தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 7
பகுதி 1 · 1 / 6
**உரை : 7**
**நாள் : 14.05.1998**
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் துறை மானியத்தின்மீது மாண்புமிகு உறுப்பினர்கள் வழங்கியுள்ள கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழகத்திலே தொழில் வளர்ந்துள்ள நிலையின் அடிப்படையிலும், சில கருத்துக்களை இங்கே கூறி, சில முக்கியமான அறிவிப்புக்களையும் தெரிவிக்க இருக்கின்றேன்.
விவாதத்தைத் தொடங்கி வைத்த மாண்புமிகு உறுப்பினர் திரு. ரங்கநாதன் அவர்கள், இதுவரையிலே அறிவிக்கப்பட்ட தொழில் துறைத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினீர்களா என்ற கேள்வி கேட்டு, அந்தப் பட்டியலை நான் இங்கே வெளியிட வேண்டிய அவசியத்தை எனக்கு உருவாக்கி இருக்கின்றார்கள். எனவே, அதுபற்றி என்னுடைய உரையிலே நான் விளக்க இருக்கின்றேன்.
நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. சுப்பராயன் அவர்கள் தொழில் வளர்ச்சிக்கு மின் உற்பத்திதான் அடிப்படையிலே மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்டு, அதற்காக இந்த அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் எவை எவை, தேவைக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்கு மின் உற்பத்தியை நாம் செய்திருக்கிறோமா, ஏன் செய்யவில்லை என்ற வினாவினை அவர்களும் எழுப்பியிருக்கின்றார்கள்.
பல உறுப்பினர்கள் அவரவர்களுடைய தொகுதிக்கு, மாவட்டத்திற்குத் தேவையான தொழிற்சாலையைப் பற்றி இங்கே குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஒன்றிரண்டை மாத்திரம் நான் இங்கே சொல்வதால், மற்ற உறுப்பினர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டதாகப் பொருள் அல்ல.
குறிப்பாக நம்முடைய இந்திய தேசிய லீக்கினுடைய தலைவர் திரு. லத்தீப் அவர்கள், சந்தனத் தொழிற்சாலை கேட்டு, பல ஆண்டுகாலமாக சங்கடத்தோடு இங்கே போராடி வருகின்றார்கள். எப்படியாவது அவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகவாவது, நட்டம் வந்தாலும் சரி, இலாபம் வந்தாலும் சரி, பரவாயில்லை என்ற அளவில் அதைத் தொடங்கிட இந்த ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
நம்முடைய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினுடைய தலைவர், திரு. சந்தானம் அவர்கள், தன்னுடைய தொகுதியில் தேங்காய் அதிகமாக உற்பத்தியாகிறது; தேங்காய்த் தொழில் அங்கே தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதுபற்றியும் அரசு பரிசீலித்து ஆவனச் செய்யும் என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய ஒட்டப்பிடாரம் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், நூற்பாலை ஒன்று கேட்டு இருக்கின்றார்கள். அந்தத் தொகுதியிலே நூற்பாலை வைப்பதிலே உள்ள நன்மை, தீமைகள், சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், கிடைக்கக்கூடிய இலாபம், பயன்பெறக்கூடிய வேலைவாய்ப்பு, அந்த வேலைவாய்ப்பைப் பெறக்கூடியவர்களுடைய எண்ணிக்கை, இவற்றை எல்லாம் ஆய்ந்து பார்த்து, நூற்பாலைதான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், அந்த வறண்டு இருக்கின்ற பகுதியில் வேலை வாய்ப்பைத் தரக்கூடிய ஏதாவது ஒரு தொழிற்சாலையை உருவாக்க இந்த அரசு முன்வரும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் மணி அவர்கள் இரப்பர் தொழிற்சாலையைப் பற்றி அடிக்கடி இந்த அவையிலே குறிப்பிட்டு, நானும், சென்ற ஆண்டு அதற்கான உறுதி அளித்து, நானே முன்நின்று அந்த முயற்சியிலே ஈடுபடுவேன் என்று உறுதி அளித்ததை, நல்லவேளையாக அவர் அதை இங்கே குறிப்பிட்டுக் காட்டவில்லை. ஆனால் எனக்கு நினைவு இருக்கிறது. நான் அவருக்கு விளக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இரப்பர்
தொழிற்பேட்டை தொடங்குவதற்காக 'Consultancy' செய்வதற்கு 'Rubber Board, Kottayam' என்ற நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு செய்வதற்கான உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் அந்த இரப்பர் போர்டின் அறிக்கை பெறப்பட்டுவிடும். அதன் பேரில் முதலில் எவ்வளவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பாட்டாளி மக்கள் கட்சி 1-இன் உறுப்பினர் திரு. மணி அவர்கள் பெண்ணாகரத்திலே ஏதாவது ஒரு தொழில் வளாகம் அமைய வேண்டுமென்று சொன்னார்கள். நான் தமிழகத்திலே அமைந்துள்ள தொழில் வளாகங்கள் எல்லாம் எப்படி இயங்குகின்றன என்று பட்டியலிட்டுக் காட்டிவிட்டு, அதன் தொடர்ச்சியாக அங்கே ஒரு தொழில் வளாகம் அமைவதற்குச் சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து, அதற்கேற்ப அரசு முடிவு எடுக்கும் என்பதை நான் திரு.
மணி அவர்களுக்கு இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறுதியாக உரையாற்றிய திரு. இராமன் அவர்களும், தொடக்கத்திலே உரையாற்றிய திரு. ரங்கநாதன் அவர்களும் அரக்கோணம் ஆலையைப் பற்றி இங்கே சொன்னார்கள். அங்கே தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்கிற நிலையை எடுத்துக் காட்டினார்கள். அந்தக் கவலை இந்த அரசுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் அதைப் பற்றிய சில விவரங்களை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் அறிந்துகொள்வது நலம் என்று நான் கருதுகிறேன்.
அரக்கோணத்திலே உள்ள தமிழ்நாடு எஃகு நிறுவனம் 1972-ஆம் ஆண்டு பொதுத் துறையாக நிறுவப்பட்ட நிறுவனமாகும். இந்த அரசுதான் அதை நிறுவியது. இந்த நிறுவனம் இரண்டு பகுதிகளாக இயங்கி வந்தது. ஒன்று, இரும்பு உருக்குப் பட்டறை - Steel Melting Shop, மற்றொன்று மின் உருளை ஆலை - Re-rolling Mill. ஆரம்பக் கட்டங்களில் இலாபகரமாக இயங்கி வந்த இந்த ஆலை தற்போது மிகவும் நலிவடைந்த நிலையை எய்தியது. இதற்கான காரணம் வழக்கொழிந்த மற்றும் செயலிழந்த கருவிகள்.
இடைக்காலத்திலே இவை எல்லாம் வழக்கொழிந்தும், செயலிழந்தும் ஆகிவிட்ட கருவிகளாக மாறின.
அதுமாத்திரமல்ல, உற்பத்திக்கான மூலப் பொருள்களுடைய விலை அதிகரித்தது. பராமரிப்பு இடைக்காலத்தில் சரியாக இல்லாதது; இன்னொன்று, விற்பனை விலையைவிட உற்பத்தி விலை அதிகமாக ஆனது. இவை எல்லாம் இந்த ஆலையினுடைய அவலத்திற்கு காரணங்களாக ஆகிவிட்டன. தொடர்ந்து இழப்பிலேயே இந்த ஆலை இயங்கி இருந்தது. 1994-95-இல் நட்டம் ரூ. 1.88 கோடி, 1995-96-இல் நட்டம் ரூ. 5.91 கோடி, 1996-97-இல் நட்டம் ரூ. 11.78 கோடி, 1997-98-க்கான கணக்கு இன்னும் முடிக்கப்படவில்லை.
எனவே, 1996-97 வரையிலும் மொத்த நட்டம் ரூ. 19.57 கோடி.
தமிழ்நாடு எஃகு நிறுவனத்திலே உற்பத்தியாகும் பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்வதால் administered price - உற்பத்தி விலைக்கும், விற்கப்படுகிற விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அரசே மானியமாகவும் வழங்க நேரிடுகின்றது. உற்பத்தி விலைக்கும், விற்கின்ற விலைக்கும் உள்ள அந்த இடைப்பட்ட தொகையை நிறைவு செய்ய அரசாங்கமே மானியம் வழங்க நேரிடுகின்றது. இந்த முறையில் இதுவரையிலே வழங்கப்பட்ட ரூ. 53 கோடியைச் சேர்த்தால் மொத்த நட்டம் ரூ.
72 கோடியே 57 இலட்சமாகும்.
இரும்பு உருக்குப் பட்டறையின் செயல்பாட்டை 25-6-1997 முதல் ஒரு பகுதியை நிறுத்தி வைத்து ஊழியர்கள் மின் உருளை ஆலையில், அதாவது முறுக்குதல் Twisting - பணி - இன்னொரு பகுதி இருக்கிறதல்லவா? Twisting பணி செய்கிற பகுதி. அங்கே பணி செய்யுங்கள் என்று நிர்வாகம் சொன்னபோது ஊழியர்கள் அப்பணியைச் செய்ய மறுத்துவிட்டார்கள்.
இதன் தொடர்விளைவாக மின் உருளை ஆலையும் 18-8-1997 முதல் இயங்கவில்லை. இந்த ஆலையைப் புனரமைக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு எஃகு நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, அதன் கடன்களையெல்லாம் செலுத்திவிடலாம் என்று கருத்து தெரிவித்தது.
அதாவது எஃகு நிறுவனத்தினுடைய சொத்துக்களை விற்றுவிட்டு, இந்த Twisting பணியை மாத்திரம் செய்யலாம் என்று
ஒரு யோசனை சொன்னது அந்த வல்லுநர் குழு. தமிழ்நாடு எஃகு நிறுவனத்திற்கு வர வேண்டிய வரவு ரூ. 5.75 கோடி மாத்திரம் தான் என்றிருந்ததால், இந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் ரூ. 40 கோடியாக இருந்ததால் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. இந்நிலையில், இந்த ஆலையைச் சீரமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்காததாலும், தொழிலாளர்களும் ஒத்துழைக்காததாலும், இந்த ஆலையை மூடிவிடுவது என அரசு முடிவு செய்தது. என்றாலும் கூட, தொழிலாளர்களைத் தவிக்க விட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினால், எப்படி பி ஆண்டு சி மில்லில் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதோ, விருப்பப்படுகிற தொழிலாளர்கள் விலகிக் கொள்ளலாம் என்ற அந்த அடிப்படையிலே பி ஆண்டு சி மில் தொழிலாளர்களுக்குத் தரப்பட்டதைவிட, அதிகமாக - அரக்கோணம் உருக்காலைத் தொழிலாளர்களுக்கு தரப்பட்டது.
ரூ. 1.25 இலட்சம் பிளஸ் கிராஜூட்டி - இதுபோன்ற இந்தச் சலுகைகள் எல்லாம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களிலே ஏறத்தாழ 90 சதவிகிதம் பேர் அதற்கு உடன்பட்டு அந்த விண்ணப்பங்களைப் பெற்று, விண்ணப்பங்களையும் திருப்பி அளித்து, அதற்கு உடன்படுகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதேபோல, இந்தச் சுய விருப்பு ஓய்வுத் திட்டத்தை அங்கே அமல்படுத்த எண்ணியபோது, தொழிலாளர்கள், இங்கே பி ஆண்டு சி மில்லிலே தந்ததைவிட எங்களுக்கு அதிகமாகத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்படித் தருவதற்கும் நாம் சம்மதித்து இருக்கின்றோம். இங்கே ரூ. 1.25 இலட்சம் என்றால் அதைவிட அதிகமாக, அவர்கள் நிறைவு கொள்ளத்தக்க அளவிற்குத் தருவதற்கும் ஒத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மிக மிக அதிகமாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டால் அடுத்து மற்ற தொழிற்சாலைகளிலே உள்ள தொழிலாளர்களுக்கு இதே போன்ற ஒரு கோரிக்கை வைக்கின்ற நிலைமை ஏற்படும் என்ற காரணத்தினால் அரசு இதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தக் காரணங்களினாலேதான் அரக்கோணத்திலே மாண்புமிகு உறுப்பினர் குறிப்பிட்டதைப்போல 200 கோடி ரூபாய்
செலவிலே மீண்டும் அரசே அந்த ஆலையை நடத்த வேண்டும் என்ற நிலை இயலாததாக இருக்கிறது என்பதை நான் மீண்டும் மீண்டும் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.
திரு. சுந்தரம் அவர்கள் இங்கே பேசும்போது பல குற்றச்சாட்டுக்களைச் சொன்னார்கள். கடைசியாக, தொகுதியைப் பற்றிப் பேச நேரம் இல்லாத காரணத்தினால் அவர் பிடிவாதம் செய்து, நானே விரும்பாத சூழ்நிலையில், வேண்டாமே என்று எண்ணிய சூழ்நிலையில், துணைச் சபாநாயகருக்கு வேறு வழியில்லாமல் அவர் வெளியேற்றப்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்; அவர் இருந்து என்னுடைய பதிலைக் கேட்டிருக்க வேண்டும் என்பதற்காக; இருந்தாலும் அவர் கேட்கக் கூடும் என்பதால் நான் சொல்கிறேன்.
அவர் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார், காகித ஆலையைப் பற்றிய ஒரு அதிகாரியின்மீது. நான் அப்போதே உறுதி அளித்து இருக்கின்றேன். இப்படி ஒரு குற்றச்சாட்டு இன்றைக்குத் துணைச் சபாநாயகராக வீற்றிருக்கின்ற மாண்புமிகு திரு. பரிதி அவர்கள், அல்லது வேறு யாராவது இந்த அவையிலே இதற்கு முன்பு சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று அவர்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு இங்கு இருக்கின்ற டாக்டர் செல்லக்குமார் ஒருமுறை சொல்லியிருக்கிறார் சென்ற ஆட்சியில்.
நம்முடைய திரு. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் சொல்லியிருக்கின்றார். நம்முடைய திரு. சி. ஞானசேகரன் எல்லாம் சொல்லி, அவர்கள் எல்லாம் என்ன பாடுபட்டார்கள் என்பது எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், இங்கே இந்தக் குற்றச்சாட்டு இந்த ஆட்சியிலே சொல்லப்பட்டவுடன், அந்த அதிகாரி யாராக இருந்தாலும், விவரங்களை எழுதிக் கொடுங்கள், நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கின்றேன். அந்தக் குற்றச்சாட்டு உண்மையா, உண்மைக்கு மாறானதா என்பது விசாரணையின் போதுதான் தெரியவரும். தெரிய வருகின்ற அந்த விளக்கத்தை இந்த அவைக்கு நிச்சயமாக அறிவிப்பேன். ஏனென்றால், அவையிலே நான் ஏற்றுக்கொண்ட ஒன்று.
அதனால் இந்த அவைக்கு அறிவிப்பேன்.
