தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 6
பகுதி 2 · 2 / 5
அதேபோல, 1972ஆம் ஆண்டில்தான் தமிழ்நாடு மின்னணுவியல் நிறுவனம் 'எல்காட்', மின்னணுத் தொழில்கள் தமிழகத்திலே வளம்பெற வேண்டுமென்பதற்காக ஒரு தொலை நோக்கான திட்டத்தோடு 1972-லே தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் மின்னணுப் பிரிவு ஒன்றை உருவாக்கி அதன் தொடர்பாக பல்வேறு தொழில் பிரிவுகளை ஏற்படுத்தியது. Electronic Corporation of Tamil Nadu தான் 1975ஆம் ஆண்டு 'எல்காட்'
என்று சுருக்கமான பெயரோடு அமைந்தது என்பதையும் அவை உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு 'எல்காட்' நிறுவனம் வளர்ந்து ஏறத்தாழ 200 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழகம் முழுவதும் மின்னணுத் தொழில் பிரிவுகள் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி 'சிப்காட்', 'சிட்கோ', 'எல்காட்' போன்ற நிறுவனங்களைத் தோற்றுவித்ததன் மூலம் தொழில் பெருவாரியாகத் தமிழ்நாட்டிலே வளருவதற்கு கழக அரசு வழி வகுத்தது. தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், கடன் வசதிகளை அவர்கள் தாராளமாகப் பெறவும் கழக அரசு உதவிடத் தொடங்கியது.
மேலும் வரி விலக்கு அளித்தல், விற்பனை வரி வசூலைத் தள்ளி வைத்தல், மின்கட்டணச் சலுகை அளித்தல் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கி புதிய தொழில்கள் தமிழகத்திலே உருவாகக் கழக அரசு காரணமாக இருந்தது. 1975ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் திரு. வில்லியம் வித்தாஸ் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்து திரும்பிச் சென்றார். அவர் தாயகம் திரும்பியவுடன் மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்திலே பேசினார்.
தமிழகத் தொழில் வளர்ச்சைப் பற்றி அங்கே பேசினார். என்ன பேசினார் என்றால், 'தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளுக்கு உதவுவதற்கான பல கவர்ச்சிகரமான கருத்துக்களைக் கொண்டுள்ளது, தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்கிட பெரு முயற்சி செய்வதோடு, பல்வேறு சலுகைகளையும் அளிக்கிறது. அச்சலுகைகளில், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் எந்த ஒரு வெளிநாட்டு தொழிற்சாலைக்கும் இரண்டு ஆண்டு காலத்திற்கு வரி கிடையாது என்பதும், புதிய தொழிற்சாலைகளின் வளர்ச்சி காலத்தில் மின் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்பதும் அடங்கியுள்ளன.
இவற்றைச் சிறந்த பணிகள் என்று நான் கருதுகிறேன். நம் நாட்டில் தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிடும்போது, அதாவது மேற்கு
ஆஸ்திரேலியாவினுடைய தொழில் வளர்ச்சிக்காகத் திட்டமிடும் போது இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்' என்று அவர்கள் மனம் திறந்து பாராட்டியது அப்போதே ஏடுகளில் வெளிவந்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) இப்படி இந்தியாவிலே மாத்திரம் அல்லாமல், வெளிநாட்டுக்காரர்களும் பாராட்டக்கூடிய அளவுக்கு நாம் தொழில் வளத்தைப் பெருக்கியிருக்கிறோம். குறிப்பாக நான் முதலிலே குறிப்பிட்டதுபோல, கூட்டுத்துறை மூலமாக மாத்திரம் நம்முடைய அரசு உருவாக்கிய தொழிற்சாலைகளை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
1. தூத்துக்குடியிலே ஸ்பிக்-சதர்ன் பெட்ரோ கெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்.
2. ஸ்பிக் நிறுவனத்தில் உபரியாகக் கிடைக்கும் அமோனியத்தைப் பயன்படுத்தி 'சோடா ஆஷ்' அமோனியம் குளோரைடு தயாரிக்கும் தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் தொழிற்சாலை.
3. பஞ்சாலைத் தொழிலுக்குத் தேவைப்படும் பாக்ஸ் சாயங்களில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைட்ரோ சல்பைட் தயாரிக்கும், தமிழ்நாடு கெமிக்கல் பிராசஸ் லிமிடெட் தொழிற்சாலை, காரைக்குடி.
4. இராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் தென் இந்தியாவிலுள்ள சாயத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் குரோமியம் சல்பேட், சோடியம் டெக்ரோமேட், சோடியம் சல்பேட் ஆகிய பொருட்களை தயாரிக்கும் தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல் லிமிடெட் தொழிற்சாலை.
5. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் நரசிங்கம்பட்டியில் பொட்டாசியம் குளோரைடு உற்பத்தி செய்யும் பாண்டியன் கெமிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை.
6. பழைய இராமநாதபுரம் மாவட்டம், மணலூரில் அலுமினிய குளோரைடு தயாரிக்கும் தமிழ்நாடு குளோரின் அலைட் கெமிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை.
7. பல்லாவரத்தில் மருந்துகள் தயாரிக்கும் தமிழ்நாடு தாதா பார்மசூட்டிகல்ஸ் தொழிற்சாலை.
8. அடையாரில் டெலிவிஷன் பெட்டிகள் தயாரிக்கும் டைனவிஷன் லிமிடெட் தொழிற்சாலை.
9. கோவளம் பகுதியில் தொழில் உப்பு தயாரிக்கும் மார்த்திக் கிரிஸ்டல் சால்ட் தொழிற்சாலை.
10. ஓசூருக்கு அருகில் ஆசியா புகையிலை நிறுவனம்.
11. மீன்பிடி படகுகள் கட்ட மண்டபம் பகுதியில் கடல்சார்ந்த பெரும் இழுவைப் படகு கட்டும் தொழிற்சாலை.
12. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு ஆல்கலைன் பேட்டரீஸ் லிமிடெட் தொழிற்சாலை.
13. ஓசூருக்கு அருகில் ஏசியன் பேரிங்ஸ் லிமிடெட் தொழிற்சாலை.
14. அரக்கோணத்தில் வார்ப்படம் கொல்லுலை தொழிற்சாலை.
15. கையுறைத் தோல், ஆடைகள், தோல், மேல் தோல் முதலியவற்றை தயாரிப்பதற்காக இண்டார் காண்டினென்டல் லெதர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை.
ஆகியவை கூட்டுத் தொழிற்சாலைகளாக வடிவம் பெற்றன என்பதையும் இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதற்குப் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1989-90-ல் கழக ஆட்சியிலே தொழில் வளம் சிறக்க என்னென்ன ஏற்பாடுகள் நடைபெற்றன என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.
வட சென்னை அனல் மின் நிலையத்தை உங்களுக்குத் தெரியும். அந்த நிலையத்திற்கு இடமெல்லாம் பார்க்கப்பட்டு, முதலில் 500 கோடி ரூபாய் என்று திட்டமிடப்பட்டு, அந்த இடத்தை ஆர்ஜிதம் செய்ய யாரும் இணங்காத காரணத்தால்,
