்ற அமைச்சர்களெல்லாம் நம்மையும் திட்டுகிறார்கள், அவர்களுடைய வேலையையும் பார்க்கிறார்கள். இப்பொழுது திரு. வாழப்பாடி இராமமூர்த்தி என்று எடுத்துக் கொண்டாலும், திரு.
ரங்கராஜன் குமாரமங்கலம் என்று எடுத்துக் கொண்டாலும், திரு. தலித் எழில்மலை என்று எடுத்துக் கொண்டாலும், ஏதோ சில நேரங்களில் நம்மைப் பற்றியும் பேசுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களுடைய இலாகா சம்பந்தமான வேலைகளையும் கவனிக்கிறார்கள். மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அவர்களுடைய இலாகா சம்பந்தமான வேலையே இங்கேயிருக்கின்ற ஆட்சியைக் கவிழ்ப்பதுதான்; அம்மாவைக் காப்பாற்றுவதுதான். அந்த வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதுபோன்ற வேலையிலே ஈடுபடாமல், நாட்டினுடைய வளர்ச்சிக்காக, நாட்டினுடைய மேன்மைக்காக,
தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள் என்பதற்காக இரண்டு அமைச்சர்களைக் குறை கூறி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்ற அம்மையார் அவர்கள், இன்றைக்கும் பார்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி நாடு என்ன நினைத்தது, நாட்டிலே உள்ள தொழிலதிபர்கள் என்ன எண்ணினார்கள், தொழில் வளர்ச்சியிலே அக்கறை கொண்ட ஏடுகள் என்ன எண்ணின என்பதற்காகத்தான் இந்த இரண்டையும் நான் இங்கே படித்துக் காட்டினேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பொதுத்துறை நிறுவனங்களில் நமக்கு மிகுந்த அக்கறை உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமேயானால், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், அரியலூர், ஆலங்குளம் இங்கே நிறுவப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்.
தமிழ்நாடு மேக்னசைட், சேலம். தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் அந்தப் பொதுத் துறை நிறுவனம் நிறுவப்பட்டது.
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம், அது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். காலத்திலே நிறுவப்பட்டது; பொதுத் துறை நிறுவனம்.
