தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள் — உரை : 5
பகுதி 5 · 5 / 5
வேலைவாய்ப்பும் வேண்டும். வறுமை தேன் எனக் கொட்டுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால். அந்த வேலைவாய்ப்பைத் தரக்கூடிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், சில நல்லவைகளைச் செய்யும்போது சில தீயவைகளும் ஏற்படும். மருந்தை உடலுக்குச் சாப்பிடும் போது, அதனுடைய side effects சில நேரத்தில் வரத்தான் செய்யும். உடலுக்கு நோய் வந்தால் anti-biotic சாப்பிடுகிறோம். anti-biotic சாப்பிட்டால், அதனால் ஏற்படுகிற கெடுதியை நீக்குவதற்கு உடனடியாக சிண்டாக் என்ற மருந்தைச் சாப்பிடுகிறோம்.
நான் சாப்பிட்டிருக்கிறேன். அதுதான் பழக்கம். (சிரிப்பு). எனவே anti-biotic சாப்பிட்டவுடனே 'சிண்டாக்' சாப்பிட வேண்டும். அதைப்போல, வேலையில்லாத திண்டாட்டம் என்ற நோய் வரும்போது அதைப் போக்க தொழிற்சாலை என்ற anti-biotic வேண்டியிருக்கிறது. தொழிற்சாலையில் ஏற்படுகிற கழிவுப் பொருட்களால் ஏற்படுகின்ற மாசுவைத் துடைக்க இந்த 'சிண்டாக்' போன்ற (சிரிப்பு) (மேசையைத் தட்டும் ஒலி) சிகிச்சைத் தொழிற்சாலைகளும் வேண்டியிருக்கிறது.
எனவே, இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பதால் வேலையில்லாத திண்டாட்டத்தைப் போக்குகின்ற அளவுக்கு நாம் இந்தக் காரியங்களில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம், என்பதை எடுத்துச் சொல்லிக்கொள்கிறேன்.
தமிழகத்திலே தொழில் வளம் பெருக, தொழிலதிபர்களுக்கு என்னென்ன வரிச் சலுகைகளையெல்லாம் அளித்திருக்கிறோம். சிலபேர்கூட வரிச் சலுகைகளெல்லாம் அளிக்கவேண்டு மென்று இங்கே சொன்னார்கள். நிதிநிலை அறிக்கையிலே அளிக்கப்பட்ட வரிச் சலுகைகள், பிறகு வணிகவரி மானிய
விவாதத்தின்போது நாம் அளித்திருக்கிற வரிச் சலுகைகள் பற்றி யெல்லாம் விரிவாகப் பேசப்பட்டது. எனவே, விரிவுக்கு அஞ்சி அதை விடுக்கின்றேன். இந்தத் திட்டங்களையெல்லாம் தகுந்த முறையில் நிறைவேற்ற இந்தியாவிலே மத்திய அளவிலே ஒரு திட்டக் குழு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான் மாநில அளவிலே ஒரு திட்டக் குழுவை அமைத்தோம். அதைப் பாராட்டி அன்றைக்குப் பெரியவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் எனக்குக் கடிதமே எழுதினார்கள்.
பத்திரிகையிலே அறிக்கை விடுத்தார்கள். அந்தத் திட்டக்குழு தொடங்க காலத்தில் எவ்வளவோ அருமையான திட்டங்களை யெல்லாம் தீட்டியது. இடைக் காலத்தில் என்ன ஆனது என்பது உங்களுக்கே தெரியும். எனவே, திட்டங்களெல்லாம் நிறைவேற்றுவதற்கு உரிய புதிய திட்டக் குழுவை இன்றைக்கு உங்கள் முன்னிலையில் அறிவிக்கின்றேன். அந்தத் திட்டக் குழுவின் தலைவராக முதலமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக, மத்திய திட்டக் குழு உறுப்பினராக ஏற்கெனவே இருந்த
திரு. எல்.சி. ஜெயின்
திரு. எஸ். வெங்கிட ரமணன்
(முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்
முன்னாள் மத்திய நிதித்துறைச் செயலாளர்
முன்னாள் தமிழக நிதித்துறைச் செயலாளர்)
திரு. எஸ். குகன்
(முன்னாள் நிதித்துறைச் செயலாளர்)
திரு. டி.வி. அந்தோணி
(முன்னாள் தலைமைச் செயலாளர்)
திருமதி. லலிதா காமேஸ்வரன்
(முன்னாள் துணைவேந்தர்)
டாக்டர் வைத்தியநாதன்,
(Madras Institute of Development Studies)
டாக்டர் சண்முகசுந்தரம்,
(முன்னாள் துணை வேந்தர்)
திரு. கே.வி. பழனிதுரை
(முழு நேர உறுப்பினர்)
இந்தத் திட்டக் குழு அமைந்து மாநில திட்டங்களுக்கான அரிய யோசனைகளை வழங்கும் என்று மாண்புமிகு உறுப்பினர்களிடம் சொல்லி, இங்கே எடுத்துக் கூறிய தொழில் திட்டங்களும். நாம் எண்ணுகின்ற எல்லா நல்ல திட்டங்களும் தமிழகத்திலே உருவாகி வெற்றிபெற உங்கள் வாழ்த்துக்கள் தேவை என்று கூறி, இதற்குப் பிறகும் வெட்டுத் தீர்மானங்களை வலியுறுத்தமாட்டார்கள் என்று எண்ணி, திரும்பப் பெறவேண்டுமென்று கேட்டுக்கொண்டு அமைகின்றேன்.
வணக்கம். (குறுக்கீடு).
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** அமைச்சரிடமிருந்தே பாயிண்ட் ஆப் ஆர்டரா?
**மாண்புமிகு திரு. கோ. சி. மணி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வலங்கைமான் சர்க்கரை ஆலை உருவாக இருப்பதாக திட்டத்திலே அறிவித்திருக்கிறார்கள். ஏராளமான சங்கடம் இப்போது கரும்பு ஆலையிலே இருக்கின்றது. ஏராளமான கரும்புகள் இன்னும் அரவைக்கு போகாமல் இருக்கின்றன. இந்த நிலையில் கரும்பு ஆலையை வலங்கைமானில் துவக்க முதல்வர் அவர்கள் ஆவன செய்வார்களா என அறிய விரும்புகிறேன். (சிரிப்பு).
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் இருக்கின்றது. (சிரிப்பு)
**மாண்புமிகு பேரவைத் தலைவர் :** திரு. சி. ஞானசேகரன்.
**திரு. சி. ஞானசேகரன் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிரானைட் பொறுத்தவரையில் எக்கச் சக்கமாக ஊழல் நடந்து புறம்போக்கு நிலங்களெல்லாம் முறைகேடாக பலபேருக்கு உரிமம் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலங்களை மீட்பதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக ஆணை பிறப்பிப்பார்களா என அறிய விரும்புகிறேன்.
**திரு. ஆர். சொக்கர் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'சிங்கப்பூர் காரிடார்' ஏற்கெனவே தமிழகத்திற்கு வர வேண்டியது. பல்வேறு காரணங்களினால் கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகத்தில் இந்த சிங்கப்பூர் காரிடார் அமைப்பதற்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதாகச் சொல்கின்றனர். அந்தக் கருத்து சரியானதுதானா என்பதைப் பார்த்து, இன்னும் அங்கே ஆரம்பிக்கப்படவில்லை யென்றால் தமிழகத்திற்கு அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அருள் கூர்ந்து சிங்கப்பூர் காரிடார் மறுபடியும் இங்கு அமைய வாய்ப்பு இருக்குமானால் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
**மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'சிங்கப்பூர் காரிடார்' என்ற பெயரிலே அல்ல. சிங்கப்பூரிலிருந்து காரிடார் போன்ற ஒரு பெருந்தொழிலை தமிழகத்தில் கொண்டுவருவதற்கு அரசு முயற்சி எடுத்துக் கொள்ளும்.
