உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சட்டமன்ற உரைகள்

தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 5

பகுதி 4 · 4 / 5

Says one Madras-based Industrialist : "You need not cultivate every Tom, Tick & Harry. If you can please the presiding Deity"

- மூலவிக்கிரகத்தைப் பார்த்தால் போதும் -

"Your interests are taken care of. But, if you fall out ever, your life is a mess. Jayalalitha's whimsical behaviour has been reported to put off several major industrial houses "

எந்த ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு லஞ்சம் தரவேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரையில் எரிச்சலூட்டும் விஷயம் என்னவென்றால் நாங்கள் லஞ்சம் கொடுத்தாலும்கூட எந்த காரியமும் நடைபெறவில்லை என்பதுதான் என்று ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவர் அண்ணா தி.மு.க. அரசில் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற

அவசியம் இல்லை, தலைமைப் பொறுப்பிலே இருக்கும் மூலவிக்கிரகத்தை திருப்திப்படுத்தினாலே நினைத்த காரியம் முடிந்து விடும். ஆனால் அப்படி திருப்திப்படுத்தி காரியம் நடைபெறாது போனால் பெரும் சிக்கல்தான் என்று கூறியிருக்கிறார். இப்படி முன்னாள் முதலமைச்சர் அவர்களின் பிரதான போக்கு காரணமாக பல பெரும் தொழிற்சாலைகளை தமிழ்நாடு இழந்து விட்டது என்று பத்திரிகை எழுதுகிறது. "Although Tamil Nadu's infrastructure is one of the best, Jayalalitha's behaviour has put off business-men.

தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும்கூட ஜெயலலிதாவின் நடவடிக்கை பல தொழிலதிபர்களை தொழில் தொடங்க வொட்டாமல் செய்துவிட்டது என்று வேதனையோடு அந்தச் செய்தி வெளியிடுகிறது.

மின்சாரத்தை இன்னும் விரிவாக்குவதற்கு மேலும் ஒரு பெரிய திட்டம். இந்தத் திட்டத்தை அறிவித்தால் அது பெரிய கனவு போல் உங்களுக்குத் தோன்றும். ஆனால் கனவுகளும் நனவாகக்கூடிய காலம் இது. திரு. திருநாவுக்கரசு அவர்களுடைய கனவே - 10 ஆண்டுக் காலக் கனவே - இன்றைக்கு நினைவாகி இருக்கின்றபோது இது நிறைவேறாமலா போய்விடும். குஜராத் மாநிலத்திலே ஹவிரா துறைமுகத்திலிருந்து ஒரு பெட்ரோலிய குழாய் ஆரம்பித்து ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஹரியானா முதலிய மாநிலங்களில் கேஸ் எடுத்துச் சென்று பெரிய மின் நிலையங்கள், உரத்தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் போன்றவைகளை செயல்படவைக்கிறது.

இந்த பைப் லைன் அந்த மாநிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஜீவநாடியாக இந்த பைப்லைன் விளங்குகிறது. நிலக்கரி இல்லாத தென் இந்தியாவில் இதுபோன்ற ஒரு கேஸ் பைப்லைன் Southern Gas Grid அமைக்கவேண்டுமென்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. திரு. குருபாதசாமி அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, திரு. வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, அடையார் ஓட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதன்முதலாக நான் Southern Gas Grid தேவை என்பதை

வலியுறுத்தி அவரும் அதைப் பாராட்டிச் சொல்லி வரவேற்று உடனடியாக கவனிப்பதாகச் சொன்னார். கவனிக்க ஆரம்பித்தபோது அந்த ஆட்சி கவிழ்ந்து விட்டது. ஆனால், அந்தத் திட்டம் நான் குறிப்பிட்ட Southern Gas Grid கேஸ் பைப் லைன், அந்தத் திட்டம் இப்போது அமல்படுத்த இயலாது என்ற நிலையிலே இருக்கிறது. ஆனால் மின் உற்பத்திக்கு நிலக்கரி இல்லாத நமக்கு கேஸ். மிக, மிக அவசியம். மேலும் கேஸைப் பயன்படுத்தி பெரிய ரசாயன தொழிற்சாலைகளும், பெட்ரோ கெமிக்கல் காம்பிளக்ஸ்களும், பிளாஸ்டிக், செயற்கை ரப்பர் முதலியவையும் கேஸ் கிராக்கர்களும் நிச்சயமாக அமைக்க முடியும்.

இந்த சூழ்நிலையில் Southern Gas Grid வெறும் கனவாக இருந்துவிட்டாலும் கேஸை இங்கே கொண்டுவந்து விநியோகம் செய்வதற்கு வேறு வழிகளை கையாள முடியும். துபாய், இந்தோனேஷியா போன்ற இடங்களில் உபரியாக இயற்கை கேஸ், (Natural Gas) உண்டு. அதை மிகக் குறைந்த வெப்ப நிலையில் தமிழகத்திற்குக் கொண்டு வர முடியும். இப்படி வரும் கேஸை இறக்கி சேகரித்து வைக்க கேஸ் டெர்மினல்கள் தேவைப்படுகின்றன. பெரிய கப்பல்களில் வந்தடைந்த கேஸை பம்பு செய்து வெளியேற்றி குறைந்த வெப்ப நிலையிலேயே சேகரித்து வைக்க வசதிகளும், கேஸை குழாய் மூலமாக தொழில் மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான வசதிகளும் கேஸ் டெர்மினலில் அமைக்க வேண்டும்.

எண்ணூரில் கட்டப்பட்டு வரும் துறைமுகம் 50 அடி ஆழம் இருக்குமாதலால் பெரிய Gas carrier ship அங்கே சென்று அடைந்து கேஸை unload செய்ய வசதியாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது. அங்கேயே ஒரு கேஸ் டெர்மினல்ஸ் எல்லா வசதிகளோடும் அமைக்கவும் முடியும். அதற்கு ரூபாய் 1500 கோடி செலவாகும். இங்கே ஆண்டு ஒன்றுக்கு 10 மில்லியன் டன் வரைக்கும் கேஸ் வர முடியும். 2000 மெகா வாட் திறன் உடைய ஒரு பெரிய மின் நிலையத்திற்கு 2½ மில்லியன் டன் எல்.என்.ஜி.

(Liquified Natural Gas) கேஸ் கிடைத்தால் போதுமானது. இந்த 2000 மெகா வாட் திறன் உள்ள மின் நிலையத்தை அமைக்க 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

அடுத்ததாக ஒரு ரசாயன உரத் தொழிற்சாலை ரூபாய் 2500 கோடி. கேஸ் கிராக்கர் ரூபாய் 4 ஆயிரம் கோடி; பெட்ரோ கெமிக்கல் காம்பிளக்ஸ் 2000 கோடி ரூபாய், இவைகளையும் அமைக்கலாம். இதற்கு எண்ணூர் வட்டாரத்தில் டிட்கோ நிறுவனம் ஆர்ஜிதம் செய்ய உத்தேசித்துள்ள 7 ஆயிரம் ஏக்கர் நிலம் போதுமானது. எனவே, கேஸ் டெர்மினல், பவர் ஸ்டேஷன், பெர்ட்டிலைசர் பிளாண்ட், பெட்ரோ கெமிக்கல் காம்பிளக்ஸ், இவை எல்லாம் சேர்த்து 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை அங்கே அமல்படுத்தலாம்.

கேஸை எண்ணூரிலிருந்து பைப் லைன் மூலமாக அரக்கோணம், ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை, சேலம் முதலிய இடங்களுக்கு எடுத்துச் சென்று அந்தப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சிக்காக நிச்சயமாக பயன்படுத்த முடியும். இதைப்போல கடலூர் அல்லது நாகப்பட்டினத்திலும் நேச்சுரல் கேஸ் இறக்குமதி செய்து மின் நிலையங்களையும் இதர தொழில் நிறுவனங்களையும் ஏற்படுத்த முடியும். இப்படி தமிழ்நாட்டில் 2 கேஸ் டெர்மினல்கள் நிறுவி அவைகளை பைப்லைன் மூலமாக இணைத்து ஒரு தமிழ்நாடு கேஸ் கிரிட்-ஐ நாம் உருவாக்கலாம்.

2 டெர்மினல் பைப்லைன் மற்ற திட்டங்களுக்கு எல்லாம் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த மிகப்பெரிய திட்டங்களுக்கு என்ன சோர்ஸ் (Source) என்று கேட்டால் இதில் முதலீடு செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் மிகவும் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். யார் அவர்கள் என்றால் இரண்டு அமெரிக்க கம்பெனிகள், ஒரு மலேசியன் குரூப், ஒரு பிரெஞ்சு கம்பெனி, இந்த LNG Terminal (Liquified) - அதாவது Natural Gas Terminal திட்டத்தை அமல்படுத்த விரும்பி நமது அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சிகரமான செய்திகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(மேசையைத் தட்டும் ஒலி).

வைக்கப்பட்டுள்ள குறிப்புகளில் சர்க்கரை ஆலைகள் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. சர்க்கரை ஆலைகளைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர்கள் நிறையப் பேசியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 1.8 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு

பயிரிடப்பட்டு வருகிறது. இந்தக் கரும்பு முழுவதையும் அரைத்து விவசாயிகள் நல்ல பயனடையும் அளவிற்கு வழிவகை செய்ய வேண்டுமேயானால் 45 ஆலைகள் அமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற ஆலைகள் - மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டதைப் போல மிகக் குறைவானவைகள்தான். மற்ற மாநிலங்களிலே இருக்கின்ற ஆலைகளோடு ஒப்பிடும்பொழுது மிகக் குறைவான ஆலைகள்தான். தற்பொழுது தமிழ்நாட்டிலே கூட்டுறவுத் துறையிலே 15, பொதுத் துறையிலே 3, தனியார் துறையிலே 16, ஆகமொத்தம் 34 ஆலைகள்தான் இருக்கின்றன.

இவை தவிர, கூட்டுறவுத் துறையிலே 2 புதிய சர்க்கரை ஆலைகள் கள்ளக்குறிச்சி, கும்மிடிப்பூண்டி இவற்றில் அமைக்க கழக அரசு 89-இல் பொறுப்பிலேயிருந்தபொழுது மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான உரிமங்களும் பெறப்பட்டு இருந்தன. அதற்குப் பிறகு வந்த அரசு என்ன காரணத்தாலோ அதை விட்டுவிட்டது; அந்தப் பணி முடிவடையாமலே உள்ளது.

11-3-1996 இல் அறந்தாங்கி தொகுதியிலே ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 21-7-1992 ஆம் நாளிட்ட அரசு கடித எண் 888 - தொழில் துறையிலே இந்த ஆலை நிர்மாணம் செய்யப்படுவது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை மாண்புமிகு உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்களுக்குப் பவ்வியமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருந்தாலும், அவருடைய மன வருத்தத்தைப் போக்க நான் இருக்கிறேன். தம்பி, கவலைப்படாதே என்ற வகையில் அறந்தாங்கி தொகுதியிலே ஒரு சர்க்கரை ஆலையை, அது தனியார் துறையிலும் இருக்கலாம் அல்லது கூட்டுறவுத் துறையிலும் இருக்கலாம்; அந்தத் தொகுதியிலே நிச்சயமாக உருவாக்கப்படும். ஒருவர், நம்முடைய கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர்; இன்னொன்று, பாரி கம்பெனி. இரண்டிலே யார் உடனடியாக நிறுவக் கூடிய சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்குத் தருவதாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற சர்க்கரை ஆலைகளைப்பற்றி குறிப்பு புத்தகத்திலேயே செய்தி தரப்பட்டிருக்கிறது. எனவே, அவைகளையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.

தமிழ்நாட்டிலே உள்ள சர்க்கரை ஆலைகளின் மூலமாக 300 மெகாவாட் இணை மின் உற்பத்தி - கோ ஜெனரேஷன் - உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டு 80 மெகாவாட் மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 மெகாவாட் உற்பத்தி செய்ய இருக்கிறோம் சர்க்கரை ஆலைகளின் மூலமாக. அதிலே இந்த ஆண்டு 80 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 300 மெகாவாட் மின் உற்பத்தி சர்க்கரை ஆலைகளின் மூலமாகத் தயாரிக்கத் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலே உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் மொலாசஸ் விற்பனையிலே நடைபெற்ற, அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மாண்புமிகு உறுப்பினர் அழகிரி அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள். 1 டன் மொலாசஸ் 800 ரூபாய் விலைக்கு விற்றபோது அது 600 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகக் கணக்கிலே வரவு வைத்துவிட்டு மீதி 200 ரூபாய் பங்கிடப்பட்டு விட்டது. இது உண்மை. யாரும் மறுக்க முடியாது. ஆதாரபூர்வமான உண்மை.

800 ரூபாய் ஒரு டன் மொலாசஸ் என்று விற்கப்பட்டது. ஆனால் கணக்கிலே 600 ரூபாய்தான் வரவு வைக்கப்பட்டது. மீதி 200 ரூபாய் பங்கிடப்பட்டுவிட்டது. யார் யாருக்கென்றெல்லாம் சொல்ல நான் விரும்பவில்லை. யாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தவும் நான் கருதவில்லை. கழக அரசு வந்த பிறகு. இந்த 2 மாத காலத்தில், ஓப்பன் டெண்டர் சிஸ்டம் கொண்டு வரப்பட்டு, எங்கேயோ போய்க்கொண்டிருந்த இந்த 200 ரூபாய் அரசாங்கத்திற்கு சர்வீஸ் சார்ஜ் - சேவைக் கட்டணம் - என்று அந்த 200 ரூபாய் செலுத்த வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன் மூலமாக அந்த எங்கேயோ போயிருந்த பணம் அரசு கஜானாவுக்கு வந்து கொண்டிருக்கின்றது.

அதைப்போலவே, கூட்டுறவு ஆலைகளுக்குத் தேவையான கோணிப் பைகள் - நேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசும்பொழுதும் அந்தக் கோணிப் பைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவருக்கு நான் என்ன இலாபமா என்பதைப் போல, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் இந்தக் கோணிப் பை தகராறு நிறைய நடைபெற்றிருக்கிறது.

உதாரணமாக, 900 பேல்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு சித்தவலசா நிறுவனம் 100 கோணிப் பைகளுக்கு ரூபாய் 198 வீதம் விலை குறிப்பிட்டிருந்தார்கள். அவன் குறிப்பிட்ட விலை. 100 கோணிப் பைக்கு 198 ரூபாய். இவர்கள் அவனைக் கேட்கிறார்கள். இது மிகக் குறைவாகக் குறிப்பிட்டிருக்கே, நீ அதிக விலை குறிப்பிடு என்று சொல்லி 100 கோணிப் பைக்கு 299 ரூபாய் விலை குறிப்பிட்டு அதன்படி மறு ஒப்பந்தப் புள்ளி கொடுத்து வாங்கப்பட்டதில் இழப்பு 3 கோடி ரூபாய்.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு.

மேலும், அருணா ஷூகாஸ் என்ற தனியார் நிறுவனம் கோணிப் பைகள் வாங்கிய விலையைவிட சர்க்கரை ஆலை பெடரேஷன் அதிக விலை கொடுத்து, இந்தக் கோணிப் பைகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அங்கே தனியார் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அதைவிட இந்த நிறுவனம், பெடரேஷன், அதிக விலை கொடுத்து அந்தக் கோணிப் பைகளை வாங்கியிருக்கிறது.

அதே போல, சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் மற்றும் சுண்ணாம்பு வாங்கியதிலே மாத்திரம் 1994-95 ஆம் ஆண்டு சுண்ணாம்பு ஒரு மெட்ரிக் டன் 200 ரூபாய் வீதம், 15,200 மெட்ரிக் டன் வாங்கினார்கள். டன் ஒன்றுக்கு கூடுதலாகக் கொடுத்து. நீங்களே கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், அடுத்த ஆண்டு 1995-96-ல் மெட்ரிக் டன்னுக்கு கூடுதலாக கொடுத்து விட்டது 439 ரூபாய். அது மாத்திரமல்ல, முதலாவது ஆண்டு 15,200 மெட்ரிக் டன் வாங்கினார்கள்.

அடுத்த ஆண்டு தேவையில்லாமலேயே 23,990 மெட்ரிக் டன் வாங்கியிருக்கிறார்கள், அதிக விலை கொடுத்து.

இதையெல்லாம்விட ஒரு சில்லறைத்தனமான வேடிக்கை, ஒரு கொள்ளை. 1995-ஆம் ஆண்டு தேவையேயில்லாமல்,, கூட்டுறவு, பொதுப் பணித் துறை சர்க்கரை ஆலைகளுக்கெல்லாம் உத்தரவு. என்ன உத்தரவு தெரியுமா? ஒரு காலண்டர் சாதாரண விலை, வெளி மார்க்கெட்டில் ஒரு காலண்டர் தயாரிக்கப்பட்டு 9 ரூபாய், 9.50 ரூபாய் ஆகும் விலை. 10 ரூபாய் வைத்துக் கொள்வோம். இங்கே போட்ட காலண்டரில் படம் ஒட்டியிருந்தது போல இருக்கிறது. அது என்ன படம் என்று தெரியவில்லை.

48 ரூபாய் ஒரு காலண்டர் விலை. 48.77 ரூபாய் விலை, அந்தக் கணக்கில் அச்சடித்தார்கள். அதை விவசாயிகள் வாங்கியாக வேண்டும். எந்த விவசாயிகள், அந்தச் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொண்டுவந்து போடுகிறார்களோ அவர்கள் வாங்கியாக வேண்டும். அவன் வாங்காவிட்டால் என்ன, இந்த 48 ரூபாயை அவனுக்குச் சேரவேண்டிய பணத்தில் பிடித்துக்கொண்டு கொடுத்துவிடுவார்கள். இந்தக் கரும்பு விலையில், இந்த 48 ரூபாயை, காலண்டர் விலையை பிடித்துக் கொண்டு கொடுத்துவிடுவார்கள்.

இந்தக் காலண்டரே மறுபடியும் காலண்டராக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். மூன்று சுழி 'ண்', இரண்டு சுழி 'ன்' - ஆக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். இப்படி ஆகிவிட்டது. அதிலேதான் 1 கோடி மக்களுடைய வரிப்பணம், அந்தக் காலண்டரிலே விவசாயிகளுடைய பணம் போயிருக்கிறது. ஆக, நான் சொன்ன கணக்கின்படி மொத்தம் இந்தத் துறையில் இப்படி ஊழலின் காரணமாக 25 கோடி ரூபாய்க்கு ஊழல் நடத்திருக்கிறது. இதையெல்லாம் சொன்னவுடனே சொக்கார் எழுந்திருப்பார், ஞானசேகரன் எழுந்திருப்பார், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்பார்கள்.

(குறுக்கீடுகள்). மனோகாரா படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். யாரோ சொன்னார்கள், யாரையோ வசந்தசேனையென்று; சொன்னவர்கள் இன்னும் அங்கேயேதான் இருக்கிறார்கள். வசந்தசேனையை மனோகாரன் ஒன்றும் பண்ணவில்லை. கேசரிவர்மனிடம் விடுவான். அதுமாதிரி, பொது மக்களிடம் விட்டுவிடுகிறேன் பிரச்சினையை அவ்வளவுதான். (மேசையைத் தட்டும் ஒலி).

கிரேனைட் கொள்ளை. ஒரு புதுக் கொள்ளை இங்கே பேசப்பட்டது. கிரேனைட்டில் கழக ஆட்சியிருந்தபோது, 2-9-1989-ல் ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறையிலே, சீல்டு டெண்டர் சிஸ்டம் முறையிலே பணிகள் கொடுக்கப்படும். இரண்டு ஆண்டு காலத்திற்குள் வெட்டி மெருகூட்டும் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும். இந்த முறை சரியானதுதான் என்று நீதிமன்றமும் பரிந்துரை செய்தது. எல்லோரும் கேஸுக்கு போனார்கள்.

நீதிமன்றம் இந்த முறை சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. 1989-90 இரண்டு ஆண்டுகளில் நான் சொன்னபடி கழக ஆட்சியிலே போட்ட உத்தரவின்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 262 ஹெக்டேர் பரப்பளவில் 98 குவாரிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் மாநில அரசுக்கு 20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. 2 வருடத்தில் கிடைத்த வருமானம் 20 கோடி ரூபாய். அ.தி.மு.க. அரசு 1993-ல் தமிழ்நாடு சிறப்புக் கனிம விதி 39 என்ற ஒரு விதியை புதியதாக அறிமுகப்படுத்தியது.

அதன்படி, தனியாக சிறப்பு நேர்வாக குத்தகை வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. தனித்தனியாக. அந்தந்த ஸ்பெசிபிக் நேர்வு, அதைப் பார்த்துத்தான் நாங்கள் குத்தகை கொடுப்போம் என்று வழங்கப்பட்டது. மேலும், முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறை ரத்து செய்யப்பட்டது. ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்த உயர்மட்டக் குழுவிலே யார் யார் இருந்தார்கள் என்பது தெரியும். அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியும் (சிரிப்பு).

அவர்கள் எல்லாம் உயர்மட்டக் குழுவிலே இருந்தார்கள். அவர்கள்தான் இந்தக் கொள்ளையை நிர்ணயித்துக் கொண்டிருந்தார்கள். இந்த முறை மூலம் 1993 முதல் 1996 வரை, 160 ஹெக்டேர் பரப்பளவிற்கு, 125 குத்தகை மூலமாக, அரசுக்கு கிடைத்த வருமானம் 5.12 கோடி ரூபாய்தான். 2 வருடத்தில் அரசுக்கு கிடைத்த வருமானம் கழக ஆட்சியிலே 20 கோடி ரூபாய். இப்போது 5.12 கோடிதான். 1989-90-லே கழக ஆட்சியிலே 20 கோடி கிடைத்ததற்கு மாறாக இப்படி கிடைத்தது என்பதை யாரும் மறந்திடக் கூடாது.

இப்போது புதியது உங்களுக்குத் தெரியும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை நான் விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லையென்று கருதுகிறேன். மூன்று

ஆண்டு காலத்திற்குள்ளே மெருகூட்டும் தொழிற்சாலையை ஏற்படுத்த வேண்டும். அந்த உறுதியோடுதான் ஏலம் எடுக்க வேண்டும். அதுவும் ஓப்பன் டெண்டர். அது மாத்திரமல்ல, ஏற்கெனவே 10 ஆண்டு காலம் என்று கொடுத்திருந்த அந்தக் குத்தகையை, 20 ஆண்டு காலம் என்று மாற்றியிருக்கிறோம். அவர்களுக்குச் செளகரியமாக 20 ஆண்டு காலம் என்று மாற்றியிருக்கிறோம். இதன் மூலமாக நிறைய வருமானம் - இந்தக் கனிமப் பொருட்களின் மூலமாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது.

இந்தக் கனிமத்திலே - நான் வெளியிலே இருக்கும்போது வீரபாண்டி சொன்னதுதான் காதிலே விழுந்தது - இதிலே அந்த மணல்கூட சேரும். அந்தக் கிரேனைட் மாதிரியே மணலில் எல்லாம்கூட, இந்த மணலை எடுப்பதிலேகூட - அந்த மணலையும் விடவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மணல் எடுக்கிற குவாரியினை, அதுவும் 39-ன் கீழ்தான், அந்த கனிம விதி 39-ன்படி மனு செய்தால், மணல் எடுப்பதற்கான உரிமையை வழங்குகிற அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்தது.

கலெக்டரிடம் இருந்தது கூடாது என்று கலெக்டரிடம் இருந்ததை மாற்றி அதையும் மேல் மட்டத்திலே வைத்தாயிற்று. இதன் காரணமாக ஏற்பட்ட ஊழல், மணல் எடுப்பதிலே வாய்க்கால்களிலே மணல் எடுப்பதிலேகூட ஏற்படக்கூடிய வாய்ப்பு அதனாலே ஏற்பட்டது. எனவேதான் நாம் இந்தப் புதிய கொள்கையை இன்றைக்குக் கடைபிடித்து அதிகலாபத்தை, அதிக வருமானத்தை ஈட்டவிருக்கின்றோம்.

கிராபைட் நிறுவனத்தைப் பற்றி உறுப்பினர் திரு. கிருஷ்ணன் அவர்கள் பேசினார். சிவகங்கையிலே கிராபைட்டை அடிப்படையாகக் கொண்ட, இந்தப் பொருளைத் தயாரிப்பதற்கு ஒரு பெரிய தொழிற்சாலையாக அது உருவாகக்கூடியது. எனவேதான், அதை இப்போது தமிழ்நாடு கிராபைட் நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை, லிமிடெட் கம்பெனியே உருவாக்கியிருக்கின்றோம். அதன் மூலம் இந்த கிராபைட் தொழிற்சாலை பெரும் அளவிற்கு எதிர்காலத்திலே வளரும், அந்த மாவட்டம் தொழில் வளம் பெருகுவதுமான ஒரு சூழ்நிலை ஏற்படும்

என்பதையும் நான் இங்கே சொல்லிக்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன்.

இறைச்சி பதனிடும் தொழிற்சாலை பற்றி இங்கே பேசப்பட்டது. வேறு சில தொழிற்சாலைகள் பற்றியும் பேசப்பட்டது. ஏற்கெனவே நம்முடைய பேராசிரியர் தீரன் அவர்கள் வேறு ஒரு மாநிலத்திலே பேசும்போது மிகுந்த ஆத்திரத்தோடு கும்மிடிப்பூண்டியிலே தொடங்கவிருக்கின்ற அந்த ஆலையை, தொழிற்சாலைப் பற்றியும், வேறு பல தொழிற்சாலைகளைப் பற்றியும் பேசி, மாசுக்கட்டுப்பாடு உரிய முறையிலே இருந்திட வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள்.

இன்றைக்கும் அதை ஜாடையாகத் தெரிவித்தார். மற்றும் பலரும் பேசினார்கள். பொள்ளாச்சி ராஜா கூட இங்கே பேசும்போது அங்கே உருவாகின்ற அந்த - அவர் வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறார் - ஏனென்றால் இங்கே இதைப் பேசிவிட்டால், அவர் அங்கே தப்பித்துக் கொள்ளலாம்; தொகுதி மக்களிடத்திலே, இதற்குத்தான் அதைப்பற்றி பேசினார். இந்த இறைச்சி பதனிடும் தொழிற்சாலை என்பது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே சென்னையில் இருக்கிறது.

ஸ்லாட்டர் ஹவுஸ் - அங்கே ஆடுகள், மாடுகள் வெட்டுகிறார்கள். விடியற்காலை நான் வாக்கிங் செல்வதற்காகப் போகும்போது அண்ணா சாலையிலே நூற்றுக் கணக்கான மாடுகளை ஓட்டிக்கொண்டே போகிறார்கள். காளை மாடுகளெல்லாம் இருக்கின்றன. இங்கே பொள்ளாச்சியிலே எருமை மாடுகள் மாத்திரம்தான்; பசு வர்க்கம் இல்லை. எருமை மாடுகள், ஆடுகள் இவைகள் அங்கே இறைச்சியைத் தரவிருக்கின்ற பிராணிகள், ஆனால் சென்னையிலே ஸ்லாட்டர் ஹவுஸுக்கு ஓட்டிச் செல்கிற மாடுகளைப் பார்க்கிறோம்.

பொள்ளாச்சியில் இதுவரை நான் கண்ட காட்சி என்ன? கேரளாவிற்கு மாடுகளை ஓட்டிச் செல்கின்றார்கள். எதற்காக? அங்கே வெட்டி, அங்கே அந்த இறைச்சியைப் பதப்படுத்துவதற்காக, அப்படி நம்முடைய மாநிலத்து மாடுகள் கேரளாவிற்குச் சென்று கேரள மாநிலத்தில் வருமானத்தை ஈட்டுகிற அதே நேரத்தில், தமிழ்நாட்டிலேயும் வருமானத்தை ஈட்டக்கூடிய அளவிற்கு இருக்கும் என்பதற்காகத்தான் இந்தத் தொழிற்சாலைக்கு நாம் அனுமதி கொடுத்திருக்கின்றோம்.

இது தமிழ்

நாட்டிலே மாத்திரமல்ல; உங்களுக்குச் சொல்லவேண்டுமேயானால். ராஜஸ்தான் ஷிப் அண்டு உல்::பெடரேஷன். ராஜஸ்தானத்திலே ஆல்வார் என்ற இடத்திலே இருக்கிறது. பஞ்சாபில், பஞ்சாப் மீட் லிமிடெட், தேராபாணி என்ற இடத்திலே இருக்கிறது. டியோனர் அபட்டார் பி.எம்.சி. மும்பையிலே இருக்கிறது - பம்பாயிலே இருக்கிறது. பாம்பாயிலே இருப்பது யார்? பி.ஜே.பி. ஆட்சி. சிவசேனை ஆட்சி அங்கே நடக்கிறது. அங்கேயே இருக்கின்றது (குறுக்கீடு) டியோனர் அபட்டார்.

அப்புறம் ஹிண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அலிகார், உ.பி.யிலே இருக்கிறது. அல்பீர் எக்ஸ்போர்ட் லிமிடெட், ஹைதராபாத், ஆந்திர பிரதேசத்திலே இருக்கிறது. அல்லானா சன்ஸ், ஒளரங்காபாத், மகாராஷ்டிரத்திலே இருக்கிறது. அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ், கொரேகான், மகாராஷ்டிரத்திலே, எம்.கே. ஓவர்சீஸ் எக்ஸ்போர்ட்ஸ், நண்டி. மகாராஷ்டிரத்திலே, மாராட்டியத்திலே மாத்திரம் நான்கு, ஐந்து இருக்கின்றன. அலானா சன்ஸ், கோவா - இப்படி, எல்லா இடங்களிலும் இந்த இறைச்சி ஒரு உணவாக இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, உணவு தயாரிக்கின்ற தொழிற்சாலையினால் பாதகம் ஏற்படும் என்று கருதுவது தவறு.

அங்கே வெட்டப்படுகிற மாடுகளின் இரத்தம் கீழே ஒழுகி அவைகளெல்லாம் அந்தப் பகுதியை அசுத்தமாக்கும், மாசுபடியும் என்று எண்ணுகிறார்கள். அந்த பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த அச்சத்திற்கு அந்தப் பகுதி மக்கள், விவசாயிகள் ஆளாவது இயற்கைதான். நான் தவறாகச் சொல்லவில்லை. வேண்டுமென்றே வதந்தியை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சொட்டு இரத்தம்கூட கீழே விழாமல் வெட்டுகின்ற விஞ்ஞான முறையில் அதை வெட்டுகிறார்கள்.

அப்படி வெட்டுகிறபோது சிந்துகின்ற இரத்தத்தையும், அதையும் மருந்துகள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் முறை - அதுதான் இறைச்சி தொழிற்சாலையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மற்றொன்று இங்கே, கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர் திரு. தீரன் எடுத்துச் சொன்னார். அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லிக்கொள்கிறேன்.

எந்தவொரு தொழிற்சாலையானாலும், மாசுக் கட்டுப்பாட்டை மீறி தமிழ் நாட்டில் நடத்த முடியாது என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). எந்தவொரு தொழிற்சாலையானாலும் அதற்குரிய சுத்திகரிப்பு தொழிற்சாலையை முதலில் அமைக்கவேண்டும். நாங்கள் அதற்கு அனுமதி கொடுத்த பிறகுதான் அந்தத் தொழிற்சாலைகள் இயங்க முடியும். எனவே கும்மிடிப்பூண்டி வட்டாரத்திலுள்ள மக்கள் அஞ்சத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.