தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 6
பகுதி 1 · 1 / 5
**உரை : 6**
**நாள் : 23.04.1997**
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெருந்தொழில்கள் துறை மானியத்தின் அடிப்படையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த, தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் நல்ல விளக்கங்களை வழங்கி, தொழில் தமிழகத்திலே மேலும் வளர, ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் அளித்து அவற்றைத் தொடர்ந்து இந்த அரசு தொழில் துறையிலே இதுவரை ஏற்றுள்ள வாய்ப்பினைப் பெற்று, இந்த அவையில் இப்போது நான் நின்று கொண்டிருக்கிறேன்.
முதலில் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர் திரு. அழகிரி அவர்கள், இந்த மானியத்திலே உரையாற்றத் தொடங்கியபோது, கனத்த இதயத்தோடு பேசுவதாகக் குறிப்பிட்டு, அவரைப்போலவே நானும் கனத்த இதயத்தோடுதான் இருப்பேன் என்று சொன்னார்கள். ஒருவேளை கனரகத் தொழில்களைப் பற்றியெல்லாம் நாம் பேசவிருக்கிற காரணத்தால் 'கனம்' என்ற சொல் அவருடைய உள்ளத்திலே இடம் பெற்று போலும்.
என்னைப் பொறுத்த வரையில் இதயத்தை நான் எப்போதும் கனமாக்கிக் கொள்ள விரும்புபவன் அல்ல; ஆக்கிக் கொண்டவனும் அல்ல. ஏனென்றால் அண்ணா அவர்கள் மறைந்தபோது, அவருடைய இதயத்தை இரவலாகத் தா என்று கேட்டு, (மேசையைத் தட்டும் ஒலி) அந்த எதையும் தாங்கும் இதயத்தோடுதான் நான் என்னுடைய பொது வாழ்க்கையை, குறிப்பாக அரசியல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன்.
“மனச்சாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடும்” என்ற உரையாடலைப் பூம்புகார் படத்திலே நான் எழுதியிருக்கிறேன். அதை நான் மாத்திரம் அல்ல; எல்லோரும்
எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டால், உண்மை பலகாலம் இருட்டிலே இருக்காது, வெளிச்சத்திற்கு வந்துவிடும். இருள் எப்படிச் சூரியனைத் தொடர்ந்து மூடிக்கொண்டிருக்க முடியாதோ, எப்படியாவது விடியல் வந்தே தீரும் என்ற நிலை இருக்கிறதோ, அதைப்போல, உண்மை வெளிவந்தே தீரும்.
இந்த மானியக் கோரிக்கையிலே, திரு. அழகிரி அவர்களும், இந்திய தேசிய லீக் கட்சியினுடைய தலைவர் திரு. அப்துல் லத்தீப் அவர்களும் எடுத்துரைத்த இரண்டு கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்கள்தான். திரு. அப்துல் லத்தீப் அவர்கள், தொழில் துறையைப் பற்றி எடுத்து வைத்த கருத்துக்களைவிட, அரசியல் துறைக் கருத்துக்களையே அதிகமாக இங்கே எடுத்து வைத்தபோதிலும், நாம் எப்படியிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், இந்தியாவிலே மதச் சார்பற்ற ஒரு அரசு அமைந்திடவும் ஜனநாயக ஆட்சி தொடர்ந்து நடந்திடவும் பாடுபடக்கூடிய அந்தப் பாதையில்தான் நாம் இருக்கிறோம் என்பதைச் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எனவே, விவாதத்தைத் தொடங்கி வைத்த அன்பிற்குரிய திரு. அழகிரி அவர்களுக்கும், தொடர்ந்து சில கருத்துக்களைச் சொன்ன அருமை நண்பர், திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
தொழில் துறையைப் பற்றிப் பேசும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. மணி அவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய திரு. சுப்பராயன் அவர்களும், தமிழகத்திலே பொதுத் துறை நிறுவனங்கள் மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி, அதற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கூறியிருக்கின்றார்கள். இந்த மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலேயே, தமிழகத்தில் தற்போது 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுடன் 13 பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், சென்னை எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனம், சேலம் உருக்காலை, இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் போன்ற பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்கம், உற்பத்தித் திறன் அதிகரித்தல் ஆகிய பணிகளை உடனடியாக
மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது. எனவே, இன்றுள்ள நிலையில், நாம் ஏற்றுக்கொண்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி தனியார் தொழில்களை ஊக்கப்படுத்துகின்ற அதேநேரத்தில், ஏற்கனவே கழக அரசு உருவாக்கிய கூட்டுத் துறை, இணைத் துறை போன்ற துறைகளோடு, பொதுத் துறைக்கும் நிச்சயமாக நல்ல இடத்தைத் தரும் என்ற நம்பிக்கையை அனைவரும் பெறலாம் என்று குறிப்பிட்டு விரும்புகிறேன்.
திரு. அழகிரி அவர்கள், ஏற்றுமதிப் பிரச்சினையில் நாம் மிக அடுத்த நிலையிலே இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள். அதிலும் குறிப்பாக, நியூஸ் பிரிண்ட் ஏற்றுமதியை அவர்கள் எடுத்துக்காட்டி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது உண்மைதான். ஏனென்றால், நியூஸ் பிரிண்டினுடைய விலை வெளிநாடுகளில் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தால், ஏற்றுமதியிலே அக்கறை குறைந்திருக்கிறது.
அதுமாத்திரமல்ல, இந்த ஏற்றுமதி குறித்து 19-4-1997 'இந்து' பத்திரிகையிலே தலையங்கம் வந்திருக்கிறது. அதில், “1996-97-ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதி-இறக்குமதி சந்தையில் கையாளப்பட்ட அளவு 6 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தை World Trade Organisation (W.T.O.) தெரிவித்துள்ளது. 1995-96-ஆம் ஆண்டு வியாபாரப் பொருட்களின் மதிப்பு 5,100 பில்லியன் டாலர் ஆகும். அந்த ஏற்றுமதி வியாபாரத்தின் அளவு 14 சதவிகித வளர்ச்சியிலிருந்து 5 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியை இந்த ஆண்டு சந்தித்துள்ளது.
குறிப்பாக ஆசியாவில் ஏற்றுமதி குறைந்துள்ளது. தொழிலில் வளர்ச்சி அடைந்த நாடுகளான ஜப்பான், தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதியும் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் குறிப்பாக, இந்தியாவின் குறியீடான 7 சதவிகிதம் ஏற்றுமதியை அடைய முயற்சிகள் எடுக்கப்பட்டு, 6 சதவிகிதம் அடையப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் ஏற்றுமதியும் இந்த அளவிலேயே உள்ளது; உலகச் சந்தையின் ஏற்றுமதியும், இறக்குமதியும் வெகுவாகக் குறைந்துள்ளது; இந்தியாவின் ஏற்றுமதியும் குறிப்பிட்டதற்க
வகையில் உயரவில்லை; இருப்பினும், தமிழகத்திலே இருந்து செய்யப்படும் ஏற்றுமதி, உலக அளவிலான விழுக்காடு வீழ்ச்சி இல்லை; இருந்தாலும் ஏற்றுமதியை அதிகப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை நான், திரு. அழகிரி போன்றவர்களுடைய அந்தக் கருத்துக்குப் பதிலாகத் தரக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்தியாவினுடைய மொத்த ஏற்றுமதியிலே, 16 சதவீதம், தமிழ்நாட்டிலே இருந்துதான் செய்யப்படுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்தியாவினுடைய மொத்த மக்கள் தொகையிலே, தமிழ்நாட்டு மக்கள் தொகை 6 சதவீதம்தான். ஆனால், இந்தியாவினுடைய மொத்த ஏற்றுமதியிலே, 16 சதவீதம், தமிழ்நாட்டிலே இருந்து செய்யப்படுகிறது. அதிலும், முக்கியமாக 'காட்டன் யார்ன்', 'டெக்ஸ்டைல்ஸ்' தோல் பொருள்கள், பனியன்கள் ஆகியவை, அந்த ஏற்றுமதியாகின்ற பொருள்கள் என்பதையும் நான் குறிப்பிட்டு விரும்புகிறேன்.
திரு. அழகிரி, இன்னொரு குற்றச்சாட்டையும் சொன்னார், 'சிப்காட்' நிறுவனத்தைப் பற்றி. அது ரொம்பக் கஞ்சத்தனமாக 'ஷைலக்' போல நடந்து கொள்கிறது என்று குறிப்பிட்டு, 'கொரமாண்டல் பாலிபேக்ஸ்' என்ற கடலூரிலுள்ள நிறுவனத்திற்குக் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதிலே, ரொம்பக் கஞ்சத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டார்கள். அதைப்பற்றிய விவரத்தை நான் கேட்டபோது, 'சிப்காட்' நிறுவனம், 45.50 இலட்சம் ரூபாய், கொரமாண்டல் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்திருந்தது.
அந்த 45 இலட்சம் ரூபாய்க்கு, வட்டியையும் சேர்த்து, மொத்தம் 117 இலட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. இதுவரையில், அது பணம் கட்டாததால், 'சிப்காட்' நிறுவனம், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, ஏலம் நடத்தப்பட்டு, 'சிப்காட்'டினுடைய பணத்தைத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என்றுதான் குறிப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, இதிலே வேண்டுமென்று கஞ்சத்தனமாக, 'சிப்காட்' நிறுவனம் நடந்து கொள்ளவில்லை என்பதையும், கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை; வட்டியையும் செலுத்தவில்லை; சமரசப் பேச்சில் ஒத்துக்கொண்ட தொகையும் கட்டப்படவில்லை.
எனவே,
அந்தப் பணம் கட்டாத சூழ்நிலையிலேதான், சட்டரீதியான நடவடிக்கையை இந்த நிறுவனம் எடுக்க நேர்ந்தது என்பதையும் நான் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, தொழில்துறை வளர்ந்ததா என்பதை ஒரு கேள்விக்குறியாக்கி, வளரவில்லை என்ற ஒரு தவறான பிரச்சாரம், நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. நான் அதற்குச் சொல்லக்கூடிய சில விளக்கங்கள், யாரையும் புண்படுத்தாது என்று கருதுகிறேன். ஏனென்றால், 1967ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த நேரத்தில், தமிழகத்திலே இயங்கிவந்த, தூத்துக்குடி துறைமுகத் திட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதலிய பொதுத்துறை நிறுவனங்கள் விரிவாக ஆக்கப்படவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புக்களைப் பெருக்கவும், தக்க வகையில் மத்திய அரசை வற்புறுத்தியதோடு, மாநில அரசின் சார்பில் அத்தகைய ஏற்பாடுகளுக்கான, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம்.
நெய்வேலியிலே, இரண்டாவது சுரங்கம் வெட்டப்படவும், சேலம் இரும்பாலை அமைக்கப்படவும், மத்திய அரசோடு தொடர்ந்து போராடி, அவை நிறைவேற்றப்படுவதற்கு வழிவகுத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதை நாடு மிக நன்றாக அறியும்.
தூத்துக்குடியிலே, இன்றைக்கு உலக நாடுகளெல்லாம் பாராட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்ற, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பீடு என்று சொல்லத்தக்க அளவுக்குள்ள 'ஸ்பிக்' உரத் தொழிற்சாலை, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேதான் நிறுவப்பட்டது என்பதையும் யாரும் மறந்துவிட இயலாது.
அதைப்போல, கழக ஆட்சிக் காலத்திலேதான், பொதுத் துறையின் மூலம் உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் மாத்திரம், தமிழகத்திலே தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்த முடியாது என்ற எண்ணத்தோடு, ஆர்வமிக்க தொழில் முனைவர்களை உற்சாகப்படுத்த, ஊக்கப்படுத்த, தொழில் வளாகங்களை அமைத்து, குறைந்த விலையிலே இடங்களை ஒதுக்கீடு செய்திட, தொழில்
திட்டங்களுக்குத் தேவையான கடன் உதவியை, மூலதன மானியத்தோடு - 'Capital Subsidy' - வழங்கிட ஒரு முடிவெடுத்து, State Industries Promotion Corporation of Tamil Nadu - 'சிப்காட்' என்ற புதிய நிறுவனத்தைக் கழக அரசுதான், 1971ஆம் ஆண்டு தோற்றுவித்தது என்பதையும் யாரும் மறந்திட இயலாது. அதைத் தொடர்ந்து 'சிப்காட்' நிறுவனம், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான, அடிப்படை வசதிகள் அனைத்தையும், ஒரே இடத்தில் வழங்கக்கூடிய தொழில் வளாகங்களை அமைத்தது.
அப்படி அமைக்கப்பட்ட இடங்களில் ஒன்றுதான், இராணிப்பேட்டை என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள்.
1973ஆம் ஆண்டு 729.78 ஏக்கர் நிலப்பரப்பில் 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 தொழில் நிறுவனங்கள் கழக ஆட்சிக் காலத்தில் அங்கே உருவாக்கப்பட்டன. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இராணிப்பேட்டையிலே உள்ள அந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அப்போது தொழில் அமைச்சராக நண்பர் திரு. மாதவன் இருந்தார். இந்தச் செய்தியை என்னிடத்திலே அறிவித்தார். என்ன செய்தி என்றால் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பதற்காக அந்த இடம் வாங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமையாத காரணத்தால் அதை விற்றுவிட அல்லது அந்த எண்ணத்தை கைவிட்டுவிட அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசு எண்ணியிருந்ததாகவும் அதன் தொடர்பாக நாம் அந்த இடத்தைப் போய்க் காணவேண்டும் என்று எடுத்துச்சொல்லி, நானும், தொழில் அமைச்சரும் - அன்றையத் தொழில் அமைச்சரும் - மற்ற அதிகாரிகளும் சென்று இராணிப்பேட்டையிலே அந்த இடத்தைப் பார்வையிட்டு இதை விற்கவோ, யாருக்கும் கொடுக்கவோ தேவையில்லை, இங்கேயே 'சிப்காட்'டின் சார்பாக ஒரு தொழில் நிறுவனத்தை அமைக்கலாம் என்று முடிவெடுத்ததினுடைய விளைவுதான் அந்த 730 ஏக்கர் பரப்பில் 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 தொழில் நிறுவனங்கள் அன்றைக்கே அமைந்தன.
அதேபோல, ஓசூரிலே 1974ஆம் ஆண்டு கழக ஆட்சிக் காலத்திலேதான் 500 கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டில் 20,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெறக்கூடிய அளவுக்கு 186 தொழில் நிறுவனங்களை உருவாக்கினோம். இதுவும் கழக ஆட்சிக் காலத்திலேதான். தமிழகத்திலே பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளத்தைப் பெருக்கிடத் திட்டமிட்டு மானாமதுரையில் 225 ஏக்கரிலும், புதுக்கோட்டையிலே 10 ஏக்கரிலும் தொழில் வளாகங்கள் உருவாக்கப்பட்டன.
இவை தவிர இராமநாதபுரம் மாவட்டத்திலே உள்ள ஆணைக்காரன்பட்டி போன்ற பின்தங்கிய பகுதிகளில் தனியார் முயற்சியிலே தொழில் வளாகங்கள் அமைக்கும் முயற்சிகளுக்கும் 'சிப்காட்' மூலம் அன்றிருந்த கழக அரசு ஊக்கமளித்தது என்பது நிதர்சனமான உண்மைகள் ஆகும்.
இதைத் தொடர்ந்து சிறு தொழில்களுக்கு உறுதுணையாக இருந்து உதவுவதற்காக 'சிட்கோ' நிறுவனத்தையும் கழக அரசுதான் 1971ஆம் ஆண்டு தொடங்கியது.
தமிழ்நாட்டிலே சிறுதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் Small Industries Development Corporation 'சிட்கோ' என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டது. அதைப்போல 'டிட்கோ' ஏற்கனவே 1965ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே உருவான ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் சார்பில் கழக ஆட்சிக் காலத்திலே ஒரு மாறுதல் செய்யப்பட்டு கூட்டுத் துறையிலே Joint Sector -லே தொழில்கள் அமைக்கவும், அதைப்போலவே கூட்டுத்துறை என்றால் 26% அரசின் பங்கு, இணைத் துறை என்றால் அதாவது Associate Sector 11% அரசின் பங்கு என்ற அளவில் இந்த இரண்டு செக்டார்களையும் 'டிட்கோ'-வுடன் இணைந்து செயல்படுத்தத் தொடங்கிப் பல தொழில்கள் தமிழகத்திலே அமைக்கப்பட்டன.
