உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 6

பகுதி 3 · 3 / 5

உச்சநீதிமன்றம் வரையிலே சென்று வழக்காடிய காரணத்தால், அந்த இடம் அரசால் கையகப்படுத்தப்படாத சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரசு 1989ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. பொறுப்பேற்றவுடன் அந்த இடத்திற்கு உடையவர்களை அழைத்துப் பேசி, அவர்களை இணங்க வைத்து, அந்த இடத்தில் வட சென்னை அனல் மின் நிலையத் தொடக்க விழாவை அன்றிருந்த குடியரசுத் தலைவரை அழைத்து நடத்தியதையும் யாரும் மறந்திருக்க இயலாது. ஆனால் 500 கோடி ரூபாய்த் திட்டம், இரண்டு ஆண்டு காலதாமதத்தின் காரணமாக 700 கோடியாக ஆகி இப்போது 1,000 அல்லது 1,200 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது.

எனவே, வடசென்னை அனல் மின் நிலையத்தை கழக ஆட்சியிலேதான், மீண்டும் பொறுப்புக்கு வந்த உடனே தொடங்கினோம். இன்றைக்கு அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

இராணிப்பேட்டையில் ஏற்கனவே இருந்த வளாகத்தில், இரண்டாம் பிரிவு தொழில் வளாகத்தை 113 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் - மேலும் 113 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் - அமைத்து அதன் மூலம் 3,400 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, ஓசூர் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 457 ஏக்கர் பரப்பளவில், ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது. இதில் 6 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. பெரியார் மாவட்டம், பெருந்துறையிலே, இதைப்போல ஒரு வளாகம் அமைக்கும் திட்டம். நெல்லை-கட்டபொம்மன் மாவட்டத்தில் கங்கைகொண்டானிலே 2,000 ஏக்கர் பரப்பில் இதைப்போல பொறியியலுக்காக ஒரு வளாகம் அமைக்கும் திட்டம், இந்தத் திட்டங்கள் எல்லாம் செயல்படவிருந்த நேரத்தில் கழக ஆட்சி இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது.

இப்படி கலைக்கப்பட்டவுடன் கடந்த ஐந்தாண்டுகளில் இப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - பெருந்துறை, கங்கைகொண்டான்

போன்ற இந்த வளாகத் திட்டங்கள், நிறைவேற்றப்படுவதற்கு ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்றால் இல்லை என்பதை தொடர்புடையவர்கள் மாத்திரமல்ல, தமிழகத்திலுள்ள அனைவரும் அறிவார்கள். 1989-90-ல்தான் கழக அரசு பொறுப்பில் இருந்தபோதுதான், 22 கோடி ரூபாய் முதலீட்டில், 'எவியன் பெயிண்ட்ஸ்' என்ற தொழில் நிறுவனம்; 29 கோடி ரூபாய் முதலீட்டில் 'டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனம்; 10 கோடி ரூபாய் முதலீட்டில், திருச்சி 'எஸ்.

எஸ். சங்கரரெட்டி அசோசியேட்ஸ்' என்ற நிறுவனங்கள் கூட்டுத் துறையிலே உருவாக்கப்பட்டு அவை உற்பத்திகளைத் தொடங்கிவிட்டன. மேலும் 140 கோடி ரூபாயில் 'டைட்டானியம் டை-ஆக்ஸைடு' தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் 'டிட்கோ' மூலம் அமைக்கிட கழக அரசு திட்டமிட்டது. இப்படி தமிழக தொழில் வளர்ச்சிக்கு முறையாக திட்டமிட்டு ஊக்கமுடன் மீண்டும் பாடுபடத் தொடங்கிய வேளையில்தான், நான் முன்பு கூறியபடி, கழக அரசு கலைக்கப்பட்டது.

ஆனால், தொழில் வளர்ச்சைப் பெருக்குவதற்காக திட்டங்களைத் தீட்டவே பயமாக இருக்கின்றது. ஏனென்றால், இப்படித் திட்டங்களைத் தீட்டுகின்ற நேரத்திலே எல்லாம், கழக அரசைக் கலைப்பதற்கு அவர்கள் கத்தியைத் தீட்டி விடுவார்களே என்ற அந்தக் காரணமும் கூட, கழக அரசில் நலிவு நீங்கி நலம் பெற்ற தொழில்களையும் நான் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். நிர்வாகச் சீர்கேடுகளால் நலிவடைந்த, தமிழ்நாடு கனிம வளர்ச்சி நிறுவனம் 1989-90-ல் கழக ஆட்சி மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், 4 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது.

தமிழ்நாடு பத்திரிகை அச்சுத்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 1989 வரையில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த இழப்பு, 49 முதல் 50 கோடி ரூபாய் வரையில் இழப்பு. ஆனால் கழக அரசு நிறுவனத்தைச் சீரமைத்து, ஒரு ஆண்டிலேயே 28 கோடி ரூபாய் நிகர இலாபம் பெறுகின்ற அளவிற்கு உயர்த்தியது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதையும் பெருமகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் முதலிலேயே குறிப்பிட்டேன் கிரானைட் கொள்கை பற்றி.

இந்த கிரானைட் கொள்கை ஏற்கனவே கண்ணாபின்னா என இருந்தது. யார் வேண்டுமானாலும் ஆதிக்கம் செலுத்தலாம், யார் வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் என்ற சூழ்நிலையில்

இருந்தது கிரானைட் கொள்கை. கழக ஆட்சிக் காலத்தில் 1989-90-ல் முயற்சியெடுத்து கனிமங்கள் வெட்டியெடுக்கும் உரிமங்கள் வழங்குவதற்கான கொள்கையை ஒருமுகப்படுத்தி, டெண்டர் முறை ஏற்படுத்தப்பட்டது. டெண்டர் முறை 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 272 ஹெக்டேர் மொத்த நிலப்பரப்புடைய 103 இடங்களில் குவாரிகள் டெண்டர் விட்டதால், கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்தது. ஆனால் கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு வந்த கடந்த கால ஆட்சியில் என்ன நடைபெற்றது என்பதை நான் பலமுறை இந்த அவையிலே விளக்கி இருக்கிறேன்.

எனவே, விரிவாக அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. டெண்டர் முறை மாற்றப்பட்டது. டெண்டர் முறைதான் நியாயமாக, நேர்மையாக நடைபெறக் கூடிய ஒரு முறை. அனைவரும் போற்றுகின்ற, பாராட்டுகின்ற ஒரு முறை. கடந்த காலத்திலே ஜெயலலிதா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்று, அவர்கள் தலைமையிலே ஆட்சி அமைந்தவுடன், இந்த டெண்டர் முறையையே மாற்றி, விதி 39 என்ற ஒரு நடைமுறையை புகுத்தி, அதன் பலனாக, 1993-லிருந்து 1996 ஏப்ரல் வரையில் மூன்று ஆண்டு காலத்தில் குவாரி குத்தகை மூலம் அரசுக்குக் கிட்டிய வருவாய் 5.12 கோடிதான்.

ஏற்கனவே 20 கோடி ரூபாய் வருமானம் வந்தது இந்த அரசுக்கு கழக ஆட்சியில் 1989-90-ல். ஆனால் 1993 முதல் 1996 வரை மூன்று ஆண்டு காலத்திலே 5.12 கோடி ரூபாய்தான் வருமானம் வந்தது அந்த முறை மாற்றப்பட்ட காரணத்தினால். இதன் தொடர்பாக விழிப்புப் பணிக்குழு செய்து, 'விஜிலென்ஸ் கமிஷன்' செய்த ஆய்வு ஒன்றில் முந்தைய ஆட்சிக் காலத்தில் குத்தகை விடுவதில் சரியான நடைமுறை பின்பற்றப்படாததாலும், குத்தகைத் தொகை வசூலிக்கப்படாததாலும், அரசுக்கு 70 கோடி ரூபாயிலிருந்து 95 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் கழக அரசு, 1996-ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்ற பிறகு, அந்த 39 விதியை நீக்கிவிட்டு மறுபடியும் ஒப்பந்தபுள்ளி, டெண்டர்முறை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இன்றைக்கு இலாபகரமாக, அந்தத் தொழில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதையும், அதிலே எவ்வளவு இலாபம் என்பதை அடுத்து அறிவிக்கின்ற ஒரு கட்டத்திலே அறிவிப்பேன் என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இதேபோல், ஜல்லி, சிறு கனிமங்கள் என்று சொல்லப்படுகின்ற மணல் போன்ற சிறு கனிமங்கள் சம்பந்தப்பட்ட விதிகள் 8, 8-ஏ, இவைகளுக்கு இந்த அரசு திருத்தம் கொண்டுவந்து டெண்டர் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த நடைமுறை மாற்றத்தின் காரணமாக, உதாரணமாக கோவை மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு சொல்லுகிறேன். ஏனென்றால், எல்லா மாவட்டக் கணக்குகளும் எனக்கு வரவில்லை. கோவை மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு சொன்னால், சென்ற ஆண்டு கிடைத்த வருமானம், அந்த ஆட்சியில் கிடைத்த வருமானம் ரூ. 2.88 இலட்சம். அதாவது, ஜல்லி, மணல் போன்ற சிறு கனிமங்கள் மூலம் கிடைத்தது ரூ. 2.88 இலட்சம். அதாவது, கோவை மாவட்டத்தில் மாத்திரம் கிடைத்த வருமானம்.

இந்த ஆண்டு ரூ. 26.17 இலட்சம் கோவை மாவட்டத்திலே மாத்திரம் கிடைத்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) எவ்வளவு கொள்ளை போயிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். இது, பழைய முறைப்படியே, அவர்கள் வைத்திருந்தார்களே டெண்டர் இல்லாத பழைய முறைப்படி அவர்கள் வசூலித்தது ரூ. 2.88 இலட்சம், அதே முறைப்படி நாம் புதியதாக ஆக்கியிருக்கிற காரணத்தால் நமக்கு கிடைக்க இருப்பது 67.32 இலட்சம், கோவை மாவட்டத்திலே மாத்திரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதாவது, இந்தப் புதிய மாற்றத்தின் அடிப்படையிலே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்படி, பொறுப்பற்ற தன்மையில் தொழில் துறை கவனிக்கப்படாமல் இருந்தது என்பது மாத்திரமல்ல, தொழில் முனைவோர்கள் யாரைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, தொழில்துறை அடியோடு நாசமாகிப் போனதை, நானல்ல, "Economist Intelligence Unit" என்ற ஒரு ரிசர்ச் யூனிட்டினுடைய ரிப்போர்ட் "India uncaged" என்ற தலைப்பில் "Seeking opportunities in the South" - தெற்கே உள்ள வாய்ப்புகள் "India uncaged" என்ற தலைப்பில், நவம்பர் 1995-ல் வந்த கட்டுரை. அதிலே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

"The Report says - "If there is any State. . . கவனமாக பார்க்கவேண்டும், "If there is any State with a reputation for corruption, it is Tamil Nadu". ஏதாவது ஒரு

மாநிலம் கரப்ஷனிலே சிறந்து விளங்குகிறது என்று சொல்ல வேண்டுமானால், அந்த ரெபுடேஷன் உள்ள மாநிலம் எது என்றால், அது தமிழ்நாடுதான்'. எப்போது 1995-ஆம் ஆண்டு, சொல்லுவது யார்? கருணாநிதி அல்ல, ரிசர்ச் ரிப்போர்ட். Economist Intelligence Unit - னுடைய ரிசர்ச் ரிப்போர்ட் குறிப்பிடுகிறது. "The going rate for back handers in the form of commission is said to be about 10 to 15 percent of even the project cost".

ஒவ்வொரு திட்டத்தினுடைய மதிப்பீட்டில், அதனுடைய காஸ்ட்டில், அதனுடைய மதிப்பீட்டில் 10 முதல் 15 சதவீதம் வரையில் கமிஷன் கொடுக்க வேண்டும், இடையிலேயிருந்து அந்த நிகழ்வுகளை நடத்திக் கொடுப்பவர்களுக்கு என்று ரிசர்ச் செய்து, ஒரு பெரிய கட்டுரையே வெளியாகி இருக்கிற அளவுக்கு தமிழ்நாட்டினுடைய புகழ் 1995-ஆம் ஆண்டில் ஓங்கி, வளர்ந்து, உயர்ந்து நின்றிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த எடுத்துக்காட்டும் தேவையில்லை. எனவேதான், அத்தகைய எந்தக் குந்தகங்களும், ஊனங்களும், இந்த அரசுக்கு, தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்குத்தான், நம்முடைய ஒப்பந்தப்புள்ளிகள் திறந்த அளவில் இருக்க வேண்டும் என்ற வகையில், யாரும் அதைப்பற்றித் தகவல்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அந்தச் சூழ்நிலையையும் உருவாக்கி, அந்த வாய்ப்பையும் அவர்களுக்குத் தருகின்ற அளவில் தொழில் துறை இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்குக்கூட ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, அதிலே அனுபவம் வாய்ந்த தொழில் அதிபர்களும், அரசு அதிகாரிகளும், இளம் தொழில் முனைவோர்களும் இடம்பெற்று, அடிக்கடி அந்தக் குழு கூடி, அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை அது வழங்கி வருகிறது.

இந்த அரசின் தொழில் நேயம் கொண்ட கொள்கைகள் 'Industry-Friendly Policies' மற்றும் ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான 'transparent appoach' அணுகுமுறைகள் காரணமாகப் பல புதிய தொழில்கள் தமிழகத்திலே உருவாகிக் கொண்டிருக்கின்றன. 10 மாத காலத்தில் பல தொழில்கள் தொடங்கப்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை

மாத்திரம் இங்கே உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன். ஏற்கெனவே, அவ்வப்போது கேள்விப்பட்டவைகள் என்றாலும், தொகுத்துத் தருவது என்னுடைய கடமை என்பதால் தொகுத்துத் தருகிறேன்.

100 விழுக்காடு ஏற்றுமதியுடன் கூடிய புளுமிங் மீடோவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் மலர் வளர்ப்பு (Flori-Culture) திட்டம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் அமைக்கப்படுகிறது. 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி சாம்பலைப் பயன்படுத்தி பொருள்கள் தயாரிக்கும் திட்டம் “ப்ளை ஆஷ்பேஸ்ட் பிளாக்ஸ்” நிறுவனத்தின் மூலம் எண்ணூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சிக்கு அருகில் 100 விழுக்காடு ஏற்றுமதியுடன் கூடிய இறைச்சிப் பதப்படுத்தும் திட்டம் ரூ.

169 கோடியில் தொடங்கப்படுகிறது. 38.42 கோடி ரூபாய் செலவில் நவீன ஒருங்கிணைந்த தேங்காய்ப் பொருள்கள் உற்பத்தித் திட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் தொடங்கப்பட உள்ளது.

இங்கிலாந்து நாட்டு பில்கிங்டன் நிறுவனத்தின் சார்பில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்கபெருமாள்கோவிலில் கண்ணாடித் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு டெலிகாம் நிறுவனத்தின் கண்ணாடித் தொழிற்சாலை மறைமலை நகரில் அமைக்கப்பட இருக்கிறது.

அசோக் லேலண்டு நிறுவனம் ஓசூரில் உள்ள தனது பிரிவை 630 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தி ஆண்டுக்கு 10,000 லாரிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு அருகில் 35 ஏக்கர் நிலத்தில் ஒரு நிரந்தர வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது. ரூபாய் 350 கோடி மதிப்பீட்டில் தென்கொரியா நாட்டின் கும்ஹோ டயர்ஸ் நிறுவனம் டயர் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் 2450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் வளாகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார்பன் பிளாக் தொழிற்சாலை ஒன்று ஹிடெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஜப்பான் நாட்டு மிட்சுபிஷி கம்பெனியுடன் இணைந்து இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் 300 கோடி ரூபாய் மதிப்பில் லேன்சர் கார் தயாரிக்கும் தொழிற்சாலையைத் திருவள்ளூரில் அமைத்து வருகிறது.

இப்படி பெருந்தொழில்களை அமைப்பதைப் பற்றி ஒரு குறிப்பு. மார்க் நிக்கல்சன் என்கிற தலைச் சிறந்த பத்திரிகை நிருபர், Financial Time 10 ஏப்ரல் 1997, பத்திரிகையில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடுகிறார், "Tamil Nadu car industry is perhaps the most spectacular result of the race between States to attract foreign investment and develop new industries". - தமிழ்நாடு கார் தொழிற்சாலை மிக உயர்ந்த அளவிற்கு ரிசல்டைத் தருகின்ற அளவிற்கு மற்ற மாநிலங்களோடு போட்டியிடுகின்ற அளவிற்கு வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டுவிட்டு மேலும் சொல்கிறார், "Tamil Nadu does not yet produce one finished car" இன்னும் ஃபினிஷ்டு கார் ஒன்றும் தயாரில்லை.

ஆனால் "But within three years new production lines near Madras will roll out 2,44,000 a year". 2,44,000 கார்களை வருடத்திற்கு தரக்கூடிய அளவிற்கு அது வளரும் என்று குறிப்பிட்டுவிட்டு சொல்கிறார்கள். "I don't think anywhere else in the world at this point offers this level of opportunities to the British component industry", says Mr. Bernard Fintlay, International Trade Manager for the British Society of Motor Manufacturers and Traders, recently on reconnaissance in Madras".

இப்படிப்பட்ட பாராட்டுகள் தமிழகத்திலே இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்ற கார் தொழிற்சாலைகளைப் பற்றி பத்திரிகையிலே வெளியிடப்பட்டு, மிகச் சிறந்த ஒரு நிருபர் - "Madras revs up to achieve car ambitions" - Tamil Nadu State is profiting from India's liberalised Industry policy, writes Mark Nicholson", என்ற தலைப்பிலே எழுதப்பட்ட கட்டுரையிலே சில குறிப்புகளைத் தான் இங்கே நான் படித்துக் காட்டினேன்.

மேலும் தமிழ்நாடு கிராஃபைட் லிமிடெட் இந்த கிராஃபைட் தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காக நம்முடைய திரு. தா. கிருட்டிணன் அவர்கள் அடிக்கடி இங்கே பேசியிருக்கிறார்கள். இதிலே மிகுந்த அக்கறை கொண்டவராக மத்தியிலே நிதியமைச்சராக இருந்த, இருக்கப் போகிற திரு. சிதம்பரம் அவர்கள் மிகுந்த அக்கறைகொண்டு, அதற்கான பணிகளில் அவரும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

சிவகங்கை பகுதியிலே கிடைக்கிற கிராஃபைட் தாதுவைக் கண்டறிந்து ஒரு தொழிற்கூடத்தை உருவாக்குவதற்கு அனுபவமிக்க ஆலோசகர்களோடு (Consultants) கலந்து பேசுவதற்காக ஒரு கம்பெனி இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் தமிழ்நாடு கிராஃபைட் லிமிடெட் என்ற பெயர் கொண்டு அந்தக் கம்பெனி உருவாக்கப்பட்டிருக்கிறது. அது அந்த ஆய்வுகளிலே ஈடுபட்டிருக்கிறது. இருக்கிற பிரச்சினை என்னவென்றால், அந்தப் பகுதியில் 35.41 இலட்சம் டன் கிராஃபைட் கனிமம் மொத்த இருப்பு இருப்பதாக சிவகங்கை பகுதியிலே மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியிலே இருக்கும் கிராஃபைட் 14 சதவீதம் சுத்தமாக உள்ளது. இதை 96 சதவீதம் சுத்தமாக ஆக்கும் பொருட்டு ஒரு திட்டம் தீட்டப்பட்டு ஆலோசகர்களோடு கலந்து பேசப்பட்டு வருகின்றது. எனவே, அந்தக் கிராஃபைட் தொழிற்சாலை வருவதற்கான முன் ஏற்பாடுகளை அரசு முனைந்து நிறைவேற்றும் என்பதை இந்த அவைக்கு உறுதியாக நான் தெரிவித்துக்கொண்டு, சில அறிவிப்புகளை இந்த அவைமுன் வைக்க நான் விரும்புகிறேன்.

தொழில்கள் தொடங்கப்படுவதற்குத் தேவையான உரிமங்கள் அனைத்தையும் ஒரே இடத்திலே வழங்கிட வகை செய்யும் ஒற்றை சாளரம் Single Window Clearance குறித்து மசோதா ஒன்று ஏற்கெனவே சட்டப்பேரவையிலே வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டம் ஆன பின், தொழில் மையங்கள் அனைத்திலும் தொழில் நகரியங்கள் - Industrial Township ஏற்படுத்தப்படும். அந்த தொழில் நகரியங்களை நிர்வகிக்க நிர்வாக

ஆணையகங்கள் Executive Authority ஏற்படுத்தப்படும். நிர்வாக ஆணையகங்கள் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா உரிமங்களையும் உடனுக்குடன் வழங்குவதற்கு அதிகாரம் உள்ள ஓர் அமைப்பாகச் செயல்படும்.

மணல், ஜல்லி, கனிமண் குவாரிகள் மாவட்ட ஆட்சியர், புவியியல் துறை அலுவலர்களால் முறைப்படி குத்தகைக்கு விடப்பட்ட பின், குவாரிகளிலே இருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல், உள்ளாட்சிக்கு வரவேண்டிய முழு வருவாயும் வந்துசேர ஏதுவாக குவாரி நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பு உள்ளாட்சி மன்றங்களுக்கே இனிமேல் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி). இதன்படி குவாரியிலிருந்து Load - சரக்கு ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் அதற்குரிய கனிமக் கட்டணத்தை (Seigniorage fee) உள்ளாட்சி அமைப்பின் கணக்கில் வங்கியில் செலுத்தி விட்டு, அதன்பின், உள்ளாட்சி அமைப்பு வழங்கும் வாகன அனுமதியை (Transport Permit) கொண்டுதான் லாரி சரக்குடன் செல்ல அனுமதிக்கப்படும்.

(மேசையைத் தட்டும் ஒலி). அனுமதி வழங்கும் பொறுப்பை ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவருடனோ அல்லது வேறொரு உறுப்பினருடனோ இணைந்து கவனிக்க வேண்டும். ஊராட்சி மன்றத்திற்கு இப்பொறுப்பு வழங்கப்படுவதால், தவறான வழிகளில் மணல், ஜல்லி முதலியன கடத்தப்படுவது தடுக்கப்படுவதோடு, ஊராட்சி மன்றத்திற்கு வருவாயும் பெருக வழியேற்படும்.

புதிதாக உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் அளவில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே, பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நிறைய எண்ணிக்கையில் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ) தொடங்கிட இந்த அரசு ஆவன செய்யும். இதன் விளைவாக ஏராளமான இளைஞர்கள் பல்வேறு தொழிற்பயிற்சிப் பிரிவுகளில் முறையான பயிற்சி பெற்று, உருவாகி வரும் புதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு ஐ.டி.ஐ. அமைக்க முடிவெடுத்து அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.